கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

தாஜ்


இந்த வருடத்திற்கான +2 தேர்வின் முடிவுகள் சென்ற வாரத்தில் வந்தது. வழக்கm போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பொதுவில் , எல்லா தரப்பு மாணவ மாணவிகளும் ஆங்காங்கே அதிக மதிப் பெண்கள் பெற்று தேர்வு பெற்றவர்களாக விளங்குகிறார்கள். சென்றவருடம் மாதிரியே இந்த வருடமும் தேர்வு பெற்றவர்களின் சதவிகிதம் கூடுதலாகவே இருக்கிறது. தொடரும் மாணவிகளின் அதிகமான தேர்வு சதவிகிதம் வருடா வருடம் மகிழ்ச்சியைத் தரும் சங்கதியாக நிலைத்து விட்டது.

மேற்படிப்புக்காக, பலமாதிரியான கல்விகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாணவர்கள் முனைந்து கொண்டிருக்க; இன்னொ ரு பக்கம், தங்களது குழந்தைகளை ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பெற்றோர்களின் கியூ வரிசை, பெரு நகரம் / டவு ன்/ கிராமம்/ குக்கிராமம் என்கிற பேதமில்லாமல் நீண்டுக் கொண்டே இருக்கிறது. சமூக அக்கறை கொண்டோர்களும், கல்வி குறித்த கணிப்பாளர்களும் மகிழ்ச்சி கொள்ளும் காலம் இதுவாகதான் இருக்க முடியும்! மக்கள் எல்லோரும் பங்கெடுத்து இப் படி வாரியணைத்துக் கொள்ளும் இந்தக் கல்வி, இதே மண்ணில் நம் மக்களுக்கு ஓர் காலத்தில் எட்டாக் கனியாக இருந்தது. அது குறித்த வரலாறு என்பது தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட மக்களின் சோகங்களால் ஆனது.

கல்வி ஒரு காலகட்டத்தில் உயர்ந்த குலத்தோரைத்தவிர, பிறஅனைத்து மக்களுக்கும் அது மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ஒன் றாகவே இருந்தது. அன்றைக்கு கல்வி என்றாலே அது சமஸ்கிருத மொழி வழி கல்விதான். அந்த மொழியில் மேன்மையுறத்த க்க பலதரப்பட்ட கல்விகள் இருந்தது. அந்த மொழியை தெய்வ மொழியென்றும் / தெய்வீகம் சார்ந்த மொழியென்றும் கூறி, பொத்திப் பாதுகாத்து அடுத்த இன மக்களது கண்களில் இருந்து மறைத்தார்கள். உயர்ந்த குலத்தோரைத் தாண்டி, இன்னும் சிலரும் அதைக் கற்றார்கள் என்றால்…… அவர்கள் மன்னர்களாக, மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்களாக, அல்லது மகத்து வம் பொருந்தியவர்களாக இருந்திருக்கக் கூடும். தவிர, அதை யாரும் தேடி நிற்கவும்கூடாது. ஏதேனும் ஒரு ரூபத்தில் பிற இனத்தவர்கள் அந்தக் கல்வியை தேடி கற்க முற்படும் பட்சம், அவர்கள் தண்டனைக்குரியவர்களாக கருதப்பட்டார்கள். தண்டி க்கவும் பட்டார்கள்

இத்தனைக்குப் பிறகும் அன்றைய பொது ஜனங்களும், பாமரமக்களும் மொத்தமாய் மூளியாகிவிடவில்லை. அவர்களில் சிலர் தங்களது தாய் மொழி வழியிலான கல்வியை கிட்டியது வரை ஆங்காங்கே தவமிருந்து கற்பவர்களாகவே இருந்தார்கள். அப் படி அவர்கள் கற்க முற்பட்ட பாஷைகள் எல்லாம், உயர் குலத்தோரின் பார்வையில் நீசபாஷைகள்! உயர்மக்கள் உதாசினப்ப டுத்திய அந்த நீசபாஷைகள் கொண்டு, சாமானியர்களாகிய பிற இனத்தவர்கள், ஆங்காங்கே நிறைய சாதிக்கவும் செய்தார்கள். அந்த வகையில் தமிழில் என்று பார்த்தால், இன்றைக்கு நாம் போற்றும் குறளும், காவியமும், இன்னும் எண்ணற்ற காப்பியங் களுமே அதற்கு சான்று!

கல்வி குறித்த இந்தக் கெடுபிடிகள் தொடர்ந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, பாரதத்தை ஆளவந்த மொகலாயர்கள் கசியவிட்ட கல்வி என்பது மதரஸா சார்ந்தது. அரபிப் புலமை, வேதத்தின் தெளிவு, நீதி நெறி போதனை, வானசாஸ்திரம், கணிதம், கொஞ்சம் மருத்துவம், கொஞ்சம் தத்துவம் என்பதோடு தேங்கிப்போன கல்வி அது. அடுத்தசில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இம்மண்ணை தன் வசப்படுத்தி ஆளவந்த ஆங்கிலேயர்கள், தங்களது அரசு அலுவலகங்கள் நடக்க ஏதுவான ஒரு கல்வியை நம் மக்கள் சிலருக்கு தர முன்வந்தானர். அதன் தொடர்சியாய், மெக்காலே என்ற ஆங்கிலேயனால் பொதுகல்வித் திட்டம் ஒன்றை வகுத்து, கல்வியை விஸ்தீரணப்படுத்தி இன்னும் பலருக்கென்று தாராளப் படுத்தவும் செய்தார்கள்.

ஆங்கிலேயனை எதிர்த்து சுதந்திரவேட்கையில் இருந்த நம்மக்கள் பலரும் அவனது கல்வியை, அவனது எதிர்ப்போடு இணைத்துப் பார்த்து துவேஷம்கொண்டு, அதைத் தேடிக்கொள்ளாமல் ஒதுக்கினார்கள். ஆங்கிலேயன் குறித்த எதிர்ப்பென்பது வேறு, அவன் தரும் கல்வியை காலத்தில் தேடிக் கொள்வதென்பது வேறு எனப் பாகுபடுத்திப் பார்த்து, அவன் தந்தக் கல்வியை கற்ற வர்கள் எல்லாம் அன்றைக்கு மிளிர்ந்தார்கள். இப்படி மிளிர்ந்தவர்களில் பலரில், ஒரு காலத்தில் கல்வியை அடுத்தவர்களுக்கு தரமறுத்த ஆதிக்கமக்களது சந்ததியினரே அதிகம். பொத்திபொத்திப் பாதுகாத்ததினால்தான் என்னவோ அவர்களது மேன்மைக்குரிய சொந்த மொழி வெகுஜனத்தை எட்டாது சிறுத்துப்போக, இப்படி அவர்களே இன்னொரு கல்வித் தேடி வர வேண்டிய நிலை!

ஆங்கில அரசாங்கத்தால் மக்களுக்கு கல்வி கிடைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தின் பிற்பகுதியில், இன்னொரு கல்வி எழுச்சி நம் தேசத்தில் நிகழ்ந்தது. ஆங்கிலேயர்கள் தரும் கல்வி என்பது கிருஸ்துவமத ரீதியான கல்வி என்பதாகவும், அங்கே பயிலப் போகிற நம் மக்களுக்கு அவர்கள் மறைமுகமாக கிருஸ்துவத்தை போதிக்கிறார்கள் என்றும் கருதிய இந்து மத தனவந்தர்கள் சிலர் ஆங்காங்கே உயர் நிலைப் பள்ளிகளையும், கல்லூரிகளைக் கட்டி தம்மக்களுக்கு முன்வந்து கல்வியைத் தந்தார்கள். இன் னும் சில தனவந்தர்கள் பல்கலைக்கழகத்தையே எழுப்பி பெருமைக் கொண்டார்கள். இதன் வழியே இஸ்லாமிய தனவந்தர்கள் சிலரும்கூட சிலபல கல்லூரிகளை எழுப்பி கல்வி தந்தவர்களாக பெயர் போட்டார்கள். இந்த சுவரசியமான போட்டியில் பயன டைந்தவர்கள் என்னவோ எல்லாதரப்பின் மக்களும்தான்!

****

நம்தேசத்தின் அடுத்தக்கட்ட கல்வி முனைப்பு என்பது, சுதந்திர இந்தியாவில் தொடங்குகிறது. குறிப்பாய் தமிழகத்தில், அந்த முனைப்பு அதன் எழுச்சியோடு ஒரு சேரவே தொடங்கியது. 1947-ல் நாம் சுதந்திரம் அடைந்திருந்தாலும், 1954-ல்தான் அது தமிழகத்தில் தகைக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டு அது! தமிழக முன்னேற் றம் குறித்து அன்றைக்கு அவர் கண்ட பல்வேறு கனவுகளில் ‘கல்வியை பரவலாக்க வேண்டும்’ என்பதும் ஒன்றாக இருந்தது. அதுவே அவரது ஆட்சிக்காலத்தில் பிரதான நோக்காக பரிமாணம் கொண்டது. காமராஜிடம் கல்வி ஏன் அத்தனை முக்கியத் துவம் பெற்றது என்பதை அறிய, அன்றைய தமிழக அரசியலை நாம் உற்று நோக்கினாலொழிய, வேறு வகையில் அதற்கான விடையை அறிய முடியாது. குறிப்பாய் அன்றைய இரண்டு அரசியல் காரணிகளை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதில் ஒன்றின் சொந்தக்காரர் திரு. ராஜாஜி, மற்றொன்று தந்தை பெரியார்!

1. மதிப்பிற்குறிய ராஜாஜி அவர்கள் இந்திய அரசியல் வானில் ‘சாணக்கியர்’ என்ற பட்டங்களை எல்லாம் சுமந்து, பல பதவி களை வகித்த பிறகு, 1952 ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஆகிறார். அவரது பதவிக்காலத்தில் வினோதமான ஒரு கல்விக் கொள்கையை அறிவிக்கிறார். ‘குலக்கல்வி திட்டம்’ என்கிற அந்தக் கல்வி கொள்கையின் படி, மாணவர்கள் தங்களது கல்வி நேரம் போக; மற்றைய நேரங்களில் அவரவர்கள் அவரவர்களது தந்தைகள் செய்யும் தொழிலை கற்க வேண்டும்! இந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாது, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியிலேயே பெரும்பான்மையோரின் எதிர்ப்பிற்கு உள்ளாகிறது. எதிர்ப்பிற்குரிய அந்த பெரும்பான்மையோரின் தலைவராக காமராஜ் முன் நிறுத்தப்படுகிறார். கல்வியை முன் வைத்து எழுந்த சர்ச்சையை ஒட்டி ராஜாஜி பதவி விலகவேண்டி வர, காமராஜ் முதலமைச்சராகிறார்.

{இங்கே ஒன்றை என்னுடைய கருத்தாக பதிவுசெய்ய விரும்புகிறேன். உலகநாடுகளில் எந்தவொரு அரசியல்தலைவரும் சொல்லாத, கல்வி சார்ந்த ஓர் கருத்தை ராஜாஜி சொன்னார் என்பது நிஜமானாலும், இப்படிச் சொல்கிற அளவிலான அறிவிலியாக அவரை நான் கணிக்கவில்லை. எதிர்மறை அணுகுமுறையில் மக்களை சரியானதிசையில் செலுத்துவது என்கிற அரசியல் சாணக்கியம் சார்ந்த செயல்பாடாகத்தான் அவரது அந்தக் கூற்றைப் பார்க்கிறேன். இதுகுறித்து, பின் ஒருதரம் விரிவாக எழுத எண்ணமுண்டு.}

2. பெரியார் தன்னுடைய சீர்திருத்தக் கருத்துக்களால் மக்களை அலையென தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்த அரசியல் கால கட்டமது. உயர்குல மக்களுக்கு நிகராக தமிழ்பேசும் எல்லாத் தரப்பு மக்களின் குழந்தைகளும் கல்விகேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும், குறிப்பாய் பெண் பிள்ளைகள் கல்வியில் முழுமை அடைய வேண்டும், கல்வி கொண்டுதான் மக்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், அவர்களின் அறியாமைகளையும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் போக்க முடியும் என்பன அன்றைய அவரது பிரச்சாரத்தின் பிரதான கருத்து. அரசியல் இயக்கமாக இல்லாமல் சமூக இயக்கமாக தனது
இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்ததால், சட்டங்களின் மூலமாக தனது கருத்துக்கள் நடைமுறைப் படுத்தப்பட, அரசியல் இயக்கங்களை அவர் நாடிநிற்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் காமராஜை முழுமையாக நம்பினார். தன்னுடைய முழு ஆதரவையும் காமராஜுக்குத் தந்து பின்புலமாகவும் நின்றார். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை முழு வேகத்தில் எதிர்த்தார். குலக் கல்வித் திட்டம் குறித்த எதிப்பில் காமராஜையும் முழுமையாக ஈடுபட வைத்தார். ராஜாஜியை எதிர்த்த காமராஜ் முதலமைச்சர் ஆவதற்கு தொடர்ந்து பக்க பலமாக இருந்தார்.

