சரவணன் கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

மாலன்


தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனி ஜெயமோகன் விமர்சனத்தில் இருப்பதாக ராஜநாயஹம் தனது திண்ணைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். தளையசிஙகம் இன்று உயிரோடு இல்லாத நிலையில், இப்படி ஒரு விமர்சனம் அவருக்கு நியாயம் செய்வதாகாது என்பதோடு அது வரலாற்று ரீதியாகவும் தவறானது என்பதால் தளையசிங்கம் குறித்த தகவல்களை என் கட்டுரையில் தந்திருந்தேன்.

ஜெயமோகனைப் பற்றியோ, சொல் புதிது பற்றியோ, ஊட்டியில் நடந்த கருத்தரங்கம் பற்றியோ, விமர்சனமாக நான் ஏதும் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க இந்த வாரம் திண்ணையில் வெளியாகி உள்ள கட்டுரையில் நான் ஏன் தாக்கப்படுகிறேன் ? ‘கூசாமல் அவதூறை அவிழ்த்துவிடுவதாக ‘ ஏன் குற்றம் சாட்டப் படுகிறேன் ? நேர்மை உள்ளவராக இருந்தால் அந்தக் கட்டுரையை எழுதியுள்ள நண்பர், என்னுடைய கட்டுரையில் எந்த வரி அவதூறானது என்பதை விளக்க வேண்டும்.

அந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த இன்னொரு விஷயம் தளையசிங்கம் போன்ற மார்க்சீயத்தில் ஆர்வம் கொண்டிருந்த சிந்தனையாளர்கள் அதிலிருந்து விலகி சென்றதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும், இன்றைய சூழ்நிலையில், அத்தகைய விவாதம் அவரது எழுத்துக்களை விவாதிப்பதை விட, அவசியமானது என்பது.

இந்தக் கருத்திற்காக நான் ஏன் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட வேண்டும் என எனக்குப் புரியவில்லை.

திண்ணை ஆசிரியர் குழுவிற்கு தங்கள் இதழ்களில் பிரசுரமாவது என்ன என்பது குறித்த பிரஞ்கை இருக்க வேண்டும். அது இருந்திருந்தால், நான் அவதூறை அவிழ்த்து விட்டதாக ஒருவர் குற்றம் சாட்டும் போது, நாம் அப்படி எதையும் பிரசுரிக்கவில்லையே என்ற தன்னுணர்வுடன் அது அந்தக் கடிதத்தை நிராகரித்திருக்கும். அப்படி உணர்ந்து நிராகரிக்காதது வருத்தம் தருகிறது. பத்திரிகை நடத்துபவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏதும் பொறுப்புக் கிடையாதா ?

திண்ணை என்ன சொல்கிறது ? நான் எழுதியதில் எந்த வரி அவதூறு ?

எந்த வித நியாமும் இல்லாமல் ஒருவர் அச்சு வெளியில் தாக்கப்பட்டால் தாக்கப்பட்டவர்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமா ? அதற்கு அவகாசமோ, வசதியோ, மனமோ இல்லாதவர்கள், அந்தக் காயத்துடனோ, கறையுடனோ காலம் தள்ள வேண்டியதுதானா ?

ஆசிரியர் குழுவின் பதிலை எதிர்பார்க்கிறேன்

மாலன்

***

பி.கு: தளையசிங்கம் என் நண்பரல்ல. அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவன் அல்ல. அவருடைய இலக்கியப் பார்வை, அரசியல் கொள்கை இவற்றில் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு.அவரது மெய்யுள் குறித்து எனக்குக் கேள்விகள் உண்டு. ஆனாலும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு எழுத்தாளன் உயிரோடு இல்லாத நிலையில், அவன் மீது ராஜநாயஹம் குறிப்பிட்டுள்ளது போன்ற விமரிசனங்கள் வைக்கப்படும் போது, சக எழுத்தாளன் என்ற முறையில், நான் சும்மா இருக்க முடியாது.

***

malan@sunnt.com

***

Series Navigation

மாலன்

மாலன்