கிருஷ்ணா வெங்கட்ராமா
ஒரு மாதமாக மீளாத் துயிலில் இருந்தேன் . . .
செவ்வாயில் சோனியா ஏர்வேஸ் இறங்குவதற்கு முன் ஒரு மாதக் களைப்பை நீக்க, விமானத்தில் ஒரு விதமான மருந்து தெளிக்கப்பட்டது. அது மூளையைச் சென்றடைந்தவுடன் உற்சாகப்பட்டவாறே, இறங்கினோம். விமானத்தைவிட்டு இறங்கி டெர்மினலில் நுழையும்போது “ ?லோ” என்று பொம்மையைப் போன்று ஒரு பணிப்பெண் அனைத்து ஆயிரம் பேருக்கும் திருபிச் சொன்னாள். நன்றாக உற்றுப் பார்த்தேன். அட ! உண்மையிலேயே பொம்மை ரோபோப் பணிப்பெண் தான். நன்றாக இருந்தது அது.
அங்கேயும் கூட என்னைக் கடந்து சரவணா ஸ்டோர்ஸ் மஞ்சள் துணிப்பையைக் கையில் எடுத்தவாறு, குவைத் காரர் அவசரமாகச் சென்றார். என்ன அவசரமோ ? சரவணா ஸ்டோர்சில் கும்பலோடு அலை மோதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். “சீக்கிரம் போகணும் இல்லையென்றால் விசா கவுண்டரில் கியூ நிற்குமே ?” என்று தன் குவைத் அனுபவத்தில் பேசினார்.
ஏதோவென்று ‘சுள்’ ளென்று காலைக் கடிக்கவே ‘பட்’டென்று அந்த இடத்தில் அறைந்து விட்டு . . . விட்ட இடத்தில் தொடர்ந்தேன் . . .
போய் பார்த்தால் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. ஒரு வெள்ளைக்காரர் மட்டும் தன் “செவ்வாய்” உதடுகளைத் திறந்து, “ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்” (செவ்வாய் உங்களை இனிதே வரவேற்கின்றது) என்று செவ்வாய் மொழியில் கூற, பின்னால் இருந்த ஒலிப் பெருக்கி தமிழில் மொழிபெயர்த்து எனக்குத் தெரிவித்தது. நன்றி சொல்லிவிட்டு, விசா கார்டைச் சொருகி என்னை பதிவு செய்து விட்டு வெளியே வர, சுங்கத்துறையினர் என்னைப் பிடித்தனர்.
கால் வலிக்கவே தலையணையைத் தூக்கி காலடியில் போட்டு விட்டு . . .
சென்னை மாநகரத்துப் பழக்கத்தில் என் பெட்டியைத் தாம்புக் கயிறு கொண்டு கட்டியிருந்தேன். வினோதமாக அதைப் பார்த்து விட்டு, கத்தி கொண்டு அறுத்தனர். என் பெட்டியில் பருப்புப் பொடி சிதைந்து சிதறியிருக்கவே, செவ்வாய் உலகத்தினர் பயந்து பெட்டியை மூடி “சீல்” வைத்தனர். உள்ளே வேறு மாவடு பாட்டில். மாவடுத் தண்ணீர் மிளகாய் காரத்துடன் எண்ணையுடன் கசிந்திருக்க பயந்து போய் விட்டனர், “செக்யூரிட்டி அதிகாரிகள்”. பல்வேறு கோணங்களில் போட்டோக்கள் எடுத்த பிறகு ஒருவாறு அது என்ன என்று விளக்கி, சாப்பிட்டுக் காண்பித்த பிறகே என்னை வெளியே விட்டார்கள். கொலையுண்ட உடல் சிதறி ரத்தக் கோடுகள் போன்று மாவடுத் தண்ணீர் சிதறி, வெள்ளை வேட்டிகளில் “ரத்தக் கறை” தெளிக்கப்பட்டிருந்தது. எப்படியோ அள்ளி உள்ளே தள்ளி, மீண்டும் பெட்டியைத தாம்புக் கயிறு கொண்டு கட்டினேன். எதுக்கு தாம்புக் கயிறை வீசுவானேன் ? மீண்டும் உபயோகப் படுத்தலாமே ?. என்னப் புது பெட்டி வாங்கினாலும் நம்ம “தாம்புக் கயிறு” தான் கயிறு. மற்றதெல்லாம் மயிறு. (முடியைச் சொன்னேன் !).
