ஒரு சந்திப்பு

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

பவளமணி பிரகாசம்


பொழுதும் போகாமல்,வேலையும் இல்லாமல்,
அன்றொரு நாள் நான் தவித்த வேளையிலே,
அருமையாய் உதித்ததொரு யோசனையிலே,
அணுகினேன் இண்டர்நெட்டை-
கவனமாக குறித்து வைத்த விலாசம் தேடி
ஆவிகள் உலகினுள் புகுந்து விட்டேன்.
நீந்தினேன்,துழாவினேன்;
ஆஹா!அகப்பட்டார் என்னருமை பாரதி.
அடடா!யுகப்புரட்சி தந்த கவியின்
மனம்தான் கனத்துக் கிடந்ததே,
வெந்து,நொந்து தவித்ததே,
மடை திறந்த வெள்ளமாய்
குமுறல்கள் வெடித்ததே!
அறியாத நானுமே அப்பாவியாகவே
ஆரம்பித்த விதமிது:
‘ஐயா!பார்த்தீரா,உமது புதுமைப்பெண்ணை ?
பட்டங்கள் பெற்று, சட்டங்கள் செய்து,
நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை…. ‘
நிறுத்தினார் என்னை அவசரமாக-துயர மொழியுடனே.
‘போதும்,போதும்.என் நெஞ்சு பொறுக்குதில்லையே! ‘
அதிர்ந்தேன், தொடர்ந்தேன்:
‘ஏது பிழை ?தங்கள் கருத்துப்படிதானே கனிந்து வந்துள்ளது ? ‘
‘இல்லை, இல்லவேயில்லை.இதுவல்ல என் எண்ணம்.
இந்த பட்டங்கள்….இந்த சட்டங்கள்….
இந்தப்பார்வையும், நடையும்-ஐயோ!கூசுதே! ‘
‘இது என்ன அநியாயம்! ‘சின்னஞ்சிறு கிளியே,கண்ணம்மா,
செல்வக்களஞ்சியமே ‘ என்றே வக்கணையாய் பாடினீர்;
வரிசையாய் கிளிகளும் உலகினில் ஏற்றம் புரிந்தே
செல்வக்களஞ்சியமாய் மாற வில்லையோ ? ‘
‘கொடுமை!கொடுமை!கொடுமையிலும் கொடுமை! ‘
‘பேசும் பொற்சித்திரமாய், ஆடி வரும் தேனாய்
ஓடி வருகையிலே உள்ளம் குளிருதே ? ‘
‘யாருக்கு ? ‘
‘உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருது,
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குது. ‘
‘மேலே நானே சொல்கிறேன்:
கன்னத்தில் முத்தமிட்டால் கள்வெறி,
கட்டித் தழுவினால் உன்மத்தம்-கண்டவனுக்கும்.
நான் கண்ட கண்ணம்மா கொண்டவன் மனமேடையில் நாயகி,
பாரார் பார்க்க வெட்டவெளி காட்சிப்பொருளல்ல. ‘
‘தளைகளை உடைத்து எறியச் சொன்னீர்,
விடுதலையாகி வீட்டை விட்டு வெளியேறச் சொன்னீர். ‘
‘அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு இவை எதற்கு ?
புதிய முகம் உனக்குண்டு, போகத்திற்கும், உபயோகத்திற்கும்
வீட்டுக்குள் அடைந்து கிடந்தது போதுமென்றேன்.
சுதந்திரப்பெண்ணை முழுதாய் வரைந்தேன்;
இன்றோ அவள் ஒரு முழு அடிமை. ‘
‘புதுக்கதையன்றோ புனைகின்றீர் ? ‘
‘உச்சி முதல் பாதம் வரை அழகுப் பதுமையாகிட எண்ணுகின்றாள்,
அழகுச் சாதனங்கள் அத்தனையையும் உவந்து குவிக்கின்றாள்.
வியாபார முதலைகள் விரித்த விளம்பர வலையிலே
வழுக்கி விழுந்து விட்டாள்,மீள வழியுமில்லை.
புருவத்தை மழித்து வரைந்தாள்,இதழுக்கும்,
நகத்திற்கும் வண்ணம் தீட்டினாள்,அளவான
அங்க அமைப்போடு ஆணின் ஆசைக்கு ஆடுகிறாள்,
அலங்காரப் பாவையாய் அவனது இச்சைப்படியே
வலம் வரும் போதிலே சுயம் தொலைந்து போனதே! ‘
‘கண்டதே காட்சி,கொண்டதே கோலம்,
புறத்தோற்றம் ஒன்றே பிரதானம்-
இதுதானே இன்றிங்கு நடைமுறை ? ‘
‘ரசமாய் நான் ரசித்த விசயமெல்லாம்
விரசமாய் சீர் குலைந்து போனதய்யோ! ‘
‘மெத்தவே புலம்புகின்றீர்,ஏனென்று புரியவில்லை ‘
‘ஒருமித்த கருத்துடனே, ஒருவருக்கொருவராய்
மனமொன்றி ஆணும், பெண்ணும் வாழும்
அகத்துப்பால் இலக்கணமே அர்த்தமற்று போகலாயிற்றே! ‘
‘தங்கள் வருத்தத்தை விளக்கமாய் விளம்பிடக்கூடாதோ ? ‘
‘ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவினில் வைத்தேன்
கற்பதனை. அழகாய் சுவைக்கச் சொன்னேன்
வாழ்வதனை-அந்தரங்கமாக. ‘
‘தகவல் தொடர்பு யுகமய்யா, அதன் தாக்கம் அதிகமய்யா. ‘
‘இன்று ஒழிவில்லை, மறைவில்லை-
அதனால் ஒளியில்லை, சுவையில்லை.
அன்பால் அடக்கி, அன்பில் அடங்கும்
மணவாழ்வு இங்கில்லை-அந்தோ பரிதாபம்!
மணந்தவர் பிரிந்திட தயங்கவில்லை.
விவாகம் என்ற சொல்லே ஒழிந்திடப் போகுதோ ?
சாரமில்லா வாழ்வில் சுகமுண்டோ, பொருளுண்டோ ?
எதிர்பார்க்க ஒன்றுமின்றி, காத்திருக்க தேவையின்றி,
அதிசயமே ஏதுமின்றி, பகிர்ந்து வாழ பந்தமின்றி,
புளித்துப் போன வாழ்வினிலே புதுமை என்ன காண்பீரோ ? ‘
‘உண்மையை உரைத்தீரே, அலுப்பும், சலிப்பும் கண்டோமே,
அமைதி இழந்து தவித்தோமே-விந்தையென்ன விந்தையோ!
தூரத்தை வென்றோம், துயரத்தை அல்ல;
ஞாலத்தை வென்றோம், ஞானத்தை அல்ல;
வசதிகள் வளர பொருட்கள் குவித்தோம்,
இனிய உறவின் பொருளைத் தொலைத்தோம்;
பிரபஞ்சம் அடங்கியது கைப்பிடிக்குள்-ஆனாலும்
மிஞ்சும் வெறுமை எங்ஙனுமே.
மீள வழி தான் கூறுமய்யா. ‘
‘நான் கண்ட புதுமைப் பெண்ணே-இப்பவும் சொல்கிறேன்
புவியில் புரட்சி நடத்துவாள்,
மடமை ஒழித்து மிடுக்குடனே
ஆக்க வேலை நடத்திடுவாள்,
தக்க துணை ஒருவனுடன்
லயம் பிசகாது நடந்திடுவாள்;
தரமாய், அறமாய் நின்றிடுவாள்;
தாரமாய், தாயாய் மகுடம் தாங்கிடுவாள். ‘

***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்