எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

பாவண்ணன்


கிரீஷ் கார்னாட் எழுதிய ‘தலெதண்ட ‘ நாடகத்தைப் பார்த்ததற்கு மறுநாள் நானும் நண்பர்களும் ஓர் உணவு விடுதியொன்றில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் அனைவரையும் அந்நாடகம் மிகவும் கவர்ந்திருந்தது. நாடகம் சார்ந்து எழுந்த பல ஐயங்களுக்கான விடைகளை ஒருவர் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டோம். அந்த நாடகத்தின் திருப்புமுனையாக ஒரு திருமணம் இடம்பெறுகிறது. செருப்புத் தைக்கும் புலையர் ஒருவருடைய மகனுக்கும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மகளுக்கும் இடையில் அத்திருமணம் பேசி முடிவாகிறது. இருதரப்புப் பெற்றோர்களுக்கும் அத்திருமணத்தில் ஆர்வம் இருக்கிறது. லிங்கம் தரித்தவர்கள் அனைவரும் ஒரே சாதியினராகக் கருதப்படுவார்கள் என்னும் கருத்தாக்கம் ஓங்கியிருந்த காலம் அது. அத்தகையவர்களே சரணர்கள் என்னும் அழைப்புக்குத் தகுதியுடையவர்களாகவும் இருந்தார்கள். இரு சரணர்கள் குடும்பத்தில் ஏற்பாடான முதல் திருமணம் அது. பஸவண்ணருடைய ஆசிகளை வேண்டி இரு குடும்பத்தினரும் அவரைத் தேடி வருகின்றனர். மனமார வாழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்புக்கு மாறாக அச்சேதியைக் கேட்டுப் பஸவண்ணர் முடிவு சொல்லமுடியாமல் தத்தளிக்கிறார். ச்முகம் இன்னும் அத்தகு முற்போக்கான எண்ணத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குப் பக்குவமடையவில்லை என்கிறார். அவசரப்பட்டு நடத்தும் ஒரு திருமணத்தால் சமூகத்தளத்தில் உருவாகியிருக்கும் கொஞ்சநஞ்சம் பலன்களையும் இழந்துபோகும் ஆபத்து நேரலாம் என்றும் சொல்கிறார். இழப்பைச் சொல்லி அத்திருமணத்தைத் தடுப்பதா, அல்லது மாற்றத்தைக் கண்ட ஆனந்தத்தால் ஆசிவழங்குவதா என்கிற தடுமாற்றம் அது.

இந்தத் தத்தளிப்பைத்தான் எல்லாரும் விமர்சித்தார்கள். உலகத்தின் எல்லாத் தலைவர்களுமே ஏதோ ஒரு கட்டத்தில் இப்படியான ஒரு தத்தளிப்பை எதிர்கொண் டிருக்கிறார்கள். தலைவர்கள் மட்டுமன்றி தனிமனிதர்கள் வாழ்விலும் இத்தகு தத்தளிப்புத் தருணங்கள் நேரலாம். சில நண்பர்கள் குடும்பங்களில் வீட்டில் அணிகிற ஆடைகளுக்கும்கூட பெரிய போராட்டமும் தத்தளிப்பும் நிகழ்ந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். ஐந்து பிள்ளைகளைப் பெற்ற ஒரு தாய் தன் மருமகள்கள் யாரையும் நைட்டியை அணிய அனுமதிக்காமல் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் புடவைகளை மட்டுமே அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்தார். திருமணமாகிப் புகுந்த வீட்டுக்குப்போன அவரது ஒரே மகள் மறுநாளே நைட்டிக்குத் தாவியதை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மறுக்கமுடியவும் இல்லை. மகளைத் தொடர்ந்து நான்கு மருமகள்களும் ஒரே நாளில் ஆடை வகைகளை மாற்றிக்கொண்டதை அவரால் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ளூர மிகவும் தடுமாறிப்போனதையும் முனகிக்கொண்டே இருந்ததையும் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் ஓரளவு முற்போக்கான எண்ணம் உள்ளவர்தான் அவர். நான்கு பிள்ளைகளில் இருவர் கலப்புத் திருமணம் செய்துகொண்டதையொட்டி அவருக்கு எந்தவிதமான விமர்சனமும் இல்லை. பிள்ளைகள் சந்தோஷமாக இருந்தால் சரி என்கிற எண்ணம் உடையவராகவே இருந்தார். திருமணத்துக்கென்று எந்தவிதாமன கட்டுப்பாடுகளும் விதிக்காதவர் ஆடைகள் விஷயத்தில் கறாரான கட்டுப்பாடுகளை விதிப்பவராக இருந்தார்.

எல்லாரும் தம் வாழ்வில் ஏதோ ஓர் எல்லை வரையில் மாற்றத்தை அனுமதிக்கிறார்கள். புதிய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தமக்கென விதித்துக்கொண்டிருக்கும் எல்லையைத்தாண்டி எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அவர்களால் நினைத்துப் பார்க்கமுடிவதில்லை. அவர்கள் பழமையின் பிரதிநிதியாக இருக்கிறார்களா அல்லது புதுமையின் பிரதிநிதியாக இருக்கிறார்களா என்பதை அவர்கள் தமக்குள் வகுத்து வைத்திருக்கும் இந்த எல்லைப்புள்ளியை மையமாக வைத்துக் கண்டறிந்துவிடலாம். இது ஒரு மதிப்பீட்டுக்கலை.

அதுவரை வாய்பேசாமல் இருந்த நண்பர் திடுமென வாய்திறந்து ‘அப்படியென்றால் பஸவண்ணனர் புதுமையின் பிரதிநிதியா அல்லது பழமையின் பிரதிநிதியா ? ‘ என்று கேட்டார்.

‘நிச்சயமாக புதுமையின் பிரதிநிதிதான் ‘

‘எதை ஆதாரமாக வைத்துச் சொல்கிறீர்கள். கலப்புத் திருமணத்தை ஒட்டி அவர் குழம்பும் சித்திரத்தைப் பார்த்தால் அப்படிச் சொல்லத் தோன்றிவில்லையே. ‘

‘அவரை மதிப்பிட அந்தத் தருணம் பிழையான ஒரு புள்ளி. சமூகத்தில் உடலுழைப்பைச் செலுத்துகிறவனுக்கு முதன்முதலில் ஒரு அந்தஸ்தை உருவாக்கியது அவர் குரல்தான். உழைக்கிறவனிடம்தான் ஈசன் தங்கியிருக்கிறான் என்று ஓங்கிச் சொன்னவர் அவர்தான். உழைப்பவர்களுக்கான ஓர் உயர்ந்த இடம் சமூகத்தில் உருவாகிக்கொண்டுவரும் தருணத்தில் இப்படி ஒரு திருமணம் அதைச் சிதைத்துவிடுமோ என்று சற்றே அஞ்சினார் அவர். முன்னேற்றம் தடைபட்டுவிடுமோ என்கிற அச்சம்தானே தவிர அது நிச்சயமாக ஒரு பின்னடைவு அல்ல ‘

நண்பருக்கு நான் சொன்ன பதில் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தது. அவருக்கு மேலும் தெளிவுண்டாகும் வகையில் சிறுகதைகளில் இருந்து பல பாத்திரங்களை முன்வைத்து அந்த மதிப்பீட்டை நிகழ்த்திக் காட்டினேன். அப்படி நிகழ்த்தப்பட்ட கதைகளில் முக்கியப் பங்கு வகித்தது கல்கியின் ‘கேதாரியின் தாயார். ‘

ஏதோ ஒரு பத்திரிகையில் வெளிவந்த அப்பள விளம்பரத்தைப் பார்த்ததும் பாகீரதி அம்மாளையும் மறைந்த அவருடைய மகனாகிய கேதாரியையும் நினைத்துக்கொள்ளும் சங்கர் என்னும் ஒரு நண்பனுடைய எண்ண ஓட்டங்களிலிருந்து அக்கதை தொடங்குகிறது. தொடக்கத்திலேயே கேதாரியின் மரணக்குறிப்பு இடம்பெறுகிறது. கேதாரியின் மரணத்துக்குக் காரணம், சிக்கலான வகைகளில் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்த அவனுடைய உடல்நிலையே என்று அவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் உரைக்கிறாார்கள். ஆனால் அவன் உடல்நோயின் வேர் அவனுடைய மனோவியாதியில் இருந்ததென்பதைம் அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக் கொண்டதென்பதையும் சொல்லும் நண்பன் அவனுடைய நட்பையும் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் தொகுத்து நினைத்துக்கொள்கிற விதத்தில் கதை அமைந்திருக்கிறது.

கேதாரிக்குத் தாயின் ஞாபகம் மட்டுமே உண்டு. தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது. அவன் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது அவர் ஒரு நாடகக்காரியின் மையலில் வசப்பட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டார். இந்த விவரமெல்லாம் கேதாரி வளர்ந்து பெரியவனாகும் வரை யாருக்கும் தெரியாது. கேதாரிக்குத் திருமணப் பேச்சு நடக்கிறபோதுதான் அவன் தாயாரான பாகீரதி அம்மாவே சொல்லித் தெரிந்துகொள்கிறான். அதைச் சொல்வதற்கும் ஒரு காரணமிருக்கிறது. மணந்துகொள்ளவிருக்கும் பெண்ணைத் தான் சென்று பார்க்கவேண்டிய அவசியமே இல்லையென்றும் தன் அம்மாவுக்குப் பிடித்திருந்தால் போதுமென்றும் சொன்ன மகனைப் பார்த்துச் சொல்லவேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. பாகீரதி அம்மாவின் கணவரான சுந்தரராமையர் மனைவியைவிட்டு ஓடிப்போனதற்கு முதல் காரணம் அந்தத் திருமணமே அவர் விருப்பமில்லாமலும் பெற்றோர்கள் நிர்ப்பந்தத்தாலும் நடந்தது என்பதுதான். விருப்பமில்லாமலே நான்கு வருஷங்கள் வாழ்ந்துவிட்டு மனத்துக்கும் ஆசைக்கும் பிடித்த பெண்ணைப் பார்த்ததும் அவள் பின்னாலேயே சென்றுவிட்டார். தனக்கு நேர்ந்த நிலைமை தனக்கு மருமகளாக வரப்போகிறவளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கேதாரியே சென்று பார்த்து பெண்ணைப் பார்த்துச் சம்மதம் தெரிவித்தால்தான் திருமணம் நடக்கும் என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள்.

மிகவும் சிரமப்பட்டு பாகீரதி அம்மாள் தன் மகனைப் படிக்க வைத்து ஆளாக்குகிறாள். அப்பளம் இட்டு விற்றுவந்த வருமானத்தில்தான் படிக்கவைக்கிறாள். தொடக்கத்திலிருந்தே அவன் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறிவருகிறான். பி.ஏ.தேர்விலும் சென்னை ராஜதானியிலேயே முதலாவதாகத் தேறுகிறான். கேதாரி கல்லுாரியில் காலெடுத்து வைத்ததிலிருந்தே அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கப் பலரும் முன்வருகிறார்கள். ஆனால் மற்ற பெண்களாக இருந்தால் அப்பளம் இடும் தொல்லை ஒழிந்தது என்று எண்ணி யாராவது ஒரு பெண்ணைப் பிடித்துக் கேதாரியின்கழுத்தில்கட்டியிருப்பார்கள். ஆனால் பாகீரதி அம்மாள் பட்டப்படிப்பு முடிகிறவரை அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று மறுத்துவிடுகிறாள்.

பட்டப்படிப்பு முடிந்ததும் பக்கத்திலிருந்த மணிபுரம் பண்ணையார் நரசிம்மையார் கேதாரியைப்பற்றிய எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்டு அவனுக்குத் தன் மகளைக் கொடுக்க முன்வருகிறார். சம்பந்தம் பேசுவதிலும் வித்தியாசமான யோசனையைக் கொண்டிருக்கிறாள் பாகீரதி அம்மாள். சீர்வரிசை, வரதட்சணை எதைப்பற்றியும் அவள் கவலைப்படவில்லை. மாறாக, தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ். படிக்கவைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதை மட்டும் நிபந்தனையாகச் சொல்கிறாள். நரசிம்மையரும் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்கிறார். கேதாரியும் நண்பனும் சென்று பெண்ணைப் பார்த்துவிட்டு வருகிறார்கள். பார்ப்பதற்குக் கிளிமாதிரி இருக்கும் அவளுக்கும் கேதாரிக்கும் ஒரு நல்ல முகூர்தத்தில் திருமணம் நடபெறுகிறது. மறு ஆண்டில் கேதாரி இங்கிாலந்துக்குப் பிரயாணமாகிறான். பாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்திருக்கவேண்டும் என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்த அழைக்கிறார்கள். அம்மாமி கேட்கவில்லை. கிராமத்தில் தாயற்று வளர்கிற தன் சொந்தக்காரப் பிள்ளைகள் இருவரை அழைத்துவந்து வளர்க்கத் தொடங்குகிறாள். ஆனால் சம்பந்திகளின் கெளரவத்தை முன்னிட்டு அப்பளம் ஏட்டு விற்பதைமட்டும் நிறுத்திவிடுகிறாள்.

கேதாரி வெளிநாட்டுக்குச் சென்ற ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு நரசிம்மையருக்கு ரங்கூனிலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அது கேதாரியின் தந்தையர் சுந்தரராமையர் எழுதிய கடிதம். பிள்ளையின் திருமணத்தைப்பற்றி யார் மூலமோ கேள்விப்பட்டு எழுதிய கடிதம். ரங்கூனிலிருந்து ஊருக்குத் திரும்பப் பிரயாணச் செலவுக்குப் பணம் அனுப்பித் தரும்படி எழுதியிருக்கிறார். அம்மாமியைக் கேட்டு முடிவெடுக்கலாம் என்று நண்பன் சொன்ன ஆலோசனை ஏற்கப்படுகிறது. நண்பனே வந்து மாமியிடம் விஷயத்தைச் சொல்கிறான். நரசிம்மையரிடம் பணம் வாங்கவேண்டாம் என்றும் தானே கொடுப்பதாகவும் சொல்லிச் சிறுகச்சிறுகச் சேர்த்துவந்த எண்பது ரூபாயைக்கொண்டுவந்து ரங்கூனுக்கு அனுப்பித் தருமாறு சொல்லி ஒப்படைக்கிறாள். ஆனால் பத்து நாள்களில் அனுப்பிய மணியார்டர் திரும்பிவந்துவிடுகிறது. எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டதோ அந்த முகவரியிலிருந்தவர் எழுதியிருந்த கடிதத்திலிருந்து மணியார்டர் வருவதற்கு முன்னரே சுந்தரராமையர் காலமாகிவிட்டார் என்றும் அனாதைப்பிணமாக அடக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்றும் தெரியவருகிறது. பதினெட்டு வருஷமாயக் கண்ணால்காணாத கணவனுக்காகப் பாகீரதி அம்மாள் துக்கம் காக்கிறாள். பத்தாம் நாள் சாதிவழக்கப்படியான எல்லா அலங்கோலங்களுக்கும் அவள் ஆளாக நