காத்திருப்பேன்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

நடராஜா முரளிதரன்



ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து
வழிந்து விழுந்த
ஊனமாய்
எகிறிப் பாய்ந்த
இச்சைகளாய்
இன்னும் என்னவாயோ
எல்லாம் சில
என்னுள் அடியுண்டு கிடக்கின்றன

அனைத்தையும் சுமந்து கொண்டு
எனது நடைபாதைப் பயணம்
தொடருகின்றது

விளங்காத கதையொன்றை
வெறி கொண்டு வாசிக்கும்
சிலரைப் பார்த்து
அசட்டை செய்யாது
அகன்று கொண்டிருக்கிறது
பெரும் மக்கள் கூட்டம்

அந்தக் கூட்டம்
எழுப்பிய பேரொலி
இன்னும் ஓயவில்லை
அது எழுப்பிய
அலை வெள்ளத்தில்
அனைவரும்
அடித்துச் செல்லப்பட்டனர்

அன்றொரு நாள் நான்
காலணியற்ற பாதத்துடன்
நடந்து கொண்டிருந்தபோது
பாதம் பதித்த நிலமெலாம்
எமது நிலம் என்றார்கள்
இன்னும் சிலர் ஆங்காங்கே
ஓடிந்து கிடந்த
துண்டுப்புலங்களையும்
தங்களது சொந்த நிலப்பரப்புக்கள்
என்று கூறினார்கள்

கடும் பனியில் நுழைந்து
பயணம் அமைந்ததுவாய்
பெருந்தூரம் அலைந்தாகி விட்டது

இன்னும் ஏன் அவை
என் நினைவுச்சுழியில்
உக்கி அழிந்து விடவில்லை

மரபணுக்களில் அவை
அமர்ந்து இன்னும்
பல்லாயிரம் வருடங்கள்
பயணிக்கும் என்று
எவனோ ஒரு கவிஞன்
கூறும் நாளை எதிர்நோக்கிக்
காத்திருப்பேன்

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)