தவறிச் செய்த தப்பு

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

உஷாதீபன்



வீட்டுக்குள் நுழையும்போதே கேட்டுக்கொண்டேதான் செருப்பைக் கழற்றினான் சந்துரு.
“கொடுத்தாங்களா?”
ராகினியிடமிருந்து பதில் இல்லை என்பதைக் கண்டவுடன் தெரிந்து விட்டது பணம் வந்து சேரவில்லையென்று.
“நாந்தான் சொல்றனே…கொடுக்க மாட்டாங்கன்னு…எனக்குத் தெரியும்…அது வராது. அவ்வளவுதான்…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாப் புலம்பாதீங்க…”
“நீ என்னைத்தான் வாய அடக்குவ…அங்க கேட்க உனக்கு நாக்கு எழும்பாது…”
“எல்லாம் கேட்டாச்சு…”
“கேட்டாத்தான் வந்திருக்கணுமே இந்நேரம்…”
“தருவாங்க…தருவாங்க…எங்க போறது?”
“அவுங்க எங்க போனா நமக்கென்னடி? நமக்குத் தேவை கொடுத்த கடன்…அவ்வளவுதான்…”
“அதான் வந்துரும்ங்கிறேன்ல…பேசாம இருங்க…இதுக்காக நீங்க டென்ஷன் ஆகிக்காதீங்க…”
“உனக்கு வேணும்னா டென்ஷன் ஆகாம இருக்கலாம். எனக்கு அப்படியில்லை. டென்ஷன்தான். வியர்வை சிந்தி உழைச்ச காசுடி…சும்மாவா…?”
“வியர்வை எங்க சிந்தினீங்க…? ஃபேனுக்கடில உட்கார்ந்து உழைச்ச காசுன்னு வேணா சொல்லுங்க…
“இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…இதையே அந்தம்மா காது கேட்க சொல்லிப்புடாதே…கதை கந்தல் ஆயிடும்…”
“அப்டீன்னா?”
“பணம் வராதுடி…பணம் வராதாக்கும்…
“நாம வியர்வை சிந்தலைங்கிறதுக்காகக் கடனத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்கன்னு சொல்றீங்களா?”
“பேனுக்கடில உட்கார்ந்து சம்பாதிச்ச காசுதானன்னு இன்னும் நாலு மாசம் இழுத்துடுவாங்க…அதச் சொன்னேன்…”
“நீங்களா எதையாச்சும் கற்பனை பண்ணிப்பீங்க போலிருக்கு…”
“கற்பனையில்லடி…இன்னைக்கு நடப்பு அப்டித்தான் இருக்காக்கும்…எதிர்த்தாப்புல டீச்சர் வீட்ல ஒரு வேலைக்காரம்மா இருந்தாங்கல்ல…அவுங்க டீச்சர்ட்ட பத்தாயிரம் வாங்கிட்டுப் போனாங்களே…திருப்பிக் கொடுத்தாங்களா? இல்லையே…அத மாதிரித்தான் இதுவும் ஆயிடுமாக்கும்…
“இதத்தான் சொன்னேன் நீங்களா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிறீங்கன்னு…இவுங்க அப்டியெல்லாம் இல்ல…நா எத்தனையோ தடவ சில்லரை சில்லரையா எம்புட்டோ கொடுத்திருக்கேன் அந்தம்மாவுக்கு. அத்தனையையும் திருப்பித்தான் கொடுத்திருக்காங்க…நாங்கூட மறந்திடுவேன்…அவுங்க ஞாபகமாக் கொடுப்பாங்க…தெரிஞ்சிக்குங்க….”
“அதுதாண்டீ சாமர்த்தியம்…சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை எடுக்கிற சாமர்த்தியம்…பணம் போயிடும்…ஜாக்கிரத…பார்த்துக்க…”
“எல்லாத்துக்கும் எதிரும் புதிருமா ஒரு அர்த்தம் கண்டு பிடிப்பீங்க போல்ருக்கு…நம்ம வீட்டுலதான வேலைக்கு இருக்காங்க…தினம் தினம் வர்றாங்கல்ல…தினம்; அவுங்களப் பார்க்கிறீங்கல்ல…கேட்டுக்கலாம்…எங்கயும் போயிடாது உங்க பணம்…”
“பார்த்தியா…பார்த்தியா…உங்க பணம்ங்கிறியே…அங்கதான தப்பே இருக்கு…அது நம்ம பணம்ங்கிற அக்கறையே இல்லையேடி உங்கிட்ட…?அந்த எண்ணம் உன் மனசுலயே இல்லன்னா எப்படி? இந்த வயித்தெறிச்சல எங்க போய்க் கொட்டறது?”
“ஐயோ ராமா…உங்களோட மனுஷாள் பேசி முடியாது….”
“நெனப்புதானடி பொழப்பக் கெடுக்குது… உங்க பணம்ங்கிற தப்பான நெனப்பு உங்கிட்டயே இருந்தா, அப்புறம் அதை வசூல் பண்ணனும்ங்கிற அக்கறை உனக்கு எப்படி வரும்? இல்ல எப்படி வரும்ங்கிறேன்?”
“வார்த்தைக்கு வார்த்தை இப்படி குதர்க்கமா அர்த்தம் கண்டுபிடிச்சிட்டிருந்தா அப்புறம் நம்ம பேச்சே சண்டைல போய்த்தான் முடியும்…பார்த்துக்குங்க…”
“அடிப் பாவீ…என்னடீ சொல்ற? சண்டைல போய்த்தான் முடியும்னா என்ன அர்த்தம்? மிரட்டுறியா? என்னடீ இப்படிப் பேசுற?”
“அட ஈஸ்வரா…இந்த மனுஷன்ட்டப் பட்டுட்டு நான் படுற பாடு…அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்…எதப் பேசினாலும் இப்டி ஒத்தைக்கு நின்னா எப்டி? கடவுளே…நீதான் துணை பண்ணனும்…எப்டியாவது அந்தம்மாவக் கடனைத் திருப்பிக் கொடுக்க வச்சுடு…இனிமே என் மனசறிஞ்சு இந்த மனுஷனோட பணத்தை எடுத்து யாருக்கும் நா கொடுக்க மாட்டேன்…சாகறவரைக்கும் அந்த சுதந்திரம் எனக்கு வேண்டவே வேண்டாம்…இந்த ஒரு முறை தெரியாமப் பண்ணிட்டேன்…என்னை மன்னிச்சிடு…எப்டியாவது இந்தக் கடனைத் தீர்த்து விடு…உனக்குக் கோடிப் புண்ணியம்…நூத்தி எட்டுத் தேங்கா உடைக்கிறேன்…ஊற{ம் தப்பு தப்பு…தேங்கா உடைச்சு அர்ச்சனை பண்றேன்…நாம்பாட்டுக்கு வேண்டிக்கப் போக அப்புறம் யாரைக் கேட்டு நூத்தி எட்டுன்னு வேண்டிண்டேன்னு கேட்கும் அது…”
புலம்பிக்கொண்டே கொல்லைப் புறத்தை நோக்கிப் போகிறாள் ராகினி.
மாலை. அந்த மருத்துவமனையின் ஒரு ஓரமான மரத்தடியிலிருந்து…
“அய்யா உங்க உதவிய மறக்கவே மாட்டேங்கய்யா…கோடிப் புண்ணியம்ங்கய்யா உங்களுக்கு…”
“புண்ணியமெல்லாம் இருக்கட்டும்…இது ராகினிக்குத் தெரிய வேண்டாம்…நீயாக் கொண்டு வந்து கொடுக்கிறாப்ல கொடுத்திடு…உன் குழந்தைக்கு சொஸ்தமானாப் போதும்…அதுதான் எனக்கு சந்தோஷம்…சரிதானா? நா வர்றேன்…”
சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிய சந்துருவின் மனது வாழ்க்கையிலேயே முதன் முறையாக அலுவலகத்தில் கைய+ட்டுப் பெற்ற குற்றவுணர்வோடு திடமாகிப் போயிருந்தது.
இந்த நல்லதுக்காக அந்தத் தப்பை ஏன் செய்தோம்? திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.
“இது ஒங்க பங்குதாங்க…இல்லன்னா மானேஜர் வச்சிக்கப் போறாரு…இல்லன்னா ஆபீஸ்ல பிரிச்சிக்கப் போறாங்க…ஏன் விடறீங்க…?”
“யாரோ என்னவோ செய்திட்டுப் போங்க…இதையெல்லாம் என்கிட்டக் கொண்டு வராதீங்க…நா இந்த ஆபீஸ்ல இருக்கிறவரைக்கும் இந்த மாதிரிக் கொடுக்கல் வாங்கல்களே என் காதுக்கு வரக்கூடாது…என் மொத்த சர்வீஸ்ல இன்னை வரைக்கும் நா அப்டித்தான் இருந்திருக்கேன்…தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க…என்னை என் வேலையைப் பேசாமப் பார்க்க விடுங்க…அது போதும்…”
“எல்லாரும் எவ்வளவோ சாமர்த்தியமா இருக்காங்க…உங்களுக்குத்தான் அந்த சமத்து இல்ல…”
இவன் ராகினியையே பார்க்கிறான். இவள் சிந்தனை இப்படியிருக்கும் என்று நினைக்கவேயில்லையே?
“தப்புப் பண்றதை சாமர்த்தியம்ங்கிறீங்க…அவனைச் சமத்துங்கிறீங்க…நல்ல விஷயங்களுக்கில்ல சாமர்த்தியம் இருக்கணும்…அதுதானே உண்மையான சாமர்த்தியம்…மாப்பிள்ளைக்கு மேல் வரும்படி உண்டான்னு கேட்குறது எப்படி ஒரு அடிஷனல் க்வாலிஃபிகேஷன் மாதிரி ஆச்சோ அது போல இருக்கு இப்ப நீ பேசுறது…இதைக் கல்யாணத்துக்கு முன்னாடியே நீ கன்ஃபார்ம் பண்ணிட்டு எனக்குக் கழுத்தை நீட்டியிருக்கலாமே…”
“இதெல்லாம் இப்ப சர்வ சகஜம்னு நினைச்சேன்…உங்ககிட்ட இப்டிப் பட்டுட்டு முழிக்கும்னு கண்டனா? ஊர் உலகத்துல இல்லாத அதிசயமா இப்டி நீங்க இருப்பீங்கன்னு யார் நினைச்சா?”
“அப்போ நா இப்டி நேர்மையான ஒருத்தனா இருக்கிறதுல உனக்கு ஒப்புதல் இல்லே…அப்டித்தானே…?”
“ஐயோ கடவுளே…இந்த நேர்மைங்கிற வார்த்தையைக் கண்டாலே எரிச்சல்தான் வருது எனக்கு…இதெல்லாம் இப்பக் காலாவதியான வார்த்தைங்க… சொல்லிட்டுத் திரியாதீங்க…சிரிக்கப் போறாங்க…”
“ஏற்கனவே நமக்குக் குழந்தையில்ல…இதுல இந்தப் பாவம் வேறே சேரணுமா…உடல் ஆரோக்கியத்தோடவாவது இருந்திட்டுப் போய்ச் சேருவோம்…”
“இப்டி சித்தாந்தம் பேசிக்கிட்டே இருங்க…அதுக்குத்தான் நீங்க லாயக்கு…எல்லாருக்கும் உள்ளது நமக்குன்னு வாங்கத்தான் தெரில… கிடைக்கிறதயாவது வாங்கிட்டு வர்ற சாமர்த்தியமும் இல்ல உங்களுக்கு…வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து மாங்கு மாங்குன்னு வேல மட்டும் செய்றீங்க…உங்கள வச்சு உங்க ஆபீஸ்ல எத்தன பேர் லாபம் அடையறாங்களோ? நீங்க மட்டும் மக்கு மாதிரி இருந்திட்டிருக்கீங்க…அது உங்களுக்கு அவமானமாவும் உறுத்தல…எனக்கானா வயித்தெரிச்சல் தாள முடியல…”
இப்படி வாங்கிக் கொடுத்திருப்பதை நினைத்தால் இன்னும் அவளுக்குத்; தாள முடியாது நிச்சயமாய். முத முதல்ல வாங்கிட்டு வந்திருக்கீங்க…நேரா பொண்டாட்டிகிட்டே கொண்டு வந்து கொடுக்கணும்னு தோணலையா உங்களுக்கு? நல்ல ஆம்பிளை ? – கொதித்துப் போய் விடுவாள். அத்தோடு விடுமா? ஆயுளுக்கும் தொடருமே!
இந்த ஒரு முறைத் தவறு இந்த ஒரு தரத்தோடு போக வேண்டும். சத்தியமாகத் தொடரக் கூடாது. இது அவளுக்குத் தெரிந்தால் நிச்சயம் தொடர வைத்து விடுவாள். பிறகு நிம்மதியே இல்லாமல் போய்விடும். எத்தனையோ முறை மறுத்தும் கொண்டு போங்க என்று வலியக் கையில் திணிக்கப்பட்ட பணத்திற்கு இப்படி ஒரு யோசனையைத் தந்த அந்த மகாசக்திக்கு நன்றி!
வேலைக்காரம்மாளின் குழந்தை என்று அவளோடு தன் வீட்டுக்கு வந்து எப்பொழுதும் போல் ஓடியாடி விளையாடுகிறதோ அன்றுதான் அவனின் இந்தத் தவறிய தப்புக்கான காயம் ஆறும். அது விரைவில் நிகழும்! தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சந்துரு.
——————————–

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்