காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

எஸ்.ஜெயஸ்ரீ


மானுட வாழ்வின் பல்வேறு பக்கங்களைச் சித்தரிக்கும் பாவண்ணனின் கட்டுரைகளை ஒருசேரப் படிப்பது மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. எளிமையானவை என்றோ, அற்பமானவை என்றோ எதையும் ஒதுக்கிவிட்டுச் செல்லாமல் கண்களையும் காதுகளையும் மனத்தையும் திறந்துவைத்திருப்பவருக்கு இந்த உலகில் அனுபவங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. பாவண்ணனின் மனக்கண்கள் எப்பொழுதும் திறந்தே இருப்பதால், வானத்து விண்மீன்களின் சுடர்ப்புள்ளிகளிலிருந்து தரையில் மின்மினிப்பூச்சிகளின் சுடர்ப்புள்ளிகள்வரை எல்லாச்சுடர்களையும் காண்கின்றன. புற உலகில் நமக்கு ஒளியை வழங்குபவை எல்லாம் சுடர்களே. நம் அகமொளிரத் துணையாக இருக்கும் அனுபவங்களையும் ஆழ்ந்த நோக்கில் சுடர்களாகவே கொள்ளலாம். ஒருவகையில் நம்மைச் சுற்றிச் சூழ்ந்துள்ள உயர்திணை மாந்தர்கள், அஃறிணைப் பொருட்கள் எல்லாமே அருகில் ஒளிரும் சுடர்கள்.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற தோல்விகள், ஏமாற்றங்கள், மானுட மனத்தின் வன்மங்கள், அதிர்ச்சிகள் என பல அம்சங்களை இத்தொகுப்பின் பல கட்டுரைகள் பதிவுசெய்கின்றன. இருபத்திரண்டு கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள்மட்டுமே மகிழ்ச்சியான பதிவுகளாக உள்ளன. ஏனைய பத்தொன்பது கட்டுரைகள் துக்கத்தையும் வலியையும் வேதனையையும் பதிவு செய்வதாகவே உள்ளன. காதல் தோல்வி, புறக்கணிக்கப்படும் முதியோர் நிலை, இளவயதுமுதல் மனத்தில் வேர்விட்டு வளரும் வன்மம் என்று ஒரு பொதுவான நோக்கில் இக்கட்டுரைகளை வகைப்படுத்தலாம்.
காதல் ஒரு மகிழ்ச்சியான உணர்வு. சொல்லிவைத்தோ அல்லது இணைத்துவைத்தோ வருவதில்லை. மனமொத்து காதலிக்கும் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் எனத் தீவிரமாக நினைக்கும்போது, இந்த உலகம் எப்படியெல்லாம் அதைத் தடுத்து நிறுத்தமுடியுமோ, அப்படியெல்லாம் தடுக்கிறது. சாதி, அந்தஸ்து, பெற்றோர் விருப்பம் என பல வடிவங்களில் தடைகள் முளைக்கின்றன.
”ஒற்றைமரம்” கட்டுரையில் காதலித்த பெண் தன் காதலனிடம் தன்னை மறந்துவிடும்படி சொல்லும் இடம் உருக்கமானது. அந்தப் பெண் தன் வாழ்க்கையை பிறகு ஏதோ ஒருவகையில் அமைத்துக் கொள்ளக்கூடும். ஆனல் அந்தப் பையன் அவளையே நினைத்து ஒற்றைமரமென இருக்கிறான்.
”உணமையைக் கண்டடைதல்” கட்டுரையில் காயத்ரியின் தந்தை சாதிபற்றிய நம்பிக்கையில் திடமாயிருப்பதால் திருமணம் தடைபட்டுவிடும் என்று நினைக்கும் வேளையில் தந்தை மனம்மாறி திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார். விடைசொல்லமுடியாத கேள்வி கட்டுரையில் சாதியோ அந்தஸ்தோ ஏதோ ஒன்று காதலர்களைப் பிரிக்கிறது. அந்தப் பையனை கண்மண் தெரியாமல் அடித்துபோடவும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லவுமாகச் செய்துவிடுகிறது.
ஆற்றின் விழிகள் கட்டுரையில் விவரிக்கப்படும் காதல் வேறுவிதமானது. பெற்றோர் அந்த இளைஞனின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதிவரை முயற்சிசெய்து பார்த்துவிட்டு தோல்வியுணர்வோடு தற்கொலை செய்துகொள்கிறான் இளைஞன். தொடக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்த அவன் தாய் அவன் பிரிவு தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறாள். பேகம் மஹால் கூட ஒரு காதல் காவியம் என்றே சொல்லவேண்டும். மறைந்தும் ஒளிந்தும் காதலிக்கும் ஜோடி, யாரோ தம்மைக் கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தவுடன் அந்தக் காதல் பரிமாற்றங்கள் நின்றுபோகின்றன.
காதல் என்பது இயற்கையாகத் தோன்றும் உணர்வு. நினைத்தவனையே/ நினைத்தவளையே கரம்பிடித்து இல்வாழ்க்கை நடத்தவேண்டும் என்று ஆசைப்படுவதும் இயற்கையே. ஆனால், காதல் காதலாகவே இருக்கும்வரைமட்டுமே இன்பங்கள் நீடிக்கின்றன. அது திருமணமாகக் கனியவேண்டும் என்பதற்குள் எத்தனைஎத்தனை தடைகள், எத்தனை சோகங்கள்? அது திருமணத்தில் முடியும்வரை எத்தனை உணர்ச்சிமோதல்கள், மன விசாரங்கள்?
தாங்கள் பெற்ற பிள்ளைகள் மகிழ்ச்சியாக் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைத்துவிட முடியாதபடிக்கு அவர்களுடைய தன்மானம் தடுக்கிறது. தாங்கள் பார்த்துவைக்கும் பெண்ணையோ பிள்ளையையோதான் திருமணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வறட்டுப் பிடிவாதத்தில் நிற்கும் பெற்றோர், அப்படிப் பார்த்துவைக்கும் திருமணங்களும் தோல்வியடைய வாய்ப்புண்டு என்பதுப்ற்றியெல்லாம் யோசிப்பதில்லை. அவர்களுடைய இந்தப் பிடிவாதங்கள் அந்தப் பிள்ளைகளை பல சமயம் த்ற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன.
ஒற்றைமரம் கட்டுரையில் தன்னை மறந்துவிடுமாறு சொல்லிப் பிரியும் பெண்ணுக்கு, பெற்றோரின் நெருக்கடிகள் அப்படி ஒரு முடிவையெடுக்கவேண்டிய சூழலை அளித்திருக்கலாம். பெற்றோரா, காதலனா என்று தடுமாறும் பெண்கள் பலர், இருவருமே நன்றாக இருக்கவேண்டும் என நினைத்துத் தன் காதலைத் தியாகம் செய்யக்கூடியவர்களாக் இருக்கிறார்கள். ஆற்றின் விழிகள் கட்டுரையில் மகனையும் பறிகொடுத்துவிட்டு, அந்தக் குற்ற உணர்வில் தன்னையும் அழித்துக்கொள்ளும் தாயின் சித்திரம் மனத்தைப் பாரமாக்கி யோசிக்கவைக்கிறது. உண்மையைக் கண்ட்டைதல் கட்டுரையில் இடம்பெறும் தந்தை கூட தான் பார்த்த ஏதோ ஒரு தற்கொலை நிகழ்ச்சியினால்தான் தன்னுடைய சாதிப் பிடிவாத்த்தைவிட்டு இறங்கிவருகிறார். ஒருவேளை, அதுவே, `அவர் மனமாற்றத்துக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது.
இதே சாதியும் காதலும் மோதிக்கொள்கிற கட்டுரைதான் எழுத்தும் எதார்த்தமும். பசவண்ணரைப் பின்பற்றி சரணர்களாக மாறியவர்கள், சாதி என்னும் வலையில் அகப்பட்டுக்கொண்டு தாங்கள் கொண்ட கொள்கைக்குத் தாமே எதிரானவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
காதல் அழிவதுபோலவே கனவுகளும் பலமுறை அழிகின்றன. நிறைவேறவே முடியாத கனவுகளாக ஆகின்றன. பெரிய வீடு கட்டிக் குடியேற நினைத்த ரூபலிங்கம் அக்கனவு நிறைவேறாமலேயே இறந்துபோகிறார். ( சுதந்திரம் பெறும் கனவு கண்ட பாரதி அது நிறவேறும் முன்பாகவே இறந்த்துபோல) தன் மகன் ந்ல்லவனாக வளர்ந்து தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் தாயின் கனவுகள் பொய்த்துப் போகின்றன. பாவண்ணன் காட்டுவது இருவேறு தாய்கள். ஆனாலும் அந்த்த் தாலாட்டிய தாய்தான், இப்போது பிச்சையெடுக்கும் தாய் என்று தோன்றிவிடுகிறது. சித்திரங்களை இப்படி அழகாக இனைத்திருப்பதன் மூலம் ஒரு நீட்சியை உருவாக்கமுடிவது பாவண்ணனின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது.
இப்படி கனவுகளின் வீழ்ச்சியாகவே திரையரங்குகள் அழிந்துவருவதையும் மிகவும் எதார்த்தமாகப் படம் பிடித்துள்ளார். பணிஓய்வுக்காலம் பலருக்கும் இனிமையாகவோ, மனத்துக்கு இதமாகவோ இல்லை என்பது பலருக்கும் காணக்கிடைக்கும் அனுபவங்கள். அவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றமாக இருக்கிறது ஒரு கேள்வியும் பல விடைகளும் கட்டுரை. சிறுவர்களின் உலகில் நிறைந்திருக்கும் வன்மங்களைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகளான விளையாட்டும் வேடிக்கையும் வன்மத்தின் ஊற்று இரண்டும் மனம் பதறவைக்கும் முக்கியமான கட்டுரைகள். கிரிக்கெட் மட்டை தன்னுடையது என்பதாலேயே, அந்தப் பையன் மற்ற சிறுவர்களை ஏமாற்றியும் அலைக்கழித்தும் மனத்துக்குள் குரூரமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறவனாக இருக்கிறான். அதைப்போலவே யாரும் பார்க்காத வேளையில் பொம்மையைப் பிய்த்தெறியும் சிறுவனைப் பற்றியும் சொல்லவேண்டும். இந்தச் சிறுவர்களுக்கு சின்ன வயதிலேயே இப்படி ஒரு வன்மத்தையும் குரூரத்தையும் ஊட்டுவது எது? இவர்கள் வளரும்போது எப்படிப்பட்ட மனிதர்களாய் உருவாவார்கள்? என்ற கேள்விகளை கட்டுரைகளின் நீட்சியாக நாம் உருவாக்கிக் கொள்ளமுடிகிறது.
முகவீணை கட்டுரை முழுக்க, அந்த முகவீணையின் ஒலியே தொடர்வதுபோல ஓர் உணர்வு. பேகம் மஹால், ஒரு ரயில் பயணம் ஆகிய கட்டுரைகள் ஒரு துப்பறியும் கதையைப் படிப்பதுபோல சுவாரஸ்யத்தைத் தருகிறது.
இப்படி பல மனிதர்களையும் குணாதிசியங்களையும் இக்கட்டுரைகள்வழியாக உள்வாங்கிக்கொள்வதால் ஒருவகையில் நம் அகம் துலங்குகிறது என்பதை நூலைப் படித்துமுடிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணரமுடியும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். பாவண்ணன் பாராட்டுக்குரியவர்.
(அருகில் ஒளிரும் சுடர்- கட்டுரைத்தொகுப்பு. பாவண்ணன். அன்னம் வெளியீடு. எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர். )

Series Navigation

எஸ்.ஜெயஸ்ரீ

எஸ்.ஜெயஸ்ரீ