ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

அருண்


(கனடா)

கிறிக்கற் ஆர்வலர்களே, நீங்கள் அண்மைக்காலமாக ஒருநாள் கிறிக்கற் நடுவர் (Umpire) வானத்தை நோக்கி கைவிரலால் காற்றில் வட்டம் கீறுவதையும், இரண்டு கைகளையம் செங்குத்தாக வைத்து சைகை காட்டுவதையும் ஆர்வமாய் அவதானித்திருப்பீர்கள். இவை சாம்பலிவிருந்து கருவாகி பத்து மாதங்கள் சுமந்து பேறு நாளுக்காக்க காத்திருக்கும் புதிய விதிகள். பீனிக்ஸ் பறவை போல் சாம்பலில் இருந்து எழுவதாக எண்ணிவிடாதீர்கள். கடந்த சாம்பல் தொடர் (Ashes Series) சமயத்தில் ICC யால் அறிமுகம் செய்யப்பட்ட இரு புதிய, ஆனால் பரீட்சாத்தமான ஒருநாள் கிறிக்கற் விதிகள் இவை. 2005 ஆண்டு இங்கிலாந்து-அவுஸ்ரேலியா இடையியே நடைபெற்ற நற்-வெஸ்ற் சலஞ் போட்டிகளின் முதல்போட்டி யூலை 7 இல் நடந்நதபோது அறிமுகப்படுத்தப்பட்ட இப் புதிய விதிகள் வரும் மார்ச் முடிவில் தமது பெறுபேறுக்காகக் காத்திருக்கின்றன.

ஒருநாள் கிறிக்கற் போட்டிக்காக பிரத்தியேகமாக ICCயால் முன்வைக்கப்பட்ட இப்புதிய கிறிக்கற் விதிகள் முறையே

சுப்பர்-சப் (Supper-Sub), பவர்-பிளே (Power play) என்பனதான்.

இவ்விதிகளை சேர்த்துக் கொள்வதற்கு ICC பிரயத்தனப்படுவதில் காரணம் இருக்கிறது. கிறிக்கற் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதில் ICC தன்னால் இயன்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டுதானிருக்கிறது. இதில் ஒன்றுதான் கிறிக்கற்றை சர்வதேச ரீதியில் பிரசித்தப்படுத்துவது. ஆதற்கான முதற்கட்டமாக பலரையும் கவரும்வகையில்

சுவரரிசியப்படுத்த என்ன செய்யலாம் எனக் கேள்வி கேட்கப்பட்டது.. ரெஸ்ற் விளையாட்டில் கைவைக்க அவர்களிடம் தைரியம் இல்லை அது மட்டுமல்ல அதனை பரீட்சிப்பது குற்றம் எனவும் அவர்கள் கருதினார்கள். மாற்றாக ஒருநாள் கிறிக்கற் விளையாட்டில் கண்வைத்தார்கள். ஒருநாள் கிறிக்கற்விளையாட்டு, கிறிக்கற் இரசிகர்களின் அனேகரை கவர்ந்திருந்ததும் இதற்கானதொரு காரணம்.

ஒருநாள் கிறிக்கற் போட்டி முதலில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டக் காரர்களின் அதீத ஓட்டம் எடுக்கும் திறனை சாதகப்படுத்தும் முதல் அல்லது கடைசி 15 ஓவர்கள் இரசிகர்களை பரவசப் படுத்துவதும், 25இலிருந்து 40 ஓவர்கள் வரையான பகுதி பார்வையாளருக்கு சோர்வைக் கொடுப்பதும் கருத்திலெடுக்கப்பட்டது. இதனால் சோர்வை ஏற்படுத்தும் நடுப்பகுதியையும் உற்சாகமானதாக ஆக்க முனைந்த முயற்சிதான் இப்புதிய விதிகள்.

அது என்ன பவர் பிளே ? வழமையாக ஒருநாள் போட்டிகளின் முதல் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட களத்தடுப்பை

கொண்டிருக்கும். அதாவது 30 யார் அக சுற்று வட்டத்துக்கு வெளியே இரண்டே இரண்டு வீரர்கள்தான் நிற்கமுடியும்.

மீதி 9 பேரும் அச் சுற்றுவட்டத்துக்குள்ளே நிற்பதால் துடுப்பாட்டக்காரர்களுக்கு இது ஒரு நெருக்குவாரமாக இருக்கும்

என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது. பின்னர் இக்கருத்தில் மாற்றம் வந்தது. எல்லைக் கோட்டிற்கண்மையாக வீரர்கள்

இருவருக்குமேல் நிறுத்த முடியாததால் அப்பகுதிகளில் விளாசி அடித்து ஓட்டங்களைக் குவிக்க துடுப்பாட்டக்காரர்கள்

முனைந்தார்கள். இலங்கை வீரர்கள் சனத் ஜெயசூரியா, களுவித்தாரன சோடிகள் இத்தகையதந்திரத்தில் பேரெடுத்தது

மடடுமல்லாது இத்தந்திரமே 1996 உலகக் கோப்பையை இலங்கை வென்றெடுக்க உறுதுணையாகவும் அமைந்தது.

இதன்பின் மற்றய நாடுகளும் இத்தகைய பாணியை மெற்கொள்ள ஒருநாள்போட்டிகளின் கிறிக்கற் பார்வையாளர்கள்

ஆவலைத் தூண்டியது. ஒருநாள் போட்டிகளின் இரசிகர்கள் கனிசமாக அதிகரித்தார்கள்.

கிறிக்கற் ஆட்டத்தின் நடுப்பகுதியின் சோர்வைப் போக்குதன்மூலம் கிறிக்ககற் ஆட்டத்தை உற்சாகமானதாக ஆக்க ICC கொண்டுவந்த விதி மாற்றந்தான் பவர்-பிளே. பவர்-பிளே என்ற பதம் முன்பே றஹ்பி, ஐஸ்ஹொக்கி, லக்குரோஸ், உள் அரங்க உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அவைபோல் அல்லாமல்

முற்றிலும் வேறுபட்ட தாத்பரியங் கொண்டது. ஆதலால் அத்தகைய விளையாட்டு விதிகளுடன் இதனைக் குழப்பிக் கொள்ளவேண்டாம்.. கிறிக்கற் பவர்-பிளே எனப்படுவது மேலெழுந்தவாரியாகப் பார்த்ததால் முன்பேஇருந்த 15 ஓவர்கள்

மட்டுப்படுத்தப்பட்ட களத்தடுப்பு 20 ஓவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறது என்றுதோன்றும். ஆனால் பந்துவீச்சு, களத்தடுப்பு

துடுப்பாட்டம் என்பவற்றின் சமநிலைபேணலைக் கருத்திற்கொண்டு இவ் 20 ஓவர்களும் பவர்-பிளே-1,பவர்-பிளே-2, பவர் பிளே-3 என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பவர்-பிளே-1 இல் 10 ஓவர்கள் இருக்கும் என்பதுடன் அது முதல் 10 ஓவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டாயம். இரண்டாம் மூன்றாம் பவர்-பிளேகள் தலா 5 ஓவர்களாக இருப்பதுடன் அவை வரையறுக்கப்பட்ட ஓவர்களான 50களில் 11முதல் 50வரையில் எப்பொழுதாயினும் பாவிக்க அணித்தலைவருக்கு சுதந்திரம் உண்டு என்பதாகும்.

இரண்டாவது புதிய விதி “சுப்பர்-சப்” என்பது. அது என்ன சுப்பர்-சப் ? வழமையான ஒருநாள் கிறிக்கற் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 11 பேர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் 12-வா அயெ என்ற 12-ம் ஆளும் இன்னும் மூவரும் என நான்கு தயாரிருப்பு வீரர்கள் (reserve players) இருப்பார்கள். இங்கு 12-ம் ஆள் எனக் குறிப்பிடப்படினும் 11 பேரில் எவராவது சுகயீனமாகும் போது களத் தடுப்பை மட்டுமே அவரால் செய்யமுடியும். அதாவது மற்ற மூவரிலும் முதலாவதாக பிரதியீடாவதைத் தவிர பிரத்தியேகமாக எதையும் மேற்கொள்ளமுடிவதில்லை. ஆனால் புதிய சுப்பர்-சப் விதி இதை மாற்றியமைக்கிறது. 12-ம்வீரரால் இன்னொரு விளையாட்டு வீரருக்காக பிரதியீட்டாளராக முடியும் என்பதுமட்டுமல்ல சுகயீன காரணம் இல்லாமலே பிரதியீடாகமுடியும். இதனால் 12-ம் வீரருக்கு தனித்த பெறுமானம் வருகிறது.

இப்புதிய கிறிக்கற் விதிகள் இரண்டும் ICC யால் பரீட்சாத்தமாகவெனினும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும்

பலமட்டங்களிலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியேவருகிகின்றது. சிலர் நெரடியாகவே தம் எதிர்ப்பைக் கூறி வருகின்றனர். அதில் முக்கியமானவர் அவுஸ்ரேலிய அணித்தலைவர் றிக்கி பொன்ரிங். அடுத்தவர் பாக்கிஸ்தானிய அணித்தலைவர் இன்சமாம் உல் ஹக். நியூஜிலாந்த் அணி ஸ்ரீ லங்காவுடன் விளையாடியபோது ஸ்ரீபன் பிளமிங்கிற்கு பதில்-தலைவராக இருந்த டானியல் விற்ரோரியும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எந்த விதியும் புதிதாக அறிமுகமாகும்போது எதிர்ப்புக்குள்ளாகுவது தவிர்க்கமுடியாதுதான். வழமையான பழகிய நடைமுறைகளை மாற்றுவது பலருக்கும் பிடிக்காதது. மேலும் புதியது ஒன்றை பழக்கத்துக்கு உட்படுத்துவதும்

பலருக்கும் இலேசான காரியமன்று. இதே இவ்விரு புதிய விதிகளுக்கும் நடந்திருக்கின்றது. இரசிகர்கள் மட்டத்திலும் பலத்த எதிர்ப்புகள் எழுகின்றன. பலர் சில மாற்றங்களடன் அங்கீகர்க்க ஒத்துக்கொள்கிறார்கள்.

எதையும் எடுத்தஎடுப்பிலேயே ஒதுக்கிவிடக்கூடாது. பொதுவாக ஒவ்வொன்றினதும் பாதக சாதகங்களை சீர்தூக்கிப் பார்ப்பது எதிர்ப்பதிலும் அவசியமானதாகிறது. சிலது சிலகால நடைமுறையின் பின்பே அதன் பாதக சாதகங்களை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். பலபேர் பங்குகொள்ளும், பல்வேறான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் கிறிக்கற் போன்ற விளையாட்டுவிதிகளை அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் உதாசீனப்படுத்துவது தவறானதாகும். எதுவும்

பாவனையின் பின்பே புரிந்துகொள்ளப்படுவதுண்டு. இதனை நிரூபிப்பதுபோல் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த இன்சமாம் உல் ஹக் இப்பொது சற்றுத் தளர்ந்து இந்தவிதிகள் எல்லோராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பிரயோகிக்கப்பட்டால் நல்லதாய் இருக்கலாம் என்கிறார். உண்மையும் அதுவே!

இந்தவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவதுபோட்டியிலேயே அவுஸ்ரேலிய அணித்தலைவர் றிக்கி பொன்ரிங்கினால் அவை விளக்கமின்மையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப்போட்டியிலும் பின்னர் நடந்ந பலபோட்டிகளிலும்கூட றிக்கி பொன்ரிங் பாவித்து முடித்துவிடவேண்டும் என்பதுபோல் பவர்-பிளே மூன்றையும் அடுத்தடுத்து பாவித்து முதல் 20 ஓவர்களிலேயே முடித்தவிட்டிருந்தார். இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கல் வாஹனும் அந்த முதல் போட்டியில் அவ்வாறே செய்தார். ஆனால் அவுஸ்ரேலிய துடுப்பாட்டக்கரார்கள் பவர் பிளே சமயத்தில் தூர அடிக்கமுனையாததால் அது மைக்கல் வாஹனுக்கு சாதகமாக அமைந்தது. பவர் பிளே அவுஸ்ரேலியாவைக் கட்டுப்படுத்திவிட்டது.

பவர்-பிளே மூன்றையும் கொடுக்கப்பட்ட 50 ஓவர்களுக்குள்ளே பாவித்தாகவேண்டும் என்ற கட்டாயம் இருந்தபோதும் அதனை தொடர்ந்து பாவித்து முடித்துவிடவேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. இதனைப் பாவிப்பதில் சாமர்த்தியம் தேவைப்படுகிறது. துடுப்பாட்ட நிலமைக்கு ஏற்ப அல்லது விளையாட்டு அணியின் விளையாட்டு உத்திக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்படவேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் கட்டுப்படுத்தப்பட்ட களத்தடுப்பைக் கொண்ட முதல் 15 ஓவர்களையும் ஒவ்வொரு துடுப்பாட்ட அணியும் வெவ்வேறான அணுகுமுறையுடன் கையாளும். இந்தப் 15 ஓவர்களில் 2 பேர்தான் 30 யார் ஆரையுடைய உள்வட்டத்திற்கு வெளியே நிற்கவேண்டும். இன்னும் 2 பேர் ஆடுகளத்திற்கு அருகே ஏந்தும் நிலையில் (ஊயவஉாைபெ ிழளவைழைெ) இல் இருந்திடவேண்டும் என்பதும் கட்டாயமானதாகும். ஆதலால் 30 யார் வட்டத்துள் தடுப்பு வீரர்கள் நிறைந்திருப்பார்கள் என்பது சொல்லாமலே புரியும் சங்கதி. இத்தகையகட்டத்தில் பொதுவாக இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் அணிகள் உயர்த்தியடித்து ஓட்டங்கள்பெறுவதை தமது விளையாட்டு அணுகுமுறையாக வரித்துக் கொண்டுள்ளன. ஆனால் அவுஸ்ரேலிய, இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவு அணிகள் அத்தருணத்தில் தம்விக்கற்றுகளை காவாந்து பண்ணும் வகையான விளையாட்டு அணுகுமுறையையும், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா சிம்பாவே அணிகள் இரண்டும் கலந்த நிலைப்பாட்டையும் எடுப்பதுண்டு. அதேநேரம் தம் எதிரணியைக் கருத்திற்கொண்டும் அல்லது எதிர் அணியினர் எடுத்த ஓட்டங்களகை; கருத்திற்கொண்டும் தம் விளையாட்டு முறையை சிலநேரம் மாற்றுவதுமுண்டு..இதை எல்லாம் கருத்திற் கொண்டே பந்துவீச்சை பாவித்துக்கொள்வார்கள். பழக்கப்பட்டதையே சிலசமயம் கையாள்வது சிரமமாயிருக்க புதிய பவர் பிளேகளை எப்படி, எச்சமயத்தில் பிரயோகிப்பது என்ற கேள்வி அணித் தலைவர்களுக்கு எழுகின்றது.

முதலாம் பவர் பிளே 10 ஓவர்களும் முன்னையமுறையை ஒத்தது என்பதால் கையாள்வதில் சிரமம் இருக்காது. அடுத்த இரண்டு பவர் பிளேகளும் தொடர்ந்த ஓவர்களாக தலா 5 ஓவர்கள் கொண்டதாகவும் எத்தருணத்திலும் பிரயோகிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும் என்பதுடன் நெருக்கமான பந்து ஏந்து நிலைகள் (உயவஉாைபெ ிழளவைழைெ) அவசியமானதல்ல என்ற சிறியதோர் விதித் தளர்வையும் கொண்டிருக்கும். ஆதலால் இவற்றை பந்து புதிதாய் இருக்கும் போது பாவிக்கவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. துடுப்பாட்டக் காரர்கள் பந்தைத் தூரஅடித்து விளையாட தொடங்கிவிட்ட சந்தர்ப்பத்தில் பந்துவீச்சாளர்களை இறுக்கமான வீச்சாக பந்தை வீசவைக்கவேண்டும் அல்லதுவிடில் எல்லைக் கோட்டுக்கருகாமையில்தான் வீரர்கள் தேவைப்படுவார்கள். பந்து வீச்சாளர்கள் சாதூரியமாக பந்து வீசச்

சிரமப்பட்டால் பவர் பிளே 2, 3 ஐ பிரயோகிப்பது உசிதமானதல்ல. அதேநேரம் அடுத்தடுத்து விக்கற்றுகள் வீழும் சந்தர்ப்பத்தில் களத்தில் புதிய துடுப்பாட்டக்கார் இருக்கும் சந்தர்ப்பமாகையால் அங்கு அப் பவர் பிளேயை பிரயோகிப்பதே உகந்தது. அதேநேரம் சந்தர்ப்பத்துக்காய் காத்திருந்து பவர் பிளேயை பிற்போட்டுவதும் நல்லதல்ல. இது எந்தஅணியுமே ஓட்டங்குவிக்க முற்படும் இறுதிக்கட்டஓவர்களில் கட்டாய பவர் பிளேயை வலிந்து பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துள் தள்ளிவிடக்கூடும். ஆதலால் பவர் பிளேயைப் பாவிப்பதில் அணித்தலைவரின் சாதுரியம் மட்டுமல்ல இறுக்கமான பந்துவீச்சும், உற்சாகமான பந்துத் தடுப்பும் அவசியமாகிறது. இது சவால் போல தெரிந்தாலும் உண்மையில் இதைக்கையாளும் தந்திரம் தெரிந்தால் பலவீனமானஅணிகூட இதை பலமாக மாற்றிக்கொள்ளலாம்.

துடுப்பெடுத்தாடும் அணியி;ன் ஓட்டவிகிதம் குறைவாக இருக்கையில் கடைசி இரண்டு பவர் பிளேகளை பிரயோகிப்பது சாலச் சிறந்ததாக இருக்கும். இந்தநேரத்தில் பந்து வீச்சு ஒத்துழைப்பும் இருந்தால் ஓட்ட விகிதத்தை இன்னும் குறைக்க முடியும். இவ்விடத்தில் ஒரு கேள்வி எழும். ஓட்டவிகிதம் குறைக்கப்படும்போது அது எப்படி விறுவிறுப்பான ஆட்டமாக அமையும் ?

கேள்வி சரிதான். கணிதவியலில் இக்கேள்வி சரியானதுதான். ஆனால் கிறிக்கற் கணிதமல்லவே. அது விளையாட்டு. ஒருநாள் கிறிக்கற் போட்டியின் வெற்றி ஓட்ட விகிதத்தில் நிச்சயிக்கப்படுவதாக இருந்தாலும் அந்த விகிதம் நிச்சயிக்கப்பட்டதாக இருப்பதில்லை. கணத்துக்கக் கணம் மாறிக்கொண்டே இருப்பது. இந்த மாற்றத்தைக் கொண்டே கிறிக்கற் போட்டியின் சுவாரி~ம் அமைந்துவிடுகிறது. களத்தடுப்பு அணி துடுப்பாட்ட அணியின் ஓட்ட விகிதத்தை குறைக்க முற்படும் போதெல்லாம் துடுப்பாட்ட அணி ஓட்டவிகித்ததை அதிகரிக்க முனையும். இதனால்தான் போட்டி விறுவிறுப்பாகும் என ICC எண்ணுகிறது. 1996 உலகக்கோப்பைப் போட்டியில் முதல் 15 ஓவர்கள் கட்டுப்பாடுள்ள களத்தடுப்பை அறிமுகஞ்செய்தபின்புதான் கிறிக்கற்போட்டி விறுவிறுப்பானது என ICC எண்ணியிருக்கலாம்.. இதனால் தான் இக்கட்டுப்ாட்டை 20 ஓவர்களாக்கியுள்ளதோ என்னவோ! இந்த விதியை 2007 உலகக் போப்பைப் போட்டியில்

உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தவதே ICC யின் திட்டம். இதன் பரீட்சாத்தம் யூலை 30 2005இல் ஆரம்பமாக இருந்தபோதும் இங்கிலாந்து அவுஸ்ரேலிய அணிகளின் அதீத ஆவர்வங்காரணமாகவே யூலை 7 இல் ஆரம்பித்தது.

ஆனால் இவ்விரு அணிகளும் இப்போது இதில் அதிக ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதன்முதலாக பரீட்ச்சாத்த காலம் முடியுந்தருணத்தில்தான் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதன் சரி பிழைகளைச் சொல்ல இன்னும் தமக்கு அவகாசந்தேவையென அதன் தலைவர் சவ்நரேன் சந்திரபால் தெரிவித்திருக்கின்றார். அவர்கூற்றிலும் நியாயம் இருக்கிறது. மற்றயஅணிகளோ மெளனமாக இருக்கின்றன.

இந்திய அணியோ இப்புதிய விதியால் வெற்றிவீதத்தை உயர்த்திக் கொண்டுள்ளது. இதற்குக்க காரணம் இந்திய அணி நாணய சுழற்சியில் அதிகளவில் வெற்றி பெற்றதும் எதிரணிகள் நன்றாக விளையாடாததும் தம் நாட்டுக்குள் விளையாடியதுந்தான் என இவ்விதிகளை எதிர் விமர்சனம்செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

இந்த விதிகளின் சூத்திரதாரிகளில் ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராயிருக்கும் அவுஸ்ரேலியர் கிறேக் சப்பல் மற்றவர் மெதுவான ஆட்டக்காரர் எனப் பெயரெடுத்த முன்னாள் இந்திய கிறிக்கற்வீரர் சுனில் கவஸ்கார். இந்த விதிகளை பரிந்துரைத்தவர்களில் முதன்மையான இன்னொருவர் மேற்கிந்தியத் தீவின் முன்னால் வீரரும் ICC மத்தியகுழு உறுப்பினர்களில் முக்கியமானவருமான கிளேவ் லொயிட். தாம் விளையாடுங் காலங்களில் இத்தகைய விதிகள் இல்லாது போயிற்றே என லொயிட் ஆதங்கப்படுகின்றார். ஆனால் தற்போது விளையாடும் அணிகளின் தலைவர்களோ வீர்களோ எவரும் இவற்றுக்கு ஆதரவாக இதுவரை பேசியதில்லை.

இவ்விதிகளை எதிர் விமர்சனஞ் செய்பவர்களின் வாதம் என்னவெனில். ஆட்டத்தை சுறுசுறுப்பாக்க வேண்டுமெனில்

இத்தகைய விதிகளால் முடியாது அதைவிட இருபது-20 கிறிக்கற் விளைாட்டை ஊக்குவிக்கலாம் என்பதாகும். மேலும் புனிதமான கிறிக்கற்றை ICC வியாபார நோக்கத்துக்கு உட்படுத்தப் பார்க்கிறது என்பதும் பணம் அதிகம் சேர்ந்தால் அதன் பங்கு விளையாட்டு வீரர்களுக்கம் சேரும் என்பதால் அவர்களும் மெளனியாக இருக்கிறார்கள் என்று குற்றச் சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள்.

இதுவரை 19-வயதிற்குட்பட்டோர் உலகக்கோப்பை விளையாட்டுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிறிக்கற் போட்டிகள் இப்புதிய விதிகளை பரீட்சித்திருக்கின்றன. அணித் தலைவர்களுக்கும் அணியினருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதைத் தவிர ICC எதிர்பார்த்த சுறுசுறுப்பு எதையும் கொண்டுவரவில்லையென இன்னொருசாரார் குற்றஞ் சுமத்துகின்றனர்.சிலமாற்றங்களுடன் இவற்றை அங்கீகர்க்கலாம் என சிலர் அபிப்பிராயப்பட்டாலும் அம் மாற்றங்கள் எதுவென்பதிலேயே அவிப்பிராயபேதங்கள் இருக்கின்றன. பவர் பிளேயை ஏற்றுக் கொள்வதில் எதிர்ப்பு அதிகம் இல்லாதபோதும் மூன்றாம் பவர் பிளேயை துடுப்பாட்ட அணி தீர்மானிக்கலாம் என்றும், இறுதி ஓவர்களாக இருக்கலாம் என்றும், மூன்றாம் பவர் பிளேயே தேவையில்லையென்றும் இரண்டாம் பவர் பிளே 25 வது ஓவரில் இருக்கவேண்டும் என்றும், முதல் 15 ஓவர்களும் முதல் பவர் பிளேயாகவும் இன்னொரு 5 ஓவர் பவர் பிளே துடுப்பாட்ட தலைவரின் விருப்பில் எங்கும் பிரயோகிக்கக்கூடியதாக இருக்கவேண்டுமென்றும் பல்வேறு அபிப்பிராயங்களை முன்வைக்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் 20 ஓவர்கள் பவர் பிளேயை ஏற்றுக் கொள்வதில் மட்டும் ஒற்றுமைப்படுகிறார்கள். இன்னும் சிலர் 20 ஓவர்கள் வேண்டாம் 15 ஓவர்களையே 3 பவர் பிளேயாகப் பிரித்து எங்கும் பிரயோகிக்கக்கூடியதாக ஆக்குங்கள் என்றும் அவிப்பிராயப்படுகிறார்கள். மார்ச் மாத முடிவில் ICC என்ன செய்யப்போகிறது ?

இந்த பவர் பிளேயால் வியத்தகு மாற்றம் ஏதும் வந்ததாகவோ போட்டிகளில் விறுவிறுப்பு கூடியதாகவோ எனக்குத் தெரியவில்லை. பொதுவாகவே எந்தப்போட்டியாக இருந்தாலும் போட்டி ஆரம்பித்தவுடன் எதிரணியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே ஒரு அணி தமது போட்டி அணுகுமுறையை வகுத்துச் செயற்படும். அவ்வாறே ஒருநாள் கிறிக்கற் போட்டியிலும் எந்த அணியும் முதல் ஓவர்களுக்கு இறுக்கமான களத்தடுப்பையே வைத்திருக்க முற்படும். அதேபோல துடுப்பெடுத்து ஆடும் அணியும் விக்கற்றை இழக்காது காவாந்து ஆட்டத்தையே மேற்கொள்ளும். பந்தும் புதிதாய் இருக்கின்றபோது இம் முறைகளே சாலச்சிறந்ததுங்கூட. 15 ஓவர்கள் கட்டுப்பாடு இருக்கிறதோ இல்லையோ

ஆகக்குறைந்தது முதல் 5 ஓவர்களுக்காவது இதே ஆட்டமுறையைத்தான் இரு அணிகளும் கடைப்பிடிக்கும்.

ஆதலால் பவர் பிளே 1 (10 ஓவர்கள்) ஐந்தாவது ஓவரின்பின் ஆரம்பிக்கவேண்டுமென்றும் பவர் பிளே 2 (5 ஓவர்கள்) எப்போதும் பாவிக்கப்படலாம் என்றும் பவர் பிளே 3 தேவையில்லை என்றும் புதிய விளையாட்டுவிதி வருமாயின் பலரையும் வசீகரிக்கும் அதேநேரம் அணிகளின் ஆதரவையும் பெறும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் வழமையாக கைக்கொள்ளப்பட்டுவரும் கள மட்டுப்படுத்தல் இருப்பதுபோல் உணரப்படும் அதேநேரம் பவர் பிளே 2 களத்தடுப்பு அணியின் தேவையான தருணத்தில் பாவிக்கும் துரப்பு ஓவர்களாகவும் இருக்குமல்லவா ? இது ஒரு ஆதங்கந்தான். ICC என் அவிப்பிராயத்தை கருத்திலெடுக்குமா என்ன!

எது எப்படியெனினும், கிறிக்கற்றின் விறுவிறுப்பைக் கூட்டுகிறதோ இல்லையோ சில மாறுதல்களுடன் பவர் பிளே விதியை 2007 உலகக்கோப்பைப் போட்டியில் விதியாக அங்கீகரிக்க ICC முடிவெடுக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஏனெனில் அதற்கு அதிக எதிர்ப்பு இல்லை என்பது மட்டுமே காரணமாக இருக்கலாம். ஆனால் சுப்பர் சப் என்பது போட்டியின் விறுவிறுப்பை மாற்றலாம், தோற்கும் அணியிற்கு உத்வேகத்தைக் கொடுத்து போட்டியின் திசையை மாற்றி அமைக்கலாம், புதியதொரு வீரருக்கு நாயகன் தகுதியை தரலாம், 12-ம் வீரர் ஒரு துரப்புச் சீடட்ாய் அமையலாம் என பல வீரியங்கள் இருந்தாலும் கிறிக்கந் உலகம் எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்பைத் தெரிவிப்பது ஏனென்று புரியவில்லை.

அதனை அடுத்த வாரம் பார்ப்போம்.

Series Navigation

அருண்

அருண்