சாமிக்குத்தம்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

வந்தியத்தேவன்


நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல ?
அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு
ஒண்ணாத்தானே கூவினோம் ?
விசனப்பட்டாள் மனைவி

மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட
சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே
மூணு மாசதுக்கப்புறமும் போவ முடியலியே
ஆத்தா கோவம் ஆவாதுங்க

அண்ணாநகரில் புது அபார்ட்மெண்ட்
ஆயிரம் சித்தாட்களில் ஆறுமுவம் ஒருவன்
ஆத்தா கடன் தீர்க்க தேவையென்னவோ
அரைநாளு விடுப்புத்தான்

என்னா கலீக்டருன்னு நினப்பா ?
ஒப்பந்த மேஸ்திரி
ஸ்டாலினாய் கொக்கரித்தான்

நாள் கூலியில்தான் காயும்
வீட்டின் உலை
இல்லாவிடில் வயிறு

இன்னைக்கு முடிச்சிடுதேன சொன்னாலும்
குழப்ப முடிச்சில் ஆறுமுவம்
குஷியில் மனையாள்

கூரைத்தள வேயும் நாள்
கூவி சேவலழலைக்கு முன்னே
கூலி சேவகம் செய்ய ஆறுமுவம்

கலவையெந்திரம் அவனின் கவலை அறியவில்லை
காலம் கரைந்தது
பாக்கெட்டில் பத்துரூவாய்
காரணத்துடன் கனத்தது

ஆத்தாவைவிட பயமுறுத்தினாள் மனைவி
களைப்புடன் ஊர்ந்தான்
வேல் நிறுத்திய தெருக்கோயில்
அருகே பரிச்சயமான பிச்சைக்காரன்

எட்டுமாதமாய் எட்டிப்போன பாதைதான்
தானத்தைப் பசி தோற்கடிக்கும் அவலம்
பொட்டிலடிபட்டதுபோல் சிலிர்த்தான் ஆறுமுவம்

வெத்திலப்பாக்கு மடிப்பிலிருந்து
விபூதி குங்குமம் பூசி
கடனடைத்த பெருமையில் பெண்டாட்டி

சக்கரக்கட்டை பிச்சைக்காரன் மட்டும்
பத்து ரூபாயை பார்த்து இன்னும் குழம்பியபடி

t_sambandam@yahoo.com
http://vanthiyathevan.blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்