நூல் எரிப்பு

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

சின்னப்பயல்


நூல் எரிப்பு

கூட்டமாக வந்தனர்
என்னை எரித்து விட
நானும் அமைதியாய்க்
கீழே கிடந்தேன்
மானுட மொழியின் எச்சங்கள்
என்னில் புதைந்து கிடந்தன
என் இளந்தளிர்களை
வருடிக்கொடுக்க
அவ்வப்போது வீசிய
காற்றும் இப்போது
சிறிது என்னைப்
புரட்டிப் பார்த்தது
என் பக்கங்கள்
எழுப்பிய ஒலியின் மொழி
காற்று மட்டுமே அறியும்
இத்தனை காலமும்
காற்றும் மழையும்
கொடுத்து,நிழல் பரப்பி,
பறவைகளுக்கு கூடு தந்து
அவற்றின் எச்சம் உண்டு
கிளைத்திருந்த நான்
என்னை அண்ட வருபவர்களைப்
பற்றி நான் அதிகம்
யோசிக்காததால்
பின்னொரு இலையுதிர்
காலத்தில் வெட்டுப்பட்டேன்
என் உயிரைக் கூழாக்கி,
எனக்குப் புரிந்த
இயற்கை மொழியல்லாத
பிற மொழிச்சொற்கள்
என்னில் வலுக்கட்டாயமாக
பதிக்கப்பட்டன
அவைகளை உதிர்த்து
விட எத்தனித்தேன்
என் காயந்த
இலைகளைப் போல
இயலவில்லை என்னால்
சுமையாகிப்போன
எழுத்துகள் என் உடலெங்கும்.
தங்கிவிட்டன.
எரிந்தாலும் மீண்டு வர
என்னில் வாழ்ந்த
ஃபீனிக்ஸ் அல்ல நான்
வெறும் மரம்.
எனக்குத் தெரியாது
மதம்,
இனம்,
மற்றும்
உங்கள் மொழி…..!

என் தவறல்ல…!

காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில்
மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா ?
– இது முதல் கேள்வி

இன்றைய உங்களின் வாழ்க்கைச் சிக்கல்
தொனிக்க அமைந்திருக்கிறதா ?
– இது இரண்டாவது கேள்வி.

இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும்
புதிரையும் போலவே முதலில்
புரியாதது போலிருந்து பிறகு
கொஞ்சம் கொஞ்சமாகப்
புரியத் தொடங்குகிறதா ?
– இது மூன்றாவது கேள்வி.

நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது,
திடுதிப்பென்று காரணகாரியமேயில்லாமல்
மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம்
தருகிற மாதிரி இருக்கிறதா?
– இது நான்காவது கேள்வி

இவையெல்லாம் க.நா.சு
நினைவில் கொள்ளத்தக்க
புதுக்கவிதையைப்பற்றி
கூறியவை.
நீங்கள் காதலை
உருவகப்படுத்திக்கொண்டால்
அது என்
தவறல்ல…!

Series Navigation

சின்னப்பயல்

சின்னப்பயல்