பன்னீர்த் துளிகள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

கெங்கை ஆ. மணவழகன்


காயத்திற்கு மருந்து
தடவுகிறாய் இறகாலே…
காயத்திற்கு அடியில்
ஒளிந்து கிடக்கும் இதயத்திற்கு ?

**
எல்லாப் பூக்களிலும்
உன் வாசம்
எல்லா பூவின் வாசமும்
உன் வசம்!

**
எங்கோ வைத்து மறந்து விட்டேன்…
உனக்கான தேடலில்
எனக்கான முகவரியை…!
**

உனக்கும் எனக்குமான
ஒப்பந்தத்தை உறுதிபடுத்தியது
உன்
ஒரு துளி கண்ணீர்!

**
நானும் நத்தைதான்
எப்போது சுமக்கிறேன்
உன்
நினைவுகளை
**

மருதாணியால் சிவந்ததா
உன் விரல்கள் ?
மறைக்காமல் சொல்
என்
இதய ரணங்களால் என்று!
**
எப்போதே
மறந்து விட்டேன் என்கிறாய்….
இப்போது எதற்கு
உன் கண்ணில் நீர் ?

**
தலையைச் சாய்த்து
ஒருமுறை பார்த்து விடு!
நான்
கவிதை எழுத வேண்டும்!
**
அழுகிறது இயதம்
ஆறுதல் சொல்லவில்லை நான்
நினைக்கும் மாத்திரத்தில்
மறக்கும் மந்திரம் கற்றிருக்க வேண்டாமா ?

**
புல்லாங்குழலில் புகுந்த காற்று
புதுப் புது இசையாகிறது…
உன்னுள் புகுந்த
என்னைப் போல….!
**

நீ
சிரிப்பில் எழுதுகிறாய்..
நான்
சிந்தும் கண்ணீரில் எழுதுகிறேன்…
எல்லோரும் கவிதை என்கிறார்கள்!
**
நான்
இருட்டு,
நீ
விளக்கு,
விரட்டினாலும்
உன்னைச் சுற்றியே இருப்பேன்…
நீ
ஒளிர்வதற்காக!
**

உன்
நினைவுகளாலே
வலைபின்னிக் காத்திருக்கிறேன்…
வந்து விழுவாய் என்று!
**
இன்றாவது
கண்டுபிடித்து விட வேண்டும்
உனக்குள் தொலைந்த என்னை!
**

என்
பேனா இளைப்பாற வேண்டும்
‘நம் இடைவெளியைக் குறைத்துக்கொள்வோம் ‘!
**
உன்னைப் பற்றி
ஒரு கவிதையாவது எழுதவேண்டும்..
தீர்ந்துபோகிறது
‘மை ‘
**
எப்போதும் போல
என்னைப் பிடிக்கவில்லை
என்றே சொல்லிவிடு..
கவிதையாவது
பிறக்கட்டும்!
**
a_manavazhahan@hotmail.com

Series Navigation

கெங்கை ஆ. மணவழகன்

கெங்கை ஆ. மணவழகன்