தண்ணீரும் நாமும்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

கோமதி நடராஜன்


—————-
தண்ணீருக்கு இத்தனை பெயரா?
உள்ளிருந்து புறப்பட்டால்
ஊற்று.
விண்ணிலிருந்து வீழ்ந்தால்
மழை.
உயரத்திலிருந்து இறங்கினால்
அருவி.
சமதளத்தில் பயணித்தால்
ஆறு.
தேக்கி வைத்தால்
ஏரி.
பள்ளம் கண்டு பதுங்கினால்
குளம்.
பயணம் முடிந்தபின்
கடல் என்று,
இடம் பொருத்து
காலம் பொருத்து நீ,
பெயர் மாறி உருமாறி ,
உலவும் போது,
நமக்கும்தானே பல பெயர்கள்.
பிள்ளைகளாய்
உறவுகளாய்
பெற்றோராய்
நண்பர்களாய
தொடங்குகிறோம்.
காலப்போக்கில் ,
அடுத்தவர் கண்ணுக்கு,
நேற்று,நல்லவனாய்
இன்று,தீயவனாய்,
தேவைக்கு,நண்பனாய்
அடுத்த நொடி,பகைவனாய்,
காரியத்துக்குவேண்டியவனாய் ,
முடிந்தபின், வேண்டாதவனாய் ,
சரியென்றிருந்தால்புத்திசாலியாய்
ஏனென்று கேட்டால்பைத்தியமாய்
உருண்டு புரண்டு ,
கடலோடு சங்கமிக்கும் வரை ,
பயணிக்கிறோம்.
மீண்டும் மீண்டும்
பிறக்கிறோம்
நதியென ஓடி கலக்கின்றோம்.
இதில் எந்த பெயர் நிலைக்கும்?
ஊனும் உயிருமே நிலையென்றால்
பெயர் மட்டும் எப்படி நிலைக்கும்?
————–

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்