துரோகம்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

கவிதா நோர்வே



பெருமழை
ஓய்ந்து போனதொரு
இரவில்..
இலை சொட்டும் நீர் போல்
இதயத்தின் ஓரங்களில்
உதிரத் துளிகள்

எரிக்கப்பட்ட
எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து
சாத்தான்களால் எறியப்பட்ட
எமது ஆதாம் ஏவாள்களுடன்
கர்த்தருமா துரத்தப்பட்டார்?

புயல் ஓய்ந்து
நிசப்தம் குடிகொண்ட
இக்கணத்தை அமைதி என்று
எப்படி மொழிபெயர்ப்பது?

ஊரிலிருந்து
கடத்தப்பட்ட காற்றிலும்
ரத்த வாடை கசிகிறது

துப்பாக்கிமுனைகளில்
புறப்பட்ட புகையில்
எங்கள் எச்சங்களும்
மறைக்கப்பட்டன

பெருங்கடல் சூழ்ந்தென்ன
காய்ந்து போன மணற்பரப்பும்
வற்றிப்போன குளங்களும்
உடைந்து போன நதிகளும்
இயற்கையும் துகள்களாகி
வனாந்தரமாய்
மேகம் தொலைத்த
வானத்தை நோக்கி
எங்கள் பூமியின் தவம்
தொடர்கிறது

எம் யாக வேள்வியின்
தீ அணைக்க மட்டுமாய்
வந்து பொழிந்து போகிறது
கடந்து போகும்
தூரத்து மேகங்கள்.


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே