நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

ராமலக்ஷ்மி


பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில் அவரது கவிதைகளுடனேயே அதிக பரிச்சயமாகி இருந்த சமயம். சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வர, அதில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வான நிலாரசிகனின் ‘அப்பா சொன்ன நரிக்கதை’ வித்தியாசமான களத்தாலும், சொன்ன விதத்தாலும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதுவே நான் வாசித்த அவரது முதல் சிறுகதை. தொடர்ந்து அவரது இன்னொரு வலைப்பூவான ‘நிலாரசிகன் சிறுகதைகள்’ பக்கம் செல்ல வேண்டும் என நினைத்தது ஏதேதோ வேலைகளால் அப்போது இயலாமல் போனது.

ஒரு சில நாட்களில் எல்லாம் மேற்சொன்ன பரிசு பெற்றக் கதையினையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது அவரது சிறுகதைகளின் தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”. திரிசக்தி பதிப்பகத்தின் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று வந்த என் தோழியும் எழுத்தாளருமான ஷைலஜா என்னுடன் பகிர்ந்து கொண்ட சம்பவத்தைக் குறிப்பிடுவது கதாசிரியரை கெளரவப் படுத்துவதாக அமையும் என நம்புகிறேன்.

அன்று பலரது புத்தகங்களையும் வெளியிட சிறப்பு விருந்தினராக வந்திருந்த அஸிஸ்டென்ட் கமிஷனர் திரு. ரவி அவர்கள் விழா மேடையில் வந்தமர்ந்ததும் “யார் அந்த நிலாரசிகன்? எங்கே அவர்? அவரை நான் பார்க்க வேண்டும். உடனடியாக மேடைக்கு வரவும்” என ஒலிபெருக்கியில் அறிவிக்க சலசலத்ததாம் கூட்டம். கூச்சத்துடன் இவர் மேடைக்குச் செல்ல, தொகுப்பின் தலைப்பாகவும், முதல் கதையாகவும் அமைந்த ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’-யை மிகவும் சிலாகித்துக் கூறியதோடு நில்லாது “நிலாரசிகன், இன்று முதல் நான் உங்கள் ரசிகன்!” என்றாராம். இது போன்ற ஆத்மார்த்தமான பாராட்டுக்களே எழுத்தாளனை மேலும் செலுத்துகின்ற உந்து சக்தியாக அமைகின்றன என்றால் அது மிகையாகாது.

அத்தகு பாராட்டுக்கான அனைத்துச் சிறப்பையும் கொண்டதுதான் ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’. மிகையற்ற வார்த்தைகளே இவையும் என வாசித்தால் நிச்சயம் உணர்வீர்கள்.

சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணப்படுகையில் ரயிலில் வாசிக்கவென ஏதேனும் வாங்கும் எண்ணத்தில் பழைய புத்தகக் கடைக்குச் செல்லும் நாயகன், தற்செயலாக காணக் கிடைத்த கிழிந்த டைரியால் ஈர்க்கப்பட்டு அதைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறான். ஏழு வருடங்களுக்கு முந்தைய டைரியின் ஆறுபக்கங்கள் கிழிந்து ஜனவரி ஏழாம் நாளில் தொடங்கி மார்ச் பனிரெண்டு வரைக்குமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முத்தான கையெழுத்தில் எழுத்துப் பிழைகளுடனான அக்குறிப்புகள், மும்பைக்குக் கடத்தப்பட்டு விற்கப்பட்ட சிறுமியினுடையதாகும். குறிப்புகளை சிறுமியின் பார்வையிலேயே பதிந்திருப்பது உருக்கத்தை அதிகரிக்கிறது.

ஊருக்குத் திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் சமூகம் அச்சிறுமிக்கு இழைத்த கொடுமையின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் மறுபடி தில்லிக்குப் பயணப்படுகிறான் நாயகன். அங்கிருந்து ஜான்ஸிக்கு செல்லும் ரயிலில் அவனோடு பயணிக்கும் இருபது வயது யுவதி மேல்பர்த்தில் இருந்து தவற விடும் டைரியைத் தவிர்க்க முடியாமல் வாசிக்க நேருகையில் நாயகனுக்கு ஏற்படும் அதிர்ச்சி வலி குழப்பம் எல்லாம் நம்மையும் தொத்திக் கொள்கிறது.

சிறப்பான ஆரம்பக் கதையே மற்ற கதைகளை விரைந்து வாசிக்கத் தூண்டுதலாய் அமைய, ஒரே நாளில் கீழே வைக்க மனமின்றி மற்ற கதைகளையும் வாசித்து முடித்தேன். நூலில் இடம்பெற்றிருப்பது மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொன்றுமே மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில்.

எதையும் எதிர்பாராத தூய்மையான தாயன்பைப் பேசுகிறது ‘ஆலம்’.

அக்கம் பக்கத்து குழந்தைகளை அவரவர் குழந்தைகளைப் போல நேசிக்கும் எவரும் ஒன்றிடுவர் ‘ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு’ சிறுகதையுடன். ஒரு இளைஞனுக்கும் கீழ்வீட்டில் வசிக்கும் சிறுமிக்கும் இடையேயான அன்புப் பிணைப்பு அழகான கவிதையாய். கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிரமப்படுகையில் அவனிடம் எழும் தவிப்பு, பிசிறற்றப் பிரியங்களால் நிறைந்தது உலகமென்பதை உணர வைக்கிறது சோகத்தின் நடுவேயும்.

நிஜங்களின் பிம்பமான ‘வேலியோர பொம்மை மனம்’ பெற்றோரைக் கண்ணெதிரே இலங்கை குண்டு வெடிப்பில் பலிகொடுத்த சிறுமி ஜெயரஞ்சனியை பற்றியது. “அநாதை எனும் வக்கிரச்சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது” என்கிறார் ஆசிரியர். ஆம், காது கேளாத வாய் பேச இயலாத குழந்தை அவள். நேசித்த கரடிப் பொம்மை மட்டுமே அப்போதைய ஒரே ஆறுதலாக இருக்க, முள்வேலி முகாமில் தட்டேந்தி நிற்பவளிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறான் ஒரு ராணுவவீரன். பொம்மையைப் பிடுங்கி கருணையே இல்லாமல் பிய்த்துப் போட்ட அவனை ஒரு காலை நேரத்தில், தன் வெள்ளை மனதால்.. அப்பழுக்கற்ற அன்பால்.. வீழ்த்தியது தெரியாமலே தன்வழி நடப்பதாகக் கதை முடிகிறது.

அவள் கை அணைப்பிலிருந்த பிய்ந்த கரடிப் பொம்மையைப் போலவேக் கிழிந்து போகின்ற வாசிப்பவர் மனம், மீண்டும் தன்னிலைக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது.

இவை ஒருபுறமிருக்க..,

நான் மிக மிக ரசித்தவை, ரகளையான விவரணைகளுடன் என்னை மிகக் கவர்ந்தவை ‘வால்பாண்டி சரித்திரம்’, ‘சேமியா ஐஸ்’ மற்றும் ‘தூவல்’! பால்ய கால நினைவுகளின், அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்தவை முதலிரண்டும். வயதுக்கே உரித்தான குறும்புகளின் மொத்தக் குத்தகைக்காரனாக வரும் சிறுவன் பால்பாண்டி ‘வால்’ பாண்டியாக மாறிப் போவதுவரை அவனது பார்வையிலேயே அட்டகாசமாக நகருகின்றது முதல் கதை. ‘போர்டிங் ஸ்கூலில் போட்டால்தான் உருப்படுவான்’ என அவன் அப்பா முடிவெடுத்து அழைத்துச் செல்லுகையில் நமக்கு ஏற்படும் பரிதாபம் அதை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் தவிடுபொடியாகி புன்னகைக்க வைக்கிறது.

இதே வாசிப்பின்பம் ‘சேமியா ஐஸ்’ கதையின் முடிவிலும். சித்தியின் ப்ளாஸ்டிக் செருப்பைக் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கித் தின்ற குற்றத்துக்காக அடிவாங்கி வேப்பமரத்தோடு அந்த மாற்றாந்தாயால் கட்டிப் போடப்படும் சின்னஞ்சிறுவன், இரவெல்லாம் நின்றபடியே தூங்கிப் பட்டினியாகக் கிடப்பது பார்த்து வருகின்ற பச்சாதாபம் தொலைந்து போய், பொங்குகிறது ஒரு ‘குபீர்’ சிரிப்பு கதையின் கடைசி வாக்கியத்தால்.

அதுவுமில்லாமல் சின்ன வயது நினைவுகளையும் அழகாய் கிளப்பி விட்டது இந்த ‘சேமியா ஐஸ்’! அப்போது எங்கள் வீட்டில் தெருவில் போகும் ஐஸ் எல்லாம் வாங்க விடமாட்டார்கள். காசும் கிடைக்காது. ‘பழைய டப்பா டபரா இரும்புக்கு சேமியா ஐஸேய்…’ என்று கூவியபடி மணியடித்துச் செல்பவரிடம் ஓவல் டின், போர்ன்விட்டா காலி டப்பாக்களைப் போட்டு ரகசியமாய் சேமியா ஐஸ் வாங்கி வந்து அண்ணன்மார்கள் தர, குதில் போன்றதான துணி போடும் பெட்டிக்குள் ஒளிந்திருந்து உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டிருக்கிறோம் நானும் தங்கைகளும்!.

‘தூவல்’ கதையில் பேனாவின் மீதான நேசத்தைச் சொன்ன விதமும், முடிவைப் படிக்கும் போது ஆரம்ப வரிகளை மறுபடி வாசிக்க வைத்திருப்பதும் கதாசிரியரின் வெற்றி.

சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.

விலை ரூ:70. பக்கங்கள்: 86. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்; லேன்ட் மார்க்; சிடி சென்டர்/ஸ்பென்ஸர் ப்ளாஸா.

இணையத்தில் வாங்கிட இங்கே http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79 செல்லவும்.

இதுவே நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதையடுத்து இவரது நான்காவது கவிதை தொகுப்பு “வெயில் தின்ற மழை” இம்மாதம் ‘உயிர்மை’ பதிப்பகத்தின் வாயிலாக டிசம்பர் 26ஆம்தேதி மாலை 6 மணிக்கு 735, அண்ணாசாலை, சென்னையில் அமைந்த தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் வெளிவர உள்ளது. சென்னைவாழ் நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் இந்நிகழ்வுக்குச் சென்று சிறப்பியுங்கள்.

மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபடி கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் இலக்கியத்துக்கு அர்ப்பணித்து வரும் இந்த முப்பது வயது இளைஞர் நிலாரசிகன் மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துவோம்.
***

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி