கொஞ்சம் கண்பனித்துப் போ…

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

லறீனா அப்துல் ஹக்-(இலங்கை)



ஒரு தீப்பிழம்பை
உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டு(ம்)
எதுவுமே இல்லை என்றிடல்
உனக்கு இயல்கின்றதுதான்.
ஆனால்…

என்னில் வந்துவிழும் – ஒரு
மெல்லிய மழைத்தூறலில்…
தென்றலின் தொடுகையில்கூட
நான்… பொசுங்கிப் போதலும்…
தலையிலே ஒரு பூ வந்து விழுகையிலும்
நசிந்து போனதாய் உணர்தலும்…
எனது நிழலின் ஒலிகேட்டு
நானே நெஞ்சம் அதிர்தலும்
இப்போதெல்லாம்
இயல்பாகிப் போயிருக்கிறது.

உனக்குத் தெரியுமா?
இங்கே
புயலடித்தோய்ந்த இலவங்காடாய்…
உன் நினைவுத் தீ நாக்குகள்
தீண்டித் தீண்டி உருக்குலைத்தழித்த
மானாப் புதராய் – என்
மனவெளி!

ச்சே!
வெறுமனே ஒரு வெள்ளைத்தாளாய்
இருந்ததோர் உள்ளத்தில்
நீ பாட்டுக்கு, உன்னிஷ்டம்போல் தீட்டிய
கிறுக்கல் சித்திரமாய்
உன் நினைவுகள்…
கல்வெட்டுப் பொறிப்பாய் – அவை
உருமாறியது உணராமல்
‘வர்ணம் தீட்டுதல்’ பற்றி – நீ
விவாதித்துக் கொண்டிருக்கிறாய்!

மனப்பாறை வெடித்து – அதன்
அங்குலம் அங்குலமாய் – நீ
வேரோடிப் போனதறியாமல்
நடுகைக்கேற்ற நிலமா – இது
நட்டால் ந(ப)லன் தருமா என்றெல்லாம்
விசாரித்துக் கொண்டிருக்கிறாய்,
வேடிக்கைதான்!

நிலவு தேய்தல் பற்றி…
காற்று ஓலமிடுவது பற்றி…
பூவும் இலைகளும்
உதிர்ந்து சருகாதல் பற்றி…
இன்னும்…
எதையெதைப் பற்றியெல்லாமோ
மனம் நெகிழ்ந்துருகும் – என்
இனிய தோழனே!
உறங்குதல் தொலைத்து…
உள்வலி இழந்து
என்னிலிருந்து…
‘எது’வாகவோ ஆகியிருக்கும்
எனக்காகவும் கொஞ்சம்
கண்பனித்துப் போ!

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)