அரித்த தலையைச் சொறிந்து விட்டு . . . பொடுகாக இருக்கும் . . . நாளைக்குத் தலைக்குக் குளிக்கணும் . . . திரும்பி படுத்தேன் . . .
வெளியே வந்து பார்த்தால், சாலைகள் “வழுக் மொழுக்” கென்றிருந்தன. “ரோடு எப்படி போட்டிருக்கான் பாரு ! “ என்று யாரையோ சிலாகித்தேன். எங்கள் ஊரில் செவ்வாய்காரன் வந்தால் கூட, “எப்படி ரோடு போட்ட்டிருக்கான் பாரு !” என்று சொல்லலாம். அப்படி குண்டும் குழியுமாக செவ்வாயில் இருப்பதைப் போன்று இருக்குமாக்கும் !
மாம்பலத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு 2 மணி நேரம் ஆன போது, செவ்வாயில் 3 நிமிடங்களில் 30 மைல் காரில் கடக்க முடிந்தது. செவ்வாய் ஆள், அரவம்( பாம்பு), புல், பூண்டு, நண்டு, சிண்டு (குழந்தைகள்),, மாடு, ஆடு இல்லாமல் வெறும் பாறையாக இருப்பதால் அவ்வாறு வேகமாகமாய் ஊடப் போக முடிந்ததாய் காரணம் கற்பித்துக் கொண்டேன்.
வலது கை வலிக்கவே இடப் பக்கம் திரும்பி கைகளை தலைக்கடியில் விட்டுத் தாங்கிப் பிடித்து . . .
எப்படா, செவ்வாய் “உடுப்பி”யைப் பார்ப்போம். மேலும் சில பல இட்லிக்களை விழுங்குவோம் என்று காத்துக் கொண்டிருந்தேன். வாழ்வதே இட்லிக்காக என்றும் தோன்றியது. கஷ்டப்பட்டு இங்கு வந்து வேலைப் பார்த்து மாலைக் காரை ஓட்டி இட்லி வாங்கிச் சாப்பிடத்தான் என்று தோன்றியது. அப்ப, நம்ம ஊரிலேயே இருந்திருக்கலாமே ?. தெருவோரக் கடையில் இட்லியைச் சட்னி/சாம்பாரில் நனைத்து சாப்பிட்டு திண்ணையில் உட்கார்ந்து வம்பு பேசியிருக்கலாம். இப்ப இங்கு வந்து ஆபிஸில் காபி குடித்து, செவ்வாய் இணையதளங்களைப் பார்த்து மாலை இட்லிக்காக ஏங்க வேண்டியிருக்கின்றது.
பாவம், பூவுலக சென்னை வாசிகள். மணமானவுடன், பெண்ணாயிருந்தால், செவ்வாய் போகும்போது கணவருக்காக “அல்ட்ரா டாப் இன்டர் காலக்டிகா கிரண்டர்” வாங்க வேண்டும். அதைக் கடினமாகத் தோல் பை பிய்ந்து, தொங்ககப் போட்டுக் கொண்டு போக வேண்டியிருக்கும். இட்லிக்கு அலையும் இட்லி “சுப்பன்”கள் கணவராக வாய்த்து விட்டு பெண்களின் உயிரை வாங்குவார்கள். நானும் அந்த வகையிலான ஒரு கனவான் தான். நான் வேலை பார்த்த “மார்ஸ்டெக்” கம்பெனியிலிருந்து வந்திருந்த ஏஜெண்ட் என்னை இலவசமாக உடுப்பிக்கு அழைத்துச் சென்றார். அங்கு கம்பெனி செலவில் 2 பிளேட் இட்லி, 1 ஆனியன் தோசை, 1 டிகிரி (555 டிகிரி இல்லை. அது செவ்வாயின் உஷ்ணம்) காப்பி சாப்பிட்டு விட்டு, கைகளை அலும்பிவிட்டு வெளியே வந்தால், செவ்வாயின் உஷ்ணம் என் தலைக் கவசத்தையும் மீறித் தாக்கியது.
இந்த வெயில் காலம், இரவு கூட தலையில் வியர்க்கிறது . . . சனியன் . . . ஃபேஃனில் காற்று போதாது . . .
சியாட்டிலில் எப்போதும் மழை. கனடாவில் எப்போதும் பனி, சென்னையில் எப்போதும் வெயில் என்பதைப் போல அலுத்துக் கொள்வதற்கு ஏற்ற மாதிரி செவ்வாய் வெயில் ரூர்கேலா இரும்பை உருக்கும் அளவிற்கு இருந்தது. மந்தைக் குளிரவிக்கும் விதத்தில் அனேகம் பேர் கைகுட்டையையே ஆடையாக அணிந்தவண்ணமிருந்தனர். பாஷன் மாறிப் போய் சென்னைக்கு இம்மாதிரி சின்ன “ஜட்டி” போட்டுக் கொண்டு கடைகளுக்குப் போய் என் “சின்னப் பையன்” புத்திக் காண்பிக்க ஆசையயிருந்தது. “எங்கிருந்து வந்தான் இந்த அரை டிராசர் லூசு ?” என்று கடைக்காரர்கள் கேட்கட்டும்.
இளம் பெண் என்று நினைத்து பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த நாய் மீது காலைப் போட்டவுடன் “இர்ர் உர்ர்ர்”ரென்றது. ஒரு உதை விட்டவுடன் தள்ளிப் போய் படுத்தது. இனிமேல் மேல் திண்ணையில் படுக்க கூடாது . . .
அடுத்த நாள் “செவ்வாய் சோஷ்யல் செக்யூரிட்டி” என்ற அலுவுலகத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போனான் ஏஜெண்ட். பேங்க் அக்கவுண்ட் திறக்க ஒரு செவ்வாய் குடிமகன் எண் வேண்டுமாம். அங்கு “அப்ளை” பண்ணி வாங்கினேன். அந்த நம்பருக்காகா மாதம் $450 கட்ட வேண்டும் என்றான். சரி ! பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் வயசான பிறகு சோஷியல் செயூரிட்டியில் பணமிருக்காது என்றும் கதைத்தார்கள். ஆபிசிற்குப் போனால் எனக்குச் சுழலும் இருக்கை அளித்தார்கள். திரும்பினால் என் ரூமின் சன்னல் திரும்பி எங்கு நோக்கினும் பரங்கி மலையே தெரியும். செவ்வாய் மலைக்குன்றுக்கு நானிட்ட பெயர் பரங்கி மலைக் குன்று.
வீட்டு வாசலிலிருந்த குப்பை மேட்டிலிருந்து வந்த துர்வாசனை மனதைக் கவர்ந்து சென்று மீண்டும் மூக்கிற்குள் நுழைத்தது. சற்று மூச்சை உள்ளடக்கிப் பிறகு வாசனையைப் பழக்கிக் கொண்டேன் . . . இக்குப்பை மேடு என்னைச் சமாதியாக்கிடும். நாளைக்கு தீ வச்சுக் கொளுத்த வேண்டும் .. .
சென்னை நினைவுகள் எனக்குள் ஏக்கத்தை ஏற்படுத்தி பெரிய மனக் கிலேசத்தை ஏற்படுத்தியது. நல்ல வேளை தமிழ் சினிமா படங்கள் செவ்வாய் இணைய தளங்களில் வந்ததால் ஆடலுடன், பாடலைக் கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகமென்று இருக்கலானேன். அலுவுலக வேலை போரடித்தது. இணைய தளங்களில், “செவ்வாய் அதிபர் போன் உரையாடல்கள், மற்றும் இ-மெயில்களை ஒட்டுக் கேட்பதற்கு சட்டம் போட்டிருந்தார்.” என்று காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. செவ்வாய் பெண்- பூவுலக ஆண் சேர்க்கை இயற்கையானத் திருமணம் ஆகாது என்று ஒரு சாராரும், அப்படி இருந்தால் தான் “செவ்வாயை செவ்வாய்ப்படுத்தமுடியும்” என்று மறு சாராரும் விவாதம் பண்ணிக் கொண்டிருந்தனர். செவ்வாய் மக்கள் அனைவரும் ஒரு வித சிவப்பிற்கு நிறம் மாறிப் போயிருந்ததால் பூமியிலிருந்து போன அனைவரையும் நிறம் வேற்றுமை கண்டு வித்தியாசப்படுத்தி இகழ்ந்து வந்தனர். செவ்வாயில் நிலத்திற்கு கீழே வாழ்பவர்களுக்கும் மேலே வாழ்பவர்களுக்கும் ஒரு சமூக வேற்றுமை இருந்தது. வண்ண வேற்றுமையில் ஒற்றுமை காணுமாறு அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒரு அரசியல்வாதி மஞ்சள் ராசியென்று மஞ்சள் உடை உடுத்திக் கொண்டிருந்தார். மற்றொருவர் சிவப்பு ராசியென்று சிவப்பை அணிந்து கொண்டிருந்தார். ஒருவர் கறுப்புச் சட்டையணிந்து கொண்டிருந்தார். பச்சை ஆடையும் உண்டு. ஒருவர் வெண் பட்டாடை அணிந்து கொண்டிருந்தார். ஒருவர் ஆடை எதற்கென்று கேட்டார். நிறங்கள் எந்த அண்டங்களுக்குச் சென்றாலும் சூரியக் கதிர்கள் போன்று மனிதரைத் துரத்துமென்று கண்டு கொண்டேன். எனக்கென்னவோ பிடித்தது நீலக் கதிர்கள் தாம். அந்தக் “கலரிலே தான் “பலான” படங்கள் செவ்வாயில் போடுவார்கள்.
வாய் உலர்ந்து தொண்டை வறண்டு போகவே (செவ்வாயில் தாகம் அதிகம் எடுக்குமாம்!) எழுந்து போய் ஒரு டம்ளர் பானைத் தண்ணீரைக் குடித்து விட்டுக் (பானை மாநிறம் !) இருட்டில் கண்மூடி நடக்கும் போது கீழே படுத்திருந்த அப்பாவின் காலை ஓங்கி மிதித்து . . . மன்னிச்சுக்குங்க ஃபாதர் !.
மதங்கள் பூமியைப் போலவே வானத்தில் மிதந்து செவ்வாய்க்கும் இறக்குமதியாகியிருந்தது. குகைகளைக் குடைந்தெடுத்த கோவில்களில், மசூதிகளில், சர்ச்சுக்களில், புத்த வி ?ாரங்களில் கடவுள் செவ்வாயிலும் படைக்கப்பட்டிருந்தார். அனைவருக்கும் செவ்வொளி பின்னால் தலையில் பின்னால் இருப்பதாக வரையப் பெற்றது. “இன்று யேசு கபிலன் பள்ளத்தாக்கில் தோன்றுகின்றார். !” “நாளை இவ்வுலகின் கடைசி நாள்!”, “குருடர்கள் பார்ப்பார்கள்! செவிடர்கள் கேட்பார்கள்” என்று பூமியிலிருந்து வந்திருந்த பிரசாகர் சொல்ல அனைவரும் அவரைச் சென்று பார்த்து குருடராகவே, செவிடராகவே வாழ்ந்து வந்தனர். கல்கி அவதாரம் முடிந்து “கலைமகள் அவதாரம் செவ்வாயில் நடக்கும். செந்தாமரை மீது வீற்றிருப்பாள்” என்று ஆர்.எஸ்.எஸ். இயக்ங்கள் கொடி பிடித்திருந்தன. முகமதுவைப் பற்றிக் கார்ட்டூன் ஒட்டியதால் “அனைவருக்கும் செவ்வாயில் சங்கு !” என்று போர் முழக்கங்களும் நிறைந்திருந்தன. “புத்தரின் சிலைகளை அடித்து நொறுக்குவோம்” என்று டாலிபான் இயக்கத்தினர் செவ்வாய் கானிஸ்தானிலிருந்து அறைகூவல் விடுத்திருந்தனர். ஆக மொத்தம் செவ்வாயும் களை கட்டியது. அவ்வப்போது டயர்கள் எரிக்கப்பட்டன. ராணுவம் ரோந்துக்கு அழைக்கப்பட்டது.
