இளங்கோ
1.
தண்ணீரில் தத்து மூன்றாம்
தத்துக்கடந்தால்
வாழ்வு நீரில் சுபமாம்
அம்மா சொல்வாள் அடிக்கடி
நீரைக்கண்டு
மனது துள்ளி மழலையாகும்
ஆனபோதும்
பயம் மறந்து நீராடியதில்லை
ஒருபோதும்
2.
கீரிமலைக் கேணியில்
பாசிவழுக்கி மூழ்கி
அதிசயமான தப்பிப்பிழைத்தலின்பின்
அம்மாவிடுவதில்லை தனியே நீராட
பள்ளிச்சிறையுடையும் மதியவேளையில்
வெள்ளைப்புறாவாகி
மண்புழுதியில் புரண்டபின்
நனைவது பொதுக்கிணற்றில்
துலாவில்லாத
சிதைந்தவக்கிணற்றில்
அப்பாவின் அப்பா
கோபத்தில் தற்கொலைத்தார்
அங்கேதான்
என்வாழ்வு முடியப்போகின்றதென்றும்
என்றோவோர் நாள் தவறிவீழ்வேனென்றும்
நினைத்தபொழுதில்
ஆயுள் அதிகமென
துரத்தியது போர்
3.
சாவின் அரக்கனிலிருந்து
தப்பினேனென்ற பெருமூச்சு
எல்லைகடந்த கிளாலியில்
வடிந்துபோயிற்று
மழை
சோவெனப்பெய்த இரவில்
மீண்டும் களைகட்டியது
முடங்கிப்போன தொய்வு
இருளைக் கிழித்தபடி
படகுப் பயணம்
ஒற்றை என்ஜினுடன்
பதினொரு படகுகளின் சவாரி
இடிமுழக்கமா
சிங்கள இராணுவத்தின் பகைமுழக்கமா
பிரித்தறியமுடியா பேய்மழை
படகின் ஓரங்களில்
இருந்தரையும் அசட்டைசெய்து
நிரம்புகிறது நீர் படகினுள்
மரணத்திற்கு அஞ்சா வீரர்கள் ஒருபுறம்
நீரில்திளைத்து வாழ்வு சுவைக்கும் மீனவர்கள் மறுபுறம்
என்றாலும் மரணபயம்
என்நெஞ்சின் ஒவ்வொரு துளையிடுக்குள்ளும்
பிரார்த்தித்தேன்
கரையடைந்தால்
இவர்கள் பாதந்தடவி
நன்றி தெரிவித்தல் வேண்டுமென்று
உயிர் மீண்ட சந்தோஷத்தில்
கரையேற்றியவர்கள்
மறந்து போயினர்
களிப்புற்று கடல்மண்ணள்ளி
கைகளுக்குள் நிரப்பினேன்
இனி தாய்தேசம் மீளுதல் நடவாதெனும்
சோகத்தை கடலினுள் கரைத்துவிட்டு
தத்து இரண்டு கடத்தாயிற்று.
4.
சமுத்திரமிரண்டு தாண்டி
ஒன்ராரியோ ஏரிக்கரையோரம் குடியிருப்பு
வெயில்
வெஞ்சினமூட்டியதோர் பகற்பொழுதில்
நண்பர்களாய் இரவல்பெற்று
ஆழ்கடல் தேடி
மாறி மாறி வலிக்கும் கானாய் சவாரி
பயணத்தில் நடுவில்
தோழனொருவன் கேட்டான்
எத்தனை தத்து
உனக்கு முடிந்தது ?
சனியனே
அதை ஞாபகப்படுத்தாதே
தத்தொன்று இன்னும் மீதமிருக்கு
சிரிப்பொன்று தவழ்ந்தது
அனைவர் முகத்திலும்
கண்கள் பேசின
என்னைப் புறக்கணித்தோர் பாசை
என்னவென எடைபோட்டு
வேண்டாமென குரலெழுப்பமுன்னரே
இளமையின் குதூகலிப்பில்
குப்புறப்படுத்தது படகு
நீந்தத்தெரியாது தத்தளித்தவென்னை
கரையிழுத்து வந்த நண்பன் சொன்னான்
விசரா!
நீந்தத்தெரிந்தவனுக்குத்தான் தத்து மூன்று
உனக்குண்டு பலநூறு
5.
உண்மைதான்
நீந்தத்தெரியாமாதிரி
எனக்கு
பயமின்றி குறிபார்த்து
பரமவைரியென கற்பதங்கொண்டவனை
சுடவுந்தெரியாது
இல்லையெனில்
கோப்பிக்கடைகளில்
தொடர்மாடிக்கட்டடங்களில்
நிற்பவனெல்லாம்
எதிர்க்குழுவினனேயென மதம்பிடித்தலைந்து…
கொல்லாமலிருந்திருப்பேன்
இந்த அப்பாவிகளை.
நன்றி: காலம்
mathymaaran@yahoo.com
- நீயும் பாரதியும்.
- நீரும் நானும் சிலபொழுதுகளும்
- கடலின் கூப்பாடு
- ஒன்பதில் குரு
- பலா
- பி. வி. காரந்த்
- ரஜினி என்ற ஆதர்சம்
- ஆழத்தில் உறங்கும் கனவு (எனக்குப் பிடித்த கதைகள் – 27 -எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய் ‘)
- பெண்கவிகள் சந்திப்பு-2002 இடம்-புதுவை நாள்-11.9.02
- ராகி சப்பாத்தி/ரொட்டி
- மேதி பரத்தா (வெந்தயக்கீரை சப்பாத்தி)
- இந்திய அமெரிக்க வானியல் மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் [1910-1995]
- இந்திய தட்பவெப்ப துணைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது
- இணையத்தின் புனிதர்
- சக்திமுக்தியடைந்தவளாகினள் யொருதினத்தில்.
- பாிசுப் பேழை
- தெரியாமலே
- பெண்களின் காலங்கள்.
- நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்
- குப்பைத் தொட்டி
- இன்னொரு பிறவி வேண்டும்…….
- இடி, அடி, தடி
- சிருஷ்டி
- மேலே பறந்து பறந்து….
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 13 2002 (காவிரி,செப்11, அமெரிக்காவில் முஷாரஃப், கல்லூரிகள்)
- தமிழாசிரியர்கள் என்ன செய்யலாம் ? : கனல் மைந்தன் கவனத்திற்கு
- அண்ணல் சாம்பலாருக்கு அடியேன் அஞ்சல்
- உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்..
- சங்கரன் என்னும் சில மனிதர்கள்…
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஏழு)