திருவள்ளுவர் தீட்டிய கத்தி

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

ருத்ரா


=======================================
கத்தியை தீட்டாதே
புத்தியை தீட்டு
என்று எல்லோரும்
ஒத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்
வள்ளுவர்
கத்தியை தீட்டிக்காட்டி
புத்தியை தீட்டும்
இந்தக்குறள்
உயரிய சிந்தனைகள்
உதிர்க்கும் குற‌ள் ஆகும்.
ஒவ்வொரு
“நாள் நாள்” ஆக‌ ந‌ட‌க்கும்
ந‌ம் வாழ்க்கை
உண்மையில்
ஒவ்வொரு
“வாள் வாள்” ஆக ந‌ம்மை
அறுத்துக்கூறு போடுவ‌து ஆகும்.
ஓலைச்சுவ‌டியில்
வ‌ள்ளுவ‌ர்
தன் எழுத்தாணியை
க‌த்தியாக்கி
நம் ஆசைக‌ள் மீது
நம் அவ‌ல‌ங்க‌ள் மீது
கூர் தீட்டிக்காட்டுகிறார்.

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாள்அது உணர்வார் பெறின்.”

இந்தக் குறள்
எல்லா தத்துவங்களையும்
தன்னுள்
சுருக்கி வைத்திருக்கிறது.
வாழ்க்கையை
விரும்பவும் வேண்டும்.
வாழ்க்கையை
ஒதுக்கவும் வேண்டும்.

காலையில்
சூரியன்
அழகாகாக‌
தன் ஆரஞ்சு கதிர்களை
கசக்கி சாறு பிழிந்து
விடியலின் “ரசம்” தருகின்றான்.
மாலையில்
ம‌லையோர‌ங்க‌ளின்
த‌லையணைக‌ளில்
அவ‌ன் த‌லை சாய்க்க‌ப்போகும்போது
அல்ல‌து
க‌ட‌ல் விரிப்பில்
பாய்விரித்து
ப‌டுத்துவிடும்போது
ம‌ர்ம‌மாய்
ந‌ம்மிட‌மும்
ஒரு க‌ண‌க்கை
தீர்த்துவிட்டுப்போகிறான்.
ந‌ம் உயிரிழையை
கொஞ்ச‌ம் அறுத்துக்கொண்டு
போய்விடுகிறான்.

“நாள்” “வாள்”
வெறும் எதுகை மோனை
ம‌ட்டும் அல்ல‌.
கூட்ட‌ல் குறியையும்
க‌ழித்த‌ல் குறியையும்
வாழ்க்கையின் க‌ணித‌ம் ஆக்கிய‌
நுட்பமான‌ க‌ணித‌ ச‌மன்பாடு அது.

ஐன்ஸ்டீன் சொன்ன‌
ஸ்பேஸ் டைம் எனும்
கால‌வெளி
வ‌ள்ளுவ‌னின் இந்த‌
முள்ளை ஒளித்து வைத்திருக்கும்
ஒரு “பிர‌ப‌ஞ்ச‌ ரோஜா”வைத்தான் காட்டுகிற‌து.

ஒளியின் வேகத்தை மீறிய‌
ஒரு வேகத்தை தாங்கிய‌
“காலப்பரிமாணம்”
இந்த பிரபஞ்சத்தில் தோன்றும் போது
அதுவே வாள் ஆகி
இதை அறுத்து
பிரபஞ்சம் என்ற தொடர்பையே
இங்கு துண்டித்து விடுகிற‌து.
இதை
கார‌ண‌விய‌ல் கோட்பாடு
(காசாலிடி பிரின்சிபிள்)
என்பார்க‌ள்.
கால‌க்கயிறு ஒரு கார‌ண‌ம்.
அதுவும் அதாலேயே அறுக்க‌ப்ப‌டுவ‌து
ஒரு காரிய‌ம்.

வால் போய் க‌த்தி(அல்லது வாள்) வ‌ந்த‌து
டும் டும் டும்
என்று பாடி விளையாடுவ‌து போல்
நாள் போய் வாள் வ‌ந்த‌து
டும் டும் டும் என்று
வாழ்க்கையை விளையாட வேண்டும்
என்று உண‌ர்த்திய‌வ‌ன் வ‌ள்ளுவ‌ன்.
வாழ்க்கை என்பது நிலையாமை
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி
என்றெல்லாம்
ப‌ய‌முறுத்தும்
க‌ன‌த்த‌ ச‌த்த‌ங்க‌ள் அல்ல‌ இவை.

வாளோடு வாள்கொண்டு மோதுவ‌தைவிட‌
இருக்கும் நாளோடு
வ‌ரும் நாளை மோத‌விட்டு
தெறிக்கும் ந‌ம்பிக்கையின்
தீப்பொறிக‌ளில்
வெளிச்ச‌ம் க‌ண்டு
ம‌னித‌த்தின் ம‌ல‌ர்விரிய‌ட்டும்
என்று
கோடு காட்டிப்போன‌வ‌ன் வ‌ள்ளுவ‌ன்.
இதை விட்டு…
வெறும் குழ‌ப்ப‌த்தின்
கோடுக‌ளை
காடுக‌ள் ஆக்கிக்கொள்ளாதீர்க‌ள்.

========================================ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா