கண்ணாடிகள்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

கவிஞர் புகாரி


உன் வார்த்தைகள்
உன் முகம் காட்டும்
கண்ணாடிகள்

அறிவழிந்த பொழுதுகளின்
மடிகளில் அமர்ந்துகொண்டு
இன்றைய உன்னை
இன்றே பார்த்தால்
உனக்கு அழகாகத் தெரியலாம்

நாளை உன்னை
நீயே பார்க்க நேர்ந்தால்
அதன் விகாரத்தில் நசுக்கப்பட்டு
வெடித்து அழத் தோன்றும்

உன் முக அழுக்குகளை
அகற்று முதலில்
உலகக் கண்ணாடிமுன்
நிற்கலாம் பிறகு

சளி வழியும் மூக்கோடும்
பீளை மூடிய விழியோடும்
வாணி உரிந்த வாயோடும்
நீ செல்லவேண்டியது
அறிவென்னும்
ஒப்பனையறைக்குத்தான்

நடுக்கூடத்தில் குழுமியிருக்கும்
விரிந்த விழி
விமரிசனப் பார்வைகளின்
முன்பல்ல

அடிக்கடி உன் முகம்பார்
உன் முகத்தின் கோரங்கள்
உன் விழிகளுக்குத் தெரிந்தால்
நீ காப்பாற்றப்படுவாய்

அடடா அழகென்று
அக்கண உணர்வுக் கொதிப்பில்
நீ ரசித்துவிட்டால்
உன்னைக் காப்பாற்ற
பின் ஒருநாளும் உனக்கு
ஆகாமல் போகக்கூடும்

இதயம் என்பது
நீ அன்றாடம் சேமிக்கும்
சொற்களின் உண்டியல்

விகாரங்களெல்லாம்
அதனுள் விழுந்த
செல்லாக் காசுகள்

செல்லாக் காசுகளையே
செலவிட நினைத்தால்
நீ வாங்கப் போவது
அவமானங்களைத்தான்

கண்ணாடிகள்
ஒருநாள் உடையலாம்
உடைந்தால்
அவற்றின் ஒவ்வொரு சில்லும்
உன் முகத்தை இன்னும்
விகாரமாகவே காட்டும்

முகத்தைத்
துடைத்துக்கொள்ள
இனியாவது
உன் விரல்களுக்குப்
பாடம் எடு

சின்னச் சின்ன
மரணங்களுக்கு
உன்னை விலைபேசி
விற்றுவிடாதே

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி