ஞாநிக்கு ஒரு தீனி.

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

ருத்ரா


மும்பையில் நடந்த‌
தீவிரவாத சம்பவம் பற்றி
புதிய கோணம் ஒன்றைப் படைத்திருக்கும்
ஞாநிக்கு பாராட்டுகள்!
ஞாநி சிறந்த கட்டுரையாளர்.
“புட்டு புட்டு “வைத்து எழுதுவதில்
புல்ல‌ரிக்க‌ வைப்ப‌வ‌ர்.
புல்ல‌ட்டுக‌ளைப் பற்றி ஆனாலும் ச‌ரி
புல்லுக்க‌ட்டுக‌ளைப் பற்றி ஆனாலும் ச‌ரி
புல்ல‌ரிக்க‌வைப்ப‌வ‌ர்!
ஆம்!
புல்ல‌ரிக்க‌ ம‌ட்டுமே வைப்ப‌வ‌ர்.
புதைந்து கிட‌க்கும் உண்மைக‌ளை
இன்னும் கீழே
புதைத்து விடுவ‌திலும் வ‌ல்ல‌வ‌ர்.

தாஜ் ஓட்ட‌ல் தானே
என்கிறார்.
விழுந்த‌து வெள்ளைக்கார‌ பிண‌ங்க‌ள் தானே
என்கிறார்.
விட்டால் “அந்த‌ வெள்ளை ஆதிக்க‌த்தை”
வீழ்த்த‌வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு”வ‌ந்தேமாத‌ர‌ங்க‌ள்” கூட‌
பாடிவிடுவார் போலிருக்கிற‌து.
டாட்டாக்க‌ளும் பிர்லாக்க‌ளும்
ம‌ண்டைக‌ளை உடைத்துக்கொள்ள‌ட்டும்
என்கிறார்.
சுத‌ந்திர‌ம் என்னும் விடுத‌லையைப்ப‌ற்றிய‌
அவ‌ர‌து அரைவேக்காட்டுத்த‌னம் தான்
இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌லிவான‌
எழுத்துப்ப‌ணியார‌ங்க‌ளை
“குமுத‌த்திற்கு” வ‌ழ‌ங்க‌ வைத்திருக்கிற‌து.

எந்திர‌த்துப்பாக்கிக‌ள்
ஏந்துப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் ந‌க்ச‌ல்பாரிக‌ள் அல்ல‌.
எழுத்துக்க‌ளைக் கொண்டு
ம‌க்க‌ள் ஜ‌ன‌நாய‌த்துக்கு இப்ப‌டி
வேட்டு வைப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ ந‌க்ச‌ல்பாரிக‌ள் தான்.
ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்திற்கு குடை விரிக்கும்
ப‌த்திரிகைக்காகித‌த்தை சுருட்டி ம‌ட‌க்கி
குருவி சுடும்
குழ‌ல் துப்பாக்கி செய்து
குழ‌ப்ப‌ ஓசைக‌ள் எழுப்பும் இந்த‌
கோமாளி ந‌க்ச‌லைட்டுக‌ளைப் ப‌ற்றி
ந‌ம‌க்கு க‌வ‌லை இல்லை.
“மார்க்ஸ்..ஏஞ்ச‌ல்ஸ்” உட‌ன்
அருக‌ருகே உட்கார்ந்துகொண்டு
எழுதுவ‌தாய் பாவித்து
பாமரத்தனத்தையும்
பம்மாத்து அறிவுஜீவித்தனத்தையும்
தூவுகின்ற எழுத்துக்களே
இவரது கட்டுரைகள்.
விஜயகாந்துகளுக்கும்
இவருக்கும்
வித்தியாசம் இல்லை.
புள்ளிவிவர புளுகு கொண்டு
புழுதி கிளப்புவதில்.
தீசிஸ் ஆன்டிதீசிஸ்
சிந்தெஸிஸ்..
அதாவது
கோட்பாடு..எதிர்த்த‌கோட்பாடு..
இணைந்தகோட்பாடு
இதுவே இரட்டைச்சொல் பொருள்முதல் வாதம்.
(டைலாக்டிகல் மெடீரியலிசம்)
ஆனால்
“எதிர்க்கோட்பாடு எதிர்க்கோட்பாடு
எதிர்க்கோட்பாடு மட்டுமே”
என்ப‌து இவ‌ர் புதிர்க்கோட்பாடு.
இதுவே
இவரது பிடிவாதமான பொருள்முதல் வாதம்!
பொருள் முதல் வாதம்” சொல்வதாய்
தன் இருண்ட சிந்தனையின்
“இருள் முதல் வாதத்தை” தான்
எழுதிக்குவிக்கிறார்.

“தீவிர வாதம்”
எந்த உருவில் வந்தாலும்
அது தீயிட்டுப் பொசுக்கப்பட வேண்டும்.
“டி.வி.சேனல்கள் மீது இவ‌ர்
அனல் கக்குவதில் அர்த்தம் இருக்கிறது.
அதற்காக‌
அந்த வீரத்தளபதிகளின் தியாகத்தை
கொச்சைப்படுத்தும் அநியாயம்
அவர் எழுத்துக்களுக்குள் எப்படி
மை நிரப்பிக்கொண்டு வந்தது?

ஓடி வ‌ந்து
தேடிவ‌ந்து
கோடி கொடுத்த‌
மோடிக‌ள் போல் தான்
இவ‌ரும் அந்த‌ தியாக‌த்தையே
அவமானப்ப‌டுத்துகிறார்.
மானுட‌த்தையே க‌சாப்பு செய்யும்
அந்த‌ ப‌ர்தா போட்ட‌
தீவிர‌வாத‌ துப்பாக்கிக‌ளை விட்டு விட்டு
தேச‌ம் காக்கும் அந்த‌ துப்பாக்கிக‌ள் மேல்
இவ‌ருக்கு ஏன் இந்த‌ காய்ச்ச‌ல்?

சில‌ர் விலை போய் விட்ட‌தாக‌
விச‌ன‌ப்ப‌டும்
இவ‌ர் கோப‌ம் கொப்ப‌ளிப்ப‌து க‌ண்டு
எல்லாருக்கும் மெய் சிலிர்க்கிற‌து.
சில‌ ப‌காசுர‌ப் ப‌த்திரிகைக‌ள்
க‌ண்ணுக்கு தெரியாத
“ஒரு விலை அட்டையை”
இவ‌ர் க‌ழுத்தில் மாட்டியிருப்ப‌தையும்
எல்லோரும் க‌வ‌னிக்க‌த்தான் செய்கிறார்க‌ள்.
அந்த‌ “வெஸ்டெட் இன்டெரெஸ்ட்டு”களுக்காக
“இந்த‌ வார‌ ப்பூச்செண்டுக‌ளும்” “குட்டுக‌ளும்” என்று
வெடிகுண்டு எழுத்துக‌ளை
வீசிக்கொண்டு “விஜ‌ய்” ஸ்டைலில்
சிவ‌காசிப்பட்டாசுக‌ள் கொளுத்துவ‌தையும்
வேடிக்கை பார்க்க‌த்தான் செய்கிறார்க‌ள்.

பரபரப்புகளுக்கு மட்டுமே…அந்த‌
பத்திரிகைப்பக்கங்களை
அவ‌ர் குத்த‌கை எடுத்திருக்கிறார்.
இல்லை…இல்லை
அந்த‌ ப‌த்திரிகைப்ப‌க்க‌ங்க‌ள்
அவ‌ரை குத்த‌கை எடுத்திருக்கின்ற‌ன‌.
கொலைப்”ப‌சி”யுட‌ன்
தாஜ் “ஓட்ட‌லில்” வ‌ந்து
ம‌னித‌ உயிர்க‌ளைத்தின்று முடித்த‌
அந்த‌ கும்ப‌ல்க‌ள்
எச்சில் இலைக‌ளாய்
அந்த‌ பிண‌ங்க‌ளை வீசியெறிந்த‌
கொடூர‌த்தைக்காட்டிலும்
அதைக் கொத்திக்குத‌றும்
க‌ழுகுக‌ளாக
எதிர்மறையான விமரிசனங்கள் என்னும்
உங்க‌ள் எழுத்துக‌ள் வட்ட‌மிட்ட‌து
ம‌காக் குரூர‌ம்.

தாஜ் ஒட்ட‌ல் போல‌
தாஜ்ம‌ஹால் தாக்க‌ப்ப‌ட்டிருந்தாலும்
உங்க‌ள் எழுத்துகள் இப்ப‌டித்தான்
எழுதியிருக்கும்:
“தாஜ்ம‌ஹால்”
உல‌க‌ அதிச‌ய‌ம் தான்.
உல‌க‌ அவ‌சிய‌ம் அல்ல‌.
எவ‌ளோ ஒரு காத‌லியின்
ப‌ளிங்கு சவ‌ப்பெட்டியை
அடைகாத்து வைத்திருக்கும்
அந்த‌ ச‌ல‌வைக்க‌ல் க‌ட்டிட‌த்துக்கு
ஏன் இத்த‌னை ஒப்பாரிக‌ளின் ஓல‌ங்க‌ள்?”

ச‌த்ர‌ப‌தி சிவாஜி ர‌யில் நிலைய‌ பிண‌ங்க‌ள்
தாஜ் ஒட்ட‌ல் பிண‌ங்க‌ள் என்று
ஏதோ இறைச்சிக்க‌டைக்கார‌ர் போல‌
த‌ன் எழுத்துக்களால்
த‌ராசு தூக்கி
நிறுத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறாரே
இது என்ன‌ வ‌கையான‌ வியாபார‌ம்?
தீவிரவாதத்தால் தீய்ந்துபோன‌
எல்லா உயிர்களுமே நெருப்பை
அள்ளிக்கொட்டிய சோகங்களாகத்தான்
ந‌ம்மை வாட்டி வ‌தைக்கின்ற‌ன‌.
மாமூல் வாழ்க்கை உட‌னே திரும்பிய‌தில் கூட‌
ஒரு உள்நோக்க‌ம் க‌ற்பிக்கும்
உங்க‌ள் த‌த்துவ‌ம் ஒரு குழ‌ப்ப‌வாத‌மே!
உயிர்த்துவ‌மான‌ வ‌ர்க்க‌ப்போராட்ட‌த்துக்கு..அந்த‌
உயிர‌ற்ற‌ ச‌ட‌ல‌ங்க‌ளை வைத்துக்கொண்டா
நீங்க‌ள் விளையாடுவ‌து?

வ‌ச‌வு போல‌ வாழ்த்தும்
வாழ்த்து போல‌ வ‌ச‌வும்
தூவுகின்ற
உங்க‌ள் எழுத்துப்பூவாண‌ங்க‌ளில்
“தீபாவ‌ளி”கொண்டாடும்..இந்த‌
ப‌ர‌ப‌ர‌ப்பு ப‌த்திரிகைக‌ளிலா
ம‌க்க‌ள் எழுச்சியின்
பிர‌க‌ட‌ன‌ங்க‌ளை பிர‌ச‌விக்க‌ப்போகிறீர்க‌ள்.?
“ஓசோன்” ஓட்டைக‌ளைப்ப‌ற்றி
க‌வ‌லைப்ப‌டும் அதே ப‌க்க‌த்தில்
ந‌ம் ப‌ண்பாட்டிற்கும் க‌லாச்சார‌த்திற்கும்
பெரிய‌ ஓட்டை போடும் வித‌மாக‌
கூச்ச‌மில்லாத‌ ஏதோ ஒரு ந‌டிகை
“கூஜாப்ரியா”வின் தொப்பூளில் மாட்டிய‌
ஜிமிக்கியை பூதாகார‌மாய்
ப‌ட‌ம்பிடித்துப்போட்டிருப்பார்க‌ள்!

வாள் சுழ‌ற்றும் உங்க‌ள்
வார்த்தை ச‌ண்டைக‌ளில்
வீர‌ம் கொதிக்க‌ கொதிக்க‌
ஒரு நுரைக்கிரீட‌த்தை நீங்க‌ள்
முடிசூட்டிக்கொள்ளுங்க‌ள்.
எங்க‌ளுக்கு அக்க‌றையில்லை.
அந்த‌ அட்டைக்க‌த்திக‌ள்
த‌மிழின‌த்தின் மீதும்
த‌மிழ் மொழியின் மீதும்
உர‌சும்போது அவை உண்மையில்
ந‌ச்சு தோய்ந்த‌ க‌த்திக‌ளாய் மாறுவ‌து ஏனோ?

இது ஒரு ஆரிய‌சூழ்ச்சி என்றோ
ஆதிக்க‌ சூழ்ச்சி என்றோ சொல்வ‌து
அறிவு முதிர்ச்சிய‌ற்ற‌
சிறுபிள்ளைத்த‌ன‌ம் தான்.
ஆனால் ஒரு
காரிய‌ சூழ்ச்சியின் க‌ண்ணிக‌ளை
அந்த‌ ப‌த்திரிகைக‌ளில்
புதைத்துவைத்திருக்கும்
புதைகுழிக‌ளைப் புரிந்துகொள்ளுங்க‌ள்.
எலிப்பொறிக‌ளில் கூட‌
புலிக‌ளை பிடித்துவிட‌ப்பார்க்கும்
சாண‌க்கிய‌ர்க‌ளின்
சார‌ள‌ங்க‌ளுக்கு
பூவேலைப்பாடு நிறைந்த‌
திரைச்சீலைக‌ளா நீங்க‌ள்?
சிந்தியுங்க‌ள்!
“தீம்திரிகிட‌”வின் உங்க‌ள்
தீப்பொறிக‌ளை
இந்த‌ ம‌சாலா ப‌க்க‌ங்க‌ளின்
பாப் கார்ன் “பொரி”க‌ளாய்
ஆக்கிக்கொள்வ‌தா உங்க‌ள் ல‌ட்சிய‌ம்?
எங்க‌ளுக்கு உங்கள் உங்களுக்கு எழுத்துக்க‌ளில்
தீனி த‌ருவ‌து இருக்கட்டும்.
உங்கள் சிந்த‌னைஅம்புக‌ளை
ச‌ரியான‌ திசைக்கு கூர்தீட்டிக்கொள்ளுகின்ற‌
சிந்த‌னையே உங்களுக்கு வேண்டும்.
அதுவே தான் இப்போதைய‌…
ஞாநிக்கு ஒரு தீனி.

Series Navigation

ருத்ரா

ருத்ரா