நினைத்தேன்..சொல்கிறேன்… காமாத்திபுரா பற்றி

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

PS நரேந்திரன்


பம்பாய் மும்பை ஆவதற்கு முன்பு, 90 களின் ஆரம்பத்தில், SEEPZல் வேலை செய்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனி. பெயர் மறந்து போய்விட்டது. முலுண்ட் வெஸ்ட்டில், அம்பேத்கர் ரோட்டில் தங்கி இருந்தேன். காளிதாஸ் கலா மந்திர் இருக்குமே, அதே ரோட்டில்தான்.

நான் இருந்த இடம், ‘சாப்பேக்கர் லாட்ஜ் ‘ என்று அழைக்கப் பட்டாலும், லாட்ஜிக்குரிய எந்த அடையாளமும் இருக்காது. ஒரே கட்டடத்தில் நான்கு அப்பார்ட்மென்ட்கள். அதில் ஒரு அப்பார்ட்மென்ட்டை கார்ட் போர்ட் அட்டையால் தடுத்து, நான்கைந்து அறைகளாக்கி இருப்பார்கள். ஒவ்வொரு அறையிலும், நான்கு சுவற்றை ஒட்டி, நான்கு கட்டில்கள். நடுவில் ஒரு மேசை. அவ்வளவுதான். ஒவ்வொரு கட்டிலுக்கும் மாத வாடகை ரூபாய் நானூறோ என்னவோ…சரியாக ஞாபகம் இல்லை.

மூச்சு முட்டும் பம்பாய் நெருக்கடியில் அந்த இடம் ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கும். சுற்றிலும் குடும்பங்கள் தங்கி இருந்ததால், லாட்ஜ்களுக்கே உரித்தான மற்ற தொல்லைகள் எதுவும் இல்லை. பத்து வருடம், பதினைந்து வருடம் என்று ஏறக்குறைய நிரந்தரமாக தங்கி இருப்பவர்களைத் தவிர, அவ்வப்போது வந்து போகும் floating மக்களும் உண்டு. நிறைய இன்டரஸ்டிங் கேரக்டர்களை அங்கு சந்தித்திருக்கிறேன். வித்தியாசமான அனுபவங்கள். அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, எனக்கு வயதாகி விட்டதோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு அறையில் நான், ஜக்ஜித் சிங் என்ற சர்தார்ஜி, சக்கர் (சக்கரபாணியின் சுருக்கம்) மற்றும் ‘பாட்டம் வலி ‘ உகாலே. உகாலேயைத் தவிர நாங்கள் மூன்று பேரும் ஒரே வயதினர் என்பதால் எல்லா இடத்திற்கும் ஒன்றாக சுற்றுவோம். மிகவும் விளையாட்டான, மனதுக்கு இதமான, மறக்கவே முடியாத நாட்கள் அவை. Golden Period.

சர்தார்ஜிக்கு சக்கர் + பாணி என்ற பெயர் பிடிக்காததால் (இந்தியில் சர்க்கரைத் தண்ணீர் என்று அர்த்தம் வருவதாலும்) ‘சக்கர் ‘ என்று மாற்றிவிட்டான்.

‘அபே…க்யா நாம்ஹே துமாரா ? சக்கர்…பாணி.. ? முஜே பசந் நை…பெஹ்ன் சூ…அப்சே துமாரா நாம் காலி சக்கர் ஹே…சக்கர் ‘

சர்தார் ஒரு டாமினேட்டிங் கேரக்டர். கோபம் வந்தால் இந்தியிலுள்ள அத்தனை வசவுகளையும் மழை மாதிரி பொழிவான். அவன் பேச்சுக்கு மறுப்பேது ? ‘சக்கர் ‘தான் நிலைத்தது. கடைசி வரையில்.

சக்கரபாணி நரிமன் பாயின்ட்டிலுள்ள பாம்பே கஸ்டம்ஸில், டெஸ்பாட்ச் கிளார்க்காக இருந்தான். சம்பளத்தை விட பத்து மடங்கு கிம்பளம். மெட்றாஸ் பாஷையில் சொல்வதென்றால் ‘செம துட்டு பாத்துகினு ‘ இருந்தான். காபி சாப்பிட, டாக்ஸி பிடித்து, தாஜ் ஹோட்டல் போய் வருவான். பாம்பே தாஜ் ஒரு Five Star ஹோட்டல் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

சக்கர் பத்தாவதோ, பன்னிரெண்டாவதோதான் படித்திருக்கிறான். ஆனால் very brilliant. எவ்வளவோ விஷயங்கள் தெரியும் அவனுக்கு. தலால் ஸ்ட்ரீட்டிலிருந்து, வால் ஸ்ட்ரீட் வரை புகுந்து விளையாடுவான். அருமையாக, இன்னும் கொஞ்சம் பேச மாட்டானா என்று ஏங்கும் படி, தெளிவாக, விளக்கமாயிருக்கும் அவன் பேச்சு. நான் அன்றிலிருந்து, இன்று வரை ‘தத்தக்கா பித்தக்கா ‘தான்.

சர்தார்ஜி அருமையாக பாட்டுப் பாடுவான். கஜல்தான் அவன் ஸ்பெஷாலிட்டி. மொடாக் குடியன். Bar ல் போய் உட்கார்ந்து, இரண்டு பெக் அடித்து, சுதி சேர்ந்தவுடன் குரலெடுத்து,

‘சிட்டி ஆயியே ஆயியே….சிட்டி ஆயியே…

படே தினோக்கி பாத்…. ‘

என்று பாட ஆரம்பித்தானென்றால், அத்தனை bar maid களும் எங்கள் டேபிளைச் சுற்றி நின்று கொள்வார்கள்.

பங்க்ஜ் உதாஸிலிருந்து, படே குலாம் அலிகான், முகேஷ், முஹமது ரஃபி வரை எனக்கு அவன்தான் அறிமுகம் செய்து வைத்தான்.

இந்துஸ்தானி ஒரு அருமையான, செழுமையான மொழி. சமஸ்கிருதமும், ஃபார்சியும், உருதுவும், அரபியும் இன்ன பிற மொழிகளும் கலந்த பேராறு. மொழிக் கங்கை.

‘இந்தி ‘ என்று சொன்னால் நம் ஊர் ஆசாமிகளுக்கு கோபம் வரும். வரட்டுமே. எனக்கென்ன ? ஒரு சமுதாயத்தையே குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வைத்து விட்டார்களே…இந்தி படிக்க விடாமல். வேதனையாக இருக்கிறது.

எவ்வளவோ வேலை வாய்ப்புகள் வட மாநிலங்களில்…இந்தி தெரியாமல் தமிழ்நாட்டு பட்டதாரிகள் முடங்கிப் போய் கிடக்கிறார்கள். இந்தி தெரியாமல் நான் பட்ட கஷ்டங்கள், இழந்த வாய்ப்புக்கள் எனக்குத் தானே தெரியும் ?. ‘களவும் கற்று மற ‘ என்று சொல்லும்போது, என் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள இந்தி படித்தால் என்னய்யா தப்பு ?

இந்தி படிக்காதே என்று சொல்கிறவனின் ‘பின் பக்கத்தில் ‘ வேட்டு வைக்க வேண்டும் போல கோபம் வருகிறது…..

….

…கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுவிட்டேன்…மன்னித்துக் கொள்ளுங்கள்….

என் கல்லூரி நாட்களில், 80 களில் நடந்த ‘மறு இந்தி எதிர்ப்பு ‘ போராட்டத்தில் கலந்து கொண்டு, தார் பூசி அழித்த கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதை வேதனையோடு கூறிக் கொள்கிறேன். என்ன செய்வது ? பட்டால்தானே புத்தி வருகிறது ?

இந்த விஷயத்தை இத்துடன் விடுகிறேன்….நிரம்ப யோசித்தால் மண்டைதான் காய்கிறது…தமிழ் நாட்டு ஜனங்கள்தான் உணர வேண்டும். நான் ஒருவன் கத்தி என்ன பயன் ?

சர்தார்ஜிக்கு pffizerல் chemist வேலை. நல்ல சம்பளம். வசதியான வீட்டுப் பையன் வேறே. ஆனந்தமாக இருந்தான். கொஞ்சம் play boy டைப்.

ஒவ்வொரு சனிக்கிழமையும், தலைக்கு ஷாம்பூ போட்டு அவன் கூந்தல் ஆற்றுகிற அழகைக் காண கண் கோடி வேண்டும். பின்பக்கம் வரை கரு கரு என்று நீண்டு தொங்கும் கூந்தலைப் பார்த்தால், நம் ஊர் பெண்களின் ‘சவுரி முடி ‘ நாணித் தலை குனிந்து விடும். தாடியை மட்டும் வழித்துவிட்டு, ஒரு பஞ்ச கச்சமும், அங்கவஸ்திரமும் போட்டால், அசல் ராஜா ரவிவர்மா ஓவியத்தில் வரும் மன்னர் போலிருப்பான் என நான் நினைத்ததுண்டு. பஞ்சாப் கோதுமை நிறம்.

கூந்தலை ஆற்றிய பிறகு, தலைப்பாகை மடிப்பது துவங்கும். பெரிய திரைச்சீலை அளவுக்கு இருக்கும் தலைப்பாகைத் துணியை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்கொள்ள, மடித்து..மடித்து…சுற்றி…சுற்றி…குண்டூசி குத்தி…அழகு பார்த்து…பெரிய சம்பிரதாயம் போல நடக்கும் அது. ஒவ்வொரு வாரமும்.

அப்புறம் மதியான வாக்கில் சாப்பிட போவோம். சக்கர் ‘மாடுங்கா ‘ போகலாம் என்பான். சர்தார் ரொட்டி திங்க போகலாம் என்பான். சர்தார் சொல்கிற இடத்தில் சக்கரபாணிக்கு வேலையில்லை. சக்கர் சாப்பாட்டுப் பிரியன். சைவப் பிராணி. சர்தார் மாமிச பட்சிணி. இவர்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் நானொரு அப்பிராணி. எப்படியோ சமாதானம் பண்ணி சாப்பிடப் போவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

அப்படியாகப் பட்ட ஒரு சனிக்கிழமை, மாலை வேளயிலே, சர்தார் திடாரென்று ‘காமாத்திபுரா ‘ போகலாம் என்றான். காமாத்திபுரா பம்பாயின் ‘ரெட் லைட் ‘ ஏரியா என்று எனக்குத் தெரியும். புஷ்பா தங்கதுரை எழுதின கதை வேறு ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது.

‘எதற்கு ?…நான் வரவில்லை… ‘ என்றேன் பயத்துடன்.

‘சும்மா வா. உனக்கு ஒரு நல்ல அனுபவமாயிருக்கும். நீ இது போலெல்லாம் பார்த்திருக்க மாட்டாய்…மேலும் அங்கொரு ஹோட்டலில் அருமையான ‘காபூலி புலாவ் ‘ கிடைக்கும்… ‘

‘இல்லை…நான் வரவில்லை..எனக்கு ‘அந்த ‘ மாதிரி விஷயங்கள் பிடிக்காது….. ‘

சர்தாருக்கு கோபம் வந்து விட்டது.

‘ஓய் பெஹன் சூ…முட்டாள்…நான் காமாத்திபுரா கூப்பிட்டது செக்சுக்குத்தான் என்று ஏன் நினைக்கிறாய் ?…AIDS ஆயேகா AIDS…மாலும் ?….இது உண்மையிலேயே நல்ல அனுபவமாயிருக்கும்…பயப்படாமல் வா… ‘ என்றான்.

நினைவிருக்கட்டும். இது நடந்தது 90 களின் ஆரம்பத்தில். ஹாலிவுட் நடிகர் ராக் ஹட்சன் மண்டையைப் போட்ட நேரம். இந்தியாவில் AIDS பற்றிய விழிப்புணர்வு அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்தது.

படுக்கையில் படுத்துக் கொண்டே நாங்கள் பேசியதை கேட்டுவிட்டு, ‘நானும் கூட வந்தே ஆவேன் ‘ என்று அடம் பிடித்த ‘பாட்டம் வலி ‘யை ஒரு வழியாக கழற்றி விட்டு, நான், சக்கர், சர்தார் மூன்று பேரும், Grand Centralல் போய் இறங்கினோம்.

மாலை மயங்கும் நேரம். முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு சுற்றலாம் என்று சர்தார் சொன்னது நல்ல யோசனையாகப் பட்டது. நானும், சர்தாரும் காபூலி புலாவ், கபாப் என்று வெளுத்துக் கட்ட, சக்கர் முணங்கிக் கொண்டே ‘ரோட்டி அவுர் தால் ‘ சாப்பிட்டது நினைவிருக்கிறது.

முதலிலேயே சாப்பிட்டது எவ்வளவு நல்லதென்று எனக்கு அப்போது தெரியாது.

சாப்பிட்டு முடித்து, திரும்பின முதல் தெருவிலேயே அதிர்ச்சி ஆயிரம் வாட் கரண்ட் மாதிரி தாக்கியது. அப்படியே உறைந்து போய்விட்டேன். நான் கண்ட காட்சி அப்படிப் பட்டது. சர்தார் என்னை சரியாக தயார் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

எங்கு திரும்பினும் பெண்கள்..பெண்கள்…பெண்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கையசைத்துக் கொண்டு, போவோர் வருவோர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு….இவர்களுடன் அலிகள், பிம்ப்கள், தாதாக்கள்… ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நம்பர் எழுதி தொங்க விட்டிருந்தார்கள். லைசன்ஸ் நம்பர் என்றான் சர்தார்.

மனதை தைரியப் படுத்திக் கொண்டு முன்னால் நடந்தேன்.

ஒரு பெண்மணி ஓடி வந்து என் கையைப் பிடித்தாள். பார்ப்பதற்கு நேபாளி போல் இருந்தாள்.

‘அரே ஆவோன்னா…எ தேக்…கித்னா படா ஹே ?… ‘

‘மாஜீ…சோட்தோ முஜே… ‘ கையை இழுத்துக் கொண்டேன்.

‘பந்த்ரா ரூப்யா தே…பஸ் ‘ பின்னாடியே ஓடி வந்தாள்.

கொஞ்ச தூரம் போனதும் இன்னொரு அதிர்ச்சி அலை.

குழந்தைகள்.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள். அதிக பட்சம் பத்திலிருந்து பன்னிரெண்டு வயதுக்குள்தான் இருக்கும்.

அடப்பாவிகளா…

ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நின்று கொண்டு கையை அசைத்து, உள்ளே வரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். முகமெங்கும் அதீத மேக்கப் பூச்சுடன்…

இந்த மாதிரியான குரூரமான காட்சியை வாழ்க்கையில் கண்டதில்லை. மனிதர்களின் வக்கிரத்திற்கு அளவே இல்லையா ? அரசாங்கம், போலிஸ் எல்லாம் என்ன செய்கிறது ?…

என்னால் அதற்கு மேல் நடக்க திராணியில்லை. அழுகை வரும் போல் இருந்தது.

விடு விடு என்று திரும்பி நடந்து போய் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்தேன்.

சந்தோஷமான இரண்டு சிறு பெண் குழந்தைகள் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு ரயிலுக்கு காத்திருந்தார்கள். இருவர் கையிலும் ஐஸ் க்ரீம் வழிந்து கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு முன் பார்த்த காட்சிக்கும், இதற்கும் எவ்வளவு வித்தியாசம் ?

எனக்கு அடக்க மாட்டாமல் அழுகை வந்தது.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்