இன்னும் எவ்வளவு அண்டங்களுக்குச் சென்றாலும் இதையே செய்வோம் போலும். தண்ணீர் நமது உடம்பிலிருந்து கழிவாக வந்தாலும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நமக்கே குடிநீராகத் தரப்பட்டது. அது மாம்பலத்தில் கிடைக்கும் நீரை விடத் தூயதாக இருந்தது. “ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் இதைத் தான் செய்தார்கள் அந்நாளிலேயே ! எங்களுக்கு அதைப் பற்றி முன்னமையே தெரியும்” என்று நம்மவர்கள் மார்தட்டிக் கொண்டனர். மதுபானம், விபச்சாரம், மண்ணை அனுமதியில்லாமல் வெட்டுவது, சுரங்கங்கள் தோண்டுதல் போன்றவை நடைப்பெற்றன. நீரில்லாமல், பாலாறு என்று ஒரு மணல் திடலை “ஆறு” என்று கூறுவது போன்று பல பாலாறுக்கள் செவ்வாயில் இருந்தன. அதிலெல்லாம் மணல் அள்ளும் வித்தையைத் தென்னிந்தியர் சிறப்புறச் செய்தனர். பசுமைத் தாயக நண்பர்கள் “செவ்வாயில் வாழை” என்ற தத்துவத்தைக் கொண்டு வந்தனர். செவ்வாயில் புகைக் குடிக்கத் தடையும் கொண்டு வந்தனர்.
காலையில் சீக்கிரம் 8.00 மணிக்கு போகவேண்டும். என் சிவப்புத் தேவதை மஞ்சள் கலர் சட்டையணிந்து, சிவப்புப் புடவையில் தங்கரதமென வரும் நாள் . . . பச்சை நிறப் பல்லவன் பஸ்ஸைப் பிடிப்பதற்குள் போய் விட வேண்டும் . . .
செவ்வாயில் வாழ்பவர், தங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற வழக்கமான மனோபாவத்துடன், இறுமாப்புடன் இருந்து பூமியிலிருந்து வந்தவரைக் கடினமான காரியங்கள் அனைத்திற்கும் தயார் படுத்தினர். “ஓ ! பூமியா ?” என்று இகழ்சியாகப் பார்ப்பது நடந்தது. மனைவியை இழிவு பண்னும் கணவன்மாரும் “என் புத்தியச் செருப்பால அடிக்கணும். போயும் போயும் பூமியில் பெண்ணெடுத்தேன் பாரு !” என்று சொல்லிக் கொண்டனர். அமெரிக்க வாழ் குடியினர் செவ்வாயில் தங்கிய பிறகு, “உங்கள் குழந்தைகளும், என் குழந்த்தைகளும், நம்மக் குழந்தைகளோடு, இப் பூமிக் குழந்தைகளோடு வளரட்டும். வீட்டு வேலை செய்ய பூமியில் தான் காசு சல்லிசாகக் குழந்தைகள் கிடைப்பார்கள்” என்று வாழ்ந்து வந்தனர்.
பூமியின் அமெரிக்காவிலிருந்து வந்தாலும் குழந்தைகளை, பெண்களை அவ்வாறு நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மார்ஸ், வீனஸ், போன்றவைப் பொதுப் பெயர்களாக இருந்தது. மார்ட்டின் லூதர் கிங் பெயரில் ஒரு ரோடு போடப்பட்டிருந்தது. சிவகாசிப் பட்டாசுக்கள் அங்கேயும் விற்கப்பட்டன.செவ்வாய்க்கும், ராமநாதபுரத்திற்கும், சிவகாசிக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை தான்.
வாழ்க்கை சுகமாகத் தான் இருந்தது. வாங்கின சம்பளம் செவ்வாயில் வாடகை வீட்டிற்கேப் போதுமானதாக இருந்தது. வெளியே நண்பர்கள் அதிகமில்லாமல் இருந்தது. அனைவரும் செவ்வாய் கிரகத்து விஷயங்களுக்கே முக்யத்துவம் கொடுத்து பேசவே, பூலோக வாழ்க்கைச் செல்லாக் காசாகிவிட்டது. கலாச்சாரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சினிமா, நாடகம், இசை எல்லாம் செவ்வாய்த் தனத்தோடு இருக்கவே. வேம்பு இனித்தது. தேன் கசந்தது. மாபுளித்தத்து. பலா கசந்தது. சும்மா ! அரசியல் கலந்து பேசிப் பார்த்தேன் ! இப்பழம் புளிக்குமென்று பூமிக்குத் திரும்ப முடிவு செய்தேன்.
இன்னும் விடியலை. இன்னும் கொஞ்ச நேரம் . . . மனதிடம் கொஞ்சி விட்டு குளிரில் போர்வையை இழுத்து போர்த்தி விட்டு . . .
