ஏய் குருவி – கவிக்கட்டு 21

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சத்தி சக்திதாசன்


ஏய் குருவி
விடியும் போதெல்லாம்
ஏன்
என் வீட்டுத் தோட்டத்தில்
ராகம் இசைக்கின்றாய் ?

உன் ஜோடியைத் தேடி
நீ இசைப்பது
சோக ராகமா ? இல்லை
ஜோடியைக் கண்ட
ஆனந்தமா ?

நீ இசைப்பது
தாலாட்டல்ல
பூபாளமே ! அதைகேட்டு
நான் துயில்
கலைக்கிறேன்

ஏய் குருவி !
ஏனுனக்கு இந்த வேகம் ?
சம்பிரதாயமா ? அன்றிச்
சடங்கா ?

சில நேரங்களில்
உன்னிசை கேட்டு
எனை மறக்கிறேன்
மறு சமயங்களில்
என் தாய்நாட்டை எண்ணி
எனை இழக்கிறேன்

மரக்கிளைக்குள் உனை
மறைத்துக்கொண்டு
உன்னிசையாலே
உன்னைக் காட்டிக்
கொள்கிறாய்

காலையிலே பாடுகிறாய் பின்
மாலையிலெ மெதுவாய்
கதைபேசுகிறாய்
தூங்கும்போது மட்டும் ஏன்
கனவிலே பிதற்ற மறுக்கிறாய் ?

வண்ணக்கனவுகள்
காண்பதில்லையோ ?
அவைகளின் வனப்பில்
அடைவதில்லையோ நீ
ஆனந்தம் ?

ஏய் குருவி !
நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்

மனித உலகின்
மறுதலிப்புகளை பார்த்து
மறந்து விடுவாய்
சங்கீத ஞானத்தை

நயவஞ்சக நாடகங்களைப்
நாளும் கண்டு
நிச்சயமாய்
நீயும்
நிறுத்தி விடுவாய்
நெஞ்சையுருக்கும்
இசைமழையை

ஏய் குருவி !
அதோ அங்கே
அண்ணாந்து வானத்தை
அளக்கும் என்
நடைபாதைத் தோழனின்
நலிந்த உலகிற்கு
நயந்திடுவாய் இசைமழையை

நாளை மலர்ந்திடும்
காலை
காணவில்லை உன்னை
என்றால் மகிழ்ந்திடுவேன்
ஏழை உலகில் உன்
கச்சேரி
ஏற்றமுடன் நடக்கிறது
என்றே !

0000

தமிழ் உலகில்

சத்தி சக்திதாசன்

பேனா உதிர்க்கும் மையெல்லாம் சத்தமாய்க் கத்துவதும் தமிழே
பொங்கி என் மனதில் ஆர்ப்பரிக்கும் அலையெல்லாம் தமிழே

விழிகள் மூடித் தூக்கம் தழுவி மனதில் தவழும் கனவும் தமிழே
விடியும் என் உலகில் சூரியக் கதிர்கள் எறிவதும் தமிழே

மழையாய் மண்ணில் பொழியும் நீர்த்துளிகள் தெறிப்பதும் தமிழே
மனத்தில் நினைவாய் துளிர்த்து எழுவதும் கவிதைத் தமிழே

கடலாய்ப் பரந்து மறுகரை தேடித் தொட்டு வருவதும் தமிழே
கருணையாய் சுரந்து தாள்களில் கவிதையாய் மலர்வதும் தமிழே

மலர்களில் விளைந்து வண்டினத்தை மயக்கும் சுவையும் தமிழே
மாலைநேரத்து தென்றலாய் மேனியைத் தாலாட்டுவதும் தமிழே

வானத்தில் மழையின் முன்னே மலரும் வானவில்லும் தமிழே
வண்ணத்திப்பூச்சியின் இறகில் வரைந்த வர்ணங்களும் தமிழே

**
sathnel.sakthithasan@bt.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்