பா. சத்தியமோகன்
தெய்வகவி சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை புதுக்கவிதை வடிவில் பெரியபுராணமாக அரங்கேற்றிய நிகழ்ச்சி சிதம்பரத்தில் 14.10.2010ல் நடைபெற்றது. மல் ஆசிரியர் பா.சத்தியமோகனின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.
இறை வணக்கம், வரவேற்பு கயிலைச்செல்வர் கேதார தீஷிதரால் ஆரம்பிக்கப்பட்டது. விழாத்தலைமை ஏற்ற அண்ணாமலை பல்கலைக்கழகக் தமிழ் பேராசிரியர் ஆனந்த நடராஜ தீஷிதர் பெரியபுராணத்தையும் அதன் தற்போதைய தேவையையும் மொழிந்தார். மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் நூலை வெளியிட அன்னதான ஆதினம் கோவை.சிவப்பிரகாச சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பின் மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.அவருடைய அருளாசியில் இக்காப்பியத்தின் தற்கால தேவையையும், நுலாசிரியரின் படைப்பாற்றலையும் பற்றி பேசினார்.
அதைத் தொடர்ந்து கோவை.சிவப்பிரகாச சுவாமிகளின் அருளாசி பலதரப்பு மக்களை ஈர்த்தது. நூலின் பெயர் காரணம், நூல் ஆசிரியரின் மூலத்தை மாற்றாமல் பெரியபுராணத்தை புதுக்கவிதை வடிவில் எழுதியிருப்பது பற்றியும் கூறினார். சிறப்புரை வழங்கினார் எழுத்தாணர் இந்திரா செளந்தரராஜன். நாயன்மார்களின் பக்தி நெறி, தற்கால ஆன்மீகம் நிலை போன்றவற்றை எடுத்துரைத்தார்.வாழ்த்துரை வழங்கிய தவத்திரு ஊரன் அடிகள் நூல் ஆசிரியர் தன்னுடன் நட்பு பாராட்டிய விதம் பற்றியும், வாலியின் கிருஷ்ண விஜயம் போன்ற ஓர் நல்ல படைப்பு என்றும் பாராட்டினார்.
பின்பு உமாநாத தீஷதர், மருத்துவர் பத்மினி கபாலிமூர்த்தி, சு.பார்த்தசாரதி , செ. கதிரேசன் சிறப்பாக வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வில் நூலாசிரியருக்கு சேக்கிழார் அடித்தொண்டர் விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்டது. நூலாசிரியர் தனது ஏற்புரையில் இப்புத்தகத்தை வெளியிட தான் கடந்து வந்த பாதை, திண்ணை இணையதளம் தனக்கு அளித்த ஆதரவு பற்றியும் ஏழாண்டுகள் பெரியபுராணத்தை எழுதிய விதம் பற்றியும் எடுத்துரைத்தார். ச. அருண்சித்தார்த் அனைவருக்கும்
நன்றி தெரிவித்தார். நற்கவிஞர் பா. முத்துக்கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். பார்வையாளர்களும்மு இரவு உணவு வழங்கப்பட்டது. மொத்தத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு இந்நூல்.
பா. சத்தியமோகன் ஏற்புரை
அன்பமைந்த
ஆன்றோர் சபையை வணங்குகிறேன்.
நால்வர் பொற்பாதம் வணங்கி
தாயாம் தமிழை வணங்குகிறேன்.
பெற்ற தாய் லலிதாவை வணங்கி
தந்தை சு.பார்த்தசாரதியைத் துதிக்கிறேன்.
“வாய்த்தது நமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்றும்
“ஈசன் புகழ் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்றும்
அப்பர் சுவாமிகள் புகல்வார்.
நாயினும் தாழ்ந்த கடையேனாகிய
என்னையும் ஆட்கொண்டு
“தமது புராணம் பாடுக” என்று ஆட்கொண்டு
புதுக்கவிதையில் இயங்கிட வைத்தது சிவம்.
ஏழு வருடமும் எழுத வைத்தது.
நினைத்து நினைத்து அருளியது.
“சொல்லும் இடமன்று! சொல்லப்புகும் இடம்!” என்பது
உய்ய வந்த தேவநாயனார் வாக்கு.
அதாவது-
“சிவம் பற்றி எது சொன்னாலும்
அது
சொல்ல வந்ததைத் தாண்டியே நிற்கும்”” என்பதாகும்.
அவ்வகையில்
இச்சிறியேன் நினைவில் உந்திப் பறந்து
எழுத்தில் உந்திப் பறந்த
பெரியபுராண நூலுக்கு
அப்பாலும் இப்பாலும் நடுவிலும்
சிவமே நிற்பதை அறிகிறோம்.
பெரியபுராணத்திற்கு
ஆறுமுக நாவலர்-
யாழ்பாணத்து நல்லூர்க்காரர்
அருளிய சூசன உரை இருக்கின்றது.
ஞானமனிதர்
பட்டுசாமி ஓதுவார் அருளிய
பெரியபுராண உரை இருக்கின்றது.
பாரம்பரியமான
T.K சுப்பிரமணிய முதலியார் உரை
மறையாக இருக்கின்றது
சித்திர பெரியபுராணம் இருக்கின்றது
இன்னும் பலப்பல
பெரியோர்கள் உரை இருக்கின்றது.
இத்தனைக்கும் மேலே
உனது
புதுக்கவிதை உரை தேவையா?” என்பீரேல்
நானோர் வார்த்தை சொல்வேன்
“தாயின் இடுப்பில்
கவட்டி போட்டு உட்கார்ந்திருக்கும் மழலை
நிலவைப் பார்த்து
“நிலவு” என்று சொல்லத் தெரியாமல்
“ங்கா” என்றே விளிப்பதை
அன்னை அறிவாள் குதூகலிப்பாள் அதுபோல்
சொல்லவந்த பொருளால் உயர்ந்து நிற்கும் இந்நூல்
தமிழன்னைக்கும்
பக்தி தமிழுக்கும்
உகந்து விளங்கும்”
என்பதே அடியேன் பதிலாகும்.
அவையோரே
ஆன்றோரே
எப்போது இந்நூல் வெளிவரும் என்றே தெரியாதபோது
“எழுதிக்கொண்டே இரு
மற்றது தானே நடக்கும்” என்று நினைப்பு வரும்.
ஏழுவருடம் கடந்தபின்
இறைவசத்தால்
கடன்பட்டு உடன்பட்டு
புத்தகமாக்கி
முதல்பிரதியை ஆத்மநாதர் முன்வைத்து
திருமூலநாதன் உடனுறை சிவகாமசுந்தரி முன்வைத்து
உமாநாத தீஷிதர் வீடு வந்தேன்
மகிழ்வாக ஒரு நினைவை அவரிடம்பகிர்ந்தேன்
என்ன பகிர்ந்தேன்?
“தெய்வச் சேக்கிழார் அருளிய
பெரியபுராண வர்ணனை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு
ராஜராஜ சோழன்
தஞ்சை கோவில் எழுப்பிய
ஆயிரமாவது ஆண்டு இது!
இவ்வேளையில் இந்நூல் வெளிவருகிறது!!” என்றதும்
அடுத்த நொடியே உமாநாதர் சொன்னார்:-
“ புத்தகம் எப்போ வரும் மாப்ளே!” என்று கேட்டு
மாமனார் குரலை நினைவூட்டினார்!
அதுமட்டுமா ஊட்டினார்-
“சிவபெருமான் முன் அழும் எவ்வுயிர்க்கும்
தக்க பதில் உண்டு” எனும் ஞானமும் ஊட்டினார்!
நல்லது!
எனது இலக்கிய வாழ்வில்
சந்திராயன் பிராஜெக்ட் போன்ற இப்படைப்பு முயற்சி
சிவன் உச்சத்து
நிலவைத் தொடுவது போன்ற முயற்சி
ஆம்!
நூல்படைப்புக்கும் விண்வெளி உண்டு
வெளியிடும் நாளே கவுண்ட் டவுன் ஆகும்
அருண்மொழிதேவராம்
சேக்கிழார் அருளிய தமிழால் தானும் நனைந்து
உருகி
இலக்கியத்தில் திளைத்து
பெரியபுராணம் அரங்கேற
தாய்போல காத்து
ஆதரித்த அநபாயச்சோழர் இல்லாமல்
ஆயிரம்கால் மண்டபம் இல்லாமல்
யானை மேல்வைத்து
துணைகரம்கொண்டு கவரிவீசாமல்
இங்கே
இன்றும் பெரியபுராண அரங்கேற்ற
அணிவிழா நடக்கிறது
ஆம்!
இதோ 14. 10. 2010 ஆவணி 28
சேக்கிழார் நினைவரங்கில்
மணிமண்டபத்தில்
Launching பெறுகிறது புதுக்கவிதை பெரியபுராணம்!
ஆம்! இது –
தெய்வ சேக்கிழாரின் ஆசியால் நடக்கிறது!
அருண்மொழிதேவர் எனும் சேக்கிழாருக்கு
அநபாயச்சோழர் எனும் இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஆதரித்தார்-
கடல் போல்
மலை போல்
வானம்போல் ஆதரவளித்தார்.
எனக்கும் அதுபோல் எவர் என்கிறீர்களா
ஆதரவு தந்து
தாங்கிப் பிடித்த
என் துணைவியார் லாவண்யாவே தக்க துணை ஆனார்
அவள் அன்பே இந்நூல் என்றால் மிகையல்ல
ஆதலால்
அவளுக்கு ஒரு பொன்னாடை
பெரியபுராணம் அரங்கேறும் மேடையிலே
உங்கள் முன்,
அனுமதி கேட்கிறேன்
(நன்றி நன்றி)
நாளைய சமுதாயம் ! நாளைய பாரதம்
இளைஞர்கள் யுவதிகள் கையில் என்பதனால்
இந்த நூல் –
அவர்களுக்கே புதுக்கவிதை மாலை என விளங்கும்.
தெய்வக்கவி சேக்கிழார்
கடைசி மூச்சு விட்ட இடம்
தில்லையில் இதுவே ஆக
தமிழ் தீபம் கொண்டு சார்த்தும் வேளை இது.
இந்த விழா மண்டபத்தில்
என்னதான் இல்லை!
இங்கு
ஆடல்வல்லான் எம்பெருமான் நடராஜா சந்நிதியாம்
தில்லை உண்டு!
அந்தத்தில்லையில்
ஆறுமுகநாவலர் எழுப்பிய ஜெயகாந்தம் துரைக்கண்ணு
சேக்கிழார் நினைவுத்தலம் உண்டு!
அந்த நினைவை ஆழமாக உழுதிட
தில்லையை
சேக்கிழாரின் குன்றக்குடி ஆக்கிய
அறம்காவலர் ஐயா சுவாமிநாதன் உண்டு!
கும்பகோணம் தாராசுரம் செல்ல முடியாதவர்களுக்கு
டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி
உருவாக்கிய 63 நாயன்மார்கள் சிற்பத்தலமும்
இங்கே உண்டு!
பெரியபுராணத்தின் பாட்டுடைத் தலைவன்
காப்பிய நாயகன் சுந்தரமூர்த்தி நாயனார் என்றால்
இங்கும்
நம் முன்னே-
மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் உண்டு!
பசிக்கொடுமை தீர்க்க
தனிமைக் கொடுமை தீர்க்க
அன்னதான ஆதீனமாய்
அனாதைகளுக்கு ஆதரவாய்
அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தில்
எழுந்தருளிய
கோவை சிவப்பிரகாச சுவாமிகள் உண்டு!
ஆனந்த நடராஜமாக ஆடும்
தமிழறிவாம்
ஆனந்த நடராஜ திஷிதர் உண்டு!
உமையும் நாதனுமாக உமாநாதராக
கயிலை மாமணி உண்டு!
பாரதிக்கு குவளைக்கண்ணன் போல்
இந்த சத்தியமோகனுக்கு
கைலைச் செல்வர் கேதார தீஷிதர் எனும்
ஆதாரம் உண்டு!
துணைக் கரம் கொண்டு கவரி வீசி
யானை மேல் வைத்து
ஊர்வலம் வைக்க முற்பட்ட
கேதாரம் அன்பு உண்டு!
மருத்துவப்பணிகளுக்கு நடுவே
பக்தி வைத்தியமாக
கலைக்கூடம் எழுப்பிய
டாக்டர் பத்மினி கபாலிமூர்த்திக்கு
மீண்டும் நன்றி உண்டு!
தனது ஒரு ஒரு கதையிலும்
“சிவம்” என்றும்
“நந்தி ரகசியம்” என்றும்
சமூகமும் சிவமும் இணைக்கும்
இந்திரா செளந்தர்ராஜன் எனும் சக இருதயர் உண்டு!
கயிலைச்செல்வர் கதிரேசன் உண்டு
முத்தாம் கிருஷ்ணனும் உண்டு!
இவை மட்டுமா உண்டு
அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் கருணை பேசும்
ஊரன் அடிகள் ஆசிகள் உண்டு!
நல்ல நல்ல
எழுத்தாள நண்பர் குழாம் உண்டு
இந்நூல் வெளிவர
சின்னச்சின்னதாய் பெரிய பெரிய கஷ்டங்கள் பட்டாலும்
வாழ்த்து கூறும்
மகன் அருண்சித்தார்த் உண்டு மகள் அபிநயா உண்டு
நால்வர் பொற்பாத நிழல் சேர
இம்மைக்கும் மறுமைக்கும் கிடைத்த மருந்து போன்ற
பெரியபுராணம் எனும்
திருத்தொண்டர் புராணத்தை
வாங்கிப்படிக்கும் தமிழ் மக்கள் ஆதரிப்பு
நிச்சயம் உண்டு! உண்டு! உண்டு! என்று
நம்புதலோடு
பிரார்த்தித்து அமைகிறேன்
நன்றி வணக்கம்.
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1
- ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் !(கட்டுரை -2)
- புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்
- தரிசனம் எஸ் ஜெயலட்சுமி
- sanskrit lessons
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- அரும்புகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1
- மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்
- நூல் எரிப்பு
- மழையின் மொழி
- திமிர்க் காற்றும், விளை நிலமும்
- தந்தையாதல்
- யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..
- சுழல்
- உறக்கம்
- பழகும் நாட்களின் பரிவர்த்தனை..
- பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்
- போதாத காலம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )
- “ஒரு தீரரின் பயணம்“
- தன் விரல்களை துண்டித்த சூபி
- முழுமை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- துப்பாக்கியே அழிந்துவிடு
- இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்
- மொழியாள்
- செல்வராஜ் ஜெகதீசன்.கவிதைகள்
- வினையிலி – இல்லாத ஒன்று
- ஏமாற்றங்களின் அத்திவாரம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
- முள்பாதை 52
- தில்லையில் மீண்டும் பெரியபுராணம்