தமிழ்ச்செல்வன்
கோயமுத்தூரில் தி.மு.க வின் பெருங்கூத்து நடந்துகொண்டிருந்தபோது, சரஸ்வதி-சிந்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள், ரீடிஃப் டாட் காம் தளத்திற்கு, சரியான மற்றும் சுவாரஸ்யமான பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர், “அஸ்கோ பர்போலா அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் ‘சிந்துக் குறியீடுகளுக்கு கண்டுபிடித்து அளித்துள்ள விளக்கங்களுக்கு அடிப்படையாகத் தமிழ்மொழி இருக்கிறது’ என்கிற ஆதாரமற்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பர்போலாவினுடையது ஒரு நம்பிக்கை முறை தானே தவிர, 4000 ஆண்டுகால நகரீகத்தின் கலாசார அடித்தளங்களையும், அந்நாகரீகத்தின் குறியீடுகளின் தொகுப்பையும் அடிப்படையாக, முதனிலைக் காரணமாகக் கொண்டதல்ல. ஆனால் அவர் சிந்து சமவெளிக் குறியீடுகளை நியாயமான ஒழுங்கான இணைப்புகளாகத் தொகுத்துள்ளது சிறந்த பங்களிப்பாகும்” என்று கூறியுள்ளார்.
மேற்கூறப்பட்ட பேட்டியில் டாக்டர் கல்யாணராமன் அவர்களின் கூற்றுகளைப் பற்றித் தன்னுடைய கருத்தைத் தெரிவித்த அஸ்கோ பர்போலா அவர்கள், சற்றே அகம்பாவம் தொனிக்கும் விதமாக, “டாக்டர் கல்யாணராமனுக்கு மொழிக்கல்வியில் பயிற்சி போதாது. ஒரு நல்ல பல்கலைக் கழகத்தில் மொழிக்கல்வி பெறுமாறு நான் சொன்ன அறிவுரையை அவர் ஏற்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் அவர் ஹிந்துத்துவக் கொள்கைகளைச் சார்ந்திருப்பவர். ஆகையினால் அவரின் எழுத்துக்களையும் கூற்றுக்களையும் நான் நிராகரித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியில் புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், மொழிகள் பற்றிய ஆராய்ச்சியிலும் பெயர் பெற்றவர் டாக்டர் கல்யாணராமன். இன்று குஜராத் கடலோரங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் பகவான் கிருஷ்ணர் ஆண்ட துவாரகை நகரத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ரிக் வேதத்தில் பலமுறைச் சொல்லப்பட்டிருக்கும் மிகப்பெரிய சரஸ்வதி நதி ஆற்றுப் படுகையின் அடையாளங்கள் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஓரிடத்தில் சரஸ்வதியின் ஊற்று மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஓர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு மேலும் சரஸ்வதி நதி தொடர்பான வேலைகள் நடக்க ஹரியானா அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
சற்றும் ஆதாரமில்லாத வெள்ளையர்களின் புளுகுமூட்டையான ஆரிய-திராவிட கோட்பாடுகள் தூக்கியெறியப்பட்டு, நம் ஹிந்துஸ்தானத்தின் இதிஹாஸங்களில் கூறப்பட்டுள்ள உண்மையான வரலாற்றையும், சிந்து-சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரீகத்தையும் மெய்ப்பிக்குமாறு தற்போதைய அகழ்வாராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அனைத்துவிதமான ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அஸ்கோ பர்போலாவின் கருத்துக்களைக் கல்யாணராமன் மட்டும் மறுக்கவில்லை. நம் நாட்டின் மிகச் சிறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், வரலாற்று ஆசிரியருமான பி.பி.லால் அவர்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மறுத்து, சில கேள்விகளும் எழுப்பியுள்ளார். அவற்றிற்கு இன்றுவரை அஸ்கோ பர்போலா அவர்கள் பதிலளிக்கவில்லை. (http://www.docstoc.com/docs/45231738/bblalindusscript2 )
இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் ஆசிய நாகரீகங்களை ஆராய்ச்சி செய்த கிரெகரி போஸ்ஸெல் என்கிற அமெரிக்க அறிஞரும் பர்போலாவின் கருத்துக்களை ஏற்கவில்லை. இக்கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ள மைக்கேல் விட்ஸல் அவர்கள் கூட பர்போலாவின் கருத்தான ‘திராவிட மொழிகளின் சில வார்த்தைகள் ரிக் வேதத்தில் கணப்படுகின்றன’ என்பதை மறுக்கிறார்.
உலகத்திலேயே மிகப்பழமையும் பெருமையும் வாய்ந்த நாகரீகம் கொண்ட ஹிந்து தேசத்தில் ஆராய்ச்சிகள் செய்தால் வேத நாகரீகமும் ஹிந்து வரலாறும் தான் மெய்ப்பிக்கப்படும். அதற்காக அவ்வாராய்ச்சியாளர்களை ஹிந்துத்துவவாதிகள் என்று தூற்றுவதில் வெள்ளையர்களுக்கே உரிய இனவெறியும், கிறுத்துவ அடிப்படைவாதமும் தான் தெரிகிறதே ஒழிய ஒரு திறமையான ஆராய்ச்சியாளரின் கருத்து தெரியவில்லை. ஹிந்து பூமியின் மைந்தர்கள் அனைவருமே ஹிந்துத்துவவாதிகள் தான். இதில் உண்மையும் பெருமையும் தான் இருக்கிறதே தவிற வேறில்லை.
ரோஜா முத்தையா நூலகத்தில் உரையாற்றிய அன்றே, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழுக்கு (TNIE dated 29 June 2010) ஒரு சிறிய பேட்டி அளித்திருந்தார் அஸ்கோ பர்போலா அவர்கள். அப்பேட்டியில், “குஜராத்திலுள்ள சிந்து சமவெளியின் ஆரம்பகாலக் குடிமக்கள் திராவிடர்கள் தான். அவர்கள் ஆரியர்களால் தெற்கே விரட்டியடிக்கப்படவில்லை. பதிலாக, அவர்கள் பசுமையான மேய்ச்சல் நிலங்களையும், பயிறிடுவதற்கான செழிப்பான நிலங்களையும் தேடித்தான் தெற்கு திசை நோக்கிக் குடிபெயர்ந்தனர். இது நடந்தது ஆரியப்படையெடுப்புக்கு முன்னால். கூட்டம் கூட்டமாக ஆரியர் வருவதற்கு முன்னால் இது நடந்தது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதற்குப் பின்னால் பல வருடங்கள் கழித்துத்தான் சிந்து நதி தீரத்திலேயே தங்கிவிட்டிருந்த திராவிடர்களை ஆரியர் வெற்றி கொண்டனர்” என்று கூறியுள்ளார்.
பர்போலா மேலும் அதிர்ச்சித் தகவல் ஒன்றையும் வெளியிட்டார். “ஆங்கிலேயர் நம் நாட்டை முழுவதும் ஆக்கிரமிப்பதற்கு முன்பாக எப்படி பிராம்மணர்களைத் தங்கள் மொழியைக் கற்கவைத்துத் தங்கள் கீழ் வேலைக்கு அமர்த்தி ஆட்சி செய்தார்களோ, அதே போல், ஆரியர்களும் திராவிட கிராமத் தலைவர்களுக்கு இந்திய-ஆரிய (Indo-Aryan) மொழியைக் கற்க வைத்தனர். திராவிடர்களுள் மேல்மட்டத்தில் இருந்த பிரிவினர் (Elite Dravidians) முதலில் இந்திய-ஆரிய மொழியைக் கற்றிறுப்பர். நாளடைவில் வடக்கே இருந்த திராவிடர்கள் முழுவதுமாக இந்திய-ஆரிய மொழியைக் கற்று, மிச்சமிருந்த மிகக்குறைவான பூர்வீகத் திராவிட மொழியின் (Original Proto-Dravidian) சாயல்களை மட்டும் சேர்த்துப் பேசத்துவங்கிவிட்டனர்” என்று கூறியுள்ளார். (Proto-Dravidian என்றால் என்ன என்பது இதுவரை விளக்கப்படவில்லை)
“ஆரியர்கள் தென்னகத்தைக் கைப்பற்ற முடியாத காரணத்தால் தென்னகத்தில் திராவிட மொழிகள் நன்றாக வளர்ந்தன. வடப்பகுதியைக் கூட ஆரியர்கள் வெல்வதற்குப் பல நூற்றாண்டுகள் ஆயின” என்றும் கூறியுள்ளார்.
அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்துக்கள் “புரிந்துகொள்ளக்” கூடியதாக இருப்பதால் அவற்றைப் பற்றிய முடிவுகளை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். ஆனால், ஆரிய-திராவிட கோட்பாடுகளை ஆதரிப்பவர் என்கிற காரணத்தால், தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதன்மை உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பரிந்துரையை ஏற்று தி.மு.க அரசு கலைஞர் கருணாநிதி தமிழ்ச் செம்மொழி விருதிற்கு இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்கிற உண்மை மட்டும் உறுதியாகிறது.
நாநூறு கோடி ரூபாய் அளவிலான மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து தமிழ்ச் செம்மொழி பெயரில் நடத்தப்பட்ட தி.மு.க பெருங்கூத்தின் மூலம் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பின்வருவனவற்றைச் சாதிக்க முயன்றுள்ளார்:
• உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரே தலைவராகவும், தமிழ் மொழியின் ஒரே பாதுகாவலனாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றிருக்கிறார். இனி எதிர்காலத்தில் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தக்கூடிய உரிமையையும் தானே பெற்றுக் கொண்டிருக்கிறார்.
• உலகில் சமஸ்கிருத்த்தை விடவும் மிகவும் பழமையான, உயர்வான, பெருமை மிகுந்த மொழி தமிழ் தான் என்று நிறுவ முயன்றுள்ளார்.
• காலாவதியாகிப்போன ஆரிய-திராவிட கோட்பாடுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்.
• தமிழ் ஹிந்துக்களுக்குத் தமிழ் அடையாளத்தை மட்டும் கொடுத்து, ஹிந்து என்கிற கூட்டமைப்பிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் அவர்களை விலக்க, தீவிர முயற்ச்சி மேற்கொண்டுள்ளார்.
• தமிழ் பிரிவினைவாதத்திற்கு மீண்டும் ஒரு புதிய உத்வேகம் அளிக்க முயன்றுள்ளார்.
பகட்டான மாநாட்டின் பிரமாதமான நிறைவு விழாவில் அவர் வெளியிட்ட பல அறிவுப்புகளில் சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்:
• மதுரையில், “தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்” அமைக்கப்பட்டு, அதன் மூலமாகக் குறிப்பிட்ட இடைவெளிகளில் தமிழ்ச் செம்மொழி மாநாடுகள் தடையின்றி நடத்தப்படும்.
• தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்.
• சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்த தாமதமின்றி அனுமதி வழங்கவேண்டும்.
• தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
கனடா நாட்டில் பல்கலைப்பேராசிரியராக பணிபுரிந்த டாக்டர் விஜய ராஜீவா என்கிற அரசியல் விஞ்ஞானி கோவை மாநாட்டிற்குப் பிறகு எழுதிய ஒரு கட்டுரையில், “பாரதத்தின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு இல்லாத வகையில் தமிழ் மொழியை முன்நிறுத்த முனையும் கருணாநிதியின் செயல் தமிழர்களுக்கும் பொதுவாக இந்தியர்களுக்கும் கவலை தருவதாக உள்ளது. தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்கூட இந்தியாவின் எதிரிகளாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். இவ்விஷயங்கள், ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற பிரபலமான ஆராய்ச்சியாளர்கள் பாரதம் சம்பந்தமான அடையாளங்களைத் தமிழ்த் தடி கொண்டு அடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, கல்வியாளர் உலகில் தாமாகவே துரதிர்ஷ்டவசமாகத் தெரிவிக்கின்றன. ஐராவதம் மகாதேவன் ‘நான் ஒரு ஹிந்து அல்ல’ என்று சொன்னதாகத் தெரிகிறது. ஃபின்லாந்துக்காரர் என்பதால் பர்போலாவுக்கு எப்படியும் ஹிந்து அடையாளம் கிடையாது. ஏற்கனவே பாரத தேசத்தில் உள்ள வனவாசிகளை, அவர்கள் இயற்கையை வணங்குகிறவர்கள், ஹிந்துக்கள் அல்ல என்கிற பொய்ப்பிரசாரத்தைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கின்றன கிறுத்துவ நிறுவனங்கள்…” என்று எழுதியிருக்கிற அவர், “இமயம் முதல் குமரி வரை அனைத்து பாரத மொழிகளையும் பேசும் மக்கள் பண்பாட்டினால் ஒன்றிணைந்து இருப்பதால், கலைஞர் கருணாநிதியின் திட்டத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் நிராகரித்து தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பர் என்று நம்புகிறேன். அவ்வாறு காக்கப்படுவது அவசியம்” என்றும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார். (Ref: – http://www.haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=11445&SKIN=B ).
‘முதலாவது’ உலகத் தமிழ்ச் ‘செம்மொழி’ மாநாடு நடத்தவேண்டும் என்கிற எண்ணம் ஆரம்பத்தில் கலைஞருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. தான் அதிகாரத்தில் இருக்கும்போதே, தேர்தல் வருவதற்கு முன்னால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திட வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முதல்வர் கருணாநிதியின் அவசரத்தையும் துடிப்பையும் புரிந்துகொள்ளமல் ‘தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்’ மாநாடு நட்த்த இயலாது என்று மறுத்த பிறகுதான், கருணாநிதி அதை நிராகரித்து புத்திசாலித்தனமாக “முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்று அறிவித்திருக்கிறார்.
தற்போது அவர் ’தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவிவிட்டதால், தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேசச் சங்கத்தின் தலையெழுத்து என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கலைஞர் அடுத்த தேர்தலில் ஆட்சியை இழக்கும் பட்சத்தில், தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் செயலிழந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகத் தற்சமயம், உலகத்துத் தமிழறிஞர்கள் இவ்விரண்டு அமைப்புகளிலுமாகப் பிரிந்து இருக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழறிஞர்களில் ஒரு பிரிவினர், “2011 தேர்தலில் கலைஞர் வெற்றி பெறும் பட்சத்தில், தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்தை நான்காவது தமிழ்ச் சங்கமாக மாற்றிக் காட்டிவிடுவார்” என்றும் கூறுகிறார்கள்.
தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக அறிவித்தால், பின்னர் மற்ற மாநிலங்களும் தங்கள் மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்து மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதைப் போலவே, சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக அறிவித்தால், மற்ற மாநிலத்தவரும் தங்கள் உயர்நீதி மன்றங்களிலும் தத்தம் மொழிகளைப் பயன்பாட்டு மொழிகளாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும்படி கோரிக்கை வைப்பார்கள். குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த அம்மாநில மொழி தெரிந்த சட்ட வல்லுனர் தான் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கமுடியும் என்கிற நிலைமைக்குத்தான் இது இட்டுச்செல்லும்.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவது மிகவும் ஆபத்து விளைவிப்பதாகும். மற்ற மாநிலங்களும் கண்டிப்பாக அம்மாதிரியான ஒரு சட்டத்தை நிறைவேற்றும். ஏற்கனவே தண்ணீருக்கும், மின்சக்திக்கும், குடியுரிமைகளுக்கும் அடித்துக்கொள்ளுகின்ற மாநிலங்களுக்கிடையே வேலைவாய்ப்புகளுக்கான சண்டைகளும் சேர்ந்துகொள்ளும்போது, தேசிய ஒருமைப்பாடு என்பது கானல்நீராகிப்போகும். அதோடு மட்டுமல்லாமல் தேசியப் பாதுகாப்பும் மிகப்பெரிய கேள்விக்குறியதாகிவிடும். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு ஒத்துக்கொண்டு ஜவஹர்லால் நேரு செய்த மாபெரும் தவறின் விளைவுகளை கடுமையாக அனுபவிப்போம். தேசம் பிரிவினையில் பிளந்து போவதற்கான மார்க்கத்தின் துவக்கம் தான் இம்மாதிரியான சட்டங்கள்.
நம் தேசம் பிளந்துபோவதைத்தான் அன்னிய சக்திகள், குறிப்பாகக் கிறுத்துவ நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன. ஆன்மீகப் பாரம்பரியத்தினாலும், கலாசாரப் பழக்கவழக்கங்களினாலும் பின்னிப் பிணைந்து ஒன்றாக இருக்கிற இந்தியாவை விட, மொழிவாரியாகத் துண்டு துண்டாகிப்போன இந்தியாவை அன்னிய மதத்தவர், குறிப்பாகக் கிறுத்துவர் ஆக்கிரமிப்பது வெகு சுலபம். தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் படி ‘திராவிடமயமாக்குதல்’. ‘திராவிடம்’ என்றால் ‘பிரிவினை’ என்று கொள்க. திராவிடமயமாவது என்பது தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்துபோவது தான். இரண்டாவது மற்றும் கடைசிப்படி ‘கிறுத்துவமயமாக்குதல்’.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட அறிவிப்புகள் எல்லாமே தமிழகத்தைத் தமிழின் பெயரில் திராவிடமயமாக்கத்தான். நினைவில் கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றிய போதே கருணாநிதி திராவிடமயமாக்குதலை ஆரம்பித்து விட்டார் என்பது தான். தொடரப்போகும் செயல்களைத்தான் கோவை மாநாட்டில் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளார்.
ராபர்ட் டி நொமிலி, மாக்ஸ் முல்லர், ராபர்ட் கால்டுவெல், ஸீகன் பால்கு, ஜி.யு.போப் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கல்லறையிலிருந்து வெளிவந்து பயங்கரமாகச் சிரிக்கப் போகிறார்கள்.
(முற்றும்)
- வேத வனம்- விருட்சம் 94
- சுக்கிரன் வேக விண்கப்பல் நான்கு ஆண்டுகளாய் அனுப்பிய புது விஞ்ஞானத் தகவல் (Venus Express) (2006–2010) (கட்டுரை: 1)
- ரிஷியின் மூன்று கவிதைகள்
- அவரவர் மனைவியர்
- வட்டம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4
- ஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது
- தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக
- ஜூலை மாத நியூஜெர்ஸி கலாச்சார நிகழ்வுகள் அட்டவணை
- அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22
- கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்
- செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை
- சம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
- இராக்கவிதை!
- உயிர் பிழைத்திருப்பதற்காக..
- கொஞ்சம் கண்பனித்துப் போ…
- விடுபட்டுப்போன மழை
- இரவில் உதயமாகும் சூரியன்கள்…
- பிறந்த மண்ணும் பெற்ற மகனும்
- நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல
- ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2
- பரிமளவல்லி
- முள்பாதை 37
- களம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்
- பஸ் ஸ்டாண்ட்
- கஷ்டப்படாமல் வெண்பா செய்யுங்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3
- இவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்