கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

அரவிந்தன் நீலகண்டன்


தமிழர் தெய்வங்கள் வேறு வடநாட்டார் தெய்வங்கள் வேறு என்பதே தவறான வரலாற்று அடிப்படையற்ற சிந்தனை என்பதை திரு.நாக.இளங்கோவன் அவர்கள் புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்ட பார்வையை தவறென ஒதுக்கித்தள்ளுவது எளிதானதல்ல என்ற போதிலும் அத்தகையதோர் முயற்சி உண்மையை நாடும் பகுத்தறிவின் பாற்பட்டு நின்று பேசுபவர்களுக்கு அவசியமானவொன்று. எனவே திரு.நாக.இளங்கோவனின் சிந்தனைக்கு சில.

1. வைதீகத்தின் பெருமாள் வேறு தமிழர் பெருமாள் வேறு என்பதெல்லாம் சிறிதும் ஆதாரமற்ற பகுத்தறிவற்ற கற்பனைக் கட்டுமானங்கள். உதாரணமாக, பரிபாடலில் திருமால் வேதவேள்வியின் வடிவமாகவே கூறப்படுகிறார் என்பதனை நோக்குங்கள்.

செவ்வாய் உவணத்து உயர்கொடியோயே

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்

படிநிலை வேள்வியுள் பற்றி ஆடுகொளலும்

புகழியைந்து இசைமறை உறுகனல் முறைமூட்டித்

திகழொளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்

நின் உருபுடன் உண்டி:

பிறர் உடம்படு வாரா

நின்னொடு புரைய

அந்தணர் காணும் வரவு (பரிபாடல்.2:60-65)

(கருடக்கொடியை உடையோய் வேள்வி ஆசானது உரை நின் உருவம்: வேள்விக்குரிய பசுவைக் கொள்ளல் யூப உருவாகிய நினக்கு உணவு: வேள்வித்தீயை முறையாக மூட்டிச்சுடரினது பெருக்கத்தை உண்டாக்கிக் கோடல் அந்தணர் காணுகின்ற நின் வெளிப்பாடு;) கிள்ளிவளவனின் நாட்டின் வரையறையே

‘அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த

தீயொடு விளங்கும் நாடன் ‘ (புறநானூறு 397:20-21) என்பதாகும்.

நாட்டார் தெய்வங்களும் சரி ‘பிராம்மணிய ‘ தெய்வங்களும் சரி ஒருவித உயிர்த்துடிப்புள்ள இயக்கங்களால் வரலாற்றுக்காலங்களூடே இணைக்கப்பட்டுள்ளன. நாட்டார் கூறுகளை ‘பிராம்மணிய தெய்வங்களிலும் ‘, ‘பிராம்மணிய ‘ கூறுகளை நாட்டார் தெய்வங்களிலும் காண முடியும். தங்கள் அபிமானத்திற்குரிய தலைவரான திரு.மு.கருணாநிதியாலும் அவரது குடும்ப தொலைக்காட்சியாலும் கடும் விமர்சனத்துக்குள்ளானவை நாட்டார் தெய்வங்கள் சார்ந்த நம்பிக்கைகளும் விழாப்பாடுகளும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, பூக்குழி இறங்குவதை பகுத்தறிவுக்கோணத்தில் உங்கள் இனமான தலைவர் விமர்சித்தார். ‘காட்டுமிராண்டித்தனம் ‘ என்றார். ஓஷோ டைம்ஸ் பத்திரிகையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்பு அந்த பத்திரிகையில் உங்கள் தலைவரை புகழ்ந்து ஒரு செய்தி வந்திருந்தது. திரு.மு, கருணாநிதி ஓஷோ (ரஜ்னீஷ் சந்திரமோகனின்) கருத்துக்களில் மிகவும் ஈடுபாடுடையவர், அந்த புத்தக கண்காட்சிக்கு அவரது குடும்ப தொலைக்காட்சி மிகவும் முக்கியத்துவம் அளித்துவந்தது என்பதே அது. ஓஷோ கம்யூனில் தீமிதிப்பது ஒரு மேலாண்மை உளவியல்-தியான பயிற்சியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக, தீமிதிப்பது என்பது சில குறிப்பிட்ட மேற்கத்திய மற்றும் esoteric jargonகளில் கொடுக்கப்பட்டால் அதை ஏற்கலாம் ஆனால் கிராமத்து மக்கள் தங்கள் வாழ்க்கை துன்பங்களை முன்னின்று எதிர் நோக்கி வாழ்க்கையை எதிர்கொள்ள வடிவமைத்துக்கொண்ட பாரம்பரிய வடிவங்களில் அது ‘காட்டுமிராண்டித்தன ‘மாகிவிடுகிறது. குறைந்த பட்சம் ஒரு அமைச்சர் தம் எஜமான விசுவாசத்தைக் காட்ட ஒரு பாரம்பரிய ஆன்மிகச் சடங்கினைப் பயன்படுத்திக்கொண்டது காட்டுமிராண்டித்தனம் என உங்கள் தலைவர் கூறியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பூக்குழி இறங்குவதையே காட்டுமிராண்டித்தனம் என்கிறாரே இது எதனால் ? ஏன் தம்மை புகழும் ஓஷோ கம்யூன்காரர்களிடம் ‘ஏனையா இப்படி காட்டுமிராண்டித்தனங்களில் ஈடுபடலாமா ‘ எனக் கேட்கலாமே ? விஷயம் என்னவென்றால் கருணாநிதியும் சரி ஈவெராவும் சரி பாரதப்பண்பாட்டிலிருந்து முகிழ்த்தெழுந்த எதையும் வக்கிரமாக பார்த்தே பழகியவர்கள். எதையும் இனவாதப்பார்வையில் பார்த்துப்பழகியவர்கள். அவ்வளவு ஏன் ? வெளிநாடுகளிலும் சரி நம் நாட்டிலும் சரி நம் நாட்டார் கோவில் வழிபாட்டுமுறைகளை திரித்து அவற்றை குறித்து ஆபாசக் கதைகளைக் கூறி மதமாற்ற நிதி திரட்டுபவர்களை கண்டித்து என்ன கூறியுள்ளார் இம்மனிதர் ?

2. புறநானூற்றிலோ அல்லது இன்னபிற பண்டைத்தமிழ் இலக்கியங்களிலோ சிவன் அல்லது திருமாலின் இயற்கை நம் தேச முழுவதிலும் காணப்படும் சிவ அல்லது திருமால் அறிதலுக்கு புறம்பானதாக இருக்கும் ஒரு படிமத்தை நீங்கள் காட்டமுடிகிறதா ? கோசாம்பியின் ‘தோற்கடிக்கப்பட்ட தாய் தெய்வங்களின் வரலாறு ‘ (கிம்புட்டாவினை கோசாம்பி என்ன ‘ரசம் ‘ பண்ணினாரோ -with due apologies to Su.Ra- என்கிற ஐயம் எனக்கு பலகாலமாகவே உண்டு. இருவரது தொல்-வரலாற்றுப்பார்வையும் ஐயந்திரிபறத் தவறென நிரூபிக்கப்பட்டவை. ஆனால் வசீகரமானவை.) ஆரிய-திராவிட இனரீதியிலான பாகுபட்ட பார்வை ஆகியவை தெளிவாக ‘காமம் செப்பாது கண்டது மொழியும் ‘ வரலாற்றறிஞர்களால் (உங்கள் திருப்திக்காக சொல்கிறேன் – இவர்களெல்லாம் சங்க பரிவாருக்கு கிஞ்சித்தும் தொடர்பற்றவர்கள் – ஜிம் ஷாப்பருக்கும்., ஜோனதன் கென்னாயருக்கும், எஸ்.ஆர்.ராவுக்கும் காக்கி நிக்கர் மாட்டிவிடத் தேவையான மடத்தனமான அதீத கற்பனை நிச்சயம் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்.) நிராகரிக்கப்பட்டுள்ளன. டாக்டர்.அம்பேத்கர் கூறுவது போல அத்தகையப்பார்வை வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கே செல்லவேண்டும். இந்நிலையில் உங்களைப் போன்றோரிடம் வெகுகாலமாகவே கேட்க விரும்பிய கேள்வியைக் கேட்டுவிடுகிறேன். பகுத்தறிவு வேண்டும் என்கிறீர்கள். ஈவெரா பகுத்தறிவுவாதி என்கிறீர்கள். ஈவெராவோ நேருவோ வரலாற்றறிஞர்கள் அல்ல. அன்றைக்கு வீலர் தவறுதலாக கூறிய மொகஞ்சதாரோவில் ஆரியர்கள் நிகழ்த்திய படுகொலை முதல் இன்றைய சாதியம் வரை ஒரு கோடு தீட்டி இயக்கம் நடத்தினீர்கள். இன்றைக்கு விலரின் கூற்றுகள் எப்படி ஒரு அகழ்வாராய்ச்சியாளர் தவறிழைக்கமுடியும் என்பதற்கான சிரந்த உதாரணமாகிவிட்ட நிலையில், ஆரிய படையெடுப்பு அடிப்படையிலான சாதிய விளக்கங்கள் தகர்ந்துவிட்ட நிலையில், நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதி என்கிற முறையில் உங்கள் கருத்தியலை (அது ஈவெராவே கூறியதாக இருந்தாலும்) மறு-ஆக்கம் செய்ய வேண்டாமா ? அது உங்கள் கடமை அல்லவா ? மாறாக இன்னமும் அதிகமாக ஆரிய-திராவிட இனவாத போர்வையை உங்களை சுற்றி மூடிக்கொண்டு பார்வையை குருடாக்குவது பகுத்தறிவா ?

3.புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் பயந்து வேத சமயம் தமிழகம் வந்ததாகக் கூறுவதற்கு என்ன சான்று ? ஜைன-பெளத்த-வைதீக சமயத்தவரின் சண்டைகள் சச்சரவுகளைக் காட்டிலும் வைதீக அரசர்கள், பெளத்தத்தின் ஆகப்பெரிய அரும் அடையாளங்களை உருவாக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்களா ? புறநானூற்றில் தமிழ் மன்னர்களின் ஒற்றுமைக்கே வைதீக யாகசாலை நெருப்பல்லவா உவமிக்கப்பட்டுள்ளது ? அதே நேரம் பலநூறு கல்வெட்டுக்கள் சாதியம் இன்று நாம் காணும் உறைநிலை வடிவமுடையதல்ல மாறாக ஒருபொது சட்டகத்துக்குள் ஆயிரமாயிரம் இயக்கங்களை கொண்டு நிகழும் ஒரு அமைவு என்பதனை அறிய முயலுங்கள். இன்று அதன் உறைநிலை அரசியல்வாதிகளால் அப்படியே இருக்கவேண்டுமென கருதப்படுகிறது, மாறாக, சமூக-பொருளாதார நிகழ்வுகளால் உருமாற்றம் அடைவதே சாதியம். இச்சாதியத்தை நீங்கள் உடைக்க நீங்கள் கை வைக்க வேண்டிய இடம் சங்கர மடமல்ல. அது ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் உருவான ஒரு அமைப்பு. அதன் பாரம்பரிய வடிவம் அதன் சிறப்பு. நியோ-ஹிந்து இயக்கங்களோ அல்லது அமைப்புகளோ அதற்கு சமமான வேறெந்த ஐரோப்பிய-அராபிய அமைப்புகளைக் காட்டிலும் இனவாத-சாதிய-மேன்மைவாத- அறிவியல் எதிர்ப்பற்ற தன்மையுடன் விளங்குவதை நீங்கள் ஏன் காணவில்லை ? உதாரணமாக, சுவாமி சித்பாவனந்தர் அனைத்து மக்களும் பெண்களும் காயத்ரி மந்திரம் கற்கலாம் என்றார். எத்தனை திராவிட இயக்கக் காரர்கள் அவருடன் இணைந்து செயல்பட்டனர் ? சாதியம் சிறிதுமற்ற சமுதாயத்தை படைக்க களத்திலிறங்கி செயல்பட்டார்கள் ஆரிய சமாஜத்தினர். தலித் வீரர் ஐயன் காளியின் சரிதத்தைப் படிக்க நீங்கள் இதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் திராவிட இயக்கத்தினர் முஸ்லீம் லீக்குடன் இணைந்து பாகிஸ்தான் சிந்தாபாத் போட்டனரே தவிர அன்றைய ஹிந்து சமுதாய முன்னேற்ற இயக்கங்கள் எதில் இருந்தனர் ? இன்னமும் கூறினால், பங்களாதேஷில் எத்தனையோ தலித் சமுதாயங்களும், வனவாசி பெளத்த சமுதாயங்களும் இன்று கருவழிந்து போக அல்லவா ‘கலைஞர் ‘ என்றழைக்கப்படும் கருணாநிதியின் செயல்பாடு வழிவகுத்துவிட்டது.

4. கருணாநிதிக்கு கடலின் நடுவே வள்ளுவருக்கு சிலை அமைக்கும் எண்ணம் வந்தது எவ்வாறு என நினைக்கிறீர்கள் ? முதன்முதலாக திருவள்ளுவருக்கு அப்பாறையில் சிலைவைக்க குரல் எழுப்பியவர் யாரென நீங்கள் அறிவீர்களா ? அல்லது ஜின்னா பாகிஸ்தான் கேட்கும் முன்பே தாம் பாகிஸ்தான் சிந்தாபாத் போட்டதாக கூறும் கருணாநிதிக்கு அந்த விஷயம் மட்டும் மறந்தும் நினைவுக்கு வராத நன்றி கெட்ட நயவஞ்சகத்தனத்திற்கு பெயர் திராவிட அரசியல் அறமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக வள்ளுவமாக இருக்க முடியாது.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்