குமார் அண்ணா

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க் கொண்டிருந்தார். அண்ணா பலகலைக் கழகத்தில் பொறியியல் படித்த குமார் அண்ணா எதற்கு இந்தக் கோலத்தில் இருக்கப் போகிறார்கள்? அண்ணா இந்நேரம் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பெரிய கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைத்து விட்டு விட்டேன். ஆனால் அந்த முகம் அப்படியே குமாரண்ணாவுடையது போல் இருந்தது எனக்கு ஆச்சரியம் அளித்தது. யாராவது சொந்தக் காரர்களாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

குமார் அண்ணா , 1980களில் எங்கள் கிராமத்து ஹீரோ . முதல்முதலில் அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்பில் எந்த சிபாரிசும் இன்றி இடம் கிடைத்தது அந்த அண்ணனுக்குத்தான். அவருடைய அப்பா கல்லூரிப் பேராசிரியர். ஒரே மகன். மகன் குறித்த பெருமை சார் , மாமி இரண்டு பேருக்குமே உண்டு. பின்னே இருக்காதா? சென்னையில் சென்று படிப்பதென்றால்?

அப்போதெல்லாம் சென்னை என்பது எங்களுக்கு எட்டாத ஒரு கனவு நகரம்.ஆழ்வார்குறிச்சியில் இருந்தவர்களில் சென்னையைப் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு ஏன்? திருநெல்வேலியைத் தாண்டியவர்களையே விரல் விட்டு எண்ணி விடலாம். இந்நிலையில் எங்கள் கிராமத்தின் பிரதிநிதி ஒருவர் கனவு நகரத்துக்குச் சென்று அங்குள்ளோர்களோடு போட்டி போட்டு படிப்பது என்பது எங்களுக்கு மிகப் பெருமையான ஒரு விஷயமாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது அந்த அண்ணனுக்கு எங்கள் கிராமமே பிரிவுபசாரம் செய்தது. பெரியவர்கள் பட்டணத்துப் பகட்டில் மயங்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அந்த அறிவுரை தேவையே இல்லை என்பதை குமரண்ணா பின்னாட்களில் நிரூபித்தார். அப்போது நாங்கள் பள்ளிச் சிறுவர்கள். நாங்கள் எல்லோரும் பஸ் ஸ்டாண்டிற்குப் போய் வழியனுப்பினோம். ஆழ்வார்குறிச்சியிலிருந்து தென்காசி சென்று கொல்லம் மெயிலைப் பிடிக்க வேண்டும் . அது தான் சென்னை செல்லும் ஒரே ரயில் தென்காசியிலிருந்து , இல்லையென்றால் திருநெல்வேலி போய் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸைப் பிடிக்க வேண்டும்.

ஒவ்வொருமுறை லீவுக்கு வரும் போதும் சென்னையைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தன அந்த அண்ணனிடம். ஒவ்வொரு இடத்திற்கும் போவதற்கு ஒரு நம்பர் பல்லவன் பஸ் , ஆவின் பாக்கெட் பால் , பெரிய பெரிய AC திரையரங்குகள். என விஷயங்கள் நீளும். நாங்கள் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம். எங்கள் வீடுகளில் அந்த அண்ணனை ஒரு நாள் உணவுக்கு அழைப்பார்கள். அன்று எங்களுக்கும் கொண்டாட்டம். வெங்காய சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல் என்று எங்களுக்கு பிடித்தவற்றை அந்த அண்ணனை விட்டு சொல்லச் சொல்வோம். இவையெல்லாம் முதல் இரண்டு வருடங்களுக்குத்தான்.

மூன்றாவது வருடம் படிக்கும் போது அந்த அண்ணனிடம் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. நாங்களும் அப்போது பெரிய வகுப்புகளுக்கு வந்து விட்டதால் எங்களுக்கும் சென்னை சென்று படிக்க வேண்டும் என்ற ஆசையில் முழுமூச்சாகப் படித்துக் கொண்டிருந்தோம். எப்போது , எப்படி அந்த அண்ணனோடு தொடர்பு விடுபட்டது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த அண்ணானால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை என்று மட்டும் தெரியும். பிறகு நானும் சென்னை வந்து படித்து , வேலை பார்த்து , கல்யாணம் செய்து கொண்டு , ஒரு பத்து வருடம் டெல்லியில் இருந்து விட்டு மீண்டும் இதோ சென்னை வாசம். இடையில் குமார் அண்ணாவைப் பற்றி நினைக்கவோ , பேசவோ நேரம் ஏது? கோயிலில் பார்த்த முகம் நினைவில் அப்படியே நின்றது. வீட்டுக்கு வந்ததும் ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு “நீ பார்த்தது குமாராகத்தான் இருக்கணும் , அவன் இங்கேதான் இருக்கறதாச் சொன்னா” என்றாள். என் அதிர்ச்சி அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். “ஒனக்கு மொதல்லேர்ந்து சொன்னாத்தான் புரியும்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.

“அவன் இஞ்சினியரிங் மொத ரெண்டு வருஷம் ஒழுங்காத்தான் படிச்சான் , அதுக்கப்பறம் தான் அவன் மாற ஆரம்பிச்சான் ” என்றாள் . ” அதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்மா , அதுக்கப்பறம் நடந்ததைச் சொல்லு” என்றேன் இடைமறித்து. அம்மா சொன்னதன் சாராம்சம் இதோ கீழே தந்திருக்கிறேன்.

குமார் அண்ணா மூன்றாம் வருடம் படிக்கும் போது ஒரு சாமியாரின் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த சாமியாரை அவர்கள் கல்லூரிக்கு சொற்பொழிவாற்ற அழைத்திருக்கிறார்கள். அந்த விழாக் கமிட்டியில் குமாரண்ணா ஒரு மெம்பர். சொற்பொழிவைக் கேட்ட அவருக்கு இவரே தன் குரு என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அவரோடான நட்பு தொடர்ந்திருக்கிறது. அந்த சாமியார் பிராமணனாகப் பிறந்தவனுடைய கடமைகளையும் , அவன் அனுசரிக்க வேண்டிய கடுமையான ஒழுக்கங்கள் பற்றியும் மூளைச் சலவை செய்திருக்கிறார். அவைகளால் கவரப்பட்ட குமாரண்ணா தானும் ஒரு உண்மையான பிராமணனாக வாழ உறுதி எடுத்துக் கொண்டார்.

அம்மா தொடர்ந்தாள் , ” அதுக்கப்பறம் அவன் படுத்தின பாடு கொஞ்ச நஞ்சமில்லே. கேஸ் அடுப்புல சமைச்சா சாப்பிட மாட்டேன் , வெங்காயம் பூண்டு சேத்துக்க மாட்டேன் , கோவணம் தான் கட்டுவேன் , இப்படி பல கண்டிஷன். கிட்டத்தட்ட ஒரு சாமியாராவே மாறிட்டான். ஆனா நல்ல வேளை படிப்பை விடல்லே.ஹாஸ்டலை விட்டு சாமியார் ஆசிரமத்துல தங்கிப் படிச்சான். அவம்மாவும் , படிப்பு முடிஞ்சு ஒருவேலைக்குப் போய் , கல்யாணம் பண்ணினா எல்லாம் சரியாப் போயிடும்னு நம்பினா. படிப்பை முடிச்சும் , நல்ல ரேங்குல பாஸ் பண்ணியும் அவன் வேலைக்குப் போக மாட்டேன்னுட்டான்” என்று சொல்லி ஒரு சிறிய இடைவெளி விட்டாள்.

உடனே நான் படபடவென ” ஒரு வேலையும் செய்யாமல் உக்காந்து சாப்பிடறது பாவம்னு சொல்லியிருக்கே அது அந்த அண்ணாக்குத் தெரியாதா? என்றேன். “இரு அவசரப் படாதே! அது தெரியாமே இருக்குமா? அவன் வேலைக்குப் போக மாட்டேன்னு சொல்லல்லே , வேலை செஞ்சா அதுக்கு காசு வாங்க மாட்டேன்னுதான் சொன்னான்” என்றாள் என் கண்களில் தெரிந்த கேள்வியப் பார்த்து விட்டு அவளே தொடர்ந்தாள். ” அவனோட சாமியார் சொன்னாராம் , பிராமணனுடைய கடமை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதுன்னு அதனால் கம்பெனி வேலை எதுக்கும் போக மாட்டேன்னுட்டான். அதோட அப்படி சொல்லித் தர்றதுக்குப் பணமும் வாங்கக் கூடாதாம். அவாளா பிரியப்பட்டு என்ன குடுக்கறாளோ அதைத்தான் வாங்கிக்கலாமாம். இதெல்லாம் நடக்கற விஷயமா” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு பிரமிப்புத் தட்டியது. எப்போதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வகுக்கப் பட்ட விதிகளை இன்னும் ஏற்றுக் கொண்டு , வாழ்க்கையைத் தொலைக்க அந்த அண்ணா தயாராகி விட்டாரா? என்று நினைத்தேன் அம்மாவிடம் கேட்கவும் செய்தேன். ” நீ சொல்றா மாதிரி தான் அவ அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பாத்தா. க்ம்பெனி வேலை வேண்டாம்னா ஏதாவது ஒரு காலேஜ்ல லெக்சரரா வேலை பாக்கலாமே , அதுவும் சொல்லிக் குடுக்கற வேலை தானே? அப்டி நீ வேலை பாத்துக் கெடைக்கற பணத்துல பாதிய தானம் பண்ணேன் அதுவும் ஒரு கட்மை தானே அப்ப்டீன்னெல்லாம் கூட சொல்லிப் பாத்தா. ம்ஹூம் எதுவும் நடக்கல்லே. அவா ரெண்டு பேரும் சாமியாரையே போய்ப் பாத்து குமாரப் பத்தி சொல்லி அவனுக்கு நல்ல புத்தி சொல்லும்படி கேட்டுண்டா. அந்த சாமியார் பாவம் அவர் இவா நெலமையப் புரிஞ்சுண்டு குமாருக்கு அட்வைஸ் பண்ணினார். அவ்ளோதான் குமாருக்கு எங்கேந்து தான் அப்படி ஒரு கோவமும் , உத்வேகமும் வந்துதோ தெரியல்லே , சாமியாரைப் பாத்து “நீங்களும் உலக வழக்கப்படி என்னை வாழச் சொல்றேள் , நீங்களும் உண்மையானவர் இல்லேன்னு அவர்ட்டருந்தும் வெலகிட்டான் “.

“அப்புறம்? ” என்றேன். ” அப்றமென்ன காசி , கல்கத்தா பாட்னா அப்டீன்னு சுத்தினான். இடுப்புல ஒரு வேஷ்டி , காஞ்ச வேஷ்டி ஒண்ணு , ஒரு சட்டை , கால்ல செருப்பு கூடக் கெடையாது. இந்தக் கோலத்துல அவன் ஊரூராச் சுத்தினான். அவ அப்பா ஏற்கனவே ஹார்ட் பேஷன்ட் , எப்படியெல்லாமஒ வாழ வேண்டிய பையன் இப்படி இருக்கானேங்கற கவலைலயே ஹார்ட் அட்டாக்குல செத்துப் போயிட்டார். மாமி அதுக்கப்புறமும் எவ்வளவோ கெஞ்சினா. ஒங்கப்பா மதிரியே நானும் போயிட்டா என்ன பண்ணுவேன்னு கூடக் கேட்டா .அவன் மசியவேயில்லை. பிறப்பு இறப்பெல்லாம் அவா அவா கர்ம பலன்னுட்டான். இனிமே ஒண்ணும் பண்ண முடியாதுன்னு மாமி கோபால சமுத்திரத்துக்கு அதான் அவா சொந்த ஊர் அங்கே போயிட்டா. சாரோட பென்ஷன் வருது , வீடு சொந்த வீடு அதை வெச்சுண்டு ஏதோ காலத்தை ஓட்டிண்டிருக்கா , இவன் என்னடான்னா இங்க தர்ப்பையைக் கைல வெச்சுண்டு , பிரசங்கம் ப்ண்ணிண்டு கெடைக்கறதச் சாப்டுண்டு இருக்கான். எல்லாம் தலை எழுத்து என்ன சொல்ல?” என்று முடித்தாள்.

“குமாரண்ணா பிரசங்கம் பண்றாளா? அப்டீன்ன நெறையக் காசு வருமேம்மா. இப்போ சில பேரு ஸ்வாமி கைங்கரியத்துக்காக வேலையை விட்டுட்டேன்னு சொல்லிண்டு ஒரு தடவ பேசறதுக்கு இருவதாயிரம் , முப்பதாயிரம் வாங்கறாளே? குமாரண்ணா அப்படியாவது பண்ணியிருக்கலாமே” என்றேன் ஆதங்கத்துடன். ” நீ சொல்றது ரொம்ப சரி ! கொஞ்ச பேர் அப்டி பண்றா தான். ஆனா குமார் அப்டி இல்லையே? தொண்டத் தண்ணி வத்த ஒரு மணி நேரம் பிரசங்கம் பண்ணிட்டு அவா தர தேங்கா மூடிய வாங்கிண்டு வரான். அவ அம்மாக்கு ஒடம்பு சரியில்லேன்னு கேள்வி , வயசாச்சே! போய்ப் பாக்கக் கூட கையில ரூவா இருக்கோ என்னவோ? என்னத்தச் சொல்றது போ” என்று புலம்பி விட்டு காய் கறிகளை வகைப் படுத்த ஆரம்பித்தாள்.

எனக்குத்தான் நெஞ்சை அடைத்தது. இப்படியும் ஒருவரா. சுலபமாகக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு வசதியான வாழ்க்கையை உதறி விட்டு ஏன் இந்தக் கடின வாழ்க்கை வாழ வேண்டும்? அவர் மனதில் அப்படி என்ன இருக்கும்? எந்தக் கட்டத்தில் அவர் இந்த வாழ்க்கையை நோக்கித் திரும்பினார்? கடவுள் தன்னை மானிடர்களை நெறிப்படுத்த தேர்ந்தெடுத்ததாகக் கருதினாரா? ” எனக்குள் பல கேள்விகள். அந்த அண்ணனைப் பார்ப்பதற்காகவே மீண்டும் ஒரு நாள் கோயிலுக்குப் போனேன். அந்த அண்ணனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் உட்கார்ந்திருந்தது. எல்லோருமே கீழ்த்தட்டு மக்கள் என்று பார்த்தவுடன் புரிந்தது. நெருங்கிச் சென்று அவர்கள் பேச்சைக் கேட்டேன். “சாமி நீங்க சொல்லிக் குடுத்த மந்திரத்த 45 நாள் சொன்னதுக்கப்புறம் இப்ப என் புருஷன் குடிக்கறதுல்லே சாமி. சம்பாதிக்கற பணத்த எங்கிட்டே கொடுத்துடறாரு. நாங்க இப்போ சந்தோஷமா இருக்கோம் சாமி , காணிக்கையா வெச்சுக்குங்க சாமி ” என்று இரண்டு ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினாள் அந்தப் பெண். ” வெறும் மந்திரத்தாலே மட்டும் ஒன் புருஷன் குடியை நிறுத்தல்லேம்மா. அவனுக்கு நான் சில மனக்க்கட்டுப்பாடுகளையும் சேர்த்து சொல்லிக் கொடுத்தேன் , அவனும் திருந்தி வாழணும்னு ஆசைப்பட்டான் , எல்லாத்துக்கும் மேலே எப்பெருமான் கருணையினாலேதான் அவன் திருந்தினான். எனக்கு அம்பது ரூவா போறும் , மிச்ச அம்பது ரூவாய்க்கு நல்ல பழங்கள் வாங்கிச் சாப்பிடுங்கோ” என்று சொன்னார் அண்ணா. அந்தக் குடும்பம் அவரை வணங்கி விடை பெற்றது.

இப்போது வேறு ஒரு குடும்பம் அவரைச் சூழ்ந்து கொண்டது . அவர்களுக்கு என்ன பிரச்சனையோ? அண்ணா தீர்த்து வைப்பாரோ? அந்த நம்பிக்கையில் தானே வருகிறார்கள். எனக்கு கண்கள் நிறைந்தன. இந்தக் கீழ்த்தட்டு மக்களூக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டுவிட்டாரோ? இல்லை இது ஏதேனும் மனனலக் கோளாறா? சீச்சீ அப்படியெல்லாம் இருக்காது. ஒரு மன நலம் குன்றியவனால் எப்படி மற்றொருவரைத் திருத்த முடியும்? அம்மா , குமார் அண்ணாவை “பொழைக்கத் தெரியாதவன் , தாய்ப் பாசமே இல்லாதவன்” என்று சொல்கிறாள் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்