ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue


1874இல் அறிவியல் கதை எழுத்தாளரான சூல்ஸ் வெர்ன் எதிர்கால உலகத்தை கற்பனை செய்யும்போது அங்கு நிலக்கரிக்குப் பதிலாக தண்ணீரே உபயோகப்படுத்தப்படும் என்று எழுதினார்.

இப்போது ஐஸ்லாந்து மக்கள் அந்தக்கனவை நனவாக்க முடியும் அதுவும் அடுத்த தலைமுறைக்குள்ளேயே செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதற்கான முதல் அடியை அடுத்த வருடம் செய்யப்போகிறார்கள். அதாவது ஐஸ்லாந்தை முழுக்க முழுக்க ஹைட்ரஜன் சார்ந்த முதல் நாடாக செய்யும் முதல் படி.

ஏற்கெனவே ஐஸ்லாந்து மாற்ற தேசங்களை விட முன்னுக்கு சென்று அங்கிருக்கும் மரபுசாரா எரிபொருள் துறையில் அதிகம் செலவிட்டு அந்த தீராத எரிபொருள் (renewable energy) பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அத்தனை சக்தி தேவைகளும் அணைநீர் சக்தியிலுருந்தும், நிலத்தடி வெப்ப சக்தியிலிருந்தும் பெறப்படுகிறது.

ஆனால் இந்த நாட்டில் எந்தவித நிலக்கரியோ, பெட்ரோலோ இல்லாததால், இந்த நாடு இதன் கார்களையும், பஸ்களையும், மீன்பிடிக்கும் படகுகளையும் ஓட்ட வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலையே நம்பி இருக்கிறது. இந்த மீன் பிடிக்கும் படகுகளே இந்த நாட்டின் வருமானத்துக்கு 70 சதவீதம் காரணமாக இருக்கின்றன.

இந்த இயற்கை வளம் இருந்தாலும், இந்த மக்கள் 270000 பேரே இந்த தீவு நாட்டில் இருந்தாலும், இவர்கள் தலைக்கு கணக்குப் போட்டால் மற்ற எந்த நாட்டினரை விட அதிகமாக உலகத்தில் பச்சைவீடு உருவாக்கும் வாயுக்களை (greenhouse gas emissions) வெளியிடுகிறார்கள்.

எனவே ஐஸ்லாந்தின் அடுத்த சக்திப் புரட்சி அதன் தீராத சக்தி உருவாக்கும் இடங்களிலிருந்து பெறப்பட்ட சக்தியை எப்படி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது. அப்படி போக்குவரத்துக்கு சூரிய சக்தியையோ, நிலத்தடி வெப்பச்சக்தியையோ, அணைநீர் சக்தியையோ பயன்படுத்த முடிந்தால் அவர்கள் பெட்ரோலை நம்பவே வேண்டாம்.

அவ்வாறு சக்தியை இடம் பெயர்க்க தேவையான முக்கியமான தொழில்நுட்பம் எரிபொருள் செல் தொழில்நுட்பம் ( fuel cells technology )தான். இந்த செல்களில் ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் சேர்த்து சக்தி உருவாக்கலாம். இதன் பக்க விளைபொருள் தண்ணீர்.

ஆனால், சிக்கனமாகவும், அதிக மாசுகளை காற்றில் விடாமலும் ஹைட்ரஜனை உருவாக்குவதே மிகப்பெரிய கஷ்டமான விஷயம். இதுவே எரிபொருள் செல்களை அதிகம் உருவாக்காமல் தடுத்த முக்கிய காரணம்.

பேராசிரியர் ப்ராக்கி அர்னாசன் என்பவர் ஒரு கருத்தைக் கூறினார். (இவர் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பதால் இவருக்கு பேராசிரியர் ஹைட்ரஜன் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்)

1970இலேயே இவர் ஐஸ்லாந்து நாட்டின் பொருளாதாரத்தை ஹைட்ரஜன் மையமானதாக உருவாக்க வேண்டும் என்று கருத்து கூறிவருகிறார்.

இவருடைய மைய கருத்து, ஐஸ்லாந்து நாட்டில் இருக்கும் விலை குறைந்த அணைநீர் சக்தி மூலம் வரும் மின்சாரத்தைப் பயன்படுத்தி தண்ணீரை எலக்ட்ராலிஸிஸ் செய்து ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரிப்பது. ஹைட்ரஜனை சேமித்து அதனை எரிபொருள் செல்லில் பயன்படுத்துவது.

‘பல நிபுணர்கள் இப்போது சூரியச்சக்தியையே உபயோகப்படுத்தி விலைகுறைந்த மின்சாரமாக மாற்றலாம் என்றும் இந்த முறை இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் மற்ற முறைகளைவிட சிக்கனமாக ஆகிவிடும் என்றும் கூறுகிறார்கள். நாம் ஐஸ்லாந்தில் அந்த நிபுணத்துவம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். ஏற்கெனவே நம் அணைநீர் மின்சாரம் மிகுந்த விலைமலிவாக நமக்குக் கிடைக்கிறது ‘ என்று இவர் கூறுகிறார்.

அரசாங்கம் ஐஸ்லாந்தை ஹைட்ரஜன் மைய பொருளாதாரமாக மாற்றவேண்டும் என்று அறிவித்துவிட்டது. இதனால் இதன் தலைநகரான ரெக்ஜாவிக் நகரத்தில் முதல் இரண்டு மாசு வெளியேற்றாத பஸ்களை ஓட்ட முடிவெடுத்திருக்கிறது.

இன்னும் கூடிய விரைவில் மீதமிருக்கும் 80 பஸ்களையும் எரிபொருள் செல்களால் ஹைட்ரஜன் கொண்டு ஓட்டவேண்டும் என்றும் தீர்மானம் செய்திருக்கிறது.

ஷெல் நிறுவனம் இந்த பஸ்களுக்கு ஹைட்ரஜன் சப்ளைசெய்ய ஹைட்ரஜன் வங்கிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறது.

அடுத்தபடியாக, இந்த தீவில் இருக்கும் எல்லா கார்களையும் ஹைட்ரஜன் சார்ந்த கார்களாக்கவும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

Series Navigation

செய்தி

செய்தி