சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சின்னக்கருப்பன்


நான் பெரியாருக்கு வக்காலத்து வாங்குவது என்பது பலரால் எதிர்பார்க்கக்கூடியதாக இல்லாமல் இருந்தாலும் தோன்றியதை எழுதி விட வேண்டியிருக்கிறது. இந்த குறிப்பு திரு ரவிக்குமார் அவர்கள் காலச்சுவடு இதழில் ‘திருமணம் என்ற கிரிமினல் குற்றம் ‘ என்ற தலைப்பில் எழுதியிருந்ததன் சம்பந்தமாக.

‘பெரியாரின் பெண்ணுரிமை தொடர்பான கருத்துக்கள் யாவும் அதிர்ச்சி மதிப்புக்காக உதிர்க்கப்பட்டவை ‘ என்ற தன் கட்டுரை அடிப்படையை நிறுவ பெரியாரின் எழுத்துக்களுக்கும் வாழ்க்கைக்கும் இருந்த முரண்பாட்டினை காட்டுகிறார் திரு ரவிக்குமார். இறுதியாக, ‘பெண்ணுரிமை குறித்த பெரியாரின் கருத்துக்கள் உண்மையான கடப்பாட்டிலிருந்து பிறந்தவையாக இருந்திருந்தால் அவரது வாரிசுகள் இந்த அளவுக்குப் பெண்களை கேவலப்படுத்துகிற நிலை ஏற்பட்டிருக்காது ‘ என்று எழுதுகிறார் திரு ரவிக்குமார்.

என் போன்ற இந்துவின் பார்வையிலிருந்து பெரியார் வேறுவிதமாகப் பார்க்கப்படுகிறார். இந்து மனம் ஒவ்வொரு வரியையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதில்லை. உள்ளுறையை பார்க்கிறது. பெண் அடிமைப்பட்டுக்கிடந்தாள் என்ற உணர்வு பெரும்பாலான படித்த மக்களிடம் வந்திருந்த காலமது. பாரதி பெரியார் போன்ற பெரும் சிந்தனையாளர்கள் பெண் அடிமையாகக் கிடந்த காலத்தைப் பார்த்து எழுதினார்கள் பேசினார்கள். ஆகவே பெரியார் பெண்ணுரிமை பற்றிச் சொன்ன கருத்துக்களை, (அவரே பின்பற்றவில்லை என்றாலும் கூட) அவர் மனதறிந்து உண்மையெனக் கண்டு சொன்னக் கருத்துக்களே. அவரது நேர்மையை நான் வெகுவாக மதிக்கிறேன். அவற்றை ‘அதிர்ச்சி மதிப்புக்காக உதிர்க்கப்பட்டவை ‘ என்று ரவிக்குமார் கூறுவது, ரவிக்குமாரே ‘அதிர்ச்சி மதிப்புக்காக ‘ இவ்வாறு எழுதுகிறாரோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

மேலும் தமிழக மக்களிடையே இருக்கும் பெண் பற்றிய எதிர்பார்ப்புக்களை ராமாயணமும் இதர புராணக்கதைகளும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், ராமாயணத்துக்கும் புராணக்கதைகளுக்கும் இருக்கும் ஆதரவை உடைக்க விரும்பியவர்கள் பெரியாரும் திராவிட இயக்கமும். பெண் பற்றிய தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை என்ற அடிப்படையில் இந்த பிரச்சாரம் நடந்தது.

ஆனால் அதே இந்து பாரம்பரியக் கதைகள், எவ்வாறு பெண் பற்றிய எதிர்பார்ப்புக்களை உருவாக்கி பெண்ணுக்கு சங்கிலியாக இருக்கின்றன என்பதையும் மறுபக்கம் பேசினார்கள். ஆனால் இங்கோ, பெண் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சாரம் நடந்தது. இதுவே முரண்பாட்டுக்குக் காரணம்.

முரண்பாடுகள் அவர் முதலில் கைக்கொண்ட முறை சார்ந்ததே தவிர, அவரது கருத்துக்களில் இல்லை. அவர் பெண் விடுதலை வேண்டி நின்ற சமூக சீர்திருத்தக்காரர்களில் ஒருவரே. அவர் அதற்காக மதிக்கப்படவேண்டியவர்.

***

பெரியார் தொடர்பான இன்னொரு காலச்சுவடு கட்டுரையான திரு ராஜ் கவுதமன் அவர்களது கட்டுரைக்கும் எனது எதிர்வினை.

‘பெரியார் சொன்ன இந்து மதத்தையும் கடவுளையும் கோவிலையும் சாத்திரங்களையும் விட்டொழித்த பெரியாரியவாதிகளில் பலரும் தங்கள் சாதிகளை விட்டொழித்தபாடில்லை ‘ என்று எழுதுகிறார் ராஜ் கவுதமன். ‘இந்து மதம் சாதி போற்றும் மதம் ‘ என்றும் இந்து மதத்தினை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும் என்ற அடிப்படையில் சாதியை அணுகியதே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்பதே நான் வெகுகாலம் கூறி வருவது.

சாதி கிராமத்தில் இருப்பதும், நகரத்தில் அழிந்ததும் நமக்கு மறு சிந்தனையை தூண்டியிருக்க வேண்டும்.

சமூகக்காரணிகள் இருக்கும் வரை சாதி ஒழியாது. எல்லோரும் இந்துமதம் விட்டு வேறொரு மதத்தில் இணைந்தாலும் சாதி ஒழியாது. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் இருக்கும் பழங்குடியினரிடம் இருக்கும் சாதி முறைகள் அவர்கள் கிரிஸ்துவர்களாக ஆனபின்னரோ அல்லது முஸ்லீம்களாக ஆனபின்னரோ மறையவில்லை. அவை பல இடங்களில் இன்னும் உறுதிப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கும் சர்ச்சுகளும் நம் ஊர் மடங்கள் போன்று சாதியை ஒரு பக்கம் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மறுபக்கம் தங்கள் சர்ச்சுகளுக்குள்ளேயே சாதி முறையை தீவிரமாகக் கடைபிடிக்கின்றன.

சாதி ஒழிந்தால்தான் தீண்டாமையும், சாதியால் நடக்கும் கொடுமைகளும் ஒழியும் என்று நினைப்பது போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றது.

உன் சாதியை வைத்துக்கொள், ஆனால், தீண்டாமையை ஒழி. மற்ற சாதிக்காரன் வாழக்கூடாது என்று நினைக்காதே என்பதையே நான் முன்னிருத்துகிறேன். ஆனால் ‘சாதி பாராட்டுகிற சூத்திரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பெரியாரியம் ‘ என்று எழுதுவதன் மூலம் மீண்டும், சாதி பாராட்டுகிற ஆளாக ராஜ் கவுதமன் ஆகிவிடுகிறார்.

தலித்துகள் மட்டுமே சூத்திரர்கள். மற்ற யாரும் (வன்னியர், கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், ரெட்டியார், முதலியார் ஆகியோர்) சூத்திரர் பெயர் சொல்லி அரசியல் செய்யமுடியாது என்பதை வலியுறுத்துவதே முதல் படியாக இருக்க முடியும். எல்லோரையும் சூத்திர பெயருக்குள் அடைத்து அரசியல் செய்வது, உண்மையான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் பெரும் மோசடி.

**

உலக வங்கியின் அறிக்கை ஒன்று இந்தியாவின் மொத்த வருமானம் 3,068 பில்லியன் டாலர் என்று அறிவிக்கிறது. இந்தியாவின் குடிமகன் ஒருவனது சராசரி வருமானம் $2880 டாலர் என்று அறிவிக்கிறது. (அதாவது 4 பேர் இருக்கும் வீட்டில் ஒருவர் சம்பாதிக்கிறார் என்று கணக்கு வைத்துக்கொண்டால், அவரது வருமானம் 12000 டாலர் வருடத்திற்கு.) இது வாங்கும் சக்தியை கணக்கில் எடுத்துக்கொண்டு செய்யப்பட்ட கணக்கு. அதாவது ஒரு அமெரிக்கர் 12000 டாலர் வாங்கி எப்படி வாழ்க்கையை அமெரிக்காவில் நடத்த முடியுமோ அதே போல வாழ்க்கையை ஒரு இந்தியர் சராசரியாக இந்தியாவில் நடத்துகிறார் என்று கணக்கு.

அமெரிக்காவில் வாழ்பவர் ஒருவர், கூட 3 நபர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில், 12000 டாலர் வருடத்திற்கு சம்பாதித்தால் படு ஏழையாகக் கருதப்படுவார்.

வெகுகாலம் உலகவங்கி போன்றவர்கள், நாணய மாற்று விகிதத்தை உண்மையென எடுத்துக்கொண்டு அமெரிக்கா ஐரோப்பா தவிர மற்ற எல்லோரையும் பஞ்சைப் பண்ணாடைகள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்னும் தவறான நாணய மாற்று விகிதத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்தியர்கள் பணக்கார வேஷம் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையான வாங்கும் சக்தியும் நாணயமாற்று விகிதமும் ஒன்றாக ஆகும்போதுதான் நாடுகளுக்கு இடையேயான உருப்படியான வியாபாரம் நடக்கும். (உண்மையான வாங்கும் சக்தி அளவின் படி ஒரு டாலரின் மதிப்பு 20 ரூபாயாக இருக்கும். ஆனால் நாணயமாற்று விகிதத்தின் படி அது 45 ரூபாயாக இருக்கும்.) இந்தியா பெட்ரோல் வாங்க வேண்டுமென்றால், வாங்கும் சக்தியின் அளவைக்கொண்டு ரூபாயை உபயோகப்படுத்த முடியாது. இந்தியா தனது ரூபாயை நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டாலரை வாங்கி அந்த டாலரை சவூதி அரேபியா அல்லது வேறொரு ஓபெக் நாட்டுக்கு கொடுத்து பெட்ரோல் வாங்க வேண்டும். (இதில் அமெரிக்க டாலருக்கு தேவை இருப்பதை கவனியுங்கள்) இதுவே இந்தியப்பொருளாதாரம் தொடர்ந்து அடிமைப்பட்டு இருப்பதன் ரகசியம். இதனை உடைக்க வேண்டுமெனில் பெட்ரோல் போன்ற சக்தி மூலங்கள் (அணு சக்தி, காற்று சக்தி போன்றவை) இந்தியாவிலேயே உற்பத்தியாக வேண்டும். அப்போதுதான் இந்தியா இது போன்று தண்டச்செலவை தவிர்க்க முடியும்.

ஆனால், இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேறுவதை எதிர்ப்பதை மட்டுமே முற்போக்கு என்று பேசும் ஆட்கள் அரசின் முக்கியமான இடங்கள் தொடங்கி, அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் உதிரிப்பத்திரிக்கைகள் வரை உட்கார்ந்திருக்கும்போது இது போன்ற சிந்தனைகளுக்கே சாத்தியமில்லை.

***

காங்கிரஸ் அரசு தொடர்ந்து தவறுகள் செய்து வருகிறது. (அல்லது சோனியா )

தவறுகள் என்று நான் சொல்வது அரசு ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக.

முதலாவது முலயாம் சிங் யாதவை பகைத்துக்கொண்டார்கள். சோனியா காந்தி தான் வைத்த வெற்றி விழா விருந்தில் முலயாம் சிங் யாதவ், அவரது நண்பர் அமர் சிங் ஆகியோரை அவமானப்படுத்தினார். பிறகு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்றார். ராகுல் காந்தி வேறு அவ்வபோது முலயாம் சிங் யாதவை கடித்துக்கொண்டிருக்கிறார். (முலாயாம் சிங் யாதவிடம் 36 எம்பிக்கள் இருக்கிறார்கள்)

அடுத்தது டெலிங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் பொதுக்கூட்டத்தில் சோனியாவை நான் இங்கு இழுத்துவருவேன் என்று பேசியதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று காங்கிரஸார் கோரினார்கள். பிறகு இந்த தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து விளக்க முயன்றபோது நேரமே கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (டெலிங்கானா ராஷ்டிர சமிதியிடம் 5 எம்பிக்கள் இருக்கிறார்கள்)

இப்போது சரத் பவார் கிரிக்கட் போர்டு தலைவராக ஆக முயன்றபோது, அவரது பழைய நிலைப்பாடுகள் காரணமாக அவருக்குப் பதிலாக வேறொருவருக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு அந்த பதவி கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். (பவாரின் தேசிய காங்கிரஸிடம் 9 எம்பிக்கள் இருக்கிறார்கள்) இத்தனைக்கும் அந்த தேர்தலுக்கு முன்னர், சோனியா பிரதமராக நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்றெல்லாம் பேசிப்பார்த்துவிட்டார் சரத் பவார். சரத்பவார் காங்கிரசுக்கு வெளியே இருந்தாலும் காங்கிரசுக்குள் அவருக்கு ஏராளமான செல்வாக்கு. தெரிந்தே அவரை அவமானப்படுத்துகிறார்களா இல்லையா என்று புரியவில்லை எனக்கு.

மேற்கண்ட மூன்று கட்சி மொத்தமே சுமார் 50 எம்பி இடங்கள். இருந்தும் இந்த காங்கிரஸ் கட்சி விழாமல் இருப்பதற்கு இடது சாரிகளிடம் இருக்கும் 66 இடங்களும், மாயாவதியிடம் இருக்கும் 19 எம்பிக்களுமே காரணம். இடதுசாரிகள் எப்போதும் இந்த ஆட்சியை விழ விடமாட்டார்கள் என்ற தைரியத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. அது உண்மைதான். ஆனால் மாயாவதியை அப்படி சொல்லமுடியாது. ஆகையால், இன்றைக்கு மாயாவதியையாவது காங்கிரஸ்- சோனியா ஆகியோர் பகைத்துக்கொள்ளாமல் இருக்க காங்கிரஸின் குலதெய்வங்கள் அருள் பாலிக்கட்டும். இடது சாரிகள் ஆதரவு தெரிவித்தாலும், மாயாவதி கழண்டு கொண்டுவிட்டால் இந்த அரசு அந்தோதான். (இந்திய அரசாங்கம் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது, என்ன செய்வது)

***

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்த புலனாய்வு அறிக்கை காரணமாக, பாஜக ஆட்சி செய்த காலத்தில் பட்டுவாடா செய்யப்பட்ட பெட்ரோல் பம்புகளில் 70 சதத்துக்கும் மேலானவை தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆதரவாளர்களுக்கே சென்றிருக்கின்றன என்பதும், அவையும் தவறான முறையில் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை ரத்து செய்ய வேண்டுமென்றும் விசாரணை செய்த நீதி விசாரணை மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் கிடையாது.

மேற்கு வங்காளத்தில் என்னென்ன ஊழல்கள் நடந்து கொண்டிருக்கின்றனவோ, யார் கண்டார் ? அதற்குத்தான், இப்படிப்பட்ட விடி மோட்சமே இல்லாமல் போய் விட்டது.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்