பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இன்று பகவத் கீதை ஒரு முன்னணி அரசியல் தலைவரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனத்தில் இரு கூறுகள் உள்ளன. ஒன்று அது தமிழர் பாரம்பரியத்துக்கு அந்நியமானது என்பது. மற்றொன்று அது பிறப்படிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போதிக்கிறது என்பது. இவை இரண்டுமே தவறானவை.

தமிழர் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான கண்ணன் எனும் பெருந்தெய்வம்:

பண்டைய தமிழரின் இலக்கியங்களில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை தமிழர் வாழ்வினூடே இணைந்து விளங்கும் அம்சங்களாகவே திகழ்கின்றன. உதாரணமாக, அகநானூறு இராமபிரானை ‘வெல்போர் இராமன் ‘ எனக் குறிப்பிடுகிறது (அக.70:13-16).

சோழன் குராப்புள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக இருந்ததை வர்ணிக்கும் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் அவ்விருவரையும் கண்ணனுக்கும் பலதேவனுக்கும் ஒப்பிட்டுப் பாடுகிறார்.

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்,

நீலநிற உருவின் நேமியோனும், என்று

இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு

உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இன்னீர் ஆகலின் இனியவும் உளவோ ? (புறநானூறு. 58:14-18)

மேலும் அந்த அரசியல் தலைவர் பகவத் கீதையை போர் நூல் என்றும், ஸ்ரீ கிருஷ்ணன் பாரதப்போரைத் தூண்டியதாகவும் கூறுகிறார். ஆனால் தமிழின் பெயரால் அரசியல் நடத்தி வரும் அந்த தலைவர் கலித்தொகையைப் படித்திருப்பாரா ? இல்லையென்றால் கலித்தொகை (101:18-20) மிகத்தெளிவாக ‘பாரதப்போருக்குக் காரணம் கெளரவரே. துரெளபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்துச் சபையில் அவள் ஓலமிட்டு அழவும், ஐவரும் சபதமிடவும் அவர்களே காரணமானார்கள் ‘ எனக் கூறுவததை அறியாமல் பாரதப்போருக்கானப் பழியை சரி கிருஷ்ணன் மேல் சுமத்துவாரா ? பதிற்றுப்பத்தும் ‘போர்தலை மிகுந்த ஈர்-ஐம்பதின்மரொடு ‘ (பதிற்.14:5) எனக்கூறுவதிலிருந்து போருக்குக் காரணமானவர் யார் என்பது தெளிவாகிறது. தமிழ் மன்னரும் தம்மை, தம் வெற்றிகளை ஐவர்தம் வெற்றியுடனேயே ஒப்பிட்டு நோக்கினர். அவர்தம் பார்வையில் ஐவரே ஆதர்ச புருஷர்களாக இருந்தனர். உதாரணமாக தொண்டைமான் இளந்திரையன் பகைவரை பொருது வென்றமை பெரும் பாணாற்றுப்படை வரிகளில் பாண்டவர் வெற்றியுடன் ஒப்பிட்டுப் பாடப்படுகிறது:

‘ஈர்-ஐம் பதின்மரும், பொருது, களத்து அவிய,

பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்

ஆராச் செருவின் ஐவர் போல

அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த

ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,

கச்சியோனே, கைவண் தோன்றல். ‘ (பெரும் பாணாற்றுப்படை. 415-420)

ஆக மகாபாரதமோ, ஸ்ரீ கிருஷ்ண சரிதமோ பழந்தமிழர் வாழ்விற்கு புறம்பானதல்ல. நமது சமுதாய அமைப்பையும், அவலங்களையும் வரலாற்றையுமே அற்ிவியல் அடிப்படையற்ற இனவாதக் கண்ணோட்டத்தில் காணப்புகும் பிரிட்டிஷ் அதிகாரிகளாலும், மிஷினரிகளாலும் உள்நுழைக்கப்பட்ட ஆரிய-திராவிட இனவாதமே தமிழர் வாழ்க்கைக்கும் வாழ்வியல் கண்ணோட்டத்திற்கும் புறம்பானது.

பகவத் கீதை கூறும் வர்ண அமைப்பும் சாதியமும்:

பகவத் கீதையில் பிறப்படிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் காண்போம். வர்ணத்தைக் குறித்து பகவான் கிருஷ்ணர் கூறுகையில் மிகத்தெளிவாக அது குணத்தின் அடிப்படையிலும் வினையின் அடிப்படையிலும் அமைவது என்கிறாr. ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயமாக அமைவது ஞானகர்மஸ்ந்ந்யாஸ யோகம். அதனது பதின்மூன்றாவது ஸ்லோகத்தில் பகவான் விளக்குகிறார்: ‘நால்வகை வருணம் உலகில் தந்தேன் குணகர்மத்தின் வகையாலே ‘ (சாதுர்-வர்ணம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகச:) வர்ணம் பிறப்படிப்படையில் அமைவது எனக் கருதுவோர் குணகர்மம் பிறப்படிப்படையில் அமைவது எனக் கூறி இந்த ஸ்லோகத்தை விளக்கலாம். இதற்கு மாறாக, வர்ணம் பிறப்படிப்படையில் அல்ல ஒருவரது இயல்பின் அடிப்படையிலேயே அமையப்பெறுவது எனவே பகவான் உண்மையிலேயே வர்ணம் பிறப்படிப்படையில் ஏற்பட்டது எனக் கூற திருவுளம் கொண்டிருந்தால் ‘சாதுர்-வர்ணம் மயா ஸ்ருஷ்டம் குல-ஜன்ம விபாகச: ‘ எனக்கூறியிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் பல நிலை மக்கள் இருப்பர். மேல்தட்டு மக்களும் கீழ்தட்டு மக்களும் இருக்கலாம். உண்மையிலேயே சிறந்த அறிவாளரும், புறக்கணிக்கப்பட்டு கீழ்நிலையில் உழல்வோரும் இருக்கலாம். இந்நிலையில் ஞானியர் என்போர் சமுதாயத்தின் அனைத்து மக்களிடம் சம நோக்குடையோராக இருக்கவேண்டும். பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயமான ஸ்ந்ந்யாஸ யோகத்தில் பகவான் கூறுகிறார்,

வித்யா-விநய-ஸ்ம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனிசைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின: (5:18)

அன்றைய கால கட்டத்தில் நாய்புலாலை உண்ணும் நிலையிலிருந்த விளிம்பு நிலை மனிதரை மக்கள் மாக்களிலும் கீழாக நோக்கினர். அத்தகையதோர் இருள் நிறைந்த காலகட்டத்தில் பகவான் கூறுகிறார், வெறும் பிறப்பால் பிராம்மணனல்லாது உண்மையான அந்தணனே ஆனாலும் அவனிடமும் சரி சமுதாயத்தில் மிகக் கீழ் நிலையிலுள்ள புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மை சமுதாயத்தால் அருவெறுக்கத்தக்கவனாகக் காணப்பட்டவனிடம் ஞானி சமபார்வை கொள்ளவேண்டும். ஏன் ? ஏனெனில் அனைவருமே ஈஸ்வர அம்சம். இம்மனோபாவத்துடன் பிராம்மணனோ சூத்திரனோ அதி-சூத்திரனோ அனைவரையும் தன்னில் உறையும் பிரம்மமாகவே நோக்கி கர்மயோகம் புரியவேண்டும். அர்ஜுனனுக்கு மட்டுமல்ல இன்று சமுதாய சேவையில் இறங்கும் அனைவருக்குமே இது பொருந்தும். பகவத் கீதையின் இப்பார்வை ஸ்ரீமத் பாகவதத்தில் செயல்முறை விளக்கத்துடன் கூறப்படுகிறது. சாதியச் செருக்கால் புலையன் கொடுக்கும் நீரை மறுக்கும் முனிவர் புலையனின் நீரிலிருக்கும் அமுதத்தை இழக்கிறார். ரந்திதேவன் தன் உணவை சண்டாளனுடன் பகிர்வதன் மூலம் இறையருள் அடைகிறான். எனவே இத்தகைய நோக்கில் செய்யப்படும் கர்மயோகப்பணியில் அகங்கார அடிப்படையிலான கருணை-காருண்யம்-charity-white man ‘s burden அல்லது brown saheb ‘s burden- ஆகியவற்றிற்கு இடமில்லை. ஒரு தலித் பஸ்தியில் மருத்துவசேவை புரியும் சேவாபாரதி தொண்டர் செய்வது அவரது கர்மமான- கடமையான சேவை மட்டுமே – அதாவது அங்குள்ள நம் குடும்ப சகோதரர்களுக்கு சேவை (service) புரிய அவர்கள் நமக்கு வாய்ப்பளித்துள்ளனர் எனும் நன்றி உணர்ச்சியுடன் கூடிய கர்மயோகம். பகவத் கீதையிலிருந்து நாம்பெறும் மதிப்பீடுகள் இவைதாம். பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகம் . அதன் பதினைந்தாம் ஸ்லோகத்தில் பகவான் தம்மை தாம் அனைவருள்ளும் உறையும் இறைத்தத்துவமாக கூறுகிறார் ( ‘ஸர்வய சாஹம் ‘ (15:15)) உள்ளத்தில் மட்டுமல்ல எல்லா உடலிலும் உறைபவானாகவும் கூறுகிறார் (15:14). ஆக இதில் எங்கிருந்து வருகிறது தீண்டாமை ? வாஸ்தவத்தில் தீண்டாமைக்கு எதிரான மிகக்கூர்மையான வேதாந்த கருத்தியலை பகவத் கீதையிலிருந்தே எழுப்பமுடியும்.

சரி பிறப்படிப்படையில் நான் உயர்குலத்தோன் எனக்கூறுவது எத்தகையது ? நற்குணங்கள் குலம் சார்ந்தவையா ? பகவத் கீதை என்ன சொல்கிறது ? பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயம் தைவாஸுர ஸம்பத் விபாக யோகம். தேவ அசுர இயல்புகளை பகவான் இதில் வரிசைப்படுத்துகிறார். தேவ இயல்புகள் யாவை ?

அஞ்சா நிலைமை உள்ளத்தூய்மை, ஞானம் யோகம் தனில் உறுதி

ஐம்புலன் அடக்கம், ஈகை, யாகம், தவத்தோடு நேர்மை, மறை ஓதல்

அகிம்சை, சத்தியம் , சினம் கொள்ளாமை, தியாகம், சாந்தி, வசையின்மை

இரக்கம் பிறர்பொருள் விழையாத்தன்மை இனிமை நாணம் மனத்திண்மை

வீரம், பொறுமை,மனதில் உறுதி, தூய்மை படிறில்லா உள்ளம்

செருக்கில்லா நிலை இவையே அர்ஜுனா தெய்விக இயல்பினர் ஸம்பத்தாம் (16:1-4)

சரி இனி அசுர இயல்பினர் எத்தகையவர் ?

பகவான் அசுர இயல்பினரது பலகுணங்களையும் பட்டியலிடுகிறார். முக்கியமாக:

‘செல்வச் சீமான்,உயர்ந்த குலத்தன் எனக்கு நிகராய் யாருண்டு

வேட்போன், ஈவோன், மகிழ்வோன் யானே மயங்கிடுவோர். ‘ (16:15)

(ஆட்ட்யோஸ்பிஜவா-னஸ்மி கோஸ்ன்யோஸ்தி ஸ்த்ருசோ மயா

யஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்-யஜ்ஞான விமொஹிதா:)

தனிமனித ஆன்மிக வேட்கைக்கும் தனிமனித சமுதாயக் கடமைக்கும் முரணற்ற முழுமை இசைவைப் போதிக்கும் அறிவியலாக திகழும் இந்நூலை அளித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், பிரபஞ்ச ரூபனான அந்த கோகுலத்து மாட்டிடையனாம் குருஷேத்ர நல்லாசான் இவற்றை இறை ஆணையாக நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்க நம்மிடம் நிர்பந்திக்கவில்லை. ‘புறச்சாதியார் வீதிகளிலும் தாழ்த்தப்பட்டவர் வீதிகளிலும் நுழையாமல் என் இன மக்களிடம் மட்டுமே செல்வேன் ‘ எனக்கூறி அதையே மாற்றக்கூடாது அப்படியே ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் நித்திய நரகம் என முழங்குகிற பரம்பிதாவின் ஒரே குமாரனின் நிர்ப்பந்த வார்த்தைகளுக்கு இங்கே இடமில்லை.

மாறாக பகவத் கீதையை நிறைவு செய்யும் மோஷஸந்ந்யாஸ யோகத்தில் பகவான் கூறுகிறார்,

‘மாபெரும் இரகசிய மாமறை, ஞானம் இவ்வாறுனக்கு யான் சொன்னேன்

– குறைவற இதனை அறிவால் ஆய்ந்து உன் இச்சைப்படி நீ வாழ்க. ‘ (16:63)

(இதி தே ஜ்ஞான-மாக்க்யாதம் குஹ்யாத் – குஹ்யதரம் மயா

விம்ருச்யைத தசேஷேண யதேச்சஸி ததா குரு)

நான் சொல்வதை சிந்திக்காமல் ஏற்றுக்கொள்கிற பகுத்தறிவற்ற முட்டாள் கூட்டம்தான் எனக்குத் தேவை எனக்கூறி இயக்கம் நடத்தியவர்களை பகுத்தறிவு தந்தை என பிரச்சாரம் செய்யும் இன்றைய இருள் நிறைந்த சூழலில், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கப்பாலிருந்து நமக்கு வரும் பகவத் கீதையின் கருத்தியல் சுதந்திர ஒளி, இருளை நீக்கும், உண்மையான எழுஞாயிறாகவே அமைகிறது.

சமுதாயத்தின் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்றதாழ்வுகளை அகற்றுவதற்கும் பகவத் கீதை தன்னுள் கொண்டிருக்கும் கருத்தியலைப் புறக்கணிப்பதுடன், இப்பெரும் நூலையே உதாசீனப்படுத்தி பேசியும் எழுதியும் அல்ப அரசியல் ஆதாயங்களுக்காக மகிழும் அரசியல் தலைவர்களைக் குறித்து சொல்ல ஏதுமில்லை. என்றாலும் ஒரு ஐயம். பகவத் கீதை குல அடிப்படையில் பெருமை பேசித் திரிவோரைக் கண்டிக்கிறது. மேற்கூறிய அரசியல் தலைவரோ தமது குடும்ப வாரிசுகளை மேல்பதவிகளில் ஏற்றுவதிலேயே கவனமாக இருப்பவர் அதற்காகவே அரசியல் கட்சியை நடத்துவது போல திகழ்பவர் எனும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி வருபவர். அக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது போன்ற நடத்தையும் உள்ளவர்.. ஒருவேளை பகவத் கீதையின் மீது அந்த அரசியல் தலைவர் காட்டும் காழ்ப்புணர்ச்சியின் உண்மைக் காரணம் இதுவாகவே இருக்கலாமோ ?

முற்றும் உணர்ந்த ஹிந்து தர்ம நெறி அறியாமல்

தெற்று கூறும் தீயர் மனம் திருந்த செய்குவோம்.

பகவத் கீதை மொழிபெயர்ப்பு – திரு துளசி ஐயா அவர்கள், விவேகானந்த கேந்திர வெளியீடு

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்