குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

ஹெச்.ஜி.ரசூல்


என் நெஞ்சின் மீது படுத்துறங்கும்
சின்னமகள் பர்வீனுக்கு
கனவில் ஒரு பூதம் வந்தது
பூதத்தின் உருவம் வடிவம் பற்றி
சொல்ல முடியவில்லை எதையும்
அலறிப் பயந்து நடுங்கி
வீறிட்டழுதாள் விடுபடா துக்கத்தில்
சிலேட்டில் எழுதிப்படித்த எழுத்துக்கள்
ஞாபகங்களிலிருந்து விலகிப்போனது
பேச எத்தனித்தபோது
வார்த்தைகள் வெளிவரவில்லை

கனவில் துரத்தி வந்த பூதம்
பூனையாக உருமாறிக் கொண்டது
காலடியில் சுற்றிக் கொண்டு திரியும்
ஒலியெழுப்பல்களையும்
உருண்டு திரண்டுநிற்கும்
அதன் விழிக்கும் கண்களையும்
கூடவே மீசைமுடிகளையும்
தடவிப் பார்த்த விரல்களின் நுனியில்
தீராத ஏக்கம் திரண்டிருந்தது.

பூனையிடம் பேசிப் பார்த்தாள்
எதற்கும் முடியாமல் போகவே
கேவிக் கேவி அழுது முடித்த
மாமரமூட்டின் நிழலில் விம்மல் நிறைந்தது
இரவு முழுதும் தன் கூடவே
படுக்கையில் கிடந்த பூனை விடிகாலையில்
பஞ்சுப்பொதி பொம்மையாகிக் கிடந்தது
கண்தொட்டு கைதொட்டு வருடி
அழகு கொஞ்சியது போக
பீங்கான் தட்டில் சோறெடுத்து
ஒரு கவளம் உருட்டிக் கொடுக்க
வாய் திறந்து அதிசயமாய்
பொம்மை சோறுதின்றது.

நீர் நிரப்பி மேசையில் வைத்திருந்த
கண்ணாடி குவளையில்
திடாரென மீன்கள் துள்ளின
குட்டி பொம்மை பாாத்து சிரித்தது
தானும் சிாத்தாள்

சாயங்காலம் வரை
பொம்மையோடு விளையாடியவள்
தன் பூனையைத் தேடி அழுதாள்
ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த
அதன் குட்டிகளிடம் பொம்மையை நீட்டினாள்
குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
—-
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்