தொடுவானம்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

சித்ரா



_______________

ரோட்டோர பிளாட்பாரத்தில்
ஒரு தொழுநோயாளனும்
ஒரு தொழுநோயாளியும்
அவர்களைத் தாண்டி
கால்கள் போகிற போது
கைகளை நீட்டி
பிச்சை கேட்கிற நேரம் தவிர
சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்..

பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில்
தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ?
நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில்
உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை
முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ?

ஆறுதலோ ஆர்வமோ
அகநானூறு படலங்களை தீர்மானிப்பது
புற நானூறாயிரம் நியாயங்கள்
இந்நியாயங்களின் காவல் அருகிலில்லை
இம்மனிதர்களுக்கும் காவல் அருகிலில்லை

சடசடவென்ற பாதசாரிகளின் நடைகளுக்கிடையில்
சில்லறை சத்தம் மட்டும் அவ்வப்போது
மற்ற சமயங்களில் யாவும்
’தொடர்பு கொள்ளும் நிலையிலில்லை’ – என
சமூகம் பதிவுசெய்த ஒரேகுரல்.

பிளாட்பாரத்தின் விளிம்பு
தொடுவான கோடாய்
வெவ்வேறு உலகத்தை பார்த்தபடி நீளமாய்….

Series Navigation

சித்ரா

சித்ரா