வ.ந.கிரிதரன் –
1.
மாதவனின் மனதில் அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும், மனைவி வசுந்தராவுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஊடல் நாளுக்குநாள் குறைவதற்குப் பதில் அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான ஊடலிது. ஊடலுக்குப் பின் கூடுவதிலுள்ள இன்பம் பற்றிப் பல சங்கக் கவிதைகள் விபரித்துள்ளன. ஆனால் கூடலே ஊடலுக்கான காரணம் பற்றி ஏதாவது சங்கப் பாடல் உள்ளதா?
இத்தனைக்கும் வசுந்தரா அவனது தாலி கட்டிய மனைவி. அவனைத் துரத்தித் துரத்தி ஒற்றைக்காலில் நின்று காதலித்து மணம் முடித்த துணைவி.
அவன் சலிப்புற்றிருக்கும் நேரங்களீலெல்லாம தன் பார்வையால், சொல்லால், மயக்கும் கண்களால், புன்னைகையால், அரவணைப்பால் அவன் சலிப்பைப் போக்கும் கலையில் வல்லவள். அவளா இப்படி மாறிப் போனாள் என்று சிந்தனையிலாழ்ந்தான் மாதவன். திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளேன் இவ்விதம் மாறி விட்டாளென்பது அவனுக்குப் புரியாத புதிராகவிருந்தது. அவனது மனதில் அண்மைக் காலத்துச் சம்பவங்களின் தொகுப்பொன்று ஓடி மறைந்தது.
எப்பொழுதுமே கலகலப்பாகவிருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அண்மைக்காலமாகவே ஒரு சிறு மாற்றம். அடிக்கடி தன்பாட்டில் சிந்தனையில் ஆழ்ந்து போய் விடுவாள். அவனுக்கு அது ஒரு வித ஆச்சரியத்தையே தந்தது.
“என்ன வசந்தி! உமக்கேதாவது பிரச்சினையா? கொஞ்சக் காலமாகவே நானும்தான் பார்க்கிறன் .. நீர் ந்ல்லாத்தான் மாறிப் போட்டீர்.. என்ன பிரச்சினையென்றாலும் என்னட்டை மனதைத் திறந்து சொல்லலாம்தானே”
அதற்கு அவள் ஒன்றுமே பதில் கூறாமல் மெளனமாகவிருந்தாள். அவன்தான் மீண்டும் கேட்டான்: “என்ன வசந்தி. நான் பேசுறது காதிலை விழுகுதா?”
அதற்கும் அவள் பதிலெதனையும் கூறாமல் மெளனமே சாதித்தாள். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த யோசனை வந்தது. அவன் சலிப்பாகவிருக்கும் சமயங்களிலெல்லாம் அவள் எத்தகைய தந்திரங்களைச் செய்து அவனை மாற்றிவிடுவாளோ, அதே மாதிரியான தந்திரங்களை வைத்து அவளையும் மாற்றிவிடவேண்டுமென்று அவன் முடிவு செய்தது அப்பொழுதுதான். கூடலில் இருக்கும் இன்பமே தனி. கூடலுக்கு மயங்காத உயிரினம்தானேது.
மெதுவாக வசுந்தராவின் பின்புறமாகச் சென்றவன் அவளை அப்படியே தன் மார்புடன் வாரித்தழுவ முயன்றான். அடுத்து நடந்த நிகழ்வுகள் அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கூடவே தந்தன. அவன் அவ்விதம் பின்புறமாக வந்து அணைப்பதை எதிர்பார்க்காத வசுந்தரா அன்னியனொருவன் அணைக்க வந்தால் எவ்விதம் எதிர்த்துப் போராடுவாளோ அவ்விதமே அவனைத் தன் பலமனைத்தையும் ஒன்றாக்கிப் பிடித்துத் தள்ளி, அவன் அனைப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.
மாதவன் ஒரு கணம் அதிர்ந்தே போனான். அக்கணத்தில் அவள் தன்னையொரு வேற்று மனிதனாகவேக் கருதி நடந்து கொண்டதாக உணர்ந்தான்.
அதுவே அவனது அதிர்ச்சியின் காரணம். ‘இவளுக்கென்ன நடந்து போச்சுது. ஒரு வ்ருசமாய்க் குழந்தை, குட்டியென்று ஒன்றும்
கிடைக்காமலிருக்கிறதாலை ஏதாவது விரக்தி, கிரக்தி அல்லது மன அழுத்தமென்று ஏதாவது மன வியாதி இவளைப் பிடித்தாட்டுகிறதோ?.’ அதே சமயம் தன்னை அவள் அவ்விதம் அன்னியனைப் போல் தள்ளியதாலேற்பட்ட ஒருவித சோகம் அவனைப் பிடித்து வாட்டத் தொடங்கியது. அந்த வாட்டத்திற்குரிய சோகமும், அவளது நடத்தையால் ஏற்பட்ட அதிர்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்கவே, அவன் அவளத் தன் அணைப்பினிலிருந்து விலக்கினான். தன்னை உயிருக்கு உயிராய் காதலித்து மணந்த துணைவி அவள். அவள் இப்பொழுது தன்னை அன்னியன் ஒருவனைப் போல் நடத்துகின்றாளே. அந்தப் புறக்கணிப்பு அவனுக்கு ஒருவித வேதனையைத் தந்தது.
அத்துடன் ‘ ஐ ஆம் சொறி’ என்றான்.
இவ்விதம் தான் கூறியதும் ,அவளேதாவது மன்னிப்பு கேட்பாளென்று எண்ணிய மாதவனுக்கு , அவள் அப்படியெதுவும் கேட்காமல், தவறு செய்தது அவன்தான் என்பது போலவும், அவனது மன்னிப்பு போதுமானதல்ல என்பது போலவுமொரு நிலையில் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றது மேலும் அதிர்ச்சியையே தந்தது. அவளாகவே திரும்பி வந்தால் மட்டுமே இனி கதைப்பது என்று விரைவாகவே தீர்மானித்துக் கொண்டான். இப்பொழுது அவனை வசுந்தராவின் திடீர் மனமாற்றத்திற்கான காரணங்கள் என்னவாகவிருக்கும் என்பதுபற்றிய எண்ணங்களே ஆக்கிரமிக்கத் தொடங்கின.
2.
வசுந்தரா வேலையிலிருந்து வரும்போது மணி மாலை ஏழை நெருங்கி விடும். அவர்கள் வசிப்பது ஸ்கார்பரோவில். அவள் வேலை பார்க்கும் வங்கி இருப்பது டொராண்டோ நகரின் மேற்குப் புறத்தின் எல்லையில் ரோயல் யோர்க் வீதியும், புளோர் வீதியும் சந்திக்கும் இடத்திற்கண்மையில். வேலை முடிந்து பாதாள் இரயிலேறி , ‘ரபிட் ட்ரான்சிட்’, பஸ்களென மாறி மாறி ஏறி இறங்கி வரவேண்டும். இந்த விடயத்தில் அவன் கொடுத்து வைத்தவன்.
அவன் தகவல் தொழில் நுட்ப நிபுணனாக, ஒப்பந்த அடிப்படையில், அத்துறையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்களினூடு சுய தொழில் செய்து கொண்டிருந்தான். அடிக்கடி பணி புரியும் நிறுவனங்கள் மாறிக் கொண்டிருந்தாலும், அதனைத்தான் அவனும் விரும்பினான், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் அதிக அளவில் தொழில் நுட்ப அனுபவங்களைப் பெறக் கூடியதாகவிருந்தது. அனுபவங்களுக்கேற்ப ஒவ்வொரு முறையும் ஊதியத்தையும் அவனால் அதிகரிக்க முடிந்தது. ‘வெப் சேர்வர்’ நிர்வகிப்பதில், அதற்குரிய ‘அப்ளிகேசன்களை’ நிறுவுதற்குரிய ‘சேர்வர்’களை உருவாக்கி, ‘அப்ளிகேசன்களை’ நிறுவுவது .. இவைதான் அவனது முக்கியமான தொழில். மைக்ரோசாவ்ட்டை மையமாகக் கொண்டு அந்நிறுவனத்தால் உருவாக்கப்படும் மென்பொருள்களைப் பாவித்து மேற்படி சேவைகளை ஆரம்பத்தில் வழங்கியவன் ஒப்பந்த அடிப்படையில் மேலும் பல நிறுவனங்களில் பணி புரிந்ததன்வாயிலாக இன்று லினிக்ஸ்/பிஎச்பி/மை எஸ்குயூஎல், ஐபிஎம் எ.ஐ.எக்ஸ் யுனிக்ஸ்/ வெப் ஸ்பெயர் அப்ளிகேஷன் சேர்வர் எனத் தன் அறிவாற்றலையும், அனுபவத்தையும் வளர்த்தெடுத்திருந்தான். இணையமும் அது பற்றிய பல்வேறு தொழில் நுட்பங்களும் அவனை மிகவும் கவர்ந்தவை. இதனால் அவன் தன் பணியினை மிகவும் இரசித்து, விரும்பி, ஆற்றினான். தற்போது அவன் பணி புரியும் நிறுவனம் அவர்களது
இருப்பிடத்திற்கண்மையில்தானிருந்தது. இதனால் நேரத்துடனேயே அவன் வீடு திரும்பிவிடுவான்.
அன்றும் அவ்விதமே திரும்பியவன் வீட்டின் பின் வளவில் பிளாஸ்டிக் கதிரையொன்றைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டமர்ந்தபடியே
சிந்தனையிலாழ்ந்தபோது மாலை மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. அவனது சிந்தனை முழுவதையும் வசுந்தராவே ஆக்கிரமித்திருந்தாள். இந்தப் பிரச்சினைக்கொரு முடிவு கட்டினால் நல்லதென்று பட்டது. இவ்விதமே இருவரும் அண்மைய மாற்றங்களுக்கென்ன காரணமென்பது தெரியாமல் , ஒருவிதமான ஒட்டாத வாழ்க்கை வாழ்வதிலும், ஆற அமர யோசித்து, பிரச்சினைகளைப் பற்றி மனந்திறந்து கதைப்பதன் மூலம்தான் தற்போது நிலவும் இறுக்கமான சூழலுக்கொரு தீர்விருக்க முடியுமென்று பட்டது. அவ்விதம் நினைத்ததுமே மனதிலொரு ஆறுதலேற்பட்டது. அது வரையில் வசுந்தரா பற்றிய எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தவனின் கவனம் அதன்பின்பே சுற்றியிருந்த அந்திச் சூழலின்மேல் திரும்பியது.
சிவந்திருந்த அந்தி வான் எப்பொழுதுமே அவனைக் கவருமொரு நிகழ்வு. பொதுவாக விரிந்திருக்கும் நீலவான், சுடர் கொழிக்கும் இரவு வான், முகில் மூடி அவ்வப்போது உறுமும் கார்காலத்துக் கருவான்.. இவ்விதம் விரிந்திருக்கும் வானின் பல்வேறு வடிவங்களும், நிகழ்வுகளும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. இயற்கையை எவ்வளவு இரசித்தாலும் அலுப்பதில்லை. இயற்கையின், படைப்பின் நேர்த்தி மிக்க அழகு எப்போழுதுமே அவனது தாகமெடுத்தலையும் சிந்தனையைத் தூண்டிவிடும் வல்லமை மிக்கது. அவனது பால்யகாலத்தில் காடுமேடென்று அலைந்து திரிவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. அதிலும் கொட்டும் மழை அவனை மிகவும் கவர்ந்ததொரு இயற்கை நிகழ்வு. இரவு முழுக்க , ஓட்டுக் கூரை சடசடக்கக் கொட்டும் மழையையும், கூடவே அருகிலிருக்கும் வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக் கச்சேரிகளையும் கேட்பதைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்றுமுண்டோ?
இவ்விதமே அன்றும் அந்தியின் அழகில் மெய்மறந்திருந்த அவனைக் கண்டதும் படையெடுக்கும் மாடப்புறாக்கள் சில தற்பொழுதும் அவனைக் கண்டதும் அருகில் வந்தமர்ந்தபடி அகப்பட்டடதைக் கொறிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் அவன் புறாக்களைக் கண்டதும் அவற்றுக்குப் பாணைச் சிறு சிறு துண்டுகளாக்கிப் போடுவான். அதன் விளைவாக ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அந்தப் பட்சிகளுக்கும் அவனுக்குமிடையில் ஒருவிதமான உறவும் , பிணைப்பும் ஏற்பட்டிருந்தன. அவற்றின் விளைவாக அந்தப் புறாக்கள் அவன்மேல் எந்தவிதமான ஐயமும், அச்சமும் கொள்வதில்லை. அவனை தங்களது நம்பிக்கைக்குரியதொரு உயிரினமாக அவை கருதின போலும். மாதவன் வீட்டினுள் சென்று கிடந்த பாணொன்றை எடுத்துக்கொண்டு வந்து சிறு சிறு துண்டுகளாக்கி புறாக்களை நோக்கி வீசினான். அவையும் மிகவும் உற்சாகத்துடன் தீனியைத் தேடிக் கொறிக்க
ஆரம்பித்தன.
அவனது கவனம் அவற்றின்பால் திரும்பியது. ஆரம்பத்தில் சாதாரணமாகக் கவனிக்க ஆரம்பித்தவனின் கவனத்தை அவற்றின் நடத்தை மிகவும் கவர்ந்து விடவே மனமொன்றிக் கவனிக்க ஆரம்பித்தான். அத்துடன் உள்ளே சென்று மேலுமொரு பாணொன்றைப் பிய்த்தெடுத்துவந்து சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றிற்கிட்டான்.
ஆரம்பத்தில் உண்பதில் கவனத்தைப் பதித்திருந்த ஆண் புறாவொன்றின் கவனம் , அதன் வயிற்றுப் பசி ஓரளவுக்குத் தணிந்ததும், வேறு திசையில் ப்யணிக்க ஆரம்பித்தது. அவற்றிலிருந்த ஆண் புறாவின் அங்க சேட்டைகள் மாதவனுக்கு ஒருவித சிரிப்பையும், இன்பத்தையும் முடிவில் ஆச்சரியத்தையும் தந்தன. தனது வாலைச் சிறிது விரித்து, தரையுடன் தேய்த்தபடி, கழுத்துப்புறத்துச் சிறகுகளைச் சிலிர்த்தபடி, கழுத்தை மேலும் கீழுமாக விரைவாக மேலும் கீழும் அசைத்தபடி அந்த ஆண் புறா அருகில் உண்பதில் கவனமாயிருந்த பெண் புறாவின் கவனத்தைக் கவர முயன்றது. துணையுடன் கூடுவதற்காக அது செய்த தந்திரமும், அதன் ஒரு விதமான நடன அசைவும் அவனை மேலும் கவரவே அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாதவன். ஒவ்வொரு முறையும் ஆண் புறாவின் முயற்சியினை அந்தப் பெண் புறா கவனித்ததாகத் தெரியவில்லை. அலட்சியம் செய்தபடியே தன் பாட்டில் விலகி, விலகிச் சென்றபடியே தன் கவனத்தை ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவுத் துணிக்கைகளைத் தேடி உண்பதில் கவனமாகவிருந்தது. அவனுக்கு அந்த ஆண் புறாவின் மேல் ஒருவித பரிவு கலந்த உணர்வு ஏற்பட்டது. அதே அதன் முயற்சிகளை அலட்சியம் செய்து
கொண்டிருந்த அந்தப் பெண் புறாவின்மேல் சிறிது ஆத்திரமாகக் கூட வந்தது. ‘என்ன பெண்ணிது… கொஞ்சம் கூடத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியாமல்… சரியான அகங்காரம் பிடித்த பெண்ணாகவிருக்க வேண்டும்’ இவ்விதம் தனக்குள்ளாகவே அவன் கூறிக்கொள்ளவும் செய்தான்.
ஆனால் அந்த ஆண் புறா தனது பெண் துணையின் புறக்கணிப்பைப் பற்றியும் சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை. விடாமல் , சலிக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டேயிருந்தது. அப்பொழுது அவனுக்கு அவனது பால்ய காலத்து நினைவொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது அம்மா எப்பொழுதுமே வீட்டில் கோழி வளர்க்கத் தவறியதேயில்லை. அப்பொழுதெல்லாம் முற்றத்தில் அடிக்கடி பெட்டைக் கோழிகளைத் துரத்தித் துரத்தித் தம் ஆண்மையினை அகங்காரத்துடன், பலவந்தமாக வெளிப்படுத்தும் சேவல்களின் ஞாபகம் இச்சமயத்தில் தோன்றியது. அவை இந்தப் புறாக்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமானவையென்று சடுதியாக பொறியாக அவன் சிந்தையில் எண்ணமொன்று ஓடி மறைந்தது. குறைந்தது பத்து தடவைகளாவது அந்த ஆண் புறா அந்தப் பெண் புறாவினைக் கவருவதற்குத் தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்திருக்கும். ஆனால் ஒருமுறை கூட தன் துணையின் அலட்சிய நடத்தைக்காக அது ஆத்திரமுற்று, சேவலைப் போல் துரத்திப் பலவந்தமாகத் தன் வேட்கையினைத் தணிக்க முயற்சி செய்யவேயில்லை என்ற விடயம் அப்பொழுதுதான் அவனது கவனத்தில் உறைத்தது. அந்த ஆண் புறாவின் மேல் மிகுந்த மதிப்பும், பெருமிதமுமேற்பட்டன.
இந்தப் பெண் புறா ஏன் தன் ஆண் கூடுவதற்கு முயன்றும் அலட்சியம் காட்டுகின்றது. எவ்வளவோ காரணங்களிருக்கக் கூடும். அதன் உளவியல், உடலியல் ரீதியிலான எத்தனையோ காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக, அதன் அலட்சியத்திற்காக அந்த ஆண் புறா தன் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளவில்லையே. எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அந்தக் கலகலப்பு காணாமல் போனதென்றால் அதற்கேதாவது உளவியல், அல்லது உடலியல்ரீதியிலான காரணங்கள் இருக்கக் கூடும். அவற்றைக் கண்டறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு அவன் எப்பொழுதுதாவது முயன்றதுண்டா? அதனைவிட்டுவிட்டு, அவளுடன் பலவந்தமாகக் கூடுவதற்கு முய்னற தன் செய்கையையும், கூடுவதற்குக் கூட கண்ணியத்தைக் கடைப்பிடித்த, துணையின் மனநிலையினைக் கவனத்திலெடுத்து அதனை வற்புறுத்தாத அந்த ஆண் புறாவின் நடத்தையையும் ஒரு முறை மனது ஒப்பிட்டுப் பார்த்தது. வெட்கித்துப் போனான்.
( யாவும் கற்பனை )
மின்னஞ்சல்: ngiri2704@rogers.com
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- நீலத்தில் மனம் தோயும்போது…
- தனித்தில்லை
- மானுட பிம்பங்கள்
- அகோரி
- சாத்தான் படலம் !
- மலைகள்
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- சிரிக்கும் தருணங்கள் ….!
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- முள்பாதை 42
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- சிறகும், உறவும்!
- நட்பு
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- நானை கொலை செய்த மரணம்
- மூன்றாமவன்
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)