காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

பாவண்ணன்


நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழக்கிந்தியக்கம்பெனியால் வணிக விரிவாக்கத்துக்காக முதன்முதலாக வாங்கப்பட்டது. சிறுகச்சிறுக அக்கிராமத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உருவாகி அதிகாரமையமாக வளர்ந்தது என்பது வரலாறு. இந்தப் புத்தகம் அந்த வரலாற்றை காலவரிசை முறையில் முன்வைக்கிற புத்தகமல்ல. மாறாக, கிராமம் நகரமாகவும் மாநகரமாகவும் வளர்கிற போக்கில், உருவாக்கப்பட்ட கோட்டைகள், தேவாலயங்கள், காப்பகங்கள், அரண்மனை, பள்ளிகள் ஆகியவற்றைப்பற்றிய பதிவுகளைக் கொண்ட புத்தகம். அவற்றின் ஊடாக நகரம் உருமாறிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உருவாக்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பிருப்பதால் வரலாற்றை வேறொரு கோணத்திலிருந்து அணுகுவதற்கு இந்தப் புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தனிமனித அனுபவப்பதிவாக 1921 ஆம் ஆண்டில் இதை எழுதியவர் கிளின் பார்லோ என்னும் ஆங்கிலேயர். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் ப்ரியாராஜ். வேகமான வாசிப்புக்கேற்ற மொழிபெயர்ப்பு.

1600 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் தம் பொருட்களை விற்பதற்கேற்ற மிகப்பெரிய சந்தையாக கிழக்கிந்திய நாடுகளைத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்காக பலரையும் வேலைக்கமர்த்தி வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். முதலில் அவர்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் கால்வைத்தார்கள். இதே நோக்கத்தோடு ஆங்கிலேயர்களுக்கு முன்னால் காலூன்றிய டச்சுக்காரர்களோடும் போர்த்துக்கீசியர்களோடும் அவர்கள் போட்டியிடவேண்டியிருந்தது. சிற்சில சமயங்களில் மோதவும் வேண்டியிருந்தது. கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நகர்ந்து ஆந்திரத்தில் உள்ள மசூலிப்பட்டிணத்தில் இறங்கி, அதை ஒரு தளமாக மாற்றிக்கொண்டார்கள். மெல்லமெல்ல தம் வணிகத்தை நெல்லூருக்கருகில் உள்ள ஆர்மகாம் என்னும் இடம்வரைக்கும் விரிவுபடுத்தினார்கள். அப்போது ஆர்மகாமின் பிரதிநிதியாகவும் மசூலிப்பட்டிணத்தில் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தவர் பிரான்சிஸ் டே என்பவர். தாம் தொடர்ச்சியா எதிர்கொண்ட பிராந்தியத் தொல்லைகளிலிருந்து விடுபடும்பொருட்டு வேறொரு புதிய இடத்தை வியாபாரத்துக்காகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அனுமதி கோரி கம்பெனியின் தலைமைக்கு எழுதினார். தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நிர்வாகம் அவரிடமேயே ஒப்படைத்தது. அந்த நோக்கத்தோடு அவர் கப்பலில் வந்து இறங்கிய இடம் மைலாப்பூர். பார்த்ததுமே அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. கூவமும் வங்கக்கடலும் கலக்கும் இடம் வணிகத்துக்குப் பொருத்தமானதெனத் தீர்மானித்தார். பூந்தமல்லியை ஆண்ட நாயக்கர்களுக்கு அந்த இடம் சொந்தமாக இருந்தது. அதை விலைகொடுத்து வாங்கினார் பிரான்சிஸ் டே. 1640 ஆம் ஆண்டில் மதராஸபட்டிணத்தில் பிரிட்டிஷ் வணிகர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது.

மதராஸபட்டிணத்தில் முதன்முதலாக ஆங்கிலேயர்களால் கட்டியெழுப்பட்ட இடம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. ஒரு நாட்குறிப்புச் சுவடியின் பக்கங்களைப் படிக்கும் சுவாரசியத்தோடு கோட்டை கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றை பார்லோ எழுதியுள்ளார். கோட்டைக்காக பல முறை நடைபெற்ற மோதல்களையும் அவர் பதிவுசெய்துள்ளார். இந்தக் கோட்டையில்தான் ஆண்டுக்கு ஐந்து பவுண்டு என்னும் சம்பளத்தின் அடிப்படையில் பத்தொன்பதாம் வயதில் ராபர்ட் கிளைவ் எழுத்தராக வேலையில் சேர்ந்தான். பத்தாண்டுகளுக்குள் அவன் அடுத்தடுத்து ஈட்டிய வெற்றிகளால் நிர்வாகம் அவனிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்தது. பொறுப்பும் அதிகாரமும் அவனை மூர்க்கனாக்கியது. ஒருநாள் அரசுப்பணத்தை கணக்குவழக்கில்லாமல் செலவு செய்கிறான் என்னும் குற்றம் சுமத்தப்பட்டு, இங்கிலாந்துக்கே திருப்பி அழைக்கப்பட்டு தண்டனைக்கு ஆளானான்.

சாந்தோம் தேவாலயம் கட்டியெழுப்பப்பட்ட வரலாறு மிகவும் சுவாரசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகச்சிறிய பிரார்த்தனைக்கூடமாக இருந்த இடம் பெரிய தேவாலயமாக உருவாகிறது, அதைச் சுற்றிக் குடியிருப்புகள் உருவாகின்றன, அந்த இடத்துக்கு ஒரு முக்கியத்துவம் உருவாகிறது. அதனால் கடற்கரையோரமாக இருந்த அந்த இடத்தை ஒவ்வொரு படையினரும் தாக்கி மாறிமாறிக் கைப்பற்றிக்கொள்கிறார்கள்.

வியாபாரிகளுக்கு இருவிதமான நோக்கங்கள் இருந்தன. இந்தியாவில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது ஒரு நோக்கம். இங்கிலாந்தில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பது என்பது இரண்டாவது நோக்கம். இந்தியப்பொருட்களை ஒருங்குதிரட்டி மலிவுவிலைக்கு வாங்கிவந்து தமக்கு விற்கக்கூடிய தரகர்களையும் தம் பொருட்களை உரிய லாபத்தோடு வாங்கி விற்பனைசெய்யும் ஆர்வமுள்ள தரகர்களையும் அவர்கள் கண்டடைந்தார்கள். கம்பெனியின் வியாபாரம் பெருகப்பெருக, பொருட்களை வாங்கிப் பாதுகாக்க பெரிய பெரிய கிடங்குகள் தேவைப்பட்டன. அவற்றை நிர்வகிக்க அலுவலகர்களும் எழுத்தர்களும் தேவைப்பட்டார்கள். நகரத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தபோது சரிப்படுத்த சிறிய அளவில் இராணுவமும் தேவைப்பட்டது. கோட்டைக்கு வெளியே வணிகர்களும் உழைப்பாளர்களும் கூட்டம்கூட்டமாகத் தங்கியிருந்தார்கள். அவர்களே நகரத்தை மெல்லமெல்ல விரிவாக்கினார்கள். நகர மக்கள்தொகை பெருகியபோது அது இரண்டாகப் பிரிந்தது. ஒன்று கருப்பர்கள் நகரம். மற்றொன்று வெள்ளையர்கள் நகரம். இரண்டையும் பிரிப்பதற்காக நடுவில் சுவர்எழுப்பப்பட்டது. அச்சுவரை எழுப்ப நிர்வாகம் தனியாக நிதியொதுக்க மறுத்ததால் மக்களிடம் வரிவசூலித்து எழுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அந்த வரிக்குப் பெயர் வால்டாக்ஸ் என்பதும் அந்தச் சுவரைச் சார்ந்த சாலையின் பெயர் வால்டாக்ஸ் ரோடு என்பதும் சுவாரசியமான தகவல்கள்.

இவைனைத்தும் பார்லோ அங்கங்கே கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தொகுத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். வியாபாரத்தில் பவளக்காரத்தெருவில் யூதர்கள் தோல்வியடைந்ததும் செட்டியார்கள் வெற்றிபெற்றதும் கூட இந்த நூலில் பதிவாகியுள்ளது. வண்ணாரப்பேட்டை என்கிற இடம் துணிவெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடமல்ல. கம்பெனியார்கள் தம்மிடம் இருந்த விற்பனைக்கான துணிகளை புதிதுபோல வெளுத்துக் கொடுப்பதற்கான வேலையாட்களைக் குடியேற்றிய இடமாகும். மதராஸ் எனப் பெயர் வந்ததற்கான காரணத்தை ஓர் ஊகமாகவே பார்லோ இந்த நூலில் முன்வைக்கிறார். பிரான்சிஸ் டேயால் வாங்கப்பட்ட இடம் ஒரு மீனவக்குப்பமாக இருந்தாலும் அங்கே வசித்து வந்த மீனவர்கள் வணங்கிவந்த தேவாலயத்தின் பெயரான மேட்ரே டே டியுஸ் என்னும் பெயரின் திரிபாக இருக்கக்கூடும் என்பது அவருடைய எண்ணம். சேப்பாக்கத்தில் கட்டப்பட்ட அரண்மனையைப்பற்றிய பார்லோவின் தகவல்கள் ஒரு புதினத்தைக் கட்டமைப்பதைப்போல உள்ளன. நூலின் இறுதிப்பகுதியில் ஜார்ஜ் கதீட்ரல், புனித ஆன்ட்ரு தேவாலயம், பச்சையப்பன் கல்லூரி, சென்னை சர்வகலாசாலை, லிட்டரரி சொசைட்டி ஆப் மெட்ராஸ், ஐஸ் ஹவுஸ் ஆகிய முக்கிய இடங்களைப்பற்றிய குறிப்புகள் சின்னச்சின்ன கதைச்சுருக்கங்களாக இடம்பெற்றுள்ளன.

இந்த நூலை எழுதும்போது பார்லோவின் மனச்சித்திரம் எத்தகையதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நன்றாக உணரமுடிகிறது. அவர் ஆங்கிலேயராக இருந்தாலும் ஒரு இடத்திலும் ஆங்கிலேயத்தன்மை வெளிப்படாதபடி, முழுக்கமுழுக்க அந்நகரில் வசிக்கும் ஒரு மனிதரின் பார்வையிலேயே எழுதியுள்ளார். தான் வாழ்கிற நகரம் எப்படி உருவானது, வரலாற்றில் அதற்குரிய முக்கியத்துவம் என்ன, வணிகச்சக்திகளும் அரசியல் சக்திகளும் ஒருவருக்கொருவர் எப்படி உதவிக்கொண்டார்கள், எதற்காக மோதிக்கொண்டார்கள் என எல்லாவற்றையும் ஆரஅமர யோசித்துத் தொகுத்து எழுதியுள்ளார். தோப்பின் அழகையும் ஆற்றின் அழகையும் கடற்கரை அழகையும் மனம்லயித்து எழுதியதைப் படிக்கும்போது அவருக்கு சென்னைநகரின்மீது இருந்த ஈர்ப்பைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆங்கிலேயர் காலத்திலேயே பெருநகராகிப் போன மதராஸ், இன்று சென்னை என்னும் மாநகரமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இக்கணத்தில் இதன் ஆதித்தோற்றத்தைப்பற்றிய வரலாற்றைப் படிப்பது உத்வேகமூட்டுவதாக உள்ளது. கோட்டையாக இருந்தாலும் சரி, அரண்மனை, தேவாலயங்கள் என எதுவாக இருந்தாலும் சரி, அதன் தோற்றத்துக்குப் பின்னணியில் யாரோ ஒருவரின் அர்ப்பணிப்புணர்வும் அயராத உழைப்பும் இருக்கின்றன. அதை உருவாக்குகிறவரின் கனவு அதில் இரண்டறக் கலந்திருக்கிறது. காலத்தின் முன் தன் கனவுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துவிட்டு அவர் மறைந்துபோகிறார். அடுத்தடுத்த தலைமுறையினர்கள் தம் தேவையை ஒட்டி அதை வளர்த்தெடுக்கிறார்கள் அல்லது அழிக்கிறார்கள். அழிப்பதுகூட ஒருவரின் கனவாக இருக்கலாம் அல்லவா? பார்லோவின் புத்தகத்தைப் படித்துமுடித்ததும் காலத்தையும் மாறிமாறித் தோன்றும் மானுடக்கனவுகளையும் இணைத்து அசைபோடும்பொழுது நம் மனம் உணர்கிற அனுபவம் மகத்தானதாக இருக்கிறது.

( சென்னையின் கதை. ஆங்கிலத்தில். கிளின் பார்லோ தமிழில் ப்ரியாராஜ். சந்தியா பதிப்பகம். புது எண் 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை-83. விலை.ரூ.80 )

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்