தொடர்ந்து வரும் நட்பு..

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

செங்காளி


அன்பான நண்பன்தன் அருமைமகள் திருமணத்திற்கு
கண்டிப்பாய் வரும்படி கட்டளை இட்டுவிட
நண்பனை முதன்முதலாய் நான்பார்த்த நிகழ்ச்சிதானே
என்மனத் திரையினிலே எழிலாய்த் தோன்றியதே.

முப்பது ஆண்டுகட்கு முன்னால் நடந்ததிது.
இப்பொழுது நினைத்தாலும் இனிப்பாய் இருக்கின்றது.
இரவுமணி பத்திருக்கும் இறுதிவண்டி பதினெட்டு ‘பி ‘
பாரிமுனைப் பக்கமிருந்து புறப்பட்ட நேரமது.

வண்டியில் இடம்பிடித்து வகையாக அமர்ந்திட்டேன்.
வண்டியை ஓட்டுநரும் விரைவாகச் செலுத்திவந்து
இரண்டாவது நிறுத்தத்தில் இலாகவமாய் நிறுத்திவிட
திரண்டிருந்த மக்களெல்லாம் தாவித்தான் ஏறிவிட்டார்.

அவர்களிலொரு வர்மட்டும் அனைவருக்கும் வழிவிட்டு
கவனமாய் வண்டியேறிக் கடைசியில் நின்றிருந்தார்.
நடத்துநரும் தன்விரலால் நாக்கைத் தொட்டுவிட்டு
படக்கெனவே சீட்டுகளைப் பிய்த்துக் கொடுத்துவந்தார்.

‘சில்லறைதான் சரியாகச் சீட்டுக்குக் கொடுத்திடுவீர்,
இல்லையெனில் இங்கேயே இறங்கிடுவீர் ‘ என்றிட்டார்.
கடைசியாக ஏறியவர் கவலையோடு காத்திருக்க
அடைந்துவிட்டார் நடத்துநரும் அவரிருந்த இடத்தைத்தான்.

பயத்துடன் நடத்துநரைப் பார்த்துவிட்டு அவருந்தான்
தயக்கத்துடன் பத்துரூபாய்த் தாளொன்றை நீட்டிவிட்டார்.
‘என்னுயிரை வாங்காதேயென எத்தனைதரம் சொன்னேன்நான்
எண்பதுபைசா சில்லரைதான் எடுத்துக் கொடுத்திடுவாய்;

சில்லரை இல்லையென்றால் சீக்கிரமே இறங்கென்று ‘
சொல்லிவிட்டு நடத்துனரும் ‘சீழ்க்கை ‘ அடித்திட்டார்.
ஓட்டுனரும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டார்.
‘சட்டென்று இறங்கிடுவாய் சாவுக்கிராக் கி ‘யென்றே

கண்டபடி திட்டிவிட்டார் கடைசியில் நின்றவரை.
கண்கள் கலங்கிடவே கீழேயிறங்கப் போனவரை
‘இறங்காதீர் ‘ என்றுவிட்டு ‘இவருக்கான சில்லரையை
தருகின்றேன் ‘ எனச்சொல்லித் தந்துவிட்டேன் நானும்தான்.

‘தகுந்த சமயத்தில் தந்துவிட்டார் பேருதவி,
மிகுந்த நன்றி ‘யென்று மொழிந்திட்டார் அவருந்தான்.
அறிமுகம் செய்துகொண்டார் ‘ஐஐடி ‘யில் இருப்பதாக.
பொறியியல் கல்லூரியில் படிப்பதாய்ச் சொன்னேன்நான்.

நின்றபடி அவரும்வழி நெடுகப் பேசிவர
நன்றாக அமர்ந்தபடி நானும் கேட்டுவந்தேன்.
கடைசியாக நானிருக்கும் கல்லூரி நிறுத்தம்வர,
விடைபெற்றேன் எனைப்பார்க்க வருமாறு சொல்லிவிட்டு.

அவரும் எனைத்தேடி அடுத்தநாள் வந்துவிட,
அவரைப் பார்க்கநானும் ‘ஐஐடி ‘ போகவர,
இப்படியாய் வளர்ந்திட்ட இனிய நட்பதுதான்
முப்பது ஆண்டுகளாய் முறியாமல் தொடர்கிறது…

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி