ஐந்தாவது சுவர்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

தெலுங்கில் கல்பனா ரெண்டாலா தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்.



தெலுங்கில் கல்பனா ரெண்டாலா
kalpana.rentala@gmail.com

தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்.
tkgowri@gmail.com

“அம்மா! பேப்பரில் இதெல்லாம் என்ன? உனக்கு மூளை கலங்கிவிட்டதா? இப்படிச் செய்யப் போவதாக ஒரு வார்த்தை என்னிடம் சொல்லக்கூட இல்லையே?” ஆர்த்தி உரத்தக் குரலில் கத்திக் கொண்டே ஹாலுக்கு வந்தவள், கையில் இருந்த பேப்பரை சோபாமீது வீசியெறிந்தாள். கோபத்தில் சிவந்து விட்ட ஆர்த்தியை நிதானமாக, கொஞ்சமும் தயங்காமல் பார்த்துக் கொண்டே, ஒருநாள் இது போல் நடக்கக் கூடும் என்று முன்பே ஊகித்திருந்தது போல் பார்த்தாள் சாரதா.
“ஆர்த்தி! எதற்காக இந்த கத்தல்? இப்போ என்ன நடந்து விட்டது?” ஆர்த்தியின் கத்தல் எதைப் பற்றி என்று தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாதது போல் கேட்டாள்.
“என்ன நடந்ததா?” என்றபடி தாயை ஏறயிறங்கப் பார்த்தாள் ஆர்த்தி.
கத்தரிப்பூ வண்ணத்தில் ரங்காச்சாரி புடவை, காதில் முத்துத் தோடு, கழுத்தில் மெல்லிய சங்கிலி, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு, தலைக்கு குளித்திருப்பதால் காற்றில் அலை பாயும் கூந்தல். அங்காங்கே ஓரிரு நரைமுடி, கண்ணுக்குக் கீழே லேசான கரு வளையம். அப்படியும் அந்த முகத்தில் தன்னம்பிக்கையின் சாயல் புதிய அழகை கூட்டிக் கொண்டிருந்தது.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு முக்குக்கண்ணாடியை எடுத்து துடைத்துக் கொண்டாள் சாரதா. அவளுடைய உடையோ, தோற்றமோ, நடத்தையோ எதுவும் அவள் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சியை குறிப்பிடுவது போல் இருக்கவில்லை.
சாரதா பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் ஆர்த்தியின் மனதில் தாயிடம் இனம் தெரியாத எதிர்மறையான உணர்வு ஏற்பட்டது.
“எதுவும் தெரியாதது போல் பேசுகிறாயே? இந்த விளம்பரம் என்ன? அப்பா போய் இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. இப்பொழுது மறுபடியும் உனக்கு திருமணமா? இவ்வளவு சீக்கிரமாக திரும்பவும் கல்யாணம் செய்து கொள்வதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு, அப்பாவுக்கு நீ கொடுக்கும் மரியாதை இதுதானா?” கோபமும், ஏளனமும் கலந்த குரலில் கேட்டாள் ஆர்த்தி.
“ஆர்த்தி! நான் செய்த காரியம் உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அது உன் விருப்பம். ஆனால் பெற்ற தாயிடம் பேசும் முறை இதுதானா?”
“கணவன் போனதும், மறுமணத்திற்கு தயாராகி விடுவது எந்த முறையைச் சேர்ந்தது? நான் இறந்து போய் விட்டேனா? ஒரு வார்த்தையாவது என்னிடம் சொல்லணும் என்று தோன்றவில்லையா? போன் நம்பருடன் சேர்த்து முகவரியுடன் விளம்பரம் கொடுத்திருக்கிறாய். இந்நேரத்திற்கு இந்த விஷயம் நம் உறவினர்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டிருக்கும். நாளை முதல் நான் வெளியில் போனால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் என்னவென்று பதில் சொல்வது?” வெள்ளம் போல் வெளியேறிக் கொண்ருந்த ஆர்த்தியின் வார்த்தைகளுக்கு தடை போடுவது போல் கையால் ஜாடை காட்டினாள் சாரதா.
“இதில் வெட்கப் படுவதற்கு என்ன இருக்கிறது? அவ்வளவு தலைகுனிவான காரியம் எதுவும் நான் செய்யவில்லையே? உன்னிடம் முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறாயா? எல்லாம் முடிவான பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்” என்றாள் சாரதா.
“உனக்கு இந்த வயதில், அப்பா போன உடனே மறுமணம் வேண்டியிருந்ததா? தனிமை அவ்வளவு தாங்க முடியாமல் இருக்கிறதா?” சொல்லக் கூடாது என்று நினைத்தாலும், இதுவரையில் அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தாமல் ஆர்த்தியால் இருக்க முடியவில்லை.
தன்னையும் அறியாமல் சாரதா கையை நீட்டி மகளின் கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டாள். கன்னத்தில் அறை வாங்கியது ஆர்த்திதான் என்றாலும், மனதளவில் அடிவாங்கிய சாரதாவின் கண்களில் நீர் நிறைந்தது. நெருங்கியவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று ஊகித்திருந்தாலும், பெற்ற மகளின் வாயிலிருந்து அந்த வார்த்தையைக் கேட்கும் போது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“ஆர்த்தி! நான் வேலையாய் வெளியில் போகிறேன். திரும்பி வந்த பிறகு நிதானமாக பேசுவோம்.” சாரதா செருப்பு மாட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.
திகைத்துப் போனவளாக நின்று விட்டாள் ஆர்த்தி. பக்கத்தில் கிடந்த பேப்பர் தன்னைப் பார்த்து பரிகாசம் செய்வது போல் இருந்தது. நம்ப முடியாதவளாக தாய் கொடுத்திருந்த விளம்பரத்தை மற்றொரு முறை படித்தாள். அதைக் கொடுத்து இரண்டு மாதங்களாகி விட்டது போல் அதன்மீது இருந்த தேதியிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது அப்பா இறந்து போய் ஒரு மாதத்திற்குள் அம்மா இந்த காரியத்தை செய்திருக்கிறாள்.
“துணை தேவை!
திருமணம் போன்ற சடங்கு எதுவும் இல்லாமல், சேர்ந்து வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு, ஒரு மாதத்திற்கு முன்னால் கணவனை இழந்தவளும், வாலண்டரி ரிடையர்வெண்ட் வாங்கிக் கொண்டவளும், ஐம்பத்தைந்து வயது நிறைந்த ரிடையர்ட் ப்ரின்சிபாலுக்கு, பண்பு நிறைந்த நண்பனாக பழகக்கூடிய நபர் தேவை. சமூக சேவையில் விருப்பம் இருப்பவர்களுக்கு, இலக்கியத்திலும், இசையிலும் ரசனை இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி கே. சாரதா, டோர் நம்பர் 24/10/2, சிக்கடபல்லி, ஹைதராபாத்.

கீழே மின் அஞ்சலையும், தொலைபேசி எண்ணையும் பார்த்த பிறகு ஆர்த்திக்கு மறுபடியும் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. குறைந்த பட்சம் பாக்ஸ் நம்பரை கொடுத்திருக்கலாம் இல்லையா? இத்தனை நாளும் கவனித்ததில்லை. ஆனாலும் அம்மாவுக்கு துணிச்சல் கொஞ்சம் அதிகம்தான் என்று நினைத்துக் கொண்டாள். பேப்பரை பக்கத்தில் வைத்துவிட்டு ஹால் முழுவதும் பார்வையை செலுத்தியபடி யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
இந்த வீட்டைப் பார்த்தால் அப்பா இறந்து போன சாயல் எங்கேயாவது தெரிகிறதா? எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்ததால் வீடு நீட்டாக இருந்தது. சுவற்று வர்ணத்துடன் மேட்ச் ஆகும் விதமாக போட்டிருந்த பர்னிச்சர் வீட்டின் அழகை மேலும் கூட்டியது. உணவு மேஜையின் மீது பிளவர் வேஸில் புதிதாக ரோஜா மலர்கள், காலை நேரத்திலேயே வீடு முழுவதும் நிரம்பிய ஊதுபத்தியின் நறுமணம். ஹால் சுவற்றில் ராஜஸ்தானி ஓவியம், பொத்திக் வால் ஹேங்கிங்க்ஸ் தவிர அப்பாவின் போட்டோ இல்லாமல் போனது கொஞ்சம் குறையாக இருந்தது. போகட்டும் ஹாலில் மாட்டவில்லை என்றாலும், படுக்கையறையில் இருந்த போட்டோவை எடுத்து விடவில்லை என்று திருப்திப் பட்டுக் கொண்டாள் ஆர்த்தி.
ஆரஞ்ச், கோல்ட் வண்ணக் கலவையில் ஜன்னல் கர்டென்கள் காற்றுக்கு அசைந்தாடிக் கொண்டிருந்தன. தனக்குப் பிடித்த விதமான வண்ணக் கலவையில் திரைச்சீலைகள் அம்மா வாங்கிய போது அப்பா எவ்வளவு சந்தோஷப்பட்டார்? அம்மாவுக்கு தங்களிடம் எவ்வளவு அன்பு என்று நினைத்திருந்தாளே. உண்மையான அன்பு இதுதானா? இது ஒன்று மட்டும்தான் அம்மா உங்களுக்காக செய்தாளா என்று மனச்சாட்சி கேட்டது. செய்யாமல் என்ன? சமையல் அறையில் எப்போதும் தங்களுக்கு பிடித்தமான முறுக்கு, தேங்குழல், திரட்டுப் பால் என்று எப்போதும் ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும். ஜீன்ஸ், டாப்ஸ், சுடீதார் என்று லேடெஸ்ட் பேஷன் தெரிந்து கொண்டு விதவிதமாக வாங்கித் தந்தாள்.
இருந்தால் மட்டும் என்னவாம்? நமக்குப் பிடித்த காரியங்களை மட்டும் செய்தால் போதுமா? இதெல்லாம் தங்கள் மீது இருக்கும் அன்புதான் என்று நினைத்திருந்தாள் இத்தனை நாளும். தன்னிடமும், அப்பாவிடமும் உண்மையான அன்பு இருந்தால் இன்றைக்கு இந்த காரியத்தைச் செய்திருப்பாளா? இவ்வளவு நாட்களாக அம்மா தங்களிடம் காட்டி வந்த அன்பு எல்லாம் வெறும் நடிப்புதானா? அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் கணவன் இறந்து போனால் மனைவியாக இருப்பவள் எவ்வளவு வேதனையில் ஆழ்ந்து போயிருக்க வேண்டும்?
அமெரிக்காவிலிருந்து வரும் போது வீட்டையும், அம்மாவையும் தான் எப்படியெல்லாம் ஊகித்துக் கொண்டாள்? அம்மா வேளைக்கு சாப்பிடாமல் இளைத்து துரும்பாகி விட்டிருப்பாள் என்றும், மனதளவில் ரொம்ப தளர்ந்து போய் மனச்சோர்வால் பாதிக்கப் பட்டிருப்பாள் என்றும், வீடு முழுவதும் களேபரமாக காட்சி தரும் என்று ஏதோதோ ஊகித்துக் கொண்டாள். அம்மாவுக்கு தைரியம் சொல்லி தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துப் போகணும் என்று நினைத்திருந்தாள். ஆனால் இங்கே வந்து பார்த்தால் எல்லாம் நேர்மாறாக இருந்தது. அம்மா சந்தோஷமாக இருக்கிறாள். வீடு முழுவதும் நேர்த்தியாக, ஒழுங்கு முறையுடன் இருந்தது. அம்மாவிடம் துக்கத்தில் சாயல் கொஞ்சம் கூட தென்படவில்லை. எப்போதும் போல் வளைய வந்து கொண்டிருந்தாள். தான் இங்கே எதற்காக வந்திருக்கிறாள்? அம்மாவின் மறுமணத்திற்கு ஏற்பாடு செய்வதற்காகவா?
உண்மையிலேயே அம்மாவுக்கு வேதனையாக இருந்தால் ஒரு மாதம் போவதற்குள் இப்படி திருமணத்திற்கு தயாராகியிருப்பாளா? பேப்பரில் விளம்பரம் கொடுத்திருப்பாளா? இதையெல்லாம் பார்க்கும் போது அப்பா எப்போடாப்பா போவார் என்று அம்மா காத்திருந்தாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. புத்தகங்களில், சினிமாக்களில் பார்த்ததற்கு நேர்மாறாக இந்த வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நேற்றுதான் பேப்பரில் ஒரு செய்தியைப் படித்தாள். கணவர் இறந்து போனதாக தெரிந்ததும் அந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்து போய் விட்டாளாம்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் பேப்பரில் வந்த செய்தியை அவளால் இன்றும் மறக்க முடியவில்லை. அது இந்த ஊரில்தான் நடந்தது. கணவருக்கு கேன்சர் என்று தெரிந்ததும் அவனைவிட முன்னால் தான் இறந்து போக வேண்டும் என்று ஆஸ்பத்திரி மொட்டை மாடியிலிருந்து குதித்து உயிரை விட்டிருக்கிறாள் அந்த மனைவி. நாளேடுகளில் அவளைப் பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் அவள் புண்ணியவதி என்று பாராட்டினார்கள்.
புத்தகங்களில், திரைப்படங்களில் இந்த விதமாக இருந்தால், அம்மா வேறு விதமாக நடந்து கொள்கிறாள்.
அம்மாவின் திருமணத்தைப் பற்றி யோசித்து யோசித்து மூளை சூடாகிவிட்டது போல் இருந்தது. வாட்சைப் பார்த்துக் கொண்டாள். பன்னிரெண்டு மணியாகிவிட்டது. அமெரிக்காவில் இரவு பத்து மணி. பார்கவ் தூங்கி விட்டிருப்பானாய் இருக்கும் என்று நினைத்தபடி போன் செய்தாள். நான்கு ரிங்குகள் போன பிறகும் மறுமுனையில் எடுக்காததால் ஏமாற்றமடைந்தாள் ஆர்த்தி.
இவ்வளவு தூரம் யோசிப்பானேன்? விளம்பரம் கொடுத்து விட்டால் மட்டும் கல்யாணமோ, வேறு ஒன்றோ நடந்து விடப் போவதில்லையே. மாலையோ, நாளையோ அம்மாவிடம் பேசி அமெரிக்காவுக்கு வருவதற்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டபோது ஆர்த்திக்கு நிம்மதி ஏற்பட்டது.

********************************************************************************
மாலையில் பால்கனியில் நாற்காலி போட்டுக் கொண்டு தனக்குப் பிடித்தமான தேநீரை குடித்துக் கொண்டே “சலாம் ஹைதராபாத்” புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் சாரதா. பக்கத்தில் டீபாய் மீது அப்பொழுதுதான் தொடுத்து வைத்திருந்த மல்லிக்கைப்பூவும், மரிக்கொளுந்தும் எங்கும் நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்தன. வண்ண வண்ண விளக்குளில், நெக்லெஸ் ரோட்டின் வளைவுகளுடன் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்த ஹைதராபாதின் உண்மையான வரலாற்றைப் படிக்கும் போது ஏதோ தெரியாத உத்வேகமும், வேதனையும் உள்ளேயிருந்து பொங்கி குரல்வளையத்திற்கு வருவது போல் இருந்தது.
மதியம் முதல் அம்மாவிடம் பேச வேண்டும் என்று காத்திருந்த ஆர்த்திக்கு அதுதான் நல்ல சமயம் என்று தோன்றியது. பக்கத்திலேயே இருந்த நாற்காலியை இழுத்துக் கொண்டு அருகில் உட்கார்ந்து கொண்டாள். “அம்மா! ரியல்லி சாரி. உன்னுடைய உணர்வுகளை, நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிம். ஆனால் ஒரு வருடம் உன்னால் காத்திருக்க முடியாதா? அப்பா போன மூன்று மாதங்களுக்குள் மறுமணம் செய்து கொண்டால் கேட்பதற்கும், நினைத்துப் பார்ப்பதற்கும் மனதிற்குப் பிடிக்கவில்லை.” தாயின் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
“அது இல்லை ஆர்த்தி! நீ இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு ஆவேசப்படுகிறாய்? நிதானமாக யோசித்துப் பார். சித்தி போன போது என்ன நடந்தது என்று நினைவு இருக்கிறதா?” கேட்டாள் சாரதா.
நினைவு இருக்கிறது என்பது போல் தலையை அசைத்தாள் ஆர்த்தி.
“சித்தி கேன்சரில் இறந்து போன போது நீ சித்தப்பாவை எப்படி எல்லாம் தேற்றினாய்? சித்தி இறந்து போய் விடுவாள் என்று ரொம்ப நாளாக எல்லோரும் எதிர்பார்த்ததுதான். அவள் இறந்து போனதும், முதல் ஊன மாசியம் முடிந்ததும், மறுமணத்திற்காக சித்தப்பா பேப்பரில் விளம்பரம் கொடுத்த போது நீ எவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தாய்? சிநேகிதிகளிடம் சொல்லி உனக்குத் தெரிந்த வரன்களைப் பற்றி சித்தப்பாவிடம் தெரிவித்து, சித்தி போன துக்கம் சித்தப்பாவுக்குத் தெரியக்கூடாது என்று எவ்வளவு தூரம் தவித்தாய்? இப்பொழுது என் விஷயத்தில் மட்டும் இது அசாதாரணமாகத் தோன்றுவானேன்? நான் மட்டும் உங்க அப்பாவை நினைத்துக் கொண்டே அமெரிக்காவில் உங்களுடன் கழிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறாய்?” என்றாள் சாரதா.
“அம்மா! திடீரென்று ·பமினிஸ்ட் ஆக மாறி விட்டாற்போல் பேசுகிறாய். சித்தப்பா விஷயம் வேறு. உன் விஷயம் வேறு. சித்தப்பாவுக்கு சித்தி இல்லாதது பெரிய குறை. சித்தப்பா மட்டும்தானா? ஆண்கள் எல்லோருக்குமே. அவர்களுக்கு சமைக்கத் தெரியாது என்பது மட்டுமே இல்லை. பல விதமான இடைஞசல்கள். வீட்டில் பெண் என்று ஒருத்தி இல்லாவிட்டால் அவர்களுடைய வாழ்க்கை நரகமாகிவிடும்.”
“உண்மைதான். என் விஷயம் வேறு. இது நாள் வரையில் நான் கழித்தது வாழ்க்கையுடன் சமாதானமாகப் போனதுதான். உங்க அப்பாவுக்கு பிடித்தாற்போல், அவருக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாத விதமாகத்தானே வாழ்ந்து வந்தேன்? அது என்னுடைய வாழ்க்கைதானா? நான் விரும்பியது இதைத்தானா? அமைதியில்லாமல் எப்படி வாழ்ந்தேன் என்று உனக்கு எப்படி தெரியும்? அது போகட்டும். ஒரு விஷயம் சொல்லு. ஒருக்கால் நான் இறந்து போய், உங்க அப்பா உயிருடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள். நீ என்ன சொல்லியிருப்பாய்? இதே அறிவுரையை உங்க அப்பாவுக்கு வழங்கியிருப்பாயா? சமையல்காரியை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள், வேண்டும் என்று தோன்றினால் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று பேசி பொழுதை போக்குங்கள் என்று.” கேட்டாள் சாரதா.
“நான் சொல்ல வந்ததும் அதுதான் அம்மா. அப்பா விஷயம் வேறு. தொடக்கத்திலிருந்து வீட்டில் எல்லா வேலைகளையும் நீதான் செய்து வந்தாய். நீ இல்லை என்றால் அப்பாவுக்கு கையும், காலும் ஓடாது. முச்சே நின்று விட்டாற்போல் இருக்கும். உன் விஷயம் அப்படி இல்லையே. இன்று அப்பா இல்லாவிட்டாலும் நீ இந்த வீட்டில் தனியாக எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருக்கிறாய். இன்னொரு நபருக்கு வாழ்க்கையில் இடம் கொடுத்து எதற்காக மனதை, உடலை வற்புறுத்திக் கொள்ளணும்? அமெரிக்காவுக்கு வருவதில் விருப்பம் இல்லை என்றால் கொஞ்ச நாட்கள் இங்கே இரு. நிம்மதியாக வாழ்க்கையை அனுபவி. பணம் வேண்டும் என்றால் நான் அனுப்பி வைக்கிறேன். சமையல்காரியை வைத்துக் கொள். கார் வாங்கித் தருகிறேன். டிரைவரை ஏற்பாடு செய்கிறேன். எங்கே வேண்டுமென்றாலும் போய் வரலாம். நிம்மதியாக வாழ்க்கையை அனுபவி என்றுதான் சொல்கிறேன்.” சுருக்கமாக, நேராக சொன்னாள் ஆர்த்தி.
“ஆர்த்தி! எப்படிச் சொன்னால் உனக்குப் புரியும்? எனக்கு வேண்டியது பணம், நகைகள், புடவைகள், கார் பேன்ற வசதிகள் இல்லை. ஒரு துணை. என்னை ஒரு மனுஷியாக புரிந்து கொண்டு, எனக்குப் பிடித்த விதமாக நட்புடன், அன்பு செலுத்தக் கூடிய நபர். அப்படிப்பட்ட நபர் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். கிடைப்பானாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. அதற்காகத்தான் இந்த சின்னஞ்சிறு முயற்சி” என்றாள் சரதா.
“அப்படியே இருக்கட்டும். ஆனால் பேப்பரில் விளம்பரம் கொடுப்பதால் ஏதாவது பிரயோஜனம் இருக்குமா? யார் யாரோ வீட்டுக்கு வருவார்கள். அவர்களிடம் நீ பேச வேண்டும். அவர்களைப் பற்றி விசாரிக்கணும். நமக்குத் தெரிந்த வட்டத்தில் யாராவது இருக்ககிறார்களா என்று முதலில் பாரு. முதலில் உன் சிநேகிதிகளிடம் சொல்லு. இல்லையா முதலில் யாருடனாவது நட்பு ஏற்படுத்திக் கொள். எல்லாம் சரியாக இருந்தால் பின்னால் யோசிக்கலாம்.” ரொம்ப சிம்பிளாக சொல்லி விட்டாள் ஆர்த்தி.
“அது இல்லை ஆர்த்தி! ஏற்கனவே என் வாழ்க்கையில் பெரும்பகுதி வியர்த்தமாகிவிடது. இத்தனை வருடங்களாக வாழ்ந்த தனிமை வாழ்க்கை போதும். இனி ஒரு நிமிடம் கூட தனிமையில் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது. எஞ்சியிருக்கும் இந்த வாழ்க்கையை யாருடைய சுகத்திற்காகவோ, சந்தோஷத்திற்காகவோ அல்லாமல் எனக்காகவே நான் வாழணும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன்.
விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நிறைய பேர் கான்டாக்ட் செய்தார்கள். இந்த இரண்டு மாதங்களில் எவ்வளவு அப்ளிகேஷன்ஸ் வந்தது தெரியுமா? அவற்றை எல்லாம் படித்துவிட்டு அவர்களை நேர்முகத் தேர்வு செய்யும் போது எனக்குச் சிரிப்புதான் வந்தது. கொஞ்சம் எரிச்சலும் வந்தது. மனைவி தேவைப் படுபவர்கள் நம் நாட்டில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். சிலருக்கு நன்றாக சமைத்துப் போடுவதற்கு, இன்னும் சிலருக்கு நர்ஸாக சிசுருஷை செய்வதற்கு. நான் எப்படிப்பட்ட துணைக்காக தேடிக் கொண்டிருக்கிறேன் என்று விளம்பரத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன் இல்லையா? அப்படி இருந்தும் எல்லோரும் வந்ததுமே என் உடல்நிலை எப்படி இருக்கிறது? எனக்கு ஏதாவது கேன்சர் போன்ற நோய்கள் இருக்கா? வீட்டுப் பெயரை நான் மாற்றிக் கொள்வேனா இல்லையா?எவ்வளவு சொத்து இருக்கிறது? நன்றாக சமைப்பேனா? படுக்கையறையில் நான் ஆக்டிவ் ஆக இருப்பேனா? இது போன்ற கேள்விகளை கேட்டார்கள். அவர்கள் அப்படி கேட்பது எனக்கும் நல்லதாகிவிட்டது என்று வைத்துக்கொள். என் ரசனைகளுடன் அவர்கள் ஒத்துப் போவார்களா இல்லையா என்று கணிக்க முடிந்தது.” சொல்லி முடித்தாள் சாரதா.
“இத்தனைக்கும் உனக்கு எப்படிப் பட்ட நபர் வேண்டும்? இலக்கியம், இசை தெரிந்திருப்பவராக இருந்தால் உன் வாழ்க்கை சந்தோஷமாக கழிந்து விடும் என்று நினைக்கிறாயா? சும்மா தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்கிறேன். இத்தனை நாளும் அப்பாவும், நீயும் சந்தோஷமாக இல்லையா? உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு ஒரு நாள் கூட அந்த சந்தேகம் வந்ததே இல்லை. அப்பாவுக்கும் உனக்கும் நடுவில் என்ன பிரச்னை இருந்தது?” தாமதம்தான் என்றாலும், முதல் முறையாக தாயின் வாழ்க்கையில் இருந்த ஆழத்தை தெரிந்துகொள்ள நினைத்தாள்.
“என் வாழ்க்கை என்று இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்க்கையை எப்படி கழித்தால் நன்றாக இருக்குமோ உங்க அப்பாவிடம் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவருக்கு தன் வாழ்க்கையை தனக்கு பிடித்த விதமாக கழிப்பதுதான் பிடிக்கும். எனக்கு பிடித்த விதத்தில் என்னை இருந்து கொள் என்று சொல்லிவிட்டார். எனக்குப் பிடித்தமான வேலைகளை நான் செய்தேன். ஆனால் எந்த விதமாக? ஒண்டியாக. என் கணவர் ஒருநாளும் என் ரசனைகளில் பங்கு பெறவில்லை. நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட விஷயம் ஏதாவது இருக்கு என்றால் அது நீதான். என் சந்தோஷம், என் துக்கம் எனக்கு மட்டும்தான். என்றாவது நான் என் வருத்தத்தைச் சொன்னால் “அப்படியா!” என்று ஒரு வார்த்தை சொல்லுவார். அதைவிட அதிகமாக நான் அவரிடமிருந்து ஆறுதலை பெற்றதில்லை. கருத்துகளில், ரசனைகளில் நாங்கள் இருவரும் கிழக்கும் மேற்குமாக இருந்தோம். கஷ்டமோ, சுகமோ சேர்ந்து பகிர்ந்து கொண்ட போதுதானே தாம்பத்திய வாழ்க்கையின் இனிமையை உணர முடியும்?” என்றாள் சாரதா.
“பின்னே இதையெல்லாம் என்னிடம் ஒருநாளும் ஏன் சொன்னது இல்லை?” முதல்முறையாக தாயின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்ட போது அவள் தனக்கு மேலும் நெருக்கமானவளாக தோன்றியது. மெதுவாக தாயின் மடியில் தலையை வைத்து அவள் சொன்னதை எல்லாம் கேட்கத் தொடங்கினாள் ஆர்த்தி.
“எத்தனையோ முறை உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உனக்கு நேரம் எங்கே இருக்கிறது? எப்போதும் படிப்பு, பரீட்சைகள், பாட்டு, பெயிண்டிக் கிளாஸ் என்று ஓடிக் கொண்டிருந்தாய். படிப்பு முடிந்ததும் டில்லியில் வேலை என்றாய். பார்கவை காதலித்தேன், கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாய். கல்யாணம் முடிந்ததும் நீங்கள் இருவரும் அமெரிக்காவுக்கு போய் விட்டீர்கள். நானும், உங்க அப்பாவும் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தோம் என்று நீ கவனித்ததில்லை. அப்பாவுடன் நீ சந்தோஷமாக இருந்தது இல்லையா என்று கேட்டாய். அதைப் பற்றிச் சொல்லணும் என்றால் உனக்கு முதலில் என் வாழ்க்கையை முழுவதுமாக தெரியவேண்டும். வெளியில் தெரியும் வாழ்க்கையில்லை. என் உள்ளுக்குள் இருக்கும் உலகம். நாங்கள் நான்கு பேர் அக்கா தங்கைகள். நான்தான் மூத்தவள். எனக்குப் பிறகு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில் தங்கைகள் இருந்தார்கள். அதனால் அப்பா அம்மாவின் விருப்பத்தின் படி உங்க அப்பாவைக் கல்யாணம் செய்து கொண்டேன். அதில் என் விருப்பு வெறுப்புகள் எதுவும் இல்லை. எங்களுக்கு ஏற்ற இடம். உங்க அப்பா கெட்டவர் இல்லை. ஆனால் மனைவியைப் புரிந்துகொள்ளும் குணம் இல்லை. மனைவி என்றால் தனக்கு சம்பந்தப்பட்ட வேலைகளை எல்லாம் பொறுப்பாக செய்து கொடுக்கும், படிப்பறிவுக் கொண்ட ஒரு பெண்! அவ்வளவுதான். ஆனால் திருமணம் ஆனபிறகு நான் படித்தாலும், வேலைக்குப் போனாலும் அவர் ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒன்று, தன்னுடைய வேலைகள் எதிலேயும் மாறுபாடு வரக்கூடாது என்பது அவர் போட்ட கண்டிஷன்.
எனக்கு இலக்கியம், இசை என்றால் பிடிக்கும். உங்க அப்பாவுக்கு அவற்றில் ஆர்வம் இல்லை. நல்ல புத்தகம் ஏதாவது வந்தால் உடனே வாங்கிப் படித்து விடுவேன். புத்தகங்களைப் பற்றியோ, பாட்டைப் பற்றியோ நான் பேசினால் “அதெல்லாம் எதுக்கு? உன் கல்லூரியில் மாணவிகளுக்கு பாடம் சொல்லும் போது அதையும் சொல்லு. உனக்கும் நல்ல பெயர் கிடைக்கும். நடுவில் இந்த ட்யூஷன் எனக்கெதற்கு?” என்று கேலி செய்வார். புதிய இடங்களுக்குப் போய் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். உங்க அப்பாவுக்கோ மாலையில் ஆபீஸ் விட்டு வந்ததுமே தன்னுடைய நண்பர்ளுடன் பாட்மிண்டன் ஆடுவது, ஓய்வு எடுத்துக் கொள்வது விருப்பம். நான் சமையல் செய்யும் போது உங்க அப்பா என்னுடன் பேசிக் கொண்டே காய்கறி நறுக்கித் தருவது, சிலசமயம் தானே சமைப்பது … இது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். உங்க அப்பாவுக்கு சமையல் அறைக்குள் காலடி எடுத்து வைக்கணும் என்றால் ரொம்ப போர். அது பெண்களில் வேலை என்பது அவருடைய கருத்து. வெங்காயம் நறுக்கித் தருவது, குக்கர் ஏற்றி இறக்குவது, தாளித்துக் கொட்டுவது இது போன்ற வேலைகளை செய்தால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று பயம். வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதைவிட சமாதானமாகப் போவதுதான் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் உங்களுடைய வேலைகளை செய்துகொண்டே, வாய்ப்பு கிடைத்த வரையில் என்னுடைய ரசனைகளை அனுபவித்து வந்தேன்.”
“அப்போ அப்பா போனதில் உனக்கு வருத்தத்தைவிட சந்தோஷம்தான் அதிகமாக ஏற்பட்டதா?” ஆர்த்தியின் குரலில் லேசாக ஆர்வம் எட்டிப் பார்த்தது.
“என் வாழ்க்கையில் இதுநாள் வரையில் முக்கியமாக இருந்த நபர் இன்று என் பக்கத்தில் இல்லாமல் போனது குறைதான். ஆனால் அவர் போய் விட்டார் என்று கவலைப் பட்டுக் கொண்டு, எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் அவருடைய நினைவுகளில் கழித்து விடும் யோசனை மட்டும் எனக்கு இல்லை.” சொன்னாள் சாரதா.
“இவ்வளவு நாட்களும் அப்பா இருந்தார். உனக்கு விருப்பமான விதமாக உன்னால் வாழமுடியவில்லை. இப்போ அப்பா இல்லை. உன் வாழ்க்கையை உனக்குப் பிடித்தமான விதமாக கழிக்கலாம் இல்லையா? உன்னை யார் தடுக்கப் போகிறார்கள்? நிம்மதியாக வீட்டில் உனக்குப் பிடித்த வேலைகளை செய். மறுமணம் என்ற வலையில் மாட்டிக் கொள்வானேன்? இந்த முறை எப்படிப்பட்டவன் கிடைப்பானோ?” சந்தேகத்தை வெளியிட்டாள் ஆர்த்தி.
“உண்மைதான். நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு எனக்குப் பிடித்தவற்றைப் படிக்கலாம். நல்ல பாட்டுகளை கேட்கலாம். வெளியில் போய் வரலாம். என் உள்ளே இருக்கும் உணர்வுகளை, உத்வேகத்தை மனதிற்குப் பிடித்த நபருடன் பகிர்ந்து கொள்ளாமல் நான் ஏன் தனிமையில் காலத்தைக் கழிக்க வேண்டும்? இவ்வளவு நாட்களாக உங்க அப்பாவுடன் நான் சேர்ந்து வாழ்ந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் நான் தனியள்தான். இப்பொழுதும் அந்தத் தனிமையுடனேயே என்னால் வாழ முடியாது. எனக்குத் துணை வேண்டும். என்னைப் புரிந்து கொள்ளும் நட்பு வேணடும். என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒரு நபர் வேண்டும்.” தன் மனதில் இருப்பதை தெளிவாக சொன்னாள் சாரதா.
“அம்மா! உனக்கு வேண்டியது நட்புதான் என்றால், இதுவரையில் உனக்கு பிரண்ட்ஸ் இருந்ததே இல்லையா? விஜயா ஆன்டீ, பரிமளா ஆன்டீ இவர்கள் எல்லோரும் உனக்கு நல்ல சிநேகிதிகள்தானே. அவர்களை நம் வீட்டுக்கு கூப்பிடு. அவர்களுடன் உன் எண்ணங்களை பகிர்ந்துகொள். அது போதாதா? ஏனோ மறுபடியும் திருமணம் செய்து கொள்ளணும் என்ற உன் முடிவு தவறானதோ என்று தோன்றுகிறது. பேப்பரில் விளம்பரம் கொடுத்தால் மட்டும் நல்லவன், உன் மனதிற்கு நெருக்கமாக இருப்பவன் கிடைப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? வெளிப் பார்வைக்கு எல்லோரும் உன் பணத்தைப் பார்த்து நன்றாகத்தான் பேசுவார்கள். நீ வேண்டாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வாயோ என்று தோன்றுகிறது. நன்றாக யோசித்துப் பார்.” அறிவுரை வழங்கினாள் ஆர்த்தி.
“என் கண்களுக்கு நீ இன்னும் சிறு குழந்தையாகத்தான் தென்படுகிறாய். விஜயா, பரிமளாவுடன் இருக்கும் நட்பு என் அமைதியற்றத்தன்மையை மனதளவில், உடலளவில் போக்குமா? இந்த மூன்று மாதங்களும் நான் எப்படி கழித்தேன் என்று உனக்குத் தெரியுமா? நீ வாரத்திற்கு ஒரு முறை போன் செய்து குசலம் விசாரித்தாலும் நான் இங்கே அனுபவிக்கும் தனிமையை உன்னிடம் எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ மாலைகள் இதே இடத்தில் புத்தகங்களைப் படித்துக் கொண்டு, பாட்டை கேட்டுக் கொண்டு காலத்தைக் கழித்தேன். எவ்வளவு நெருங்கிய சிநேகிதியாக இருந்தாலும் தினமும் போனில் பேச மாட்டார்கள். நம்முடன் சேர்ந்து இருக்க மாட்டார்கள். தொடக்கத்தில் பதினைந்து நாட்கள் வரையில் எல்லோரும் போன் செய்து பேசினார்கள். ஏதாவது வேண்டுமா? வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்டார்கள். எனக்கு வேண்டியது இப்படிப்பட்ட ஆறுதல் இல்லை. என் மனதிற்கு தேவையான ஒரு அனுசரணை. இத்தனை வருடங்களால பலவிதமான பொறுப்புகளால் களைத்துப் போய் விட்டிருக்கும் மனதிற்கும், உடலுக்கும் கொஞ்சம் ஓய்வு. உங்க அப்பா போன பிறகு என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அழுது கொண்டு உட்காரவில்லை. இதற்கு முன்னால் எப்படி கழிந்ததோ, இப்பொழுதும் என் நித்தியபடி நிகழ்ச்சி நிரல் அதுதான். ஆனால் அதில் ஒரு சின்ன வித்தியாசம். உங்க அப்பாவுக்கு எல்லாம் ஏற்பாடு செய்யும் வேலை தப்பிவிட்டது. இந்த மூன்று மாதங்களில் அப்பாவின் நினைப்பு வரவில்லையா என்றால் பலமுறை நினைப்பு வந்தது. ஆனால் அந்த வேதனையோ, நினைவுகளோ என் எஞ்சிய வாழ்க்கையை விழுங்கி விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. இத்தனை வருடங்களாக வாழ்ந்த தனிமை வாழ்க்கை போதும் என்று தோன்றியது. எனக்குப் பணப்பிரச்னை இல்லை. உடல்நிலை நன்றாக இருக்கிறது. வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதனால்தான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன்.” சாரதா சொன்னாள்.
“இத்தனைக்கும் உன் நேர்முகத் தேர்வில் யாராவது தேர்ச்சி பெற்றிருக்கிறாரா? உன் மனதிற்குப் பிடித்தவர் யாராவது கிடைத்தாரா?” தாய் மனதைப் புரிந்து கொண்டதால் அவள் செய்யும் இந்த காரியத்திடம் ஆர்த்திக்கும் கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டது.
“ராம்மோகன் என்பவரின் எண்ணங்கள், கருத்துகள் என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போவது போல் தோன்றியது. அவருடைய மனைவி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. மனைவியுடன் மனதளவிலும் வாழ்க்கை¨ய் பகிர்ந்து கொண்ட நபர் என்று எனக்குப் புரிந்தது. ஒரு மாதமாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வருகிறோம். காலையில் நான் போனது கூட அவரைச் சந்திக்கத்தான்.”
“அப்போ திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?” சஸ்பென்ஸ் தாங்க முடியாதவளாக கேட்டுவிட்டாள் ஆர்த்தி.
“நாங்க இருவரும் சேர்ந்து வாழணும் என்று நினைக்கிறோம். ஆனால் அவருக்கு நான் மனைவி என்ற ஹோதாவிலேயோ, எனக்கு அவர் கணவர் என்ற ஹோதாவிலேயோ கழிப்பதற்காக அல்ல. இருவருடைய ரசனைகளுக்கு ஏற்றவாறு எங்களுடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதுநாள் வரையில் வாழ்க்கையில் எங்களால் செய்ய முடியாமல் போனவற்றை செய்ய நினைக்கிறோம். சிலநாட்கள் நம் வீட்டிலும், சில நாட்கள் அவருடைய வீட்டிலும், எங்கே இருக்கணும் என்று தோன்றுகிறதோ அங்கே இருப்போம்” என்றாள் சாரதா.
அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது தாயின் கண்களில் புதிய வாழ்க்கையைப் பற்றிய எக்ஸைட்மெண்ட் பார்த்து ஆர்த்தியும் மனப்பூர்வமாக சந்தோஷப்பட்டாள்.
“நாளைக்கு ராமமோகன் வீட்டுக்குப் போகிறேன். அவரிடமிருந்து நூர்ஜஹான், சுரயா பாடல் கேசட்டுக்களை வாங்கி வரணும். உனக்குப் பிடித்தால் நீயும் என்னுடன் வரலாம்” என்று சாரதா சொன்ன போது தனக்கும் சம்மதம்தான் என்பது போல் தலையை அசைத்தாள் ஆர்த்தி.
“நான் டீ போட்டுக் கொள்ளப் போகிறேன். உனக்கும் சேர்த்து போடட்டுமா?” சமையலறையை நோக்கிப் போய்க் கொண்டே சாரதா கேட்டாள்.
“அம்மா! இஞ்சியும், ஏலக்காயும் போட்டு ஸ்பெஷலாக போடுவாயே, அந்த டீ வேண்டும் எனக்கு.” பின்னாலிருந்து குரல் கொடுத்தாள் ஆர்த்தி.
தன்னம்பிக்கையுடன் அம்மா புதிதாக, மேலும் அழகாக காட்சித் தருவதை பிரியத்துடன் பார்த்துக் கொண்டே டீபாய் மீது இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பார்த்தாள். வானத்தில் சுதந்திரமாக பறந்து கொண்டிருக்கும் பறவைகள் இரண்டு. உள்ளே திறந்து பார்த்தால் முத்துப் போன்ற எழுத்துகளில் காதலைப் பற்றி பாரதியாரின் கவிதை!
அம்மா அதிர்ஷ்டசாலி என்று ஆர்த்தி திருப்தியுடன் நினைத்துக் கொண்டாள்.

****************************************************************************************************
எங்கேயாவது பிழை இருக்கிறதோ என்று கதையை மற்றொரு முறை படித்து முடித்தாள் வித்யா. கதை முடிந்து விட்டாற்போல் தான் இருந்தது. ஆனால் எங்கேயோ ஏதோ ஒரு அதிருப்தி! ஏன், எதற்கு என்று மட்டும் தெரியவில்லை. சொல்ல வேண்டியது இன்னும் சொல்லி முடிக்கவில்லை என்று தோன்றியது. ஆனால் அது என்னவென்று மட்டும் புரியவில்லை.
கதை எழுதிய பேப்பர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக வீசிய காற்றுக்கு பறந்து போய் தரை முழுவதும் பரவிக்கிடந்தன. அவற்றை எடுத்து மறுபடியும் பறந்து விடாமல் பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டு திரும்பவும் யோசிக்கத் தொடங்கினாள்.
“என்ன? இன்னும் உன் கதை முடியவில்லையா?” என்று கேட்டபடி உள்ளே வந்தான் ஸ்ரீகாந்த்.
“அடித்தல் திருத்தல் இருந்ததால் திரும்பவும் காபி எடுத்தேன். முடிந்து விட்டாற்போல்தான். படித்துவிட்டு உன் கருத்தைச் சொல்லேன்” என்றாள் வித்யா.
“சரி” என்றபடி தலை¨யை அசைத்துவிட்டு கதையை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து படிப்பதற்காக ஹாலை நோக்கி நடந்தான் ஸ்ரீகாந்த். கதையைப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்தின் முகத்தில் நிறம் மாறிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள் வித்யா. படித்து முடித்ததும் வித்யா எதிர்பார்த்தது போலவே அணுகுண்டு வெடித்ததது.
“இது ஒரு கதையா? எனக்கு ரொம்ப செயற்கையாகத் தோன்றுகிறது” என்றான் ஸ்ரீகாந்த்.
“இதில் உனக்கு யதார்த்தமாக இல்லாத விஷயம் எது?” கேட்டாள் வித்யா.
“அறுபதை நெருங்கிக் கொண்டிருப்பவளுக்கு மறுமணம் என்றால் ஏனோ நம் இந்திய பண்பாட்டுக்கு எதிர்மறையாகத் தொன்றுகிறது. இது போன்றவை அமெரிக்காவில் நடந்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நம் இந்தியாவில் இப்படிப் பட்டவை நடப்பதை நாம் ஒருநாளும் கேள்விப் பட்டது இல்லை. அந்த வயதில் பாட்டியைப் போல் நிம்மதியாக பூஜை, §க்ஷத்ராடனம் என்று இருக்காமல் மறுமணம் செய்து கொள்வாள் என்று நினைக்கிறாயா? உங்க அம்மாவோ, என் அம்மாவோ இப்படி செய்வார்களா? அப்படி செய்தால் நமக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்று நீயே யோசித்துப் பார்.” தன்னுடைய கருத்தை சொல்லிவிட்டான் ஸ்ரீகாந்த்.
“நானும் அதைத்தான் கேட்கிறேன். அறுபது வயது ஆண்மகன் மறுபடியும் கல்யாணம் செய்து கொண்டால் நமக்கு எந்த மாறுபாடும் தோன்றாது. அதுவே ஒரு பெண் செய்தால் வித்தியாசமாக தோன்றுவானேன்? எந்த வயதில் இருப்பவள் அந்த முடிவுக்கு வரலாம், எந்த வயதில் இருப்பவள் அந்த விதமாக முடிவு செய்யக் கூடாது என்பது நமக்குள்ளேயே இருக்கிறது. பெண் என்பவள் எந்த வயதில் இருந்தாலும் தன்னுடைய விருப்பம் போல், தனக்கு பிடித்த விதத்தில் துணையைத் தேடிக் கொள்ளும் சுதந்திரம் நம் சமுதாயத்தில் இருக்கிறதா இல்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி. அதை இந்த கதையின் மூலமாக சொல்வதுதான் என் லட்சியம்” என்றாள் வித்யா.
“இதோ பார்! உனக்குத்தான் சிநேகிதி வட்டம் இருக்கிறதே. அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்.” போய் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டான் ஸ்ரீகாந்த்.
மணியைப் பார்த்தால் இரவு பத்து நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தொந்தரவு செய்வானேன்? நா¨ளை ஞாயிறுதானே? காலையில் வசந்திக்கு போன் செய்து பேசுவோம் என்று நினைத்தபடி போய் படுத்துக் கொண்டாள் வித்யா. கதை எழுதி முடித்துவிட்டோம் என்ற நிறைவு ஏற்படவில்லை அவளுக்கு. ஸ்ரீகாந்த் எழுப்பிய கேள்விகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் சாரதா என்ற கதைப் பாத்திரம் அவள் எதிரே வந்து நின்றது.
“நான் உன் கையில் மெழுகுப் பொம்மையாகிவிட்டேன்” என்றாள் சாரதா.
தான் செய்த தவறு என்னவென்று வித்யாவுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. கதையில் தான் சாரதாவை ரத்தமும், சதையுடன் அல்லாமல் கற்பனையாக உருவாக்கியிருக்கிறோம் என்று.
இருந்தாலும் தான் உருவாக்கிய பாத்திரத்திற்கு முன்னால் தோற்றுப் போவதில் வித்யாவுக்கு விருப்பமில்லை. சாரதாவை நம்ப வைப்பதற்கு முயற்சி செய்தாள்.
“நான் செய்த காரியத்திற்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நீ ஏன் முயற்சி செய்யவில்லை?” கூண்டில் நிற்க வைத்துக் கேட்பது போல் கேட்டாள் சாரதா.
தவறை நேர்மையுடன் ஒப்புக் கொண்டாள் வித்யா. “ஆனால் அது உன்னுடைய நண்மைக்காகத்தான். எல்லோருடைய கண்ணோட்டத்தில் நீ தரம் தாழ்ந்து விடக் கூடாது என்றும், நீ டிக்னி·பைடாக தென்பட வேண்டும் என்று கவனமாக உன் கேரக்டரை செதுக்கினேன்” என்றாள் வித்யா.
“அதாவது நான் செய்த காரியத்தின் மீது உனக்கே மதிப்பு இல்லை. அப்படித்தானே! பேப்பரில் நான் கொடுத்த விளம்பரத்தில் வாழ்க்கையை, அழகாக, சந்தோஷமாக அனுபவிப்பதற்காக துணையைத் தேடிக் கொண்டிருப்பதாக எழுதினாய். நான் துணையைத் தேடுவது வாழ்க்கையை அனுபவிப்பதற்காக என்றால் வாசகர்களுக்கு பிடிக்காதோ என்று கடைசியில் மாற்றிவிட்டாய். உண்மையிலேயே நான் வேட்கையால், உடல்ரீதியான சுகத்திற்காகத்தான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக எழுதினால் உன் வாசகர்களுக்கு என்மீது மதிப்பு இருக்காது என்று நீ நினைக்கிறாய். அதற்காக எனக்கு சமுதாய பணிகளிடம் ஆர்வம் இருப்பது போலவும், சமூகசேவை செய்வதற்காக துணையைத் தேடுவதாகவும் நம்ப வைக்க முயற்சி செய்தாய். இல்லையா?” என்றாள் சாரதா.
“உண்மைதான். ஆனால் நான் அப்படி ஏன் எழுதினேன் என்று ஒரு தடவை யோசித்துப் பார். நீ மற்றவர்களின் பார்வையில் உயர்வாக தென்பட வேண்டும் என்ற தவித்தேன். என் தவிப்பு உனக்கு சுயநலமாகத் தெரிகிறதா? உன் மகள் சொன்னது போல் வேட்கை தீராமல்தான் நீ மறுமணம் செய்து கொள்வதாக எழுதினால் அதன் விளைவு எப்படி இருக்கும் தெரியுமா?” லேசான கோபம் கலந்த குரலில் கேட்டாள் வித்யா.
சாரதா பக்கென்று சிரித்தாள். “பார்த்தாயா! உனக்கு உண்மையை எழுதும் தைரியம் இல்லாமல் போய் விட்டது. ஒரு பெண் எதற்காக கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமோ, எப்படி செய்து கொள்ள வேண்டுமோ எல்லாம் முன்கூட்டியே முடிவு செய்து விட்டார்கள். உனக்கு அந்த எல்லைக் கோட்டைத் தாண்ட வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் உனக்கே தெரியாமல் திரும்பவும் இன்னொரு எல்லைக் கேட்டை கிழிக்கிறாய். என்னை ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு அனுப்புகிறாய். நான்கு சுவர்களுக்கு நடுவில் இருக்கும் உனக்கு உள்ளே இன்னொரு சுவர் இருக்கிறது.” சொல்லிவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள் சாரதா.

வங்கூரி பௌண்டேஷன், 14வது யுகாதி போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்