கல்வி குறித்த இத்தகைய தாக்கங்களோடு அன்றைக்கு காமராஜ் முதலமைச்சராக ஆனதாலோ என்னவோ, அவரது செயல்பாட்டில் கல்வி பிரதானமாகிப் போனது. ராஜாஜியின் பக்கமிருந்த சி.சுப்ரமணியன் என்கிற அனுபவஸ்த்தரை தனது மந்திரி சபை யில் கல்வி மந்திரியாக்கி, பெரியாரின் சிந்தனைப் பலத்தோடு விளங்கிய நே.து.சுந்தரவடிவேலை கல்வி அதிகாரி ஆக்கி, தனது கட்சி சார்ந்த தனவந்தர்களை எல்லாம் ஊர்தோறும் பள்ளிக்கூடம் கட்டவைத்து, மாணவர்களுக்கு கல்வியையும் இலவசமாக்கி, மதிய உணவளித்து, எல்லாத் தரப்பு மாணவர்களும் தடையில்லாமல் கல்வி பெற செயல்பட்டு, பெரியதோர் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார்! கல்வி அறிவால் வீழ்ந்து கிடந்த தமிழகம் அதன் பின்னேதான் தலைதூக்கத் துவங்கியது. காமராஜுக்கு பின் வந்த அரசுகளும் அவரது கல்வி நோக்கிற்கு ஊறு விளைவிக்காமல் இன்னும் இன்னும் என்று பாராமரிக்க, தமிழகத்தில் பரவலான கல்வி எங்கும் தழைத்தது. அது இன்றைக்கு பூத்து காய்த்துக் குலுங்கிக் கொண்டும் இருக்கிறது.

‘எங்கப்பா தர்மலிங்கம் நெசவுத் தொழில் செய்றாரு, அம்மா பிரேமா வீட்ல இருக்காங்க, திருச்செங்கோடு எனக்கு சொந்த ஊரா இருக்கறதனால இங்கேயே வித்யாவிகாஷ்ஸ்கூல்ல ஆறாவதிலிருந்து படிக்கிறேன்.10வதுல நான்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், +2லயும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தாத்தான் நம்மோட திறமை வெளிப்படும்னு வைராக்கியத்தோடு படிச்சேன். அதிகம் படிக்காத நெசவாளர் குடும்பத்தில் பிறந்து நான் இந்த இடத்தை அடைந்தது நினைத்து என் அம்மா உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வடித்தே முகமே வீங்கிவிட்டது.” என்கிறார் இந்த வருடம் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கும் மாணவி தரணி.

‘எனது சொந்தஊர் பெரியகுளம். திருச்செங்கோட்ல ஹாஸ்டல்ல தங்கிப்படித்தேன். நான் டி.வி. பார்ப்பதே கிடையாது. எப்போ தும் படிப்பு படிப்பு என்று அலைஞ்சேன். அதற்குப் பலனா ஸ்டேட்ல செகண்ட் வந்திருக்கேன்!’ என்கிறார் இந்த வருடம் +2 தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றிருக்கும் மாணவர் தளபதி குமார விக்ரம்.

‘நான் மாநில அளவில் முதலிடம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தஅளவுக்கு மதிப்பெண் பெறுவதற்கு
என்னுடைய பள்ளித் தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தார்கள். வீட்டில் என் அம்மாவும்,
அப்பாவும் எனக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்கள். நான் இரவில் படிக்கும் போது என்னுடைய தங்கை உத வியாக இருப்பாள். படிப்பு ஒன்றையே மனதில்வைத்து இரவு, பகல் என்று பாராமல் படித்தேன்’ என்கிறார் இந்த வருடம் +2 தேர்வில் மாநிலத்தில் நான்கு பாடங்களில் 200க்கு 200 எடுத்திருக்கும் சென்னை அண்ணா நகர், அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆஷா.

‘நான் மைக்ரோ பயாலஜி பாடத்தை ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்தபோது அந்த வகுப்பில் என்னுடன் சேர்த்து 3 பேர் மட்டுமே
படித்தோம். நான் மிகுந்த ஈடுபாட்டுடன் மைக்ரோ பயாலஜி பாடத்தை படிப்பதை உணர்ந்த எனது வகுப்பு ஆசிரியர் அனிதா,
பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் ஆகியோர் மிகவும் ஊக்குவித்தனர். இதனால் நான் நன்கு படித்து மாநில அளவில் சாதனை படைக்க முடிந்தது.”என்கிறார் இந்த வருடம் +2தேர்வில் மாநில அளவில் மைக்ரோபயாலஜி பாடத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள, சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சபானா பர்வீன்.

‘நான் ஏழை விவசாயக் கூலியின் மகள். தந்தையும் தாயும் கூலி வேலை செய்துதான் என்னையும், எனது அக்கா, தங்கையை யும் படிக்க வைக்கின்றனர். ஒரத்தநாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் இலவச மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்தேன். அடிப்படை அறிவியலில் முதலிடம் என்கிற மகிழ்ச்சி இருந்தாலும் நான் மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் உள்ளேன்.” என்கிறார் இந்த வருடம் +2 தேர்வில் மாநில அளவில் அடிப்படை அறிவியலில் முதலிடத்தைப் பெற்ற மாணவி சுதா.

இந்த 2007 – 2008 கல்வி ஆண்டின் +2 தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த சாதாரணப்பட்ட மாணவ, மாணவிகளின் இந்த சில யதார்த்தக் கூற்றுகள் நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கிறது.

இந்தத் தேர்வை ஒட்டிய இன்னொரு குறிப்பு, பாடவாரியாக 200க்கு 200 மார்க்க் பெற்ற மாணவ,மாணவிகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகம் என்கிறது. குறிப்பாக கணிதத்தில்சென்ற ஆண்டு 200க்கு 200பெற்ற மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 1568 என்றால், இந்த ஆண்டு அது 3852! கல்வி எல்லாதரப்பு மக்களுக்கும் போய் சேர்ந்ததற்கும், அதில் அவர் கள் வெற்றி பெற தொடங்கி விட்டதற்கும் இந்தக் குறிப்புகளே சான்று.

இந்த வாரத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.எல்.சி -கான அரசு தேர்விலும் மாணவர்கள் தங்களது சாதனைகளை இந்த ஆண்டும் முன் எடுத்து சென்றுள்ளனர். இந்த ஆண்டு 80.9 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல், இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 77.8 சதவீதம் என்றால், மாணவிகள் 83.9! எஸ்.எஸ்.எல்.சி.-யில் முதல் இடம் ராம் அம்பிகை என்றால், இரண்டாவது இடம் ஷகீனா, ஜோசப் ஸ்டாலின், மருதுபாண்டியன், சுவேதா! இந்த தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள் 13,468! இன்னொரு பக்கம், பட்டப்படிப்புகளில்/ அதன் பல்வேறு துறைகளில்/ தங்களது தொடர் வெற்றி யை மாணவர்கள் பறைசாற்றியபடி இருக்கின்றனர். தவிர, சமீபத்தில் வெளிவந்த IAS, IPS தேர்வுவில் தமிழகத்தில் 79 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள்! சமீப ஆண்டுகளில் தமிழகம் காணாத வெற்றி இது!!

இன்றைய காலக்கட்டத்தில் கல்வி கற்க பெருவாரியான மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை கணக்கில் கொண்டும், வளர்ந்து வரும் கல்வியின் தேவைகளை மனதில்கொண்டும் அரசு சார்ந்த பள்ளிகள், கல்லூரிகள் நீங்கலாக, சில தனியார்களும் இதில் பங்கெடுப்பவர்களாக இருக்கிறார்கள். அதன் பொருட்டு, தனியார் கான்வெண்டுகளும், கல்லூரிகளும் ஆண்டுதோறும் ஆங்கா ங்கே கிளைத்தபடியே இருக்கிறது. இப்படி கல்வி தரும் பெருவாரியான கல்விநிறுவனங்கள் சம்பாத்தியத்தை குறியாகக் கொண் டே இயங்குகின்றன. ஆனாலும், இதன்வழியே நம் மாணவர்களின் கல்வித் தேவைகளை தடையில்லாமல் பூர்த்தி ஆவதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தின் திக்குகள் தோறும் பல மாதிரியான சமூக நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், அறக்கட்ட ளைகளும் கல்வி முன்னேற்றத்தில் பங்கெடுப்பர்களாக, ஊக்குவிப்பவர்களாக செயல்பட்டு மாணவர்களின் கல்வி ஆர்வத்தை வளர்த்தெடுக்கிறார்கள். எங்கள் ஊர் சீர்காழியில், ‘பால்சாமி நாடார் அறக்கட்டளை’ சார்பாக, ஆண்டுதோறும் மாநில / மாவ ட்ட / தாலுக்கா மற்றும் சீர்காழி டவுன் அளவிலும் +2 & S.S.L.C யில் முதல், இரண்டு, மூன்று மதிப்பெண் எடுத்த நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகளை அழைத்து விழா எடுக்கிறார்கள். அப்படி வரும் மாணவ மாணவிகளோடு அவர்களின் பெற்றோர்களையும், அவர்களது தலைமை ஆசிரியர்களையும் சேர்த்தழைத்து ‘செவண்டி எம்.எம்.’ சைஸிலான தனிமேடை அமைத்து, அதில் சிம்மாசனம் மாதிரியான ஆசனமிட்டு, அதில் அவர்கள் எல்லோரையும் அமரவைத்து, இன்னொரு மேடையில் வி.ஐ.பி கள் அந்த சாதனை படைத்த மாணவ மாணவிகளை புகழ்து, மெச்சி முடித்த பிறகு, நிறைவான பரிசுகளை அவர்களுக்குத் தந்து சிறப்பிக்கிறார்கள்! இந்த விழா காமராஜ் பெயரிலேயே நடக்கிறது. ‘நாடார் மஹாசங்கம்’ லட்சகணக்கில் செலவும் செய்கிறது. சீர்காழியைப் பொருத்தவரை தீபாவளி, பொங்களுக்கு நிகரான விழா அது.

சீர்காழியின் இன்னொருபுறம் மாணவர்களின் கல்விக்கு உதவும் தாகம் கொண்டவரான அப்துல் மாலிக் B.E. அவர்கள் தனது தந்தையின் பெயரில் ‘அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை’ அமைத்து (சீர்காழி – தாடளான் கோவில் பகுதியில்) +2 & S.S. L.C தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் தன் சொந்தப் பணத்தில், பரிசுகள் பல அளித்து மாணவர்களை ஊக்குவிக்கிறார். தமிழகம் தழுவிய இத்தகைய சிந்தனைக் கொண்டோர்கள் இன்றைக்கு அதிகம். காமராஜின் கல்விக் கனவு இத்தனைக்கு பிரமாண்டமாய் நினைவாகிக் கொண்டிருப்பதில் இத்தகைய பலரின் உயரிய பங்கை சிறப் பாகவே பார்க்க வேண்டும்.

பரவலான கல்வித்திட்டத்தை தனது ஆட்சிகாலத்தில் கொண்டுவந்தபோது, “படித்தவன் பிள்ளைகள்தான் படிக்கமுடியுமா? படிக் காதவன் பிள்ளைகள் படிக்கமுடியாதா என்ன?” என்று மேடைகள் தோறும் சூளுரைத்தார் காமராஜ். “வயதான பாட்டிகள் எல்லாம் தங்களது வீட்டு வெளித் திண்ணைகளில் உட்கார்ந்து ஆங்கில தினசரிகள் படிப்பது மாதிரி, நம் குடும்பத் தாய்மார்களும் பாட்டிகளும் படிக்கும் காலம் வரணும்! என்று தந்தை பெரியார் ஊர்தோறும் மக்கள் மன்றத்தில், அவர்களின் அறிவுக் கண்கள் விழிக்கும் விதமாக உணர்வூட்டினார். அன்றைக்கு அவர்கள் இருவரும் கண்ட கனவு, இன்றைக்கு பெருமளவில் நினைவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த தேசத்தில் எல்லா மக்களும் கூனிக் குறுகி வணங்கிப் பணிகிற அனைத்து தரப்பு கடவுளர்களும்கூட அவர்களின் மக்களுக்கு ‘காலத்தே கல்வி தர’ அருள் பாவிக்காதபோதிலும், கல்வி தந்தவர்களை கடவுளுக்கு நிகராக ஒப்புமைக் காட்டும் சொலவடை ஒன்று தமிழில் இருக்கிறது. அதன்படி பார்த்தால், பெருந்தலைவர் காமராஜ் மட்டுமல்ல, விசேசமானதோர் கோணத்தில் தந்தை பெரியாரும் கடவுள் ஆகிறார்!


நன்றி: தமிழ் தினசரிகள் & தமிழ் வாராந்தரிகள்
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்