சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

நட் ஹாம்சன் (நோர்வே) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


நான் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது. தலையில் அல்கஹால் பூசியிருந்தேன். அந்த வாசனைக்குதான் அதற்கு அப்படியொரு கிறுகிறுப்பு. கையைவீசி, போ அந்தாண்ட, என அதை விரட்டி… எதையும் அது சட்டை பண்ணவில்லை. அப்புறம்தான் காகிதம் வெட்டும் கத்திரிக்கோலைக் கையில் எடுக்க முடிவுசெய்தேன் நான்.

நல்ல பெரிய, அருமையான கத்திரிக்கோல். இன்ன உபயோகம்னில்லை, எனது புகைக்குழாயைக் குடைந்து சுத்தம்செய்ய, நெருப்பைச் சீண்டிவிட என்று கண்டபடி அதை நான் பயன்படுத்துகிறேன். சுவரில் ஆணியடிக்கக்கூட அதால் மண்டையில் நச்சென்று போடுகிறேன். பேணிப் புழங்கிய என் கைலாவகத்தில் பயங்கரமான ஆயுதம் அது. அதைக் காற்றில் விஷ் விஷ் என வீசினேன். ஈ பறந்து வெளியே போய்விட்டது.

ஆனால் கொஞ்சநேரத்திலேயே அது திரும்பவந்து, கொட்டமடிக்க ஆரம்பித்துவிட்டது. ச். என்ன இடைஞ்சல் இது. நான் எழுந்து, மேசையை ஜன்னல்பக்கம் நகர்த்… அதுவும் கூடவே வந்தது. அட இழவே, இரு உன்னை வெச்சிக்கறேன்… பேசாமல்போய் என் தலையின் அல்கஹாலை அலசிக் கழுவிக்கொண்டு வந்தேன். ஈ ஏமாந்திருக்க வேண்டும். வெட்கப்பட்டு முகம்தொங்க என் விளக்குத்தொப்பியில் போய் கப்சிப் என்று அமர்ந்துகொண்டது. அதனிடம் அசைவில்லை.

கொஞ்சநேரம் இப்படியே ஓடியது. அது தேமே என இருந்தது. நான் என் வேலையைப் பார்த்தேன். வேலை சுறுசுறுப்பாக ஓடியது. ஆனால் வேலைப்போக்கில் நான் தலைநிமிரும் போதெல்லாம் அது அப்படியே அங்கேயே, பிடிச்சிவெச்ச பிள்ளையாராட்டம் அடங்கிக் கிடப்பதைப் பார்க்கவே அலுப்பாய் இருந்தது எனக்கு. அதை உற்றுப் பார்த்தேன். சாதாரண சின்ன ஈ. முழுசாய் வளர்ந்த ஈதான். சாம்பல் இறகுகள். ”கொஞ்சமாச்சும் அசங்கப்டாதா?” என்றேன் நான். அது அசையவில்லை. கைகாலைக் கூட அசக்கவில்லை. ”வெளிய போ… அதான் உன் உலகம்.” அதைப்பார்த்து கையை வீசினேன். சட்டென எழும்பியது, அந்த அறையில் ஒருவட்டம் சுற்றிவந்தது. திரும்ப விளக்குத் தகடில் அமர்ந்துகொண்டது.

ஆக அதற்கு வெளியே போகிறதாக உத்தேசமில்லை. எங்கள் நட்பு அந்தக்கணத்தில் முகிழ்த்தது எனலாம். அதன் மனஉறுதியை நான் மெச்சினேன். எதற்கு ஆசையோ அதற்கு வெட்கப்படாமல் முனையும் அது. அதன் முகபாவம் எனக்குப் பிடித்திருந்தது. தலையை ஒருவாட்டமாகத் திருப்பி என்னை அது வாட்டமாகப் பார்த்தது. ஆ பாவப்பட்ட ஜீவன். என்னைப்போல! நாங்கள் ஒரேமாதிரி பாவனைகளைக் கொண்டிருக்கிறோம். நான் அதனோடு இணக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறேன், என்பதை அது புரிந்துகொண்டது. அதற்கேற்றாப் போலவே அதன் செல்ல அட்டகாசங்களும் இருந்தன. மதியம் நான் வெளியே கிளம்புகிறேன், சர்ரென்று எனக்கு முன்னே பறந்து வந்து, என்னை வழிமறித்தது அது. நண்பா என்னை விட்ட்டுப் போனா எப்டி, என்கிறாப் போல.

அடுத்த நாள் சீக்கிரமே எழுந்துவிட்டேன். காலை நாஷ்தா முடித்து வேலைசெய்ய என எழுந்துகொண்டேன். வாசல்பக்கம் அந்த ஈ. ஹலோ… எனத் தலையசைத்தேன். ரீங்காரத்துடன் அந்த அறையை நிறையத்தரம் சுற்றி வந்தது ஈ. அப்படியே வந்து என் நாற்காலியில் அமர்ந்துகொண்டது. நான் எங்கே அதை உட்காரச் சொன்னேன்… அது உட்கார்ந்துகிட்டா நான் எங்க உக்கார்றது? ”எழுந்திரு.” நான் சொன்னேன். சற்று எழும்பி ஒரு சுற்று, ஆ… திரும்ப நாற்காலியிலேயே வந்தமர்ந்து கொண்டது. என்ன சேஷ்டைக்கார ஈ. ஏய், என்ன திமிரா… என நான் எச்சரித்தேன். நான் உட்காரப்போறேன், என்றேன். அப்படியே உட்கார்ந்தேன். குபீரென அது எழுந்தது, ஆனால் இ,ப்போது என் தாளின்மேல் சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டது. ”அடி சிறுக்கி, இடத்தைக் காலிபண்ணு…” பதில்சொல்லக் காணோம். கையால் காற்றை வீசினேன். தம் பிடித்து அங்கேயே பம்மிக்கிட்டதே தவிர, நகரக் காணோம். தபார் இது சரியில்லை, என்றேன் நான். பரஸ்பரம் மரியாதை இல்லாம இப்பிடியே போயிட்டிருக்க முடியாது,

ஈ என்னை கவனித்தது. எதோ யோசித்தது. ச், பாத்துக்கலாம் என என்னை அலட்சித்து அப்படியே அங்கேயே பிள்ளையார்த்தவம் கிடந்தது. பெரிய கத்திரிக்கோல்…. அதைக் காற்றில் வாள்போல வீசியாட்டினேன். இன்னிக்கு உன் கதையை முடிச்சிர்றேன்… ஆனால் நான் கவனிக்கவில்லை. ஜன்னல் திறந்திருந்தது. ஈ எழும்பி ஜன்னலுக்கு வெளியே பறந்து விட்டது.

திரும்பி வரவேயில்லை, ஒரு ரெண்டுமணி நேரம். அதுவரை என் மனசில் படபடப்பு. அப்படியே அதுபாட்டுக்குக் கிளம்பிப் போக விட்டுட்டேனே. இப்ப எங்க இருக்கோ, எப்பிடி இருக்கோ…. அதுக்கு என்ன ஆகுமோ… ஒருவழியாக நான் திரும்ப எழுத உட்கார்ந்தேன். மனசில் என்னென்னவோ விபரீத யூகங்கள்.

அந்த ஈ திரும்பிவந்தது. அதன் பின்னங்கால்களில் ஒன்றில் தூசி. ஏய், அழுக்குணி, எந்த சகதில மேஞ்சிட்டு வரே எருமை, என்றேன் நான், ஏண்டி, உனக்கு வெட்கங் கிட்கங் கிடையாதா… இருந்தாலும் வந்து சேந்ததே, என்றும் ஆசுவாசம். முதல் காரியமாக மெல்ல போய் ஜன்னலை மூடிவிட்டு வந்தேன். என்ன இந்தமாதிரி ஒரு காரியம் பண்ணிப்பிட்டே, என்றேன். தலை நிமிர்த்தி ஒரு எகத்தாளப் பார்வை பார்த்தது ஈ. ஆமாம், பண்ணிட்டேன், என்னான்றே அதுக்கு, நீ என்ன பண்ணிப்பிடுவே… கழுத்தைச் சீவிருவியோ, என்கிற எள்ளல் பார்வை. ஒரு ஈ, அதற்கு என்ன நக்கல்டா. அதுவரை இப்படி மேலடி அடிக்கும் ஈ பற்றி எனக்குத் தெரியாது. பரவால்லியே, என மனப்பூர்வமாக நான் சிரித்தேன். என்ன ஜாலக்காரிடி நீயி… என்றேன் நான். கிட்ட வா, உன்னை கொமட்டுல குத்தறேன்… சிறுக்கிமவளே…

அந்த சாயந்தரமும் நான் வெளியே போவதை வழிமறித்தது ஈ. போகாதே போகாதே என் கணவா… பொல்லாத சொப்ப(£)னம் நானுங் கண்டேன்… இப்போது அதை ரசிக்கவில்லை நான். ஏய், யார்ட்ட விளையாடறே, என எகிறினேன் நான். என்மேல் அதற்கு அன்பு, பிரியம் – எல்லாஞ் சரிதான். ஆனால் சாயந்தரங் கூட என்னை வெளியேவிடாமல் இப்பிடிப் பிடிச்சி வைத்துக்கொள்ள அதனால் முடியாது. அதெல்லாம் என்னாண்ட நடக்காது. போடி சர்த்தான், என நான் அதைத் தாண்டிப்போனேன்..அதன் சிறகுப் படபடப்பு, அதன் கோபம் எனக்குத் தெரியும். ”இப்ப பாருடி சிறுக்கிமவளே, என்னைத் தனியா விட்டுட்டுப் போனியே, இப்ப நான் போறேன், தனிமைன்னா என்னன்னு நீயும் தெரிஞ்சிக்க. உள்ளியே கெட,,, குட்பை!

அதன்பின்னான நாட்களில் அந்த ஈ என் பொறுமையைச் சோதிக்கிறாப் போலவே எத்தனை சில்மிஷங்களெல்லாம் செய்தது… என்னைப் பார்க்ககொள்ள விருந்தாளிகள் என்று யாராவது வந்தால் அதற்குத்தான் எத்தனை அசூயை. பெருமூச்சுகளுடன் காய்ந்து, அவர்களை விரட்டிவிட அது முயற்சி செய்தது. ஏய், என்ன நெனைச்சிட்டிருக்கே உன் மனசில், என நான் கடுகடுத்தேன். இரு உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்… அதற்குள் அதன் கோபம் எல்லை கடந்திருக்க வேண்டும். சரட்டென்று அப்படியே செங்குத்தாக கழுத்தை விரைத்து மேலேறி உத்திரத்துக் கூரைமேல் தலைகீழாய்த் தொங்கியது. அப்படியே அங்கேயே, அசையாமல் கொள்ளாமல்…. எனக்குப் பதறியது. சனியனே, விழுந்துறப்போறே, என்று கீச்சிட்டேன். அதற்குக் கோபம், அது என்னைக் கண்டுக்கவே இல்லை. சொன்னா கேக்கமாட்டேயில்லே, சரி உன் இஷ்டம், எக்கேடுன்னா போ..’ என நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அதன்பின் அது கீழிறங்கி வந்தது!

எப்பவுமே நான் அதை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு. நான் கண்ணை எடுத்திட்டால் என்னை வேலைசெய்ய விடாமல் என் முகத்தருகே வந்து ரொய்ங் என்று சிறகடிக்கும். டப்பென்று என் காகிதத்தில் வந்தமரும். பிறகு இப்படியும் அப்படியுமாய் நடை பழக ஆரம்பிக்கும். கொஞ்சங்கூட சங்கோஜம் கிடையாது அதற்கு. என்னாண்ட காகிதக் கத்திரி இருக்கு.. மறந்திட்டதோ, என்றிருந்தது.

அடேய் அதுங்கிட்ட ரொம்ப கெடுபிடி காட்டாதே, அடிச்சாலும் செல்ல அடி அடிக்கணும், என்று நினைத்துக்கொண்டேன். புன்னகையுடனான குரலில் நான் அதனிடம் சொன்னேன். அடி அந்தப் பக்கம்லாம் போகக்கூடாது, போயி மசியில் விழுந்து ஈஷிக்காதே… உனக்கு நல்லதுதானே சொல்றேன், என்றேன். இழவு காதுலயே வாங்கிக் கொள்ளவில்லை. ஏய், காகிதத்தில் நடக்காதேன்னு உன்னாண்ட சொன்னேனா இல்லியா? அதற்கும் அது மசிகிறதாய் இல்லை. கரடுமுரடா இருக்கு காகிதம், கால்ல வரி விழுந்துரும்டி, கீச்சிக்குவேடி கண்ணு. அதற்கு பயம் கியம் என்று எதுவும் இருந்தால்தானே? என்னன்னாலும் உனக்கு இத்தனை திண்ணக்கம் கூடாது… ஆத்திரத்துடன் கீச்சிட்டேன். காகிதம் சொரசொரப்பா இருக்கா இல்லியா சொல்லு. அதைப் பத்தி என்ன-ன்னாப்போல அது நடந்துகொண்டது. போ, அதுலயே கெடந்து சாவு… என்றேன் நான். அது நான் சொன்னபடி கேட்காத ஆத்திரம். நான் வேறகாகிதம் எடுத்துக்கிறேன்…

என்ன கொழுப்பு அதுக்கு, நான்போய் வேறகாகிதம் எடுக்கிறேன், முடியாச்சின்னு எழுந்து வெளியே போய்விட்டது!

நாட்கள் மாதங்கள் நகர்ந்தன. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சகித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தோம். நீயும் நானுமடி எதிரும் புதிருமடி. ரெண்டுபேரும் சேர்ந்தே நிறைய காகிதங்கள் பயன்படுத்தினோம். அதில் சந்தோஷமும் உண்டு, எரிச்சலும் உண்டு. அதன் அழிச்சாட்டியங்கள் ஏராளம். நான் பொறுத்துக்கொண்டேன். நான் எழுதுவதே அதற்கு உவப்பாய் இல்லை, என் எழுத்தில் அதற்கு ஒரு மரியாதையும் இல்லை… என்னத்த சும்மா எழுதிட்டேயிருக்கே, என்று அது பார்த்தது. வெறுத்துப்போய் வெளியே போய்விடுமோ என்று நான் கதவுகளை ஜன்னல்களைச் சார்த்தியே வைத்தேன், அதன் நல்லதுக்குத்தான். அத்தோடு, இந்தச் சனியன் மேல்கூரையிலிருந்து சடாரென ஜன்னல் கண்ணாடிக்கு பல்டி, மோதிக்கொண்டது. அதுக்கு இருக்கிற மப்புக்கு அப்படியே உடைத்துக்கொண்டு வெளியே போயிறலாம், என நினைப்பு.

என்ன, வெளியே வேலை கீலை இருக்குதா, என்றேன் நான். அப்பன்னா வா, இப்டி வெளிய போ… நான் வாசல்கதவைத் திறந்துகாட்டிச் சொன்னேன். ஆனால் அதற்கு வெளியேபோக இஷ்டம் இல்லை. வெளிய போணுமா வேணாமா?… ஒண்ணு. ரெண்டு. மூணு! அது பதில் சொல்லவில்லை. அடச்சீ வேலைகெட்ட வேலையா இது எனக்கு, கதவைப் படாரென்று சாத்தினேன்.

இந்த மூர்க்கம்… விரைவிலேயே என்னை ஒரு அவஸ்தையில் கொண்டுவிட்டது..

ஒருநாள் அந்த ஈ காணாமல் போய்விட்டது. காலையில் வேலைக்காரி வந்தபோது கதவு திறந்திருந்ததை அது கவனித்து மெல்ல நழுவிவிட்டது. என்மேல் உள்ள கோபத்தில் அது என்னைப் பழிவாங்கி விட்டது, அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன் அதை. ஹா… இப்போது நான் செய்யக்கூடுவது என்ன? வெளியே தோட்டப்பக்கம் போய் ஆத்திரமாய்க் கத்தினேன் – தபார், உனக்கு வெளிய தங்க இஷ்டமானா தாராளமா தங்கிக்கலாம். யார் வேணான்னா?… நான் அதை இழந்துறவெல்லாம் இல்லை. அதைத் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியப்போறதில்ல. அதை என்னமாச்சும் உசுப்பேத்தி திரும்ப வரவழைக்க என்னால் கூடாது. ஆ, அதைத் தொலைக்கவில்லை, என்பதெல்லாம் வெட்டி சமாதானம்.. இழந்துதான் விட்டேன்.

என் வீட்டின் கதவு ஜன்னல் வென்டிலேட்டர் புகைபோக்கி இண்டு இடுக்கு, எதையெல்லாம் திறந்து வைக்க முடியுமோ திறந்து வைத்தேன். ஜன்னல்பக்கமாய் என் காகிதத்தை காற்றில் படபடக்க வைத்தேன். அழுக்கு, ஈரம் பட்டால் பரவாயில்லை. அது இப்போது முக்கியமில்லை. ஈ காகிதத்தில் ஆசை ஆசையா நடந்ததே, வா வந்து நட. இதைவிட வசதியான பரப்பு உனக்குக் கிடைக்காதுடி, வா.

என் வீட்டுச் சொந்தக்காரி, அவகிட்டக் கூட விசாரித்தேன். தலைநிறைய சொதசொதவென்று அல்கஹால் போட்டுக் காத்திருந்தேன். என் அருமைத் தோழியே வருக வருக, ராஜகுமாரியே உள்ளே வருக, என்று அதற்கான சுமுகங்களை இங்கே ஏற்படுத்தி தாஜாபண்ணி காத்திருந்தேன். ஒரு பயனுமில்லை.

பிறகு ஒருகாலையில் அது, ஆமாம், திரும்பிவந்தது. ஆனால் தனியே வரவில்லை. வீதியில் இருந்து கூடவே காதலனை உள்ளே இழுத்து வந்தது அது. அதைத் திரும்ப பார்த்ததும், அது திரும்பி வந்ததுமாக எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் அதை நான் மன்னித்தே விட்டேன். தன் காதலனுடன் அது வந்ததையும் பொருட்படுத்தவில்லை.

ஆனால் போதும், எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு. எல்லை உண்டு.

ஒருத்தரையொருத்தர் அதுங்கள் லுக் விடுவதும், அப்டியே கால்களைத் தேய்த்து சூடு பண்ணிக்கொள்வதும்… அப்புறம் குபீரென்று அந்தக் காதலன் காதலிமீது பாய்ந்து ஏறி சவாரி செய்தபோது, எனக்கு லஜ்ஜையாகிவிட்டது. அட நாலுபேர் பாக்கிறாப்போல, என்ன காரியம் பண்றீங்க?… நான் அதட்டினேன். நீங்க ரெண்டுபேருமே ரொம்ப விடலைங்க. அதுக்கெல்லாம் லாயக்கில்லை…

நான் சொன்னது அதற்குக் குத்தலாய்ப் பட்டிருக்கவேண்டும். தலையை நிமிர்த்தி என்னை விரோதமாய்ப் பார்த்தது. என்னாச்சி, பொறாமையா, என்கிறதாய் ஒரு கேள்விதொக்கிய பார்வை. ஹா, எனக்கா, பொறாமையா, அவன் மேலயா… என நான் கிசுகிசுத்தேன். பார் ஒரு விஷயம்… ஆனால் அது முகம்திருப்பிக் கொண்டது. உன் விளக்கம் கிளக்கம் எதுவுந் தேவை இல்லை, நான் சொன்னா சொன்னதுதான், என்கிற அலட்சியம். அடாவடி.

சடக்கென்று ஆத்திரத்துடன் எழுந்துகொண்டு கூவினேன். ஏய் உன்னாண்ட நான் சண்டகிண்ட போடப்போறதில்லை. ஆனால் இது சம்பிரதாயத்துக்குப் புறம்பானது. அததுக்கு வயசுன்னு இல்லியா? ஆத்தமாட்டாம அலையறாம்பாரு உன் காதலன், அவனை என்னாண்ட அனுப்பு நான் பாத்துக்கறேன்…காகிதக் கத்திரியால் தரை அதிர அடித்தேன்.

இப்போது பார்த்தால் அதுங்க ரெண்டும் சேர்ந்து என்னைப் பகடியடித்தன. மேஜையோரமாய் ரெண்டுமாய் அமர்ந்தன. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன. என்னை அவை பார்த்த பார்வை! ஹா ஹா, இதைவிடப் பெரிய கத்திரி கிடைக்கல்லியா மாமா? எங்களைக் கொல்ல இதைவிடக் கொஞ்சமாவது பெரிசா வேணாமா?…

கைல என்ன ஆயுதம் இருக்குன்றதில்ல விஷயம். உன் மாப்ளைய ஒரு சின்ன ரூல்தடியாலயே சமாளிப்பேன். தடியை வீசினேன். அவை முன்னிலும் ஆக்ரோஷமாக விழுந்து விழுந்து சிரித்தன. தங்கள் விறைப்பை முன்னிலும் தெளிவாக வெளிப்படுத்தின. நீங்க ரெண்டுபேரும் உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டிருக்கீங்கன்றேன்? என்னைப் பத்தித் தெரியாது உங்களுக்கு…

ஆனால் அதுங்க என்னைக் கண்டுக்கவேயில்லை. அதுங்கபாட்டுக்கு வெட்கமேயில்லாத ஆபாசக்கூத்தடித்தன. திரும்ப ஒருத்தரை ஒருத்தர் ஆரத் தழுவிக்கொள்ள முனைந்தன. ”ம்ஹும்!” நான் கத்தினேன். ஆனால் அவை கேட்கவில்லை. நான் தன்னிலை மறந்தேன். தடியை உயர்த்தி – மின்னலைப்போல முழுவேகத்துடன் கீழே இறக்கி – ஒரே அறை. எதோ வழிந்தது. குறி பிசகாத அடி. தரையோடு அவை நசுங்கின.

இப்படியாக முடிந்தது எங்கள் சிநேகிதம் …

சாதாரண சின்ன ஈயே அது, சாம்பல் சிறகுகள். அதைபத்திச் சிறப்பாய்ச் சொல்ல எதுவும் இல்லை. என்றாலும் வாழ்ந்தபோது எனக்கு சில நல்ல தருணங்களை அது அளித்தது.
•••••
Just an Ordinary Fly of Average size
by Knut Hamsun (1859-1952)
trs. in English by Hallberg Hallmsundsson

நட் ஹாம்சனைப் போல தேசாந்திரி பாத்திரத்தை உயிர்ப்புடன் சித்திரித்த பிற நோர்வே எழுத்தாளர் இல்லை எனலாம். இளமைக்காலத்தில் கட்டற்ற சுதந்திர வேட்கையுடன் அவரே நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்தாம். ஒரு காலணிதயாரிக்கிற ஊழியனாக, கடலோரக் காவலாளியாக, பள்ளியாசிரியனாக அவர் நோர்வேயில் பணியாற்றினார். பிறகு அமெரிக்காவுக்குப் போய் புல்வெளிபேணுகிறவனாகவும், கல்லுடைக்கும் தொழிலாளியாகவும், சிகாகோவில் உள்ளூர்ப் பேருந்தின் நடத்துனனாகவும் வேலைசெய்தார். புதிய உலகம் அவரைக் கவரவேயில்லை. பிறந்த மண் திரும்பினார். 1888ல் குறுநாவல் ‘பசி’ வெளியிட்டார். நடையழகினாலும், புதிய தளங்களை கையாண்டதாலும் பரவலாக புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இவரது பசி, நிலவளம் நாவல்கள் தமிழில் க.நா.சு. மொழிபெஎயர்ப்பில் வெளியாகியுள்ளன. நட் ஹாம்சனின் கடைசிக்காலங்கள் துக்ககரமானவை. நோர்வேயை ஆக்கிரமித்த நாஜிகளுக்கு அவர் துணைபோனார் என்ற குற்றச்சாட்டு எழுந்து தம் மக்களாலேயே ஒதுக்கிவைக்கப் பட்டார். என்றாலும் அந்தத் தூசியடங்கி தற்போது அவரது எழுத்துகள் முன்னடையாளம் பெறுகின்றன தற்காலங்களில்.
தன்னையே சாதாரண ஈயாய் அடையாளங் கொண்டு பொதுமைகளை பரசிப் பரத்தி சொல் சமத்காரத்துடன் கதை நகர்த்துகிறார் நட் ஹாம்சன். இவர் வெளியேபோவதை ஈ ஆட்சேபிக்கிறது. பிறகு அது வெளியேறுவதை இவர் மறுதலிக்கிறார்… என்ற வட்டப்பாதையில் கதை. உத்தியளவில் கொடுத்து வாங்குதல். ஈ புணரத்துடிப்பதில் இவர் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது என்பது எனக்கு ஒட்டவில்லை. வீட்டு சொந்தக்காரியிடம் ஈ பற்றி விசாரித்தேன், என்ற வரியும் கொஞ்சம் உப்பு தூக்கல். ஈயுடான உறவாடல் பற்றி, நாட்கள் மாதங்கள் கடந்தன, என ஒரு வரி. தெத்துப்பல்!

இந்தக் கதையை மொழிபெயர்த்த எஸ். ஷங்கரநாராயணன் தமிழில் எண்பதுகளின் புனைகதையாசிரியராக கவனம்கொள்ளப் படுகிறார். ஏறத்தாழ அறுபத்தியைந்து நூல்கள் தந்திருக்கிறார். உலகச் சிறுகதைகள் தொகுதியாக ‘கனவுச்சந்தை’ ‘வேற்றூர் வானம்‘ வெளியிட்டபின், தற்போது மூன்றாவது தொகுதி ‘மேற்கு சாளரம்‘ அச்சில் இருக்கிறது. சாகித்ய அகாதெமிக்காக முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்’ நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்