சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அசுரன்


இனிய நண்பர்களே,

சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக Doctors for Safer Environment (DOSE) என்ற அமைப்பை சேர்ந்த மருத்துவர் இரா. இரமேஷ் M.B.,B.S., ‘Sethusamudram Shipping Canal Project and the unconsidered high risk factors: Can it withstand them ? ‘ என்ற ஆய்வறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏ4 அளவில் 70 பக்கங்களில் உள்ள அதனை மின்நூலாகப் பெற: www.geocities.com/sethushipcanal என்ற இணைய முகவரியைச் சொடுக்கவும். கூடுதலாக, இத்திட்டம் தொடர்பான முப்பரிமாணப் படமும் உள்ளது.

அன்புடன்,

அசுரன்

Series Navigation

அசுரன்

அசுரன்

சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

அசுரன்


சேது சமுத்திரம் திட்டம்!- தமிழகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு. இதனால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு ஆதரவாக இன்றுவரையிலும் எழுப்பப்பட்டக் குரல்கள் அனைத்தும் இதைத்தான் வலியுறுத்தி வந்திருக்கின்றன.

கடந்த மே 26ஆம் நாள் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவும், ‘தற்போது கரு நிலையில் இருக்கும் சேது சமூத்திரம் திட்டம் இனி வேகப்பாதையில் வைக்கப்படும் ‘ என்றார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் சேதுசமுத்திரம் திட்டத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனால், சுற்றுச்சூழல்வாதிகள்ி இதற்கு எதிரானத் தம் குரலைப் பதிவுசெய்துள்ளனர். சேது சமுத்திரம் என்பது சூழல் பேரழிவாகவும் இருக்கப்போகிறது என்பது இவர்களின் எச்சரிக்கை. அவ்வகையில் தூத்துக்குடியிலிருந்து செயல்பட்டுவரும் கிழக்கு கடற்கரை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.

மன்னார் வளைகுடா கடல்வளத்தை சீரழிக்கப் போகும் சேதுக்கால்வாய்த் திட்டத்தைப் புறக்கணிப்போம்!

தொழில் வள˜ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் இந்திய அரசு இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு இயற்கையை, சுற்றுச்சூழலைச் சீரழித்து வருகிறது. அதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல! பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருமுதலாளிகளின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அது நிறைவேற்றி வருகிறது. மேலும் தமிழகத்தின் இயற்கை வளத்தை முற்றிலும் சீரழிக்கவும் செயல்பட்டு வருகிறது. இன்று இந்தியக் கடல்களை இணைக்கும் ‘சாகர் மாலா ‘ என்ற ஒருங்கிணைப்பின் கீழ் முனைந்து செயல்படுத்தப்போகும் ஒரு ஆபத்தானத் திட்டமே சேதுக்கால்வாய்த் திட்டமாகும்.

சேதுக்கால்வாய்த் திட்டம்:

பாக் நீரிணைப்புக்கும், மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் உள்ள கடலின் ஆழம் 11அடியும் சில இடங்களில் அதைவிட குறைவாகவும் உள்ளதால், இப்பகுதியில் சிறிய படகுகள் தவிர பெரிய கப்பல்கள் எதுவும் செல்ல முடியாது. சென்னை, கல்கத்தா, விசாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்ற்கு வரும் கப்பல்களும், பம்பாய், மங்களுரில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களும் இன்று இலங்கையைச் சுற்றியே வருகின்றது. எனவே கப்பல் போக்குவரத்திற்காக, மத்திய அரசு 1998-ஆம் ஆண்டு திட்டப்படி ரூ1200கோடி செலவில் இப்பகுதியிலுள்ள கடலை 300 மீட்டர் அகலத்தில், 1 கி.மீட்டர் நீளத்தில், 44 கடல்மைல் பரப்பளவுக்கு ஆழப்படுத்தி 320 இலட்சம் கனமீட்டர் மண்ணைத் தோண்டுவதே சேதுக்கால்வாய்த் திட்டமாகும்.

திட்டத்தின் நோக்கம்:

கப்பலின் பயணத்தூரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். அதாவது ஸ்பிக், ஸ்டெர்லைட், அனல் மின் நிலையங்கள், கூடங்குளஹ் அணுஉலை, தாரங்கதாரா கெமிக்கல்ஸ் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் கப்பல்கள் இன்று இலங்கையை சுற்றியே வருகிறது. அதனால் பயணச் செலவும் கூடுதலாகிறது. இத்திட்டம் நிறைவேறினால் குறுகிய நாட்களில் கப்பல் வருவதின் மூலம் தொழிற்சாலை முதலாளிகளுக்கு பலகோடி ரூபாய் மிச்சமாகும்! தூத்துக்குடி துறைமுகம் வள˜ச்சியடைந்து, ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். அதனால் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் உள்நாட்டுத் தரகு வியாபாரிகள், சிறுமுதலாளிகளுக்கு பலகோடி ரூபாய் இலாபம் கிடைக்கும். தேசப்பாதுகாப்பைக் கருதி இந்திய கப்பல்படை தளஹ் அமைக்க வழி பிறக்கும். ஓராண்டுக்கு ரூ130 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணி மத்திய அரசுக்குக் கிடைக்கும் என்பதால் முதலாளிய வர்க்கமும், அவ்வர்க்கத்தின் நலனுக்கான அரசும், அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன.

ஆதரவு வர்க்கங்களும் அதன் வர்க்க நிலைப்பாடும்:

திராவிடர் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., பாரதீய ஜனதா, இந்தியப் பொதுவுடமைக் கட்சி, ஜனதாதளம், தமிழக இ. காங்கிரஸ், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை மற்றும் சில இந்தியத் தேசிய, திராவிடத் தேசிய இயக்கங்களும், பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்களும் இத்திட்டத்தை வரிந்துகட்டிக் கொண்டு ஆதரிக்கின்றன.

காமராஜர் கண்ட கனவு, அண்ணா கண்ட கனவு, தமிழன் கால்வாய் என்ற வாதங்களை முன்வைக்கும் தேசியவாதிகள் அனைவருமே முதலாளிய கண்ணோட்டத்தோடுதான், இன்றைய பன்னாட்டு ஏகாதிபத்திய, இந்தியத் தரகு முதலாளிய சந்தையின் வள˜ச்சிக்கும் அதன் பாதுகாப்பிற்கும் பயன்படும் இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர். ‘ஒவ்வொரு சொல்லுக்கும், எழுத்துக்கும் பின்னே வர்க்கத்தின் முத்திரை ஒளிந்திருக்கும் ‘ என்பதே இத்திட்டத்தின் வெளிப்பாடாகும்!

சேதுக்கால்வாய்த் திட்டத்தை ஆதரிக்கும் தேசியவாதிகள் தங்களுக்கிடையில் இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என முரண்பட்டாலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுதேசி மொழி பேசினாலும், தமிழன்-தெலுங்கன் என்ற இனவாதம் பேசினாலும் அனைவரும் ஓரணியாக, குறுகிய கண்ணோட்டத்தோடு, இத்திட்டத்தின் நன்மையை பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால் மன்னார் வளைகுடாவின் இயற்கை கடல்வளம், சுற்றுச்சூழல் மற்றும் உழைக்கும் மக்களுக்கு வரப்போகும் கேடுகளைப் பற்றி இவர்களுக்கு எள்ளளவும் கவலையில்லை!

உலகிலே சிறந்த கடல்வளத்தை அழிப்பதே திட்டம்:

இலங்கைக்கும் தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதிக்கும் இடைப்பட்ட 623 எக்டேர் பரப்பளவுள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதியில், உலகில் எங்கும் காண முடியாத அபூர்வ வகையான கடல்வாழ் உயிரினங்கள் 3,600 வகையினங்கள் உள்ளன. இங்குள்ள குட்டிப்போட்டு பால்கொடுக்கும் கடல்பசு தென் ஆசியாவிலேயே வேறு எங்கும் இல்லை. அபூர்வ கடல் ஆமைகளும், டால்பின், கடற்குதிரை போன்ற 1300-க்கும் மேற்பட்ட மீனினங்களும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

தூத்துக்குடிக்கும் இராமநாதபுரத்திற்கும் இடையில் 21 பவளப்பாறைத் தீவுகள் உள்ளன. இந்த கடலில் விளையும் பவளப்பாறைகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதால், மீன் இனப்பெருக்கத்தின் புகலிடமாக உள்ளன. அத்தோடு ஓராண்டுக்கு 900 மி,மீட்டர் மழையளவும் இதனால் பெறமுடிகிறது. உலகில் மொத்தமுள்ள 160 வகை பவளப்பாறைகளில், இந்தக் கடலில் மட்டும் 137 வகைகள் உள்ளன. இந்தக் கடலில் அடர்த்தியாக பவளப்பாறைகள் வளரக் காரணமே கடலின் தூய்மைதான். மற்றொன்று இக்கடலின் ஆழம் குறைவாக உள்ளதால், சூரிய ஒளி உதவியுடன் பல நுண்ணிய பவளப் பூச்சிகளின் உதவியால் இப்பாறைகள் உருவாக முடிகிறது. இப்பவளப் பாறைகளே கடலில் உருவாகும் புயலை கரைக்கு வரவிடாமல் தடுப்பதோடு, கடலரிப்பையும் தடுக்கின்றன. இவை சுத்தமான ஆக்சிஜனை உற்பத்தி செய்து, ஓசோன் மண்டல ஓட்டையை சீரமைத்து, பூமி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இங்குள்ள அபூர்வமான கடல் பாசிகள் மற்றும் கடலோரத்தில் வளரும் அலையாத்திக் (மாங்ரோவ்) காடுகளாலும் மீன்வளம் பெருகுகிறது.

இப்பகுதியை ‘தேசிய கடல்வாழ் உயிரின பூங்கா ‘ என்று தமிழக அரசு 1986-ல் அறிவித்து, அதற்கான ஆராய்ச்சித் துறையை இராமநாதபுரத்தில் நிறுவியுள்ளது. இவ்வாறு உலக அளவில் வியப்பாக போற்றப்படும் இக்கடலில் வாழும் அபூர்வ உயிரினங்களைப் பாதுகாக்க ஐ.நா. உதவியுடன் மத்திய அரசின் ரூ.140 கோடி மதிப்புள்ள திட்டம் 2003 முதல் நடைமுறையில் உள்ளது. இக்கடல்வளத்தைப் பாதுகாக்க ரூ.140 கோடி திட்டம். இதை அழிக்கவோ ரூ.1200 கோடி திட்டம்!

இத்திட்டம் அறிவியல் சிந்தனையா! அரசியல் இலாபமா!!

சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவற்றுடன் சேதுக்கால்வாய்த் திட்டத்தை ஒப்பிடுவது மிகப்பெரும் தவறு. ஏனெனில், இத்திட்டம் அறிவியல் அடிப்படையிலும், தொழில்நுட்ப முறையிலும் தொடர்ச்சியாகப் பயன்தராது! சில ஆண்டுகளுக்குப் பிறகு இக்கால்வாயில் மணல் குவிந்து கப்பல் போக்குவரத்திற்குப் பயனற்றதாகிவிடும். ஏற்கெனவே, பாம்பன் கடல்வழியாக சிறிய கப்பல்கள் செல்லும் அளவிற்குத் தோண்டப்பட்டது. சில ஆண்டுகளில் இங்கு மணல் குவிந்ததால் அது பயனற்றதாகி விட்டது.

நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் நீரோட்டத்தால் அடித்து வரப்படும் மணலானது பாம்பன் கடல் பகுதியிலும், மன்னார் வளைகுடா கடல் ஓரத்திலும் குவிகிறது. அதைத் தடுக்க இயலாது. இதுபோல மணல் குவிந்ததால் வாலிநோக்கம் துறைமுகத்தின் கரைக்கு இன்றுவரை கப்பல்களைக் கொண்டுசெல்ல முடியவில்லை. அங்கு கப்பல் உடைக்கும் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள கப்பல் உடைக்கும் நிறுவனம் மணல்வாரி கப்பல் மூலம் இம்மணலை அகற்ற தமிழக அரசை கோரியுள்ளது.

மேலும் மன்னார் வளைகுடாவில் மணல் குவிந்து பல புதிய தீவுகளும் உருவாகியுள்ளதை, இக்கால்வாய் அமைக்க ஆய்வு நடத்திய அமைப்புகள் (NEERI குழு) கவனிக்கத் தவறிவிட்டன. எனவே சேதுக்கால்வாயிலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மணல் குவிந்து, இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பலகோடி ரூபாய் வீணாகிவிடும். எனவே இத்திட்டத்திற்கு செலவிடும் தொகையை கடல்வாழ் உயிரின மேம்பாட்டிற்கு ஒதுக்கினால், கடலுணவு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவணியாக அரசு பலகோடிகளைப் பெற முடியும் என்று தமிழக அரசின் வனத்துறையில் பணியாற்றிய மன்னார் வளைகுடா கடல் ஆராய்ச்சியாள˜ தி.சண்முக ராஜா எச்சரித்துள்ளார். (தினமணி செய்தி 26.01.1999).

சுண்டக்காய் கால்பணம்! சுமைக்கூலி முக்கால்பணம்!!

ஆரம்பம் முதல் இன்று வரை மத்திய அரசு மேற்கொண்ட எல்லா ஆய்வுகளிலும் இத்திட்டம் பொருளாதார அடிப்படையில் வரவேற்கத்தக்கது என்று கூறப்பட்டிருந்தாலும், ‘புரியாத, அடையாளம் தெரியாத, முறையாக விளக்கப்படாத வகையில் நவம்பர் 1989-ல் இத்திட்டம் பொருளாதார அடிப்படையில் சாத்தியமானதல்ல ‘ என மத்திய அரசு அறிவித்துள்ளது! அது குறித்து 15.01.1999-ல் இத்திட்டத்தை ஆதரித்து தினமணியில் கட்டுரை எழுதிய திரு வா.செ.குழந்தைசாமி அவர்கள் கேள்விகேட்கும் அதன் ரகசியம் என்ன ? அதை வெள்ளை அறிக்கையாக மத்திய அரசு வெளியிடத் தயங்குவது ஏன் ?

அதாவது இத்திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் சாத்தியமானதல்ல! அதையும் மீறி இத்திட்டத்தை நிறைவேற்றினால், சில ஆண்டுகளில் மீண்டும் வந்து குவியும் மணலைத் தோண்டி எடுக்க ஆண்டுதோறும் மத்திய அரசு பலகோடிகளை ஒதுக்கவேண்டிய நிலை ஏற்படும். அதாவது இத்திட்டத்தால் 130 கோடி ரூபாய் வரவு என்பதற்குப் பதிலாக ரூபாய் 200 கோடி செலவு என்பதற்கே வழிவகுக்கும். அத்தோடு வளமான கடல்வளத்தை இழந்து, தற்போது கடலுணவு ஏற்றுமதி மூலம் அரசு பெற்றுவரும் அன்னியச் செலாவணியை இழக்க நேரிடும் என்பதே வெளியிடப்படாத அதன் ரகசியமாகும்.

தேசப்பாதுகாப்பு என்பது கடல் வளமா! கடல் ஆழமா ?

சேதுக்கால்வாய் நிறைவேற்றப்பட்டால் அது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கப்பல்கள் வந்து போகும் வழியாக இருக்குமே தவிர, பெரிய அளவிலான பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டு விடாது. இதனால் கப்பல் கம்பெனி முதலாளிகளுக்கே இலாபம்! கப்பல்களில் இருந்து வெளியாகும் எண்ணெய் பிசுக்குகள், அழுக்குகள், குப்பைகளால் கடல்பகுதி மாசுப்பட்டு அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும்! கப்பல் புகை போன்ற அசுத்தங்களால் தீவுப் பகுதிகளில் வளரும் தாவரங்கள் கருகிவிடும். இப்பகுதிக் கடலின் இயல்பான குளிர்ச்சி மாறி, வெப்பம் அதிகமாகிவிடும். கப்பல் போக்குவரத்தால் அபூர்வ உயிரினங்கள் சிக்குண்டு மடியும். உலக நாடுகளால் இன்று வரை ‘கடல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் ‘ என்று போற்றிப் பாதுகாக்கப்படும் மன்னார் வளைகுடா கடல் சீழிந்துவிடும்!

மேலும் அபூர்வமான பவளப்பாறைகள் அழியுமாதலால் கடலரிப்பு ஏற்பட்டு கடல் மட்டம் உயரும். பருவமாற்றம் நிகழ்ந்து மழை அளவு குறையும். புயல் வீசும் அபாயம் இக்கடலில் அடிக்கடி ஏற்படும். குறிப்பாக மீனினங்களே அழிந்து வருங்காலத்தில் மீனவர்கள் தற்கொலை செய்ய நேரிடும்! எனவே இப்பகுதியில் இரசாயனத் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், கடல் பொறியியல் திட்டங்கள் எதையும் தொடங்குவது கூட ஆபத்தாகும் என்று கடல்வள ஆராய்ச்சியாள˜ முனைவர் தி.சண்முக ராஜா அவர்கள் ஓர் அறிக்கை முலம் மத்திய அரசிற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். (மாலை மலர்-15.11.98).

ஏற்கனவே, தமிழகமெங்கும் ஆழ்கடலில் அன்னிய நாட்டுக் கப்பல்கள் மீன்வளத்தைக் கொள்ளையிடுகின்றன. ஒருபுறம் சுண்ணாம்பு, சிமெண்ட் தொழிற்சாலைக்கு பயன்படுத்துவதற்காக பவளப்பாறைகளையும், வெளிநாட்டுக்குத் தேவைப்படும் கடலோர கார்னட் மணலையும் முதலாளிகள் சூறையாடிவருகின்றனர். அதோடு பன்னாட்டு இந்தியப் பெரு முதலாளிகளால் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு நீரும் கடலில் கலக்கப்படுகிறது. அதனால் பாரம்பரிய உழைக்கும் மீனவர்கள் நாளுக்கு நாள் தங்களது தற்சார்பையும், மீன்பிடித் தொழிலையும் இழந்து வருகின்றனர். அதைப்பற்றி கவலையோ, அதற்கான போராட்டமோ நடத்த முன்வராமல், பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிய நலனுக்காக, சேதுக்கால்வாய்த் திட்டத்தை ஆதரிப்பதுதான் தமிழக இயக்கங்கள், கட்சிகளின் நிலைப்பாடு. அதோடு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை, பாரம்பரியமான கடல் தொழிலை இத்திட்டத்திற்காக தாரைவார்ப்பது என்பது உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமே ஆகும்!

சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேறினால்….

தேசப்பாதுகாப்பு என்பது பன்னாட்டு ஏகாதிபத்திய மற்றும் இந்திய ஏகாதிபத்திய அரசின் பாதுகாப்பே ஆகும்.

கப்பல் பயணத் தூரம், எரிபொருள் மிச்சம் என்பது அரசு தொழிற்சாலைகளுக்கும் மற்றும் தனியார் தொழிற்சாலை முதலாளிகளுக்கும், கப்பல் கம்பெனி முதலாளிகளுக்குமே இலாபமாகும்.

அன்னியச் செலாவணி ரூ.130கோடி வரவு என்பது ஆண்டுதோறும் 200கோடி வீண்செலவு என்பதற்கே வழிவகுக்கும்.

துறைமுக வள˜ச்சி, ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிப்பு என்பது உள்நாட்டுத் தரகு வியாபாரிகள், தமிழ் முதலாளிகளின் இரும்புப் பெட்டிகளில் பணம் நிரம்ப மட்டுமே வழிவகுக்கும்.

உலகின் சிறந்த கடல்வளத்தைத் தமிழகம் இழக்க நேரிடும்.

சுற்றுச்சூழல் சீரழிந்து மழை வளம் குறையும், அடிக்கடி புயல் வீசும் அபாயம் ஏற்படும், கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் குறையும்.

இயல்பாக மணல் குவியும் இடத்தை சோதனைக்காக தோண்டினாலும் (Dredging) கடல்வளம் சீரழிந்துவிடும்.

தற்சார்பு உற்பத்திக்கு வழிவகுக்கும் பாரம்பரிய கடல்தொழில் சீரழிந்து, தூத்துக்குடி முதல் இராமேசுவரம் வரை மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் இலட்சக்கணக்க்ான மீனவர்கள் உழைப்புப் பறிபோகும்.

மன்னார் வளைகுடா சுடுகாடாக மாறிவிடும். பாதுகாக்கப்பட வேண்டிய அபூர்வ உயிரினங்கள் அழிந்து விடும், இடம்பெயர்ந்து சென்றுவிடும்.

தற்போது கடலுணவு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம், அரசு பெற்றுவரும் அன்னியச் செலாவணியை இழக்க நேரிடும்!

வேண்டுகோள்!

இந்த ஆண்டு ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) உலக சுற்றுச்சூழல் நாள் (சூன் 5) மற்றும் உலக கடல் நாள் (சூன் 8) ஆகியவற்றுக்கான கருப்பொருளாக ‘நமக்குத் தேவை! செத்துப்போன கடலா ? உயிருள்ள கடலா ? ‘ என்பதையே தேர்ந்தெடுத்திருக்கிறது.

எனவே இயற்கை வளஜ்தின், சுற்றுச்சூழலின் மதிப்பீட்டை விட தனிமனித இலாபத்தின் மதிப்பீடே உயர்வாக உள்ள இக்கேடுகெட்ட சமுதாயத்தில், தமிழக அரசின் ஒப்புதலுக்காக தூத்துக்குடி துறைமுக சபை இத்திட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரிக்கக் கோரி, உங்கள் எதிர்ப்புகளைக் கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யுங்கள்.

இயக்குநர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 76 அண்ணாசாலை, கிண்டி, சென்னை-600 032

மேலும் தொடர்புகளுக்கு:

கிழக்குக் கடற்கரை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம்,19-1, மனுவேல் ஜேக்கப் லேன், தூத்துக்குடி-1.

தட்டச்சு: கவிதா (asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்