சி. ஜெயபாரதன், கனடா
பரிதிக்கு நேரே வெப்ப வெள்ளத்தில் சுற்றி வரும் புதன்!
ரோமானியக் கடவுளின் தூதர் [Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப் பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் பிறை வெள்ளியை [Venus] முதலில் கண்ட இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, புதனும் அவ்வாறே பிறை வடிவில் இருப்பதைத் தொலை நோக்கியில் பார்த்து, இரண்டும் பரிதியைச் சுற்றி வருகின்றனவா என்று ஆராய்ந்தார். அதை உறுதிப் படுத்த புதன், வெள்ளி ஆகியவற்றின் பிறைகளைத் தொடர்ந்து பதிவு செய்து, பூமியின் நிலவைப் போல் பாதி நகர்ச்சியில் பிறை பெரிதாவதையும், அடுத்த பாதி நகர்ச்சியில் பிறை சிறிதாவதையும் கண்டு பிடித்து, புதன் வெள்ளி இரண்டும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று கூறிய, கிரேக்க ஞானிகள் அரிஸ்டாடில் [Aristotle] டாலமி [Ptolemy] ஆகியோரின் கொள்கை பிழையான தென்று எடுத்துக் காட்ட, காலிலியோவுக்கு வெள்ளி புதன் ஆகிய கோள்களின் பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் சான்றாய் அமைந்தன!
பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்த்தால், சூரிய உதயத்திற்கு ஒன்றை மணி நேரத்திற்குப் முன்பு எழுந்து, சூரிய மறைவுக்கு ஒன்றை மணி நேரத்திற்குப் பின்பு புதன் தெரியாமல் போகிறது. சுக்கிரனும் காலையில் அதுபோல் விடி வெள்ளியாகவும், மாலையில் அந்தி வெள்ளியாகவும் ஒளி வீசுகிறது! காலை நேரத்தில் பரிதிக்குக் கிழக்குக் கோடித் திசையில் [Greatest Eastern Elongation], அடுத்து மாலை நேரத்தில் மேற்குக் கோடித் திசையில் [Greatest Western Elongation] மட்டுமே புதனைக் காண முடியும். அதாவது, புதன் கோளைப் பூமியிலிருந்து 28 டிகிரி கோணத்தில் பரிதிக்கு இருபுறமும் காண முடியுமே தவிர, மற்ற வீதி நகர்ச்சியில் அது சூரியனின் பேரொளி வெள்ளத்தில் மூழ்கிப் போகிறது.
சுக்கிரனைப் [Venus] போல், புதனுக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. சூரிய மண்டலத்தில் மற்ற எல்லாக் கோள்களுக்கும் [பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ] ஒன்று அல்லது மேற்பட்ட துணைக் கோள்கள் உள்ளன! கரடு முரடான துளைகள் நிறைந்த கரும் பாறை களைப் புதன் கொண்டிருப்பதால், அது பரிதியின் ஒளியை எதிரொளிக்கும் திறம் [Albedo = 0.06] மிகவும் குறைந்தது. பூமியைப் போல் பாதுகாப்பு வாயு மண்டலம் எதுவும் புதனில் இல்லாததால், சூரியனின் உக்கிர வெப்பம் முழுவதும் அதன் வரண்ட குழிகளையும், உச்சி மலைகளையும் சுட்டுக் கரிய வைக்கிறது.
முதற்கோள் புதனின் தனிச்சிறப்பு அம்சங்கள்
உருவத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவைப் பெற்றது புதன். அதன் விட்டம் 3030 மைல். சந்திரனைப் போல் புதனும் கரடு முரடான குழிகள் [Craters] நிறைந்து, வாயு மண்டலம் எதுவும் இல்லாத ஏறக் குறைய சூன்யமான [Vacuum] சூழ்நிலையைக் கொண்டது. புதன் சுக்கிரனைப் [Venus] போல் மித மிஞ்சிய சூடான [480 டிகிரி C] கோளாக இல்லாவிட்டாலும், உஷ்ணம் அதிக அளவில் -180 டிகிரி C முதல் +430 டிகிரி C வரை ஏறி இறங்கி, கடும் வெப்பமும் குளிரும் ஊஞ்சல் ஆடும் ஒரு கோள். அதன் ஈர்ப்புச் சக்தி மிகவும் வலிமை அற்றது! பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு! அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும்!
சூரிய ஒளிமயத்தில் பரிதியை மிகவும் நெருங்கிச் சுற்றி வருவதால், புதனைத் தொலை நோக்கி மூலம் காண்பது, மிகவும் கடினம். பரிதிக்குச் சுமார் 28 மில்லியன் மைல் தூரத்தில் ஏறக் குறைய வட்ட வீதியில் [Circular Orbit] 88 நாட்களுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது. ஒப்பு நோக்கின்,
நாம் வாழும் பூமி பரிதிக்கு அப்பால் 93 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது! எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன்! வானலைத் தட்டு [Radar] மூலம் புதனின் கதிரலைகளை ஆராய்ந்ததில், அது தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றிக் கொள்வது அறியப் பட்டது. பூமிக்கும் பரிதிக்கும் இடையே சுற்றி வரும் சுக்கிரன், சந்திரனைப் போன்று, புதனும் அதனுடைய 88 நாள் பயணத்தில், சூரிய ஒளியில் பிறை வடிவைக் [Crescent Phases] காட்டி, பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் பெற்று வருகிறது
ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புதன் கோளத்தில் மிகவும் நலிந்த சூழக [Atmosphere] மண்டலமும், அதில் சோடியம், பொட்டாசியம் இருப்பதாக அறியப் பட்டது. அவற்றின் அணுக்கள் தரைப் பரப்பிலிருந்துதான் கிளம்பி யிருக்க வேண்டும்.
ஒரு நூற்றாண்டில் 15 தடவை புதன், பூமிக்கும் பரிதிக்கும் இடையே குறுக்கீடு [Transit] செய்கிறது. அப்பொது பூமி, புதன், பரிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும்! அச்சமயத்தில் புதன் கோள் ஒரு கரும் புள்ளியாக, பிரம்மாண்டமான பரிதியின் வட்ட முகத்தில் பொட்டு போல் தெரிகிறது. 1677 இல் முதல் புதன் குறுக்கீடு காணப் பட்டுப் பதிவாகி யுள்ளது. அதற்குப் பின்பு இதுவரை 44 புதன் குறுக்கீடுகள் தொடர்ந்து காணப் பட்டுப் பதிவாகி ஆராயப் பட்டுள்ளன.
அமெரிக்கா புதனுக்கு ஏவிய விண்வெளிக் கப்பல் மாரினர்-10
அமெரிக்கா 1973 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஏவிய, விண்வெளிக் கப்பல் மாரினர்-10 [Mariner-10] சுக்கிரனை [Venus] முதலில் ஆராய்ந்து படமெடுத்து, அடுத்து 1974 பிப்ரவரி 5 ஆம் தேதி புதன் கோளை நெருங்கி 197 மைல் அருகே பறந்தது. நாசா [NASA] சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, விண் கப்பலின் போக்கைக் கட்டுப் படுத்தி, புதனைக் குறிவைத்தது. அம்முயற்சி வெற்றி அடைந்து, ஆறு மாத இடைவெளிகளில் அடுத்து, அடுத்து மாரினர்-10 மூன்று முறைப் புதனைக் கடந்து, மீண்டும், மீண்டும் புதுப் புது விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது. மாரினர்-10 புதனின் தளப் பகுதிகளை முதன் முதல் படமெடுத்து அனுப்பவும், எதிர்பாராத வாறு ஒரு பெரும் காந்தக் களத்தைக் கண்டு பிடிக்கவும் ஏதுவானது.
புத மண்டலம் காந்த சக்தி கொண்டுள்ளதற்கு, அதன் உட்கருவில் இரும்பு உலோகம் இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. பூமியின் சந்திரனைப் போல் மேல் தளத்தில் பாறைக் குழிகள் நிரம்பி இருந்தாலும், புதன் தனித்துவம் பெற்றுச் சிறிதளவு காந்த சக்தி கொண்டுள்ளது. சந்திரனில் காந்த மண்டலமும் இல்லை! இரும்புள்ள உட்கருவும் இல்லை! புதன் தளத்தில் கோபுரம் போன்ற செங்குத்தான மலைகள், தாழ்ந்த பள்ளங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் பூமியின் சந்திரனில் புதனைப் போல் செங்குத்தான மலைகள் இல்லை. புதன் கோளில் வாயு அழுத்தம் இல்லை! பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது! நீரில்லை! புதனும் பூமியின் நிலவைப் போலவே எந்த வித உயிரினமும் வாழ வழி இல்லாத ஓர் செத்த அண்டமே [Dead Planet]!
செவ்வாய், சுக்கிரன் கோள்களைப் போல், புதனும் கடும் வெப்பம், குளிர்ச் சூழ்நிலை கொண்டு யாரையும் வரவேற்காத வரண்ட பாறை நிலமே! வாயு மண்டலத்தில் இம்மி யளவு ஆர்கான் [Argon], நியான் [Neon], ஹீலியம் [Helium] மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது! அப்பாறை நிலம் எங்கும் விண்கற்கள் விழுந்து விழுந்து பெருங் குழிகள் ஏற்பட்டுள்ளதை மாரினர்-10 எடுத்துக் காட்டியது.
மாரினர்-10 ஆய்வுச்சிமிழ் புதனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தியில் நூற்றில் ஒரு பங்களவு இருப்பதாகக் கண்டது. புதன் பரிதியை இருமுறைச் சுற்றிவரும் காலத்திற்குள் [88 நாட்கள்], அது தன்னைத் தானே தன்னச்சில் மூன்று முறைச் சுழல்கிறது.
1991 இல் பூமியிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த வானலைத் தொலைநோக்கி [Radio Telescope] மூலம் பார்த்ததில் புதன் கோளின் துருவக் களங்களில் பனிக்கட்டி அடுக்குகள் மேவி இருப்பதைக் காட்டியது. ஆனால் அந்தப் பகுதிகளில் மாரினர்-10 ஆய்வுச்சிமிழ், 1974 இல் பயணம் செய்ய முடியவில்லை! பூமியின் வட துருவத்திற்கு மேல் உயரத்திலிருந்து பார்த்தால், சூரிய குடும்பத்தில் புளுடோவைத் தவிர, மற்ற எல்லாக் கோள்களும் [புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] ஏறக் குறைய ஒரே மட்ட வீதிகளில் எதிர்க்-கடிகார [Counter-Clockwise] நகர்ச்சியில் சூரியனைச் சீராய்ச் சுற்றி வருகின்றன. கடவுளின் மகத்தான படைப்புக்கு, பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் ஒழுங்கு இயக்க நியதி ஓர் அரிய எடுத்துக் காட்டு!
1973 இல் வெள்ளி, புதன் இரண்டு கோள்களை ஒரே பயணத்தில் ஆய்வு செய்த மாரினர்-10 இன் பொறி நுணுக்கப் போக்கைப் பயன்படுத்தி, நாசா [NASA] விஞ்ஞானிகள் அடுத்து ஒரே விண்வெளிப் பயணத்தில், பரிதியின் புற வெளியில் சுற்றி வரும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை ஆராயும் திறமுடைய வாயேஜர்-2 [Voyager-2] ஆய்வுச்சிமிழைத் தயாரித்து 1977 ஆகஸ்டு 20 இல் அனுப்பி வெற்றி பெற்றது, ஒரு மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் சாதனை!
சூரிய குடும்பத்திலே மிகச் சிறிய புறக்கோள் புளுடோ!
இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த இரண்டு புறக்கோள்களில் [Outer Planets] ஒன்று, புளுடோ. மற்றொன்று அதைச் சுற்றி வரும் அதன் துணைக் கோள், சாரன். இரண்டும் விண்வெளியில் வெகு தூரத்தில் மிகவும் மங்கிப்போய் தெரியும் கோள்கள். சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளுடோவை, அமெரிக்க வானியல் விஞ்ஞானி, கிளைடு டாம்பாக் [Clyde Tombaugh] 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். ரோமானியக் ‘கீழுலகக் கடவுள் ‘ [God of the Underworld] புளுடோவின் பெயரால், புதுக் கோள் பெயரிடப் பட்டது.
நெப்டியூன் கண்டு பிடிக்கப் பட்டதுபோல், புளுடோவும் வானியல் கணித முறைப்படி ஊகித்துக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு கோள்! நெப்டியூன் சுற்றி வரும் வீதி, எதிர்பார்த்த பாதை போல் இல்லாமல் புதிராக இருந்தது! இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [1905-1916] அமெரிக்க வானியல் விஞ்ஞானிகள், பெர்ஸிவல் லோவெல் [Percival Lowell], வில்லியம் பிக்கரிங் [Wiiliam Pickering] இருவரும், ஒளிந்து கொண்டுள்ள ஏதோ ஒரு புறக்கோள் பாதைத் திரிபு [Straying from the Path] செய்து வருகிறது, என்று உறுதியாக நம்பினார்கள்! அந்த நம்பிக்கையில் ஜமெய்கா மண்டவில் நோக்ககத்தில் [Observatory Mandeville, Jamaica] பிக்கரிங், புதுக் கோள் இருப்பிடத்தைக் கணித்துக், குறிப்பிட்ட விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தேடினார். அதே போல் லோவெல், பிளாக்ஸ்டாஃப், அரிஸோனா நோக்ககத்தில் [Observatory Flagstaff, Arizona] முயன்றார். பல வருடங்கள் தேடியும், இரண்டு விஞ்ஞானிகளும் புதுக்கோளைக் கண்டு பிடிக்க முடியவில்லை!
இருவரும் காலஞ் சென்றபின், 1930 இல் அவரது கணிதக் குறிப்புக்களைப் பயன்படுத்தி ஓரிளைய வானியல் விஞ்ஞானி கிளைடு டாம்பாக் [Clyde Tombaugh], தனது புதிய தொலை நோக்கி மூலம், பல இரவுகள் தொடர்ந்து வானத்தை வேட்டையாடிக் களைத்துக் கடைசியில் [Feb 18] புதிர்க் கோளைக் கண்டு பிடித்தார். ஆனால் சில நாட்கள் பொறுத்து லோவெல் பிறந்த நாளன்று, 1930 மார்ச் 13 இல் புதுக்கோள் புளுடோ கண்டு பிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.
புளுடோவின் துணைக்கோள் சாரன் [Charon] 1977 இல் கண்டு பிடிக்கப் பட்டது. புளுடோவை 12,000 மைல் தூரத்தில் சுற்றி வருகிறது சாரன். மங்கலான புளுடோவின் விட்டத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினம்! 1994 இல் பூமியின் வட்ட வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope] புளுடோ [1440 மைல்], சாரன் [790 மைல்] இரண்டு கோள்களின் விட்டங்களை மிகவும் துள்ளியமாக கணக்கிட உதவியது. ஒப்பு நோக்கினால், பூமியின் நிலவு 2100 மைல் விட்டம் கொண்டது.
பரிதிலிருந்து 3.7 பில்லியன் மைல் தூரத்தில் சூரிய குடும்பத்தின் புறவெளிக் கோளாக யுரேனஸ், நெப்டியூன் இரண்டுக்கும் அப்பால், புளுடோ சுமார் 248 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது. புதுக்கோள் புளுடோ பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட வீதி மட்டம் [Elongated Elliptical Orbital Plane], மற்ற சூரியக் கோள்கள் சுற்றும் நீள்வட்ட வீதி மட்டத்திற்கு 17 டிகிரி சாய்ந்துள்ளது, ஒரு சிறப்பான வேறுபாடு! நீண்ட நீள்வட்டத்தில் சுற்றும் புளுடோ ஒரே ஒரு கோள்தான் பரிதிக்கருகில் வரும் போது, நெப்டியூன் வீதியைக் குறுக்கிட்டு [Transit], நெப்டியூனுக்கும் முன்னே புகுந்து, பரிதியை மிகவும்
நெருங்குகிறது! 1989 இல் புளுடோ அவ்வாறு நீண்ட நீள்வட்டத்தில் பவனி வந்து குறுக்கீடு செய்து, பரிதியைச் சிறு ஆரத்தில் [Perihelion] மிகவும் நெருங்கியது. பிறகு 124 ஆண்டுகள் [248/2=124] கழித்து 2113 இல் புளுடோ பரிதிக்கு உச்ச தூரத்தில், [நீள் ஆரத்தில் Aphelion] பயணம் செய்து திரும்பி, அடுத்து 124 ஆண்கள் தாண்டி கி.பி 2237 இல் மீண்டும் பரிதிக்கு அருகே வரும்!
ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புளுடோவில் எந்த வித வாயும் இருப்பதாக அறிய முடிய வில்லை. புளுடோவின் வாயு அழுத்தம் மிக மிக பலவீன மானது. காரணம், புளுடோ மண்டலத்தின் கடும் குளிரில் [-230 டிகிரி C] ஹைடிரஜன், ஹீலியம் தவிர மற்ற எல்லா வாயுக்களும் திரமாகும்; அல்லது தணிவு [Liquefied or Frozen] நிலை பெறும்! புளுடோ வலுவற்ற ஈர்ப்பு சக்தி கொண்டுள்ளதால், தணிவாகாத வாயுக்கள் விண்வெளியில் பறந்து போய்விடும்! புளுடோ ஒரு காலத்தில் நெப்டியூன் கோளுக்குச் சந்திரனாய் இருந்து, ஓடுகாலித் துணைக் கோளாய்த் [Runaway Satellite] தன்னை விடுவித்துக் கொண்டு பின்னல் பிரிந்திருக்கக் கூடும், என்று எண்ணப் படுகிறது!
*************************
- அக்கரை பச்சை
- பருவகால கவிதைகள்
- ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?
- திண்ணை அட்டவணை, சூலை, 22
- புதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்
- கவிதை
- ஹாரி போட்டரும் பனிமனிதனும்
- ரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்
- லூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்
- கவிதைப் பெண்ணின் கரு
- அறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)
- சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்
- யார் இங்கே ?
- வெள்ளித் துளிகள்
- ஆஞ்சனேயர்..
- இழப்பு
- கடவுள் பற்றி 3 கவிதைகள்
- சின்னச் சின்னதாய்…
- கல்லாகும் நீர்
- தென்றல்
- குறும்பா 3
- சரவணன் கட்டுரை பற்றி
- இந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )
- அனுபவித்தல் (Experiencing)
- அம்பானியின் கண்கள்
- அம்பானியும் தலித்துகளும்
- மதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி
- நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி