கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


‘எங்கே போகிறாய் பணிப்பெண்ணே!
அங்கிக்குள் உனது
தீபத்தை மறைத்துக் கொண்டு ?
இருண்டுபோய் உள்ளது என்னில்லம்,
தீபத்தைக் கொடுப்பாயா
வீட்டில் விளக்கேற்ற ?
தனிமையாய் உள்ளது என் வீடு! ‘ என்று
பணிவாய்க் கேட்டேன்.
புருவத்தை
ஒருகணம் நெளித்துக் கொண்டு
என்முகம் உற்று நோக்கி,
‘ஆற்றங் கரை நெடுவே,
அந்தி மயங்கும் வேளையில் நான்,
வந்திருப்பது,
நீரோட்ட மதில்,
தீபத்தை மிதக்க விட! ‘
என்று பதில் அளித்தாள் மாது!
விழித்து நின்றேன் நான்,
புல் புதர் நடுவே வியப்போடு!
பலனின்றி
அலைக்கப் பட்டு
ஆற்றில்
வீணாக நழுவிச் செல்லும்
விளக்கைப் பார்த்து!

மெளனமாய்ப் போன நள்ளிரவில்
மறுபடியும் கேட்டேன்.
‘ஒளியோ டுள்ளன
விளக்குகள் அனைத்தும்!
ஆயினும்,
அவற்தை எடுத்துப் போவது
எங்கெனச் சொல்லிடு,
மங்கையே ? ‘ என்றேன்.
காரிருள் கப்பிடும் வேளையில்,
தனிமையாய் உள்ளது என்னில்லம்,
உனது ஒளிவிளக் கொன்றை
எனக் களிப்பாயா ? ‘
என்று கெஞ்சிக் கேட்டேன்!
முகஞ் சுழித்தாள் பணிப்பெண்,
அகத்தில் ஐயமுற்று!
‘தீப சமர்ப்பணம் செய்து
வான மண்டலத்தில் ஒளியூட்ட,
நான் வந்துளேன்! ‘ என்றாள்.
வாடிப் போய் நின்றேன்
வேடிக்கை பார்த்து,
வெட்டவெளி அரங்கில்
வெளிச்சம்
வீணாகிப் போவதை!

நள்ளிரவில் நிலவின்றி
உள்ள போது மீண்டும் கேட்டேன்:
‘சேடிப் பெண்ணே!
தீபத்தை
நெஞ்சிக் கருகில் மறைத்து
தேடிச் செல்வதை எதனை ? ‘
என்று கேட்டேன்.
‘இருள் மண்டிக் கிடக்கும்
என்னில்லம்!
தனிமையாய் உள்ளது,
என் வீடு!
விளக்கொளி வேண்டும்,
அளிப்பாயா ? ‘ என்று மன்றாடினேன்.
நின்றாள் ஒரு விநாடி!
காரிருளில்
என்முகம் உற்று நோக்கிச்,
சொன்னாள்:
‘எனது விளக்கை
ஏந்தி வந்த காரண மிதுதான்:
தீபத் திருநாள் கொண்டாடும்
வெளிச்ச விழாவுக்கு,
ஒளியூட்ட வந்துளேன்! ‘ என்று
அளித்தாள் பதில்!
வியப்புடன்,
வேடிக்கை பார்த்து நின்றேன்,
ஆரங்களாய்த் தொங்கும்
தோரணத் தீபங்க ளிடையே
வீணாகக்
கண்சிமிட்டிக்
காணாமல் போகும் மாதின்
கை விளக்கை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 13, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா