களை…

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


களையெடுத்த வயல்.

வரப்பில் மிதிபடும்
பயிரோடிருந்து பறித்துப்போட்ட களை.

மிதிபடும் தடம் விட்டு
வரப்போரம்
வேர்விட நினைத்தாலும்
விடுவதில்லை
முன்பே முளைத்திருக்கும் புல்.

இந்தக் களை
களைக்கும் களை.

புல்லுக்கும் புல் களையாவது போல
நெல்லுக்கு நெல் களையாகும்தான்.

உயிரோடுயிராய் ஒட்டி உறவாடி
உயிரெடுக்கும்
புல்லுருவி பொய்மனிதர் போல

நெருங்கி நின்று
நீர் உரம் உறிஞ்சி
நெடுநெடுவென வளர்ந்து
கதிர்விடுகையில் கதிரழகு காட்டாமல்
பழுப்பாடை அணிந்து
அறுவடைக்குத் தரை பார்க்கையில்
ஆங்காங்கு
பச்சையாய் தலை நீட்டிக்கொண்டு
பயிரோடு பயிர்தான்
கலப்பென்ற பெயரில் களைதான்.

வேறு வேறு
நெல்லுக்கு நெல் களைதான்.

இப்படி
மொழிவயலிலும் கலக்க
சொல்லுக்கு சொல் களைதான்.

விளைய விடக் கூடியதல்ல
களையப் படக் கூடியது
களை.
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி