குழாயடியில் ஆண்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(கதையின் மூல காரணத்தைச் சொல்லவேண்டியதில்லை. இதைப் படிப்பவர் புரிந்து கொள்ளுவர்.)

(அசிங்கமான அல்லது அருவருப்பான சண்டைகள் எங்கேயாவது நடந்தால், அவற்றைப் பற்றிக் ‘குழாயடிச் சண்டை ‘ என்னும் சொல்லால் குறிப்பிடுவதும், கேலி பேசுவதும் நம்மிடையே – ஒரு வழக்கமாக இருக்கிறது. பெண்களுக்குப் பதில் குழாயடியில் தண்ணீர் பிடிப்பவர்கள் எல்லாருமே ஆண்களாக இருப்பின் எப்படி இருக்கும் எனும் கற்பனை எழுந்ததன் விளைவுதான் இந்தக் குட்டி கதை. குழாயடிக்கு வருகிறவர்கள் அத்தனை பேரும் ஆண்களாக இருப்பது என்பது அதீதமான கற்பனை யாயிற்றே என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. பத்திரிகைகளில் மிகைபடக்கூறலின் அடிப்படையில் எத்தனையோ அபத்த ஜோக்குகளை யெல்லாம் படித்து நாம் சிரிப்பதில்லையா என்ன! அதைவிட இது ஒன்றும் மோசமில்லை. வேண்டுமானால் கீழ்க்கண்டபடி நினைத்துக் கொள்ளுங்கள்.)

அந்தத் தெருவில் சுமார் இருபது வீடுகள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். பத்து வீட்டுப் பெண்களுக்குச் சென்னைக்கண் (அதாவது Madras eye) மீதி இருக்கும் பத்துப் பெண்களில் கோபாலின் மனைவி கோமதிக்குக் காய்ச்சல். ராமுடுவின் மனைவி ரங்கம்மாளுக்குக் காலில் ஏதோ கனமான சாமான் விழுந்து பலமான அடி. சீதாராமனின் மனைவி சிங்காரி பிறந்த வீட்டுக்குப் போயிருக்கிறாள். ராமநாதன் மனைவி ராக்கம்மா காலை நேரக் காட்சி ‘ரங்கோன் ராதா ‘ பார்க்க அதி காலையிலேயே புறப்பட்டுப் போய்விட்டாள். முறையே செல்லப்பா, சீனுமணி ஆகியோரின் மனைவிகள் சேது அம்மாள், சீமாட்டி இருவரும் மண்ணெண்ணெய் வாங்கப் போய்விட்டனர். காமாட்சிநாதன் மனைவி மீனாட்சி , தேவநாதன் மனைவி தேவகி, கருப்பையாவின் மனைவி கண்ணம்மா, ரங்கராஜன் மனைவி ரேணுகா ஆகிய நால்வருக்கும் முறையே ஏழாவது, எட்டாவது, ஏழாவது, ஒன்பதாவது மாதங்கள். இந்தக் காரணங்களால் எல்லா ஆண்களும் குழாயடிக்கு வர நேர்கிறது. )

காலை மணி ஆறரை. குழாயடிக்கு முதலில் வருகிற ரங்கராஜன் பெரிய குடத்தைக் குழாயடியில் வைக்கும்போது பனிக்கால அரையிருட்டில் எங்கிருந்தோ விரைவாக ஓடிவருகிற காமாட்சிநாதன் ரங்கராஜனின் குடத்தை அப்புறப்படுத்திவிட்டுத் தன் குடத்தை ‘ண்ங் ‘கென்று கீழே வைக்கிறான்.

காமாட்சிநாதன் – யோவ்! உன் குடத்தை எடுய்யா,

ரங்கராஜன் – ஏன்யா எடுக்கணும் ?

காமாட்சிநாதன் – நான் நேத்து ராத்திரியே கல்லுப் போட்டு வெச்சிருக்கேன்யா. நான் தான் முதல்ல தண்ணி பிடிக்கணும்.

(இதற்குள் மற்றவர்களில் சிலர் ஆளுக்கு ஒரு குடம், தவலை போன்ற பெரிய பாத்திரங்களுடன்

அங்கு வருகிறார்கள்.)

ரங்கராஜன் – இதென்னய்யா பேச்சு ? நான் முந்தாநாளே கல்லு வெச்சேன்னு சொன்னா ஒத்துக்குவீயளா ? யாரு மொதல்ல வர்றாகளோ அவுகதான் மொதல்ல தண்ணி பிடிக்கணும். கல்லு வெக்கிறதாமே கல்லு ?

செல்லப்பா – இவுரு யாருய்யா என்னமோ புதுச் சட்டம் பேசுராரு ? இங்கிட்டு அப்டித்தான்யா வளக்கம். மொத நாளே கல்லுதான் வக்கிறது. என் கல்லு ரண்டாவதுய்யா!

சீனுமணி – யோவ்! புளுகாதே. என்னோட கல்லுதான் ரெண்டாவதா இருந்திச்சு. ..

ரங்கராஜன் – இந்தக் கல்லு வைக்கிற வழக்கமெல்லாம் நாயமில்ல. நான் ஒத்துக்க முடியாது. இதென்ன பஸ்ல துண்டு வீசிப் போட்டு சீட்டுப் பிடிக்கிற வெவகாரமா என்ன ?

காமாட்சிநாதன் – நீ என்னாடா ஒத்துக்குறதும் ஒத்துக்காததும் ? இதை ஆரம்பிச்சதே ஓம்பொஞ்சாதிதானேடா ?

சிலர் – அதானே! …என் சம்சாரம் கூடச் சொல்லியிருக்கு. எங்கிட்ட – இப்பிடி ஒரு சிஸ்டத்தைத் தொடங்கி வெச்சதே இவரு சம்சாரந்தான்னு… கொடத்தை நகத்துங்க, சொல்றேன். காமாட்சி நாதன் மொதல்ல பிடிச்சுக்கட்டும்.

ரங்கராஜன் – எம்பொஞ்சாதின்னு சொன்னா பயந்துடுவேன்னு பாத்தீயளோ! அதெல்லாம் ஒண்ணும் நடக்காது ஏங்கிட்ட.

(ரங்கராஜன் குழாயைத் திருகுகிறார். காமாட்சிநாதன் பாய்ந்து அவரைத் தள்ளிவிட்டுக் குடத்தைக் குழாயின் கீழே வைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கராஜன் தாமும் அவர் குடத்தை எடுத்து விட்டுத் திரும்பவும் தம் குடத்தை வைக்கிறார்.)

சீனுமணி – ஏன்யா இப்பிடிச் சின்னப் பசங்க மாதிரிச் சண்டை வலிக்கிறீங்க ? யாரு முன்னால பிடிச்சா என்ன ? சண்டை போடுற நேரத்துல தண்ணி யாச்சும் பிடிக்கலாம்ல ?

ராமுடு – அதானே ? இல்லே, எங்கள்ல ஒருத்தரையாச்சும் பிடிக்கவிடுங்க. இப்டி ரெண்டு பேரும் கொடத்தோட கொடம் மோத ஒருத்தரை யொருத்தர் எத்தினி நேரம் பிடிச்சுத் தள்ளிக்கிட்டுக் கெடப்பீங்க ? பீமனும் துரியோதனனும்னு நெனப்பா மனசில ?

(ரஙகராஜனும் காமாட்சிநாதனும் தத்தம் குடத்தைக் குழாயின் கீழே வைக்கும் போட்டியில் மோதிக் கொண்டதில் குடங்கள் நசுங்குகின்றன.)

காமாட்சிநாதன் – ஏய்! என்னடா, எங்குடத்த நசுக்கிட்டே ? ஒங்கக்காளை….

ரங்கராஜன் – ஏய்! வாய மூட்றா! அசிங்கமாப் பேசினா விட்றுவேன்னு பாத்தியா ? ஒங்காத்தாள…

கருப்பபையா – ஏன்யா அக்காளயும் ஆத்தாளயும் உங்க சண்டையில இழுக்கறீங்க ?

காமாட்சிநாதன் – (ரங்கராஜனை நோக்கி) ஏண்டா, டேய்! என்ன சொன்னே ? அசிங்க மாவாடா திட்றே ? எங்கம்மாவைப் பத்தி எதாச்சும் மேல ஒரு வார்த்தை சொன்னே…. ?

ரங்கரஜன் – ஏண்டா, டேய்! மொதல்ல நீதானேடா எங்க அக்காள இழுத்தே ? அது மட்டும் சரியோ ?

காமட்சிநாதன் – உங்க அக்கா கையப் பிடிச்சாடா இழுத்தேன் ?

(ரங்கராஜன் ஆத்திரத்துடன் பாய்ந்து காமட்சிநாதனைக் கன்னத்தில் அறைகிறான்.. காமாட்சி நாதனும் பதிலுக்கு அடிக்கிறான். அடுத்து அங்கொரு சண்டை நடக்கிறது. குழாயடியை விட்டு இருவருமே நகராததால் மற்ற எவராலுமே தண்ணீர் பிடிக்க முடியவில்லை. சினிமாச் சண்டை போல ஒருவரை யொருவர் தரையில் போட்டுப் புரட்டி எடுக்கிறார்கள். குழாயடியிலிருந்து இருவரும் சற்றே விலகுவதால், குழாயடி காலியாகிறது. ஆனால் அங்கும் ஒரு தள்ளு முள்ளு நடக்கிறது. இதற்கிடையே ரங்கராஜனுக்கும் காமாட்சிநாதனுக்குமிடையே நடக்கும் சண்டையில் ரங்கராஜனின் தலை ஒரு பெரிய கல் மீது மோதுண்டுவிட, அதனால் இரத்தம் பெருகுகிறது. இதனால் ரங்கராஜன் மேலும் ஆத்திரமுற்றுக் காமாட்சிநாதனின் கழுத்தைப் பிடிக்கவே, அவர் விழிகள் பிதுங்குகின்றன. சீனுமணி ஓடிப்போய்க் காவல்துறைத் தொலைபேசி 100 உடன் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்கிறான். வேறு சில ஆண்கள் சண்டைபோட்டுக் கட்டிப் புரண்ட காமாட்சிநாதன், ரங்கராஜன் ஆகிய இருவருடையவும் பிள்ளைத்தாய்ச்சி மனைவியரைக் கூட்டி வந்தால்தான் ரசாபாசத்தை மட்டுமின்றி அவர்களது சண்டை காவல்துறையினரால் பதிவுசெய்யப் படுவதையும் தடுக்க முடியும் என்னும் எண்ணத்துடன் அந்த இருவரின் வீடுகளுக்கும் ஓடுகிறார்கள்.)

– நாகமணி மாத இதழ், ஏப்ரல் 1980 இல் வெளிவந்த சிறுகதையின் சற்றே மாறிய வடிவம்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா