தமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… ?

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஆர் ராஜூ


இன்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிதாமகன் கதாபாத்திர வடிவமைப்பில் ஒரு புதிய சிந்தனையை கொண்ட நபராக பாலாவை அடையாளம் காட்டுகிறது… – வெகுஜன தமிழ் சினிமா ரசிகரிடை. படம் பார்த்து வெளி வரும் போது மனம் கிழித்துப் போட்டது போல் இருந்தது, ஏன்… ?

மிகப் பெரிய இலக்கியத் திருட்டு நடந்திருப்பது கண்டு.

1956 ஸரஸ்வதி பத்திரிக்கையில் ஜெயகாந்தன் எழுதிய, ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி ‘ கதையின் உல்டாவே 2003ல் வந்துள்ள ‘பிதாமகன் ‘ தொடர்ந்து இக் கடிதம் படிக்கும் முன் அக் கதையை படிக்க வேண்டுகிறேன்,

www.jayakanthan.com அதில் வலது பக்கம் உள்ள ஜெ.கெ.படைப்புகள் அமுக்கினால் வரும் பக்கத்தில் பத்தொன்பதாக வரும் ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி ‘ கதை. படியுங்கள்.

மேலும் ஜெயகாந்தன் சிறுகதை புத்தகத்தில் இக் கதைக்கு அடுத்ததாக வரும், ‘குரு பீடம் ‘ கதையில் ஞானம் பெறும் கதாபாத்திரத்தின் பெயர் ‘சித்தன் ‘.

கதை திரைக்கதை வசனம் இசை பாடல்கள் டைரக்ஷன் அனைத்தும் தாங்களே எனப் போட்டு , கெக்கே பிக்கே எனப் படம் எடுக்கும் மசாலா மன்னர்கள் எவ்வளவோ தேவலை….!

ஆனால் ஒரு இலக்கியவாதியின் உழைப்பைத் திருடி, அங்கிகாரம் கூட தராமல் ‘தெளிவான சிந்தனையாளர் ‘ வேஷம் போடும் இலக்கியத் திருடர்கள் தமிழ் சமுதாயத்தின் அசிங்கங்கள்.

ஆனால் ஒரு நல்ல சினிமா தர வேண்டும் எனும் தவிப்பு உள்ள பாலா ஏன் ஜெயகாந்தனுக்கு அங்கிகாரம் தர மறந்தார்… ?

ஜெயகாந்தனின் மணி விழாவில் முக்கிய பங்கு வகித்த பாலுமகேந்திரா நூலகத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர் தானே பாலா… ?

பின் ஏன்… ?

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் அங்கிகாரம் தந்திருக்கிறார்கள், உதாரணமாக…

‘உதிரிப் பூக்கள் ‘ எடுத்த மகேந்திரன், புதுமைப் பித்தனின் கதை என்பதை ‘டைட்டிலில் ‘ போட்டு கெளரவ படுத்தினாரே…

‘முதல் மரியாதை ‘ கொடுத்த பாரதி ராஜா, ஒரு அத்தியாயம் எடுத்துக் கொண்டதற்க்காக ‘கி.ரா ‘ விற்கு ‘டைட்டிலில் ‘ மரியாதை செய்தாரே…!

‘சொல்ல மறந்த கதையில் ‘ தங்கர்பச்சான், நாஞ்சில் நாடனுக்கு மறக்காமல் ‘கதை மூலம் ‘ என்று ‘டைட்டிலில் ‘ சொன்னாரே..!! எடுத்து ஜெயித்தவர்கள் மட்டுமல்ல,

கொண்ட ஆசையினால் மகேந்திரனை சென்னைக்கு அழைத்து வந்து, பல மாதங்கள் ‘பொன்னியின் செல்வன் ‘ கதையை சினிமா திரைக்கதை மாற்றும் வேலை கொடுத்து அது நன்றாக வந்த போதும், தன்னால் அது முடியாது எனத் தோனிய போது, ‘ ‘பொன்னியின் செல்வன் ‘ சினிமா ஆக்க வேலையை நிறுத்திக் கொண்டாரே, எம்.ஜி.யார்… அந்த மனப் பக்குவம் எத்தகையது…! ( அவர் நினைத்திருந்தால் உட்டாலக்கடி வேலைகள் செய்து, ஆயிரத்தில் ஒருவன் போல் சினிமாவாக பொன்னியின் செல்வனை மாற்றி இருக்கலாம் )

கடல் போல் சூழ்ந்திருக்கும் கமர்சியல் படைப்பு வாழ்க்கையிடை, தீவாய் இருந்து தத்தளிக்கும் தரமான இலக்கியத்தின் நண்பர்களே, பாலாவை கேளுங்கள்,

‘நம்பிக்கைத் தரும் நீங்களுமா.. ? ‘ என்று.

பாலவின் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கையைச் சொல்லுங்கள். தமிழ் சினிமாவில் கதைகளை திருடும் ‘பீலா மகன் ‘கள் வரிசையில் சேர்ந்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வோம்…!!!

அருமையான ஒரு சிந்தனை இலக்கியத்தின் உண்மைப் பிதாமகனுக்கான அங்கிகாரத்தை நிலை நிறுத்துவோம்.

தெரிந்தோ தெரியாமலோ இம் மாதிரி நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது நம் ஒவ்வொருவரின் கடமை. எந்த பொருளாதார கணக்கு வழக்கும் இன்றி நல்ல இலக்கியம் படைப்பவரின் இலக்கிய உரிமையைப் பாதுகாப்பது, நாளை தொடர்ந்து வரப் போகும் நல் இலக்கிய படைப்பாளிகளூக்கு நம்பிக்கை, நிம்மதி தரும்.

அவர்களைத் தடம்புரலாமல் காக்கும். அவர்களின் படைப்புகள் செழுமைப் பெற்றால், காவலில்லா பயிர் என அறுவடை செய்ய வருபவரை இனி விளை நிலத்து சொந்தக்காரனின் விலாசம் கேட்க செய்யும்.


raju_film@yahoo.com

Series Navigation

ஆர் ராஜூ

ஆர் ராஜூ