தவித்துழல்தல்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)


முள்ளிடுக்கில் மலர்ந்தெழுந்து
மணம்பரப்பும் ரோஜாவை
இமைக்காது பார்த்திருந்தேன்.
உள்ளிருக்கும் ரணம் புதைத்து
உயிர்த்திருத்தலின் வலியை
உணர்ந்திருக்கக்கூடும்-நீ.

வண்ணத்துப் பூச்சியிதன்
செவ்வர்ணம் இயற்கையில்லை-மனக்
காயத்தில் கசிந்த ரத்தம்
சிறகுகளை அலங்கரிக்கும்!

வானத்தின் விளிம்புதொட
சிறகுகளைத் தந்தவனே!
நிலக்கிளியாய் இங்கே நான்,
கூடடைதல் இயல்பேயாம்!

விழிகளை இழந்ததன் பின்
எதிர்வந்த விடியல் நீ
உயிர்ப்பூ உதிர்ந்ததன்பின்
அருகுவந்த தென்றல் நீ.

வலியானாய் – சுகமும்
நீயானாய்!
மருந்தானாய் – நீயே
நோயானாய்!
தீயாய் பனிக்குழம்பாய்
உயிர்ப்பாய் மரணமுமாய்
எல்லா உருக்கொண்டும்
என்னுள் நீ நுழைந்தாய்!

யுகந்தோறும் பெருகிவந்த
கண்ணீரை நீ துடைத்தாய்!
அந்தோ! மறுபடி என்
கண்ணீராய் நீயானாய்!

ஆழிப் பிரளயத்தில்
அல்லலுறும் சிறுதுரும்பாய்…
பெருமழைப் போதிலொரு
பொந்திழந்த சிற்றெறும்பாய்…
வலியாய்… கண்ணீராய்…
வாழ்வின் பெருந்துயராய்…
………………………..
…………………………
எல்லாமாய் அந்தரத்தில்
நான் கிடந்து தவிக்கின்றேன்.
எனக்கே அந்நியமாய்…
எனக்கே நான் புதிரானேன்!

காற்றாய்ப் பறத்தலெண்ணி
கனவுகளை வளர்த்திருந்தேன்
சேற்றில் மலர்ந்துவிட்டு
சே! இது வெறுங்கனவு!

Series Navigation

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)