ஆனால், சென்னைக்கும், அதன் வெயிலிற்கும், “கச கச” வென்று இருக்கும் கூட்டங்களையும் அதிகம் கேலி பேசி வந்த நான், அவையில்லாமல் செவ்வாயில் பைத்தியம் போல ஆனேன். சரி ! சம்பாதித்தது போதுமென்று திரும்பி சோனியா ஏர்வேஸில் திரும்பி வந்தேன். அதோ ! பூமி நீல உருண்டையாகத் தெரிந்தது.! அங்கு போனபின்பால், தொடர்ந்து சாதி மத வேறுபாடுகளுக்கிடையே வாழ்க்கை நடத்தப் போகிறோமென்று நினைத்துக் கொண்டேன். எரி நட்சத்திரத்தைப் போன்று எரிந்து சென்னையில் திரும்பி வந்து ஏர்போர்ட்டில் லஞ்சம் வெட்டி, என் உடைமைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன் . . .
அடுத்த நாள் என் அம்மா உலுக்கிச் சொன்னாள், “இந்தா சும்மா தானே இருக்கிறாய் ! எழுந்திரு. லுங்கி மேலே போட்டுக்கொண்டால் தூக்கம் எப்படிக் கலையும் ? சென்னை கார்ப்பரேஷனுக்குப் போய் இந்தப் பில்லை கட்டி விட்டு வா!” என்றாள்.
அம்மா சொன்னக் கிளிகள் ஞாபகம் வர “ அம்மா செவ்வாயில் . . .” என்றேன் !
பல்லைப் பேர்த்துடுவேன். எழுந்திருடா சோம்பேறி !
“செவ்வாய் நாறுவதற்குள் பல் தேய்த்து விட்டு, இந்தப் பினாயில் காபியைக் குடித்துவிட்டு 12C பிடித்து வடபழனி போ! ஏவிஎம் ஸ்டூடியோவில் நூறு தினகரன் பேப்பர் கேட்டிருக்கான். போய் போடு !!” என்று அப்பா என்னைக் காய்ச்சித் தள்ளினார்.
நேற்று அதிகம் சூப்பர்ம்ம்ம்மா தினகரனைப் படித்து விட்டு செவ்வாய் கனவு அதிகமாகிவிட்டது போலும் ! கோயம்பேடு நோக்கி பீடு நடை நகரலானேன். தூரத்தே தினகரன் மதிய வெயிலில் மஞ்சளாகக் காய்ந்து கொண்டிருந்தான். மணி 8.00 சிவப்புத் தேவதை கிளியெனப் பறந்து மயிலென நடந்து வந்தாள். அவளை நன்றாகப் பார்ப்பதற்குள் “பர பர” வென வந்தக் கூட்டம் அவளையும் என்னையும் நன்றாகத் தள்ளிவிட்டு, புழுதி கிளம்பிய பச்சைப் பல்லவனை ஆக்ரமிக்க, மயில் காணாமல் போனாள். இவளைப் பார்ப்பதே பெரும் கனவாக இருக்கிறது. பஸ்ஸையும் தவற விட்டேன்.
நீலவானத்தில் சூரிய நட்சத்திரம் காய்ந்து கொண்டிருந்தது.
நமக்கெல்லாம் வட பழனி தான் !
செவ்வாயாவது ? கிளியாவது ?.
காக்கா “கா, கா வென்று” கத்த, கோடம்பாக்கத்துக் குண்டு குழிகளிலில் செவ்வாய் மீது போன “ரோவர்” மாதிரி பொடி நடை நடக்கலானேன். நான் போய்ச் சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலுள்ளது.
kkvshyam@yahoo.com
- கடிதம் – ஆங்கிலம்
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- நம்மாழ்வார்
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சுனாமி வைத்தியம்!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
- வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006
- கடிதம்
- குளமும் ஊருணியும்
- உண்மை தெய்வமான க(வி)தை
- கடிதம்
- திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை
- சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி
- சுந்தரமூர்த்திகளுக்கு….
- சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…
- செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:
- நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்
- கடிதம் – ஆங்கிலம்
- பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!
- உயிர்மெய் முதலாவது இதழ் வெளிவந்துவிட்டது
- சூட்டுக் கோட்டு சூடு கோடு
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)
- கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அப்பாவின் மனைவி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- யதார்த்தம்
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சொல் இனிது சொல்வது இனிது
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாழன் ஆதி கவிதைகள்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- உலகம் என்பது வண்ணம்
- வன்மழை
- மனிதனாய் தவிர்த்து
- எல்லம் வாத்துக்களே
- டான் கபூர் கவிதைகள்
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )