சென்னை வந்து சேர்ந்தேன்.

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

வெங்கட் சாமிநாதன்


நான் தமிழ் நாட்டை விட்டு வேலை தேடி முதலில் ஜெம்ஷெட்பூருக்குச் செல்ல சென்னை சென்டிரலிருந்து கிளம்பும் கல்கத்தா மெயிலில் ஏதோ ஒரு பெட்டியில் காலி இடத்தில் ஏறி உட்கார்ந்தது 1948-ம் வருடம் ஜூலை மாதம் 27 அல்லது 28-ம் தேதியன்று. மாலை ஏழு மணிவாக்கில். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான், “டாடா நகருக்கு ஒரு டிக்கட்,” என்று கேட்டு ரூபாய் 33 கொடுத்து ஒரு டிக்கட் வாங்கினேன். அது ஒரு காலம். பதிவு செய்தல் என்பதெல்லாம் கிடையாது. அதன் பிறகு 51 வருடங்கள் கழிந்த பிறகு தான், 1999-ம் வருடம், நவம்பர் மாதம், என் நினைவு சரியென்றால் அனேகமாக அன்று 29-ம் தேதியாக இருக்கும், நான் ஒரு வழியாக எனது நீண்ட வட இந்திய வாழ்க்கைக்கு ஒரு முழுக்கு போட்டு எஞ்சிய காலத்தைக் கழிக்க சென்னைக்கு வந்திறங்கிய தினம்.

இந்த நீண்ட அரை நூற்றாண்டுக்கும் மேற்செல்லும் கால நீட்சியில் அவ்வப்போது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் தமிழ் நாடு வந்ததுண்டு தான். அந்த விடுமுறை நாட்களை ஒரிடத்தில் என நான் தங்கியிருந்து கழித்ததில்லை. தமிழ் வாழ்க்கை என்பது ஒரு ஆழ்ந்த பதிவாக, பதிந்த படிமமாக தங்கியுள்ளது பதினாறு வயது வரை மாணவனாக இருந்த காலத்தியது தான். அந்த மனப் பதிவுகளில், பல காட்சிகள், ஒலிகள், மனித உறவுகள் கலந்து இருந்தன. நடு நாயகமான கோவில் கோபுரங்கள், காலையில் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் காணும் தெருக்காட்சிகள், அவ்வப்போது மாறும் பொழுதுகளை அறிவிக்கும் கோவில் மணி ஒசை, காலையில் தெருவைக் கடந்து செல்லும் பஜனை கோஷ்டிகள், அவ்வப்போது மிக அரிதாகக் கேட்கும் அந்நாளைய இனிமையான சினிமா பாடல்கள் – இவையெல்லாம் என் பால்ய காலத்தை இனிமையோடு நினைவூட்டும் – இவற்றை அவ்வப்போது என் தில்லி நாட்களில் நினைத்துக் கொள்வேன். பின்னர் விடுமுறையின் போது சந்தித்த, அப்போது மிக அமைதியாக, வெளி உலகம் அவ்வளவாக பரபரப்புடன் கண்டு கொள்ளாத இலக்கிய பெருந்தலைகளும், அவர்கள் எனக்கு அளித்த இலக்கிய பரிச்சயங்கள் எல்லாம் திரையோடும்.

ஆனால் அந்நாட்களில், தமிழ் நாடு திரும்பவேண்டும் என்ற ஒரு ஏக்கம் எதையும் இவை என்னில் பிறப்பித்து விடவில்லை. ஒரிஸ்ஸாவும், தில்லியும் எனக்களித்தவை, நான் பெற்றவை கற்றவை நிறையவே இருந்தன. நான் ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொன்னூறுகள் வரை பணிசெய்த அலுவலகத்தின் கிளைகள் இந்தியா முழுதிலும் பரவியிருப்பது. எங்கு வேண்டுமானாலும் கொஞ்சம் சிரமப்பட்டால் மாற்றல் வாங்கிக் கொள்ளலாம். என் திருமணம் நடந்ததும் என்னிடம் பிரியம் கொண்டிருந்த உயர் அதிகாரி, வேண்டுமானால் என்னை சென்னைக்கு மாற்ற உதவுவதாகச் சொன்னார். நான் அதை விரும்பவில்லை. மறுத்துவிட்டேன். நான் விடுமுறைகளில் அவ்வப்போது தமிழ் நாடு வந்தபோது கண்ட தமிழக அலுவலகக் கலாச்சாரமும், தெருவில் கால் வைத்தால் தப்ப முடியாத பாமரத்தனமான வெகு ஜன கலாச்சாரமும் எனக்கு மிகவும் வெறுப்பூட்டியிருந்தன. என்னால் அவற்றைச் சகித்துக்கொள்ளமுடியும் என்று தோன்றவில்லை. இதன் காரணத்தால் தான் நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தில்லியிலேயே தொடர்ந்து இருப்பதைத் தான் விரும்பினேன். சற்றுத் தள்ளியிருந்த பீதம்புரா என்னும் புறநகர்ப் பகுதிக்கு வீடு மாறிய போதிலும் தில்லி வாழ்க்கை எனக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்தது.

ஆனாலும், ஒரு விபத்தில் உயிர் தப்பியதும், பின்னர் என்னைப் பற்றிக் கொண்ட இருதயக் கோளாறும் எஞ்சிய நாட்களை தமிழ் மண்ணில், உறவினரோடும் மனதில் பதிந்திருந்த காட்சிகளின், படிமங்களின் நினைவுகளோடும் திரும்ப வாழும் எண்ணத்தை மனதில் பதித்தன. இவற்றோடு இரண்டு அரிய நட்புகளும் ஒரு ஊசலாட்டத்தில் என்னை வைத்தன. தில்லியில் கடைசி 30 வருடங்கள் மிக நெருங்கிப் பழகிய நண்பர், டண்டன், இவரை எப்படிப் பிரிந்து தமிழ் நாட்டுக்குச் செல்வது? எனற தயக்கம். என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய அவரே ஒரு விபத்துக்கிரையானார். அது உயிரை வாங்கும் விபத்து இல்லை. இருப்பினும்…அதன் பிறகு நான் தில்லியில் இருந்தது சில மாதங்களே.

நான் வரும் முன்னரே எனக்காக வாடகைக்கு எடுத்து வைக்கப்பட்டிருந்த வீட்டை மடிப்பாக்கம் தெருக்களில் தேடி விசாரித்த போது, அதோ அந்த ஐயப்பன் கோவிலில் வாசலில் நிற்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள் என்றார்கள். அவர்கள் இதற்கு அடுத்த தெருதான் நாங்கள் தேடும் இடம் என்றார்கள். அந்தக் கோவிலைப் பார்க்கவும், நான் இருக்கப்போவது அடுத்த தெருதான் என்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தன. கோயில் தெருவின் நடுவில் ஒரு கோடியில் இருக்க, அதன் இரு பக்கங்களிலும் சாரியான வீடுகள். இப்போது மறைந்து வரும் சன்னதி தெருவாக அது இருந்தது. தெருவின் ஒரு கோடியில் பழம், தேங்காய் காய்கறி விற்கும் ஒரு கடை தென்னங்கீற்று வேய்ந்த கூரை. மறு நாள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்று பார்த்த போது, பதினெட்டுப்படிகள் ஏறித் தான் அய்யப்பனைத் தரிசிக்கமுடியும் என்று தெரிந்தது. தில்லி ராமகிருஷ்ணபுரம் அய்யப்பன் கோவிலும் கேரள கோவில்களைப் போலவே அழகாகக் கட்டப்பட்டிருந்தது தான். ஆனால் அந்த தில்லி அய்யப்பன் கீழ்த் தளத்திலேயே தான் வழக்கம் போல் கால்மடித்து அமர்ந்திருந்தார். பதினெட்டுப் படிகள் அங்கு இல்லாததால், சபரிமலைக் கோயில் கட்டுப்பாடுகள் தில்லிக் கோயில் இருக்கவில்லை. ஆனால், இங்கு பெண்கள் கோவிலுக்குள் செல்லாமே தவிர படியேறி அய்யப்பனைத் தரிசிக்கமுடியாது. சம்பிரதாயங்களைக் காப்பதில் மலையாளிகள் கட்டுப்பாடானவர்கள். கம்யூனிஸ்ட் அரசும், நாத்திகர்களேயானாலும், இதில் தலையிடுவதில்லை.

தில்லியிலிருந்த காலத்தில் மடிப்பாக்கம், அரசுப் பணி ஓய்வு பெற்றவர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் தங்குமிடம் என்று பத்திரிகைக் குறிப்புகளைப் படித்திருந்தேன். மடிப்பாக்கம் ‘மடியாக இருப்பவர்கள் நிறைந்த இடம் என்று கேள்விப் பட்டேனே’ என்று இன்னொரு நண்பர் சொன்னார், “என்ன இருந்தாலும் எங்க ஆட்களை (யூகித்துக் கொள்ளலாம்) விட்டுக்கொடுத்திருவோம்களா!” என்ற நியாயம் கற்பித்தவர் புரட்சிக் கவிதைகள் எழுதும் கம்யூனிஸ்ட் நண்பர். இப்படித்தான் ஒரு காஷ¤வல் பேச்சில் கூட பொடி வைத்தும் அதேசமயம் தம் அரிப்பைக் காட்டியும் காட்டாமலுமான பேச்சு இப்போது தமிழ் சமூகத்தில் சகஜமாகிக் கொண்டிருந்தது தெரிந்தது. சரி, அது என்ன மேல்தட்டு வர்க்கத்தினரின் புகலிடம் என்று போகப் போக தெளிவு வரத் தொடங்கியது. தெருவுக்கு எதிரே ஒரு பெரிய, மிகப் பெரிய ஏரி. ஏரியின் நடுவே குட்டையாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அதைக் குளம் என்று சொல்லக் கூட தகுதியற்ற தேக்கம் அது. ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே கட்டிடம் இடித்த காரை, செங்கல் குவியல்கள். ஏரிகள் நிறைந்த இடம் தான் மடிப்பாக்கம் அதன் ஒவ்வொரு ஏரியும் வறண்டு குப்பைகள் கொட்டப்படும் இடமாகத் தான் காட்சி தந்தது. பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயமே வந்தியத் தேவன் கடல் போல் அகன்று விரிந்திருந்த வீராணம் ஏரியை குதிரைமேல இருந்து சுற்றி ஆச்சரியத்துடன் வலம் வந்த காட்சியுடன் தான் தொடங்கியது. அப்படித்தான் எனக்கு நினைவு. சென்னையைச் சுற்றிய மாவட்டங்கள் அனைத்தும் பாசனத்துக்கு ஏரியையே நம்பியவை. சுத்தமாக வரண்ட நிலமாக இருந்த அந்தக் கால நிலக்கோட்டையில் கூட அந்த ஊர் கொக்கிர குளம் இம்மாதிரி ஆபாசப் படுத்தப் படவில்லை. எல்லாக் காலத்திலும் திருடர், கொலையாளிகள் சமூகத்தில் இருந்தது போல, ஐம்பது வருடங்களுக்கு முன்னும் தன் எதிரி மாட்டுக்கு விஷம் வைப்பவர்கள், எதிரி வீட்டின் வைக்கோல் படப்பிற்கு தீ வைப்பவர்கள், கிணற்றுத் தண்ணீரை ஆபாசப்படுத்துபவர்கள் இருந்திருக்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் சமூகத்தில் அரிதாகக் காணப் படும் சமூக விரோதிகள், குற்றவாளிகள். மக்களால் வெறுக்கப்படுபவர்கள். ஆனால் இன்று ஏரிகளை குளங்களை ஆபாசப் படுத்துவதும், குப்பை கொட்டுவதும் புளுத்துப் போன அரிசியை பங்கீட்டுக்க் கடையில் விற்பவர்கள், எல்லோரும் செய்யும் ஒரு காரியமாக சகஜமாகியுள்ளது. ஒரு அராஜக செயல், மக்கள் விரோதச் செயல் வெகு சகஜமான மக்கள் செயலாகியுள்ளது.

இங்கு எங்கள் தெருவின் ஒவ்வொரு வீட்டின் முன்னும் உள்ள சாக்கடை ப்ளாஸ்டிக் மற்றும் பல கழிவுப்பொருட்களால் அடைபட்டுக்கிடக்கிறது. தெருமுனைகளில் சாக்கடை நீர் வழிந்து தெருக்களில் ஓடி வருகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குப்பைகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றது. அதன் மேல் தென்னை மட்டைகளும் குவிந்து கிடக்கும். பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு லாரி வரும். தெருமுனையில் வரும்போதே அது நிறைந்து வழிந்திருக்கும். முடிந்த வரை அவன் தென்னை மட்டைகளை ஒதுக்கி குப்பைகளை மட்டும் அள்ளிப் போட்டுச் செல்வான். குண்டு குழிகள் நிறைந்த ரோடில் குப்பை நிறைந்து வழியும் லாரியிலிருந்து குப்பைக் கழிவுகள் போகுமிடமெல்லாம் வழிந்து சிதறும். அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. லாரி வந்தது. குப்பை அள்ளிச் சென்றது என்று கவுன்ஸிலரும் சொல்வார்.தெரு ஜனங்களும் சொல்வார்கள். லாரி சென்றபின் தென்னை மட்டைகள் எரிய விடப்படும். இது நான் இங்கு வந்ததிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக நடக்கும் காட்சி. நாலைந்து தெரு வாசிகள் சேர்ந்து ஒரு ஆளை நியமித்து வண்டியும் வாங்கிக் கொடுத்து குப்பைகள் அகற்ற ஏற்பாடு செய்திருந்தோம். அது போன பஞ்சாயத்து தேர்தலுக்குப் பின். 2006-ல் வந்த புதிய பஞ்சாயத்து இதைத் தடுத்து விட்டது. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆள் பஞ்சாயத்தில் வேலை தரப்படும் என்று அவர்கள் காட்டிய ஆசை வார்த்தையில் இன்னமும் மயங்கிக் காத்திருக்கிறான். நாங்கள் வாங்கிய வண்டி ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறது. அவனும் நாங்கள் கொடுத்து வந்த மாதம் ர் 1500-ஐயும் இழந்து நிற்கிறான்.

நான் இங்கு வந்த 1999-ம் ஆண்டு நவம்பரில் எந்நிலையில் மடிப்பாக்கம் தெருக்களின் குண்டுகள் குழிகளைக் கண்டேனோ அவை மாறவில்லை. விருத்தி அடைந்திருக்கின்றன. எட்டு வருடங்களில் அவை இனவிருத்தி செய்யாதா என்ன? ஜீவன்கள் தான் இன விருத்தி அடையும் என்பது இல்லை. போன தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் தன் வீட்டுக்கு முன் காங்கிரீட் ரோட் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த முறை தோற்றாலும் ஒரு சுற்றுப் பெருத்துத்தான் இருக்கிறார். ஒவ்வொருவரும் வெற்றி பெற எவ்வளவு லக்ஷங்கள் செலவழித்தார் என்பது அவரவர் யூகத்துக்கே விடப்படவேண்டும். ஒரு பைஸா சம்பளம் இல்லாத நாற்காலிக்கு லக்ஷம் லக்ஷமாக செலவழிப்பானேன் என்று கேட்பவர் நம்மூர் ஜனநாயகம் பற்றி அறியாதார்தான். இது மடிப்பாக்கம் மட்டும் தரும் காட்சியல்ல. சுற்றியுள்ள நங்கை நல்லூர், ஆதம்பாக்கம், என்று தொடங்கி தாம்பரம் வரை, பின், சென்னை நகரத்தில் மௌண்ட் ரோடு தவிர வேறு எங்கு இடப்புறம் வலப்புறம் சென்றாலும் காணும் காட்சி இது.

அறுபது எழுபது வருடங்களுக்கு முன் நம் நாடு ஏழை நாடாக இருந்தது. அந்நாட்களில் நான் நிலக்கோட்டையையும், உடையாளூரையும் அவற்றைச் சுற்றியிருந்த கிராமங்களையும் பார்த்திருக்கிறேன். அவை சுத்தமாக இருந்தன. எங்கும் குப்பை கொட்டிக்கிடக்கவில்லை. சாக்கடை அடைபட்டு தெருவில் வழிந்தோடவில்லை. ஏரிகள் குளங்களை யாரும் குப்பை, கழிவுகள் கொட்டி, ஆபாசப்படுத்தவில்லை.

நான் அடிக்கடி பிரயாணம் செல்ல வேண்டியிருக்கும் மௌண்டிலிருந்து மேடவாக்கம் செல்லும் மேடவாக்கம் நிருஞ்சாலை ஒரு GST சாலையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதில்லை. உண்மைதான். ஆனால் அதன் அகலம் மூன்றில் ஒரு பங்காகக் குறுகியுள்ளது. இரு பக்கக் கடைகளும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இடம் போக மிகுந்த குறுகிய பாதையில் தான் பலமடங்கு அதிகமாகியுள்ள இரு வழி கனவாகன போக்கு வரத்து நெரிசலில் வாகனங்களும், மனிதர்களும் அவதிப் படவேண்டியிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு இங்கு மாத்திரம் காணும் காட்சியல்ல. தமிழ் நாடெங்கும் காணும் காட்சி. இது ஒரு சமூக விரோத குற்றம் என்பது அரசுக்கும், காவல் துறைக்கும், எந்த அதிகாரத்திற்கும் தெரியவில்லை என்பது இன்றைய சோகம். இதற்குக் கட்சிகள் உடன்போகின்றன. காவல் துறை உடன்போகிறது. அரசு உடன்போகிறது. இந்தியாவில் எங்கும் நடக்கும் அராஜகம் தான் இது என்ற போதிலும், தமிழ் நாட்டில் இந்த அராஜகம் நடக்கும் உக்கிரத்தில், சகஜ பாவத்தில், பல்வேறு அதிகார மையங்களின் ஆதரவில், வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்திரா காந்தி சொன்னார். லஞ்சம் என்பது உலகளாவியது என்று. வாஸ்தவம். எனக்குத் தெரிந்து லஞ்சம் நிலவும் மற்ற நாடுகளில், லஞ்சம் ஒரு குற்றம் என்பது உணரப்படுவது. தண்டனைக்குரியது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தே இந்தியாவிலும் தம்மைப் பெருக்கிக் கொண்டுள்ளன. வாஸ்தவம். தில்லி அதற்கு விலக்கல்ல. ஆனால் நான் தில்லியில் இருந்த ஐம்பது வருடங்களில் எந்த மருத்துவ மையத்திலும் நான் லஞ்சம் கொடுத்து சிகித்சை பெற்றதில்லை. ஒரு மனு கொடுத்தால், ரேஷன் கார்டு என் வீடு வந்தடையும். வாக்காளர் அட்டைக்கு என் வீட்டுக்கு வந்து படிவங்களை நிரப்பிச் சென்ற பதினைந்தாம் நாள் என் வீட்டில் வாக்காளர் அட்டை கொடுக்கப்பட்டது. என் ப்ராவிடெண்ட் பணத்தைப் பெற நான் லஞ்சம் கொடுத்ததில்ல். என் பென்ஷன் ஆர்டர் வாங்க நான் லஞ்சம் கொடுத்ததில்லை.இவை எதற்கும் நான் காத்திருக்கவில்லை. நான் அலைக்கழிக்கப்பட்டதில்லை.

இங்கு வந்ததும், நான் ஒரு ரேஷன் கார்டுக்காக எவ்வளவு அலைக்கழிக்கப் பட்டேன் என்பது ஒரு வேதனையான அனுபவம். ஒரு சாதாரண கடை நிலை ஊழியரின் அலட்சிய மனோபாவத்துக்கும், அதிகார ஆசைகளுக்கும் இரையாகிக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு உதவியவர் பூமணி. அவர் சொல்லி கமிஷனரைப் பார்க்கச் சென்ற பின்னும் என்னை இரண்டு மணி நேரம் காக்க வைத்த கமிஷனர், திரும்ப நான் அவர் முன்னின்றபோது, ஒரு ஆளைக் கூப்பிட்டு, “இவருக்கு கார்டைக் கொடுத்தனுப்பு,” என்று சொல்ல, அந்த உதவியாள் அடுத்த இரண்டே இரண்டு நிமிடங்களில் ஒரு கட்டைப் பிரித்து எனக்குக் கார்டைக் கொடுத்தார். தயாராக கட்டி வைக்கப்பட்டிருந்த கார்டு என் கைக்கு வர மறுத்தது பல மாதங்களாக. உடனே பூமணியிடம் நான் நடந்த விஷயத்தைச் சொன்னேன். அவரோ, “ஆமாம், என் மூலம் காசில்லாம காரியத்தைச் சாதிச்சிக்கிட்டீங்க. எரிச்சல் படமாட்டாங்களா?” என்றார் சிரித்துக் கொண்டே. அந்த நாட்களில் ஒரு முறை அடையாறு லாட்டைஸ் ப்ரிட்ஜ் சாலையில் (இதற்கு மாறி மாறி மூன்று பெயர்கள் தரப்பட்டிருந்தன கடை போர்டுகளில்) இருந்த அவர் அலுவலகம் சென்றிருந்தேன். அந்தக் கட்டிடத்தில் விசாரித்துக்கொண்டே சென்றபோது, “அதோ அந்த ரூம் தான், போய்ப் பாருங்க” என்று இடத்தைக் காட்டி விட்டு “தானும் உருப்பட மாட்டான், நம்மளையும் உருப்பட விடமாட்டான்யா” என்று பூமணி புகழ் பாடிச் சென்றனர். அவர் காதில் விழுந்தாலும் கவலை இல்லை என்ற ஒரு சூழல் என்று நினைக்கிறேன். வாக்காளர் அடையாள அட்டை எனக்குக் கிடைக்க நான்கு மனுக்கள், ஐந்து வருடங்களாயின. இடையில் முதல் அமைச்சர் அலுவலக உயர் அதிகாரி தொலைபேசியில் காஞ்சி மாவட்டத் தலைவருக்கு இட்ட கட்டளையும் கூட பயனளிக்கவில்லை. லஞ்சம் உலகளாவியது தான்.

ஆனால் இங்கு மக்கள் தொடர்புள்ள எந்த அரசாங்க ஜன்னல் முன்னும் லஞ்சம் இல்லாது எந்த காரியமும் நடப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் என்ன ரேட் என்பது நிர்ணயிக்க்ப்பட்டுள்ளது போல் காரியங்கள் நடக்கின்றன. அவ்வப்போது என்ன ரேட் என்பது தான் மாறுகிறது. லஞ்சம் இல்லாது கிடைப்பது ஒன்று இருக்கிறது என்று தோன்றுகிறது. மறந்து விட்டேன். தபால் அலுவலகம் போனால், கார்டு கவர், ஸ்டாம்ப் எல்லாம் எந்த எம்.எல்.ஏ சிபாரிசும் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் இன்று வரை கிடைத்து வருகிறது. பாவம் தபால் ஊழியர்கள். வேறு எங்கு லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. தெரிந்ததைச் சொல்லி விட்டேன்.

இஸ்ரேல் ப்ரெசிடெண்ட் மீது அந்நாட்டு போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டி விசாரணை செய்கிறார். ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதம மந்திரி மீதும் கூட லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு பற்றிப் படித்திருக்கிறோம். இங்கு முதல்வரின் ஒரு உறவினர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி, “என்னை யாருன்னுடா நினைச்சிக்கிடே” என்று ஒரு காவல் அதிகாரியை கன்னத்தில் அறைகிறாள். கன்னத்தைத் தடவிக்கொண்டு முன் நின்ற அந்த காவலரிடம், இந்த இடங்களில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று அவருக்கு மேல் அதிகாரி அவருக்கு உபதேசம் செய்கிறார். காவல் துறைக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை இது. அவர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டிய இடங்கள் நிறையவே இருக்கின்றன தமிழ் நாட்டில்.

தமிழ் நாடு ஒரு தனி ரகம் தான். இங்கு லஞ்சம் என்றால் எங்கும் யாரும் முகம் சுளிப்பதில்லை. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான ஒரு நடைமுறை, யதார்த்தாமான் ஒன்றாகியுள்ளது. “ஆமாய்யா எவன்யா ஒழுங்கு இதிலே, சும்மா காரியத்தைப் பாத்துட்டுப் போவியா?..” என்ற பதில் நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை, வாழும் முறையைச் சொல்கிறது.

பெருந்தலைவர் காமராஜின் பிறந்த நாள் விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வருடமும். இதில் முன்னணியில் இருப்பவர்கள் இங்குள்ள வணிகர் சமூகம். சாலைகள் எங்கும் சுவரொட்டிகளும், பானர்களும் தான் எங்கும். பெரிய பெரிய வாழ்த்து வாசங்களின் கீழ் காணப்பட்ட பெயர்கள் அனைத்தும் நாடார் பேரவையின் பொறுப்பாளர்களின் பெயர்களின் அணிவகுப்பு. அனைவரும் நாடார்கள். அதெப்படி எல்லாரும் தூத்துக்குடி, விருது நகர் நாடார்களாக இங்கு குழுமியுள்ளார்கள்? தமிழ் நாட்டின் ஒரு எளிய, பெரிய தலைவர், நாடார்களின் பிரதிநிதியாகிவிட்டார். தமிழ் நாட்டில் தான் சாதிகளை ஒழித்தாயிற்றே. சாதிகள் ஒழிந்த இடத்தில், வந்து அமர்ந்துள்ளது ‘இனம், சமூகம், சமுதாயம்” போன்றவை. இதுவும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தமிழ் வாழ்க்கையில் காணும் ஒரு புதிய மாற்றம். வார்த்தைகளை மாற்றியே நாம் வாழ்க்கை மாற்றத்தைச் சாதித்து விடுகிறோம் என்று தோன்று கிறது. இதிலும் “இந்தியாவுக்கே வழ்காட்டி” தமிழ் நாடு தான் என்று நாம் சொல்லிக்கொள்ளலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம். அரை நூற்றாண்டுக்குப் பின் பிறந்த மண்ணில் எஞ்சிய நாட்களைக் கழிக்கலாம் என்று வந்தேன், பழைய நினைவுகளின் தாபத்தோடு. ஆனால் பிறந்த மண்ணில் என்னென்னவோ அல்லவா மண்டி வளர்ந்து கிடக்கிறது.

வெங்கட் சாமிநாதன்/6.8.08


Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்