ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

சாந்தன்


சிங்கப்பூரில் ஒரு இனிய ஞாயிறு மாலை. காலையில் கொளுத்திய வெயிலின் சுவடை இழந்திருந்த வானம் பொழியத் துவங்கிய நேரம். நூலக வளாகத்தின் ஒரு ஓரத்தில் நூல்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் அடுக்கிவைக்கப் பட்டிருக்க, மற்றொரு ஓரத்தில் எளிய சிற்றுண்டி மற்றும் பானங்கள் அனைவரது வயிற்றிற்கும்.

சிறிய மேடையில் எளிய நிகழ்வு. மாலை பொன்னாடை போன்ற சடங்குகளை வேண்டுமென்றே தவிர்த்து நூல்களை மட்டுமே முன்னிலைப் படுத்தியிருந்தது தனிச் சிறப்பு.

சிங்கையில் மட்டுமன்றி சர்வதேசத் தமிழ் இலக்கியத் தளங்களிலும் புகழ் பெற்ற பெண் படைப்பாளி அவர். அச்சு ஊடகங்கள், இணைய சஞ்சிகைகள், வலைப் பூக்கள். என பல்வேறு தளங்களில் பன்முகப் பார்வையுடன் பல்பரிமாண படைப்புக்கள் மூலம் புகழ் பெற்றவர். பல்வேறு தமிழ் இலக்கியப் போட்டிகளிலும் சளைக்காது பங்கு பற்றி பல விருதுகளையும் தனதாக்கியவர் அவர். இவ்வாறு பல்வேறு தமிழிலக்கிய சிறப்புக்களுடன் விளங்கும் அவர் தான் ஜெயந்தி சங்கர்.

பன்முக ஆற்றலுடன் அவர் படைத்த படைப்புக்களினைக் கொண்ட மூன்று நூல்கள் 22- 01- 2006 ஞாயிறு மாலை சிறப்பாக வெளியீடு கண்டன. ‘நாலேகால் டாலர் ‘- சிறுகதைத்தொகுப்பு (வெளியீடு-மதி நிலையம்), ‘முடிவிலும் ஒன்று தொடரலாம் ‘ – குறுநாவல் தொகுப்பு (வெளியீடு- சந்தியா பதிப்பகம்), ‘ஏழாம் சுவை ‘-கட்டுரைத் தொகுப்பு (வெளியீடு- உயிர்மை பதிப்பகம்) ஆகியனவே ஜெயந்தி சங்கரின் சிறப்பாக வெளியீடு கண்ட நூல்களாகும். அங்மோகியோ நூலக அரங்கத்தில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்/ வாசகர்கள்/ இலக்கிய ஆர்வலர்கள் பங்குபற்றலுடன் 5 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

புகழ்பெற்ற கவிஞர்/ பாடலாசிரியர் பனசை நடராஜன் அவர்கள் நிகழ்வைத் தனது ‘கவித்துவப் பாணியில் ‘ உயிர்ப்புடன் வழிநடத்தினார்; சபையோரைக் குரலாலும் மொழியாலும் நிகழ்வோடு ஒன்றிக்கச் செய்திருந்தார். இரு பேசாளர்களுக்கிடையே இசைவான ஓட்டம் ஏற்படும் வகையில் திறம்பட சாரத்தினைப் பேச்சிலிருந்து உள்வாங்கிக் கொண்டு, அடுத்தவரின் சிறப்புக்களை எடுத்துரைத்துப் பேச அழைத்தார்.

இவருக்கு சபைக் கூச்சம் அதிகம். பேசவும் வராது என்று எப்போதுமே சொல்லிக் கொள்வார். ஆகவேதான் எழுதி வைத்திருந்த நாலடிகளை வணக்கம் கூறி வரவேற்புரையாக வாசித்தார் நூலாசிரியர்.

‘நாலேகால் டாலர் ‘ சிறுகதைத் தொகுப்பைத் திறனாய்வு செய்ய வந்த திருமதி வை.கலைச்செல்வி தனது ‘தேர்ந்த பேச்சு ‘ மூலம் மிகச் சிறப்பாகத் தனது பணியைச் செய்தார். அங்கீகாரம் என்பது ஒரு படைப்பாளளனுக்கு மூச்சு போகும்வரைத் தேவைப்படுகிறது என்றும் அது ஜெயந்தி சங்கருக்கு பரந்த அளவில் கிடைத்திருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார். தனியே வாசகர்கள் என்ற நிலை மாறி இன்று வாசிப்போரில் பெருமளவினர் படைப்பாளர்களாகவும் விளங்குவதை கோடிட்டுக் காட்டினார். ஜெயந்தி சங்கரின் கதை சொல்லும் பாணி தனித்துவமானது என்றும் தேவையற்ற அலங்காரங்கள் பெரிதுமின்றி, வார்த்தைத் திணிப்புக்கள் இல்லாதும் கதைகள் இயல்பாய் பதிந்தன என்றும் கூறினார். மூன்று நூல்களினதும் பெயர்களில் எண்கள் காணப்படுவது குறித்தும் சுவைபடக் கூறினார். ஆங்காகே கடுகுக்கதைகள் கூறிச் சிரிக்கவைத்தார். பெண்களின் முடிவெடுக்கும் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதுடன், வாழ்க்கையின் பலவீனங்களையும் பலமாக மாற்றும் உதாரணங்களைக் கொடுத்தும் ஜெயந்தி சங்கர் தனது கதைகளூடாக பயனுறுதியான விடையங்களைத் தந்துள்ளார் என்றும் திருமதி வை.கலைச்செல்வி தனது திறனாய்வில் குறிப்பிட்டார். சிங்கப்பூரைத் தாண்டியும் கதைக்களங்களை எடுத்துச் செல்லலாமே என்று யோசனை கூறி குழந்தை இலக்கியம் படைக்க நூலாசிரியருக்கு அன்பான கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளரான திரு.சுப.அருணாசலம் அவர்கள் ‘ஏழாம் சுவை ‘ என்ற கட்டுரைத் தொகுப்பைத் திறனாய்வு செய்தார். பலரும் அறியாத செய்திகளைக் தொகுப்பாகத் தமிழில் தந்திருப்பது வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது என்றார். மேலும்,பல்லின சமுதாயங்கள் வாழும் சிங்கையிலே இருந்து இவ்வாறான அரிய பணியைச் செய்தமை புரிந்துணர்வை வளர்க்க உதவும், வரப்பிரசாதமாக அமையும் என்றும் கூறினார்.கட்டுரைகளிலிருந்து எடுத்துக்காட்டி சுவைபடத் தனது திறனாய்வைச் செய்தார் சுப.அருணாச்சலம் அவர்கள். நூலாசிரியர் கட்டுரைகளில் தனது சொந்தக் கருத்தைச் சேர்த்தெழுதாததால் ஆசிரியரின் கற்பனையைத் தன்னால் உணர முடியாது போனது என்றும், அது ஒரு சிறுகுறையாகத் தனக்குப் பட்டது என்றும் கூறினார். புரட்டிப்பார்த்த போதுதான், நூலின் ‘என்னுரை ‘யில் ஆசிரியர், வாசகனின் எண்ணவோட்டைத்தினைத் தடைப்படுத்த விரும்பாததால் வேண்டுமென்றே கவனமாகத் தவிர்த்திருப்பதாக எழுதியிருப்பது புரிந்தது.

‘முடிவிலும் ஒன்று தொடரலாம் ‘ என்ற குறுநாவல் தொகுப்பைத் திறனாய்வு செய்த திருமதி மலர்விழி இளங்கோவன் அவர்கள் வார்த்தைகளை விரையம் ஆகாமல் எழுத்துக்களை ஜெயந்தி சங்கர் வீரியமாக்கி உள்ளார் என்றும்,எளிய மொழி, தெளிவான நடை, கச்சிதமான அமைப்பு என்று பலவாறாகத் தனது படைப்புக்கள் மூலம் வாசகர்களைத் ஜெயந்தி சங்கர் ஆகர்சிக்கிறார் என்றும் விளக்கினார். சாமானியர்களை எட்டும் போதே ஒரு எழுத்தாளர் வெற்றிபெறுகிறார் என்றும் அவ்வகையில் ஜெயந்தி சங்கர் வென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார். படைப்பாளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள் என்பதற்கு மேலும் உதாரணமாகும் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடத்தில் வைக்கப் படுவார் என்றும் தெரிவித்தார். ஆங்காங்கே தான் ரசித்த நடையையும் உவமையையும் குறித்து வைத்துப் பேசினார். ‘குயவன் ‘என்ற குறுநாவல் சிங்கப்பூரின் தமிழ் மொழிப்பாடத் திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய எல்லாத் தகுதிகளையும் பெற்றுள்ளது என்றார். ‘ஒரு நூலகம் ஒரு படைப்பாளியை உருவாக்கியிருக்கிறது, நூலகத்திற்கும் ஆசிரியருக்கும் பாராட்டுக்கள் ‘, என்றவர் உரையில் உறைந்திருந்த பார்வையாளர்களைப் பார்த்தார். ‘இருவருக்கும் கைதட்டி பாராட்டைத் தெரிவிக்கலாமே ‘, என்று வலுவில் கைதட்டலைக் கேட்டுப்பெற்றார் சிலரின் சிரிப்பொலிகளுக்கிடையே. குறைகளையும் சுட்டவேண்டுமென்று நூலாசிரியர் முன்பே குறிப்பிட்டிருந்தபடியால், தேடிக்கண்டுபிடித்த தனக்குக் குறைகள் என்று பட்ட இரண்டைச் சுட்டினார். நூலாசிரியருக்கு ஒரு பாராட்டுக் கவிதையுடன் முடித்தார்.

மூன்று நூல்களினதும் திறனாய்வுகளுக்குப் பின் தலைமையுரை ஆற்ற அழைக்கப் பட்டார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.நா.ஆண்டியப்பன். விழாவின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இல்லாத குறையைத் தன் சிறு தமிழ்த் தாய் வாழ்த்துப்பாவுடன் துவங்கியவர், ‘இந்நிகழ்ச்சி வித்தியாசமானது ‘, என்றாரம்பித்தார். எப்படி என்று அனைவரும் யோசிக்கும்போதே, தொடர்ந்து, ‘தலைமையுரைக்குப் பிறகு இருக்கவேண்டிய திறனாய்வுரைகள் இந்நிகழ்ச்சியில் முதலில் அரங்கேறிவிட்டனவே ‘, என்றார். சிறு சலசலப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டதைச் சொல்லியே ஆகவேண்டும். ‘இப்போது எனக்குப் பேச ஒன்றும் மூவரும் மிச்சம் வைக்கவில்லையே ‘, என்ற செல்லச் சிணுங்கலுடன் தொடங்கியவர் ஜெயந்தி சங்கரின் பல்திறனாற்றல்களை எடுத்துக் காட்டிப் பேசியதோடு சிறுகதைகளையும் மேற்கோற் காட்டி உரையாற்றினார். முக்கியமாக ஈரம், நாலேகால் டாலர், பந்தயக்குதிரை மற்றும் நுடம் போன்ற கதைகளை வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகச் சுட்டிக் காட்டிப்பேசினார். கழகம் எற்பாடு செய்த அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றதையும் வெற்றிபெற்றதையும் உள்ளார்ந்த வார்த்தைகளில் கூறினார்.

பின்னர் திரு நா.ஆண்டியப்பன் நூல்களை வெளியிட முனைவர் சித்ரா சங்கரன் முதல் பிரதியைப் பெற்றுக் சிறப்பித்தார். தொடர்ந்து பிரமுகர்களுக்கு ஏனைய சிறப்புப் பிரதிகளும், விழாப் பேசாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப் பட்டன.

இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர் தனது சிறுகவிதை மூலம் ஜெயந்தி சங்கரை வாழ்த்தி, நன்றியுரையையும் அவர் சார்பில் வழங்கி நிகழ்ச்சியை இனிதே நிறைவுக்குக் கொண்டு வந்தார்.

கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது, அரங்கு நிறைந்த வாசகர்கள்/ இலக்கிய ஆர்வலர்கள் வந்து சிறபித்தமை ஜெயந்தி சங்கரின் எகுத்துகளுக்கும் அவருடைய பரந்துபட்ட இலக்கிய ஆழுமைக்குக் கிடைத்த கெளரவம்;பெருமை; பாரட்டுக்கள். இன்னும் நிறைய நிறைவாகப் பல் தளங்களூடும் படைப்புக்களைத் தருவார் என்பது வாசகர்களதும் இலக்கிய ஆர்வலர்களதும் விருப்பமாகும்.

சாந்தன், சிங்கப்பூர்

—-

booklaunch@gmail.com

Series Navigation

சாந்தன்

சாந்தன்

ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

அறிவிப்பு


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு