இந்திரா பார்த்தசாரதி
மலர்மன்னனும் நானும் நண்பர்கள் என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தால் போதும்.
மற்றவர்கள் இதை உணரவேண்டும் என்பதற்கு நிரூபணம் தேவையென்று எனக்குப் படவில்லை.
1978ல் அவர் என்னை ஜி.ஆர்.தாமோதரனிடம்( சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்) அழைத்துச் சென்று, சென்னைப் பல்கலைக் கழக சர்வதேச விருந்தினர் விடுதியில்(International Guest House) மூன்று மாதங்கள் தங்க அணுமதி வாங்கித் தந்ததற்கு மிகவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நானும் அவரும் பல சமயங்களில் திருவல்லிக்கேணி மெஸ்ஸில் சாப்பிட்டது நினைவு இருக்கிறது.
மலர்மன்னன் ‘மேல் பட்டப் படிப்பு விடுதி ‘ ( Post-Graduate Hostel)என்று குறிப்பிட்டுள்ளார். இது தவறு.மேலும் இராமானுஜரைப் பற்றிய ஆய்வு என்றும் கூறியுள்ளார். இதுவும் தவறு. என் ஆய்வு ‘தமிழில் வைணவம் ‘ பற்றியது. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முந்திய ஒரு நிகழ்வைப் பதிவு செய்யும்போது, பிழைகள் ஏற்படுகின்றன என்றால், நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்தனவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவங்களை அப்படியே நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பதுதான் என் ஐயம். இதனால் சரித்திரம் என்று நம்மால் சொல்லப்படுவதே கேள்விக்குரியதாகி விடுகின்றது.
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகவும் பிரபலமான நாடகம் மூன்றாம் ரிச்சர்ட்.
ஒரு நல்ல பண்பு கூட இல்லாத வில்லன் கதாபாத்திரத்தைக் கதாயகனாகச் சித்திரித்து
மக்களுடைய பாராட்டைப் பெற்றுவிட்ட நாடகம்.. ரிச்சர்ட் பட்டம் ஏறுவதற்காகப் பல கொலைகள் புரிகின்றான், பெண்கள், பச்சிளம் பாலகர்கள் உட்பட. முதுகில் ஒரு பெரிய கூன்மூட்டையைச் சுமந்த ரிச்சர்ட் பார்ப்பதற்கு குரூரத் தோற்றமுடையவனாக இருந்தான். அவனைக் கண்டு அனைவரும் அஞ்சினர். இதுதான் அவனைப் பற்றி ஷேக்ஸ்பியருடைய வருணனை. அவர் காலத்தில் வழங்கிய சரித்திரக் குறிப்புக்களைக் கொண்டு அவர் ரிச்சர்டை உருவாக்கியிருக்கிறார். அண்ணனையும், அண்ணன் குழந்தைகளையும், கட்டிய மனைவியையும், நெருங்கிய நண்பர்களையும் கொஞ்சங்கூட ஈவு இரக்கமில்லாமல் கொன்ற அவனை, அறிவு மிகுந்த, கொடூர நகைசுவையுடைய ஒரு சுவாரஸ்யமான காதாபாத்திரமாக ஷேக்ஸ்பியர் தம் அற்புதமான கலை ஆற்றலினால் சிருஷ்டித்திருக்கிறார். இது கலையின் வெற்றி, ஆனால் சரித்திரத்தின் தோல்வி என்பது நவீனக் கருத்து.
ஏனென்றால் வரலாற்று ரீதியாக மூன்றாம் ரிச்சர்ட் அப்படி இல்லேயைில்லை என்கிறார்கள்., அண்ணன் நான்காம் எட்வர்டுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த அவன் மகன் ஐந்தாம் எட்வர்ட் சட்டத்துக்குப் புறம்பான உறவில் பிறந்தவன் என்பதால் நிராகாரிக்கப்பட்ட பிறகு , அரியேறியவன் மூன்றாம் ரிச்சர்ட். ப்ளான்டாஜனட் வம்சத்தைச் சார்ந்த மூன்றாம் ரிச்சர்டுக்குப் பிறகு முடிசூடியவன் ட்யூடர் வம்சத்தைச் சேர்ந்த ஏழாம் ஹென்றி. இவன் ரிச்சர்டைப் போரில் முறியடித்தபிறகு அவனைக் கொன்றுவிட்டு அரசனாகிறான். ஏழாம் ஹென்றி, ஷேக்ஸ்பியர் காலத்தில் அரசியாகவிருந்த எலிஸபெத் அரசியின் பாட்டன். ட்யூடர் வம்சத்துக்கும், ரிச்சர்ட் வம்சத்துக்கும் (ப்ளான் டாஜனட்) தீராப் பகை. ஆகவேதான் ஆட்சியிலிருந்த ட்யூடர் மன்னர்களைத் திருப்தி செய்வதற்காக ரிச்சர்டைக் கொலைகாரனாகக் காட்டும் புது வரலாறு வழக்காற்றில் வந்தது என்று இக்காலச் சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஷேக்ஸ்பியருக்கு நிகரான ஆற்றல் இருந்தால்தான், மூன்றாம் ரிச்சர்டை மறு பார்வையில் நல்ல மன்னனாக காட்டி புதியதொரு நாடகம் படைக்கமுடியும். ஆனால் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட மூன்றாம் ரிச்சர்ட் சித்திரத்தை அழிப்பது என்பது சாத்தியமில்லை! இதுதான் சரித்திரம் படும் பாடு!
சரித்திரத்தையும் புள்ளியியலையும் வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். சரித்திரத்தைக் காரணம் காட்டி இனப்படுகொலைகள் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறான் ஹிட்லர். தத்துவார்த்த ரீதியாக வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் கதை என்ற மார்க்ஸ் கோட்பாட்டைத் தான் விரும்பியபடித் திரித்து எத்தனைப் பேரைக் கொன்றிருக்கிறான் ஸ்டாலின்!
கடந்த காலத்தில் இதுதான் நடந்தது என்று எந்த இயலைக் கொண்டும் அறுதியிட்டுக் கூற இயலாது, சொல்லுகின்றவர்களின் கோட்பாட்டுக்கும், அணுகு முறைக்குமேற்ப, சரித்திரம் நிறுவ முயலும் சத்தியத்தின் முகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகின்றது என்பதுதான் உண்மை.
காந்தியடிகள் உயிருக்கு மன்றாடியபோது, ‘ஹே ராம் ‘ என்று சொன்னாரா இல்லையா என்பது எனக்கு அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. வலி பொறுக்கமுடியாத வேதனையில், தன்னிச்சையாகக் கூறியிருக்கலாம். இதனால், பாரத நாட்டு லட்சோப லட்ச மக்கள், காந்தியடிகளை என்ன புதிய சமய வெளிச்சத்துடன் பார்க்கத் தொடங்கியிருப்பார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
அடுத்த நாள் நடக்கவிருந்த மாணவர் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த வேளையில், ஒரு மாணவன் பதட்டத்துடன் வந்து காந்தியடிகள் சுடப்பட்டச் செய்தியை எங்களிடம் வந்து கூறினான். எனக்கு அப்பொழுது வயது பதினெட்டு. காந்தியடிகளைப் பத்தாம் பசலி என்று கருதி, அவரை ஏற்றுக்கொள்ளாத மன நிலை.
ஆனால் அவர் சுடப்பட்ட செய்தி கேட்டதும், வயிற்றில் ஏதோ செய்தது. எந்த அளவுக்கு அவர் என்னை அறியாமல் என்னுள் ஊடுருவியிருக்கிறார் என்பதை அப்பொழுதுதான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அமரர் தோழர் சோமுராவ், ‘ அட கடவுளே! ‘ என்றார். முழு நாத்திகராகிய அவர் அவ்வாறு சொன்னது ஒரு தன்னிச்சை வெளிப்பாடு. காந்தியடிகள் ‘ஹே ராம் ‘ என்று சொன்னதாகக் கூறப்படுவதற்கும், , தோழர் சோமுராவ் ‘அட கடவுளே ‘ என்று சொன்னதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் ? இரண்டுமே தன்னிச்சைவெளிப்பாடுகள்தாம் என்று நான் நினைக்கிறேன்.
‘ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணி ‘ காந்தியடிகள். வகுப்புக் கலவரம் நவகாளியில் உச்ச நிலையில் இருந்தபோது, அச்சமின்றி அங்குச் சென்று அதை எதிர்கொண்ட அவருடைய கொள்கைத் துணிவு யாருக்கு இருக்கமுடியும் ? ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டவுடன் அந்த இயக்கத்துத் தலைவர்கள் எத்தனைப் பேர் தலைமறைவாகிப் போனார்கள் என்று மலர்மன்னனுக்குத் தெரிந்திருக்கக் கூடும். காந்தியடிகளை நாட்டுக்குச் சேவை செய்ய விரும்பிய மாமனிதர் என்று மலர்மன்னன் ஏற்றுக் கொண்டமைக்கு மிகவும் நன்றி.
நான் சரித்திரம் பற்றிக் கட்டுரை எழுதியது, அவர் கீழ்வெண்மணிப் பற்றி எழுதியதின் விளைவாக இருக்கலாமென்று யூகிக்கிறார் மலர்மன்னன். அவருடைய இன்னொரு யூகம், நான் அச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு அப்பொழுது எழுதிய நாவலாகிய ‘குருதிப் புனல் ‘ பற்றி இன்று பெருமைப் படாமலிருக்கக் கூடும் என்பது. இரண்டு யூகங்களும் தவறு. சரித்திரப் பதிவுகள் என்று சொல்லிச் சமுதாயத்தில் மக்களுக்கிடையே வெறுப்பு உணர்வை உண்டாக்குவது பற்றி எழுத வேண்டும் என்று நான் தீர்மானித்ததின் விளைவுதான் சரித்திரம் பற்றிய என் கட்டுரை. என்னுடைய படைப்புக்களில், நான் இன்றும், ‘குருதிப் புனலை ‘ மிகவும் முக்கியமானதாக நினைக்கின்றேன், பெருமைப் படுகிறேன். சர்வதேச இலக்கியங்களில் எனக்கேற்பட்ட பரிச்சியம் என் நியாயமான பெருமையுணர்வுக்கு எந்த ஊறும் செய்துவிடவில்லை என்பதை அவருக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ குருதிப் புனலை ‘ ப் படிக்கும்போது ‘ எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார், எஸ்.ஏ. அசோகன் இவர்கள் நினைவு வரவில்லையா ? என்று வாசகர்கள் முன் ஓர் அறிவார்ந்த வினாவை முன் வைக்கிறார் மலர் மன்னன். இது படிக்கின்றவர்களுடைய ரஸனையைப் பொருத்த விஷயம் என்று நினைக்கின்றேன்.
கீழ்வெண்மணிப்பற்றி அவர் குறிப்பிட்டதினால், அவர் அது குறித்து எழுதியிருப்பது பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியாகவேண்டுமென்று எனக்குப் படுகிறது.
அச்சம்பவம் குறித்து விசாரிக்க அண்ணாவின் தனிப்பட்டப் பிரதிநிதியாக அவர் சென்றாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் இல்லை என் அக்கறை. அண்ணா வாக்களித்த விசாரணைக் கமிஷனை அமரர் பி. ராமமூர்த்தி எதிர்த்ததற்குக் காரணம், புதிய பண்ணைத் தொழிலாளர்களை, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகள் தாக்கினார்கள் என்ற செய்தி வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் என்று மலர் மன்னன் கூறுவது வேடிக்கையாக( ஆங்கிலத்தில் சொல்லப் போனால், ‘ naive ‘) இருக்கிறது.. நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் ஒரு குடிசையில் அடைத்து உயிருடன் கொளுத்தியிருக்கிறான் ஒரு பாவி, இந்தக் கொடுமையுடன் ஒப்பிடும்போது புதிய தொழிலாளிகள் தாக்கப்பட்டார்கள் என்பதா ஒரு பெரிய விவகாரம் ? இதற்காகவா அஞ்சி ராமமூர்த்தி விசாரணைக் கமிஷன் வேண்டாம் என்றார் ?
விசாரணைக் கமிஷன் என்பதெல்லாம் கண்துடைப்பு வேலை. வருஷக் கணக்கில் இழுத்தடித்து விட்டு, மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில், உப்பு சப்பிலாத முடிவுகளை தரும் இத்தகைய கமிஷன்கள். கீழ்வெண்மணிச் சம்பவத்திலும் இதுதான் நடந்தது. ஒடுக்கப்பட்ட ஏழைமக்களைக் கொளுத்திய பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு குற்றமற்றவன் என்று விடுவித்தது கமிஷன் சில ஆண்டுகளுக்குப் பிறகு. கமிஷன் வேண்டாம் என்று ராமமூர்த்தி சொன்னதற்கு இதுதான் உண்மையான காரணம்.
மலர்மன்னன் எழுதும் ஆற்றல் மிக்க நல்ல சிந்தனையாளர். அவர் இந்த வயதில், ஒரு குறுகிய கோட்பாட்டுச் சிறையில் தம்மை அடைத்துக்கொள்ளாமல், தாம் சார்ந்த சமுதாயம் மேன்மையுற தம் அநுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றுதான் என் விருப்பம். அவர் மனம் வெறும் குளமாக ஆக வேண்டாம், ஊருணியாக இருத்தல் வேண்டும்
—-
ps0710@yahoo.com
- கடிதம் – ஆங்கிலம்
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- நம்மாழ்வார்
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சுனாமி வைத்தியம்!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
- வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006
- கடிதம்
- குளமும் ஊருணியும்
- உண்மை தெய்வமான க(வி)தை
- கடிதம்
- திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை
- சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி
- சுந்தரமூர்த்திகளுக்கு….
- சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…
- செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:
- நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்
- கடிதம் – ஆங்கிலம்
- பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!
- உயிர்மெய் முதலாவது இதழ் வெளிவந்துவிட்டது
- சூட்டுக் கோட்டு சூடு கோடு
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)
- கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அப்பாவின் மனைவி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- யதார்த்தம்
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சொல் இனிது சொல்வது இனிது
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாழன் ஆதி கவிதைகள்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- உலகம் என்பது வண்ணம்
- வன்மழை
- மனிதனாய் தவிர்த்து
- எல்லம் வாத்துக்களே
- டான் கபூர் கவிதைகள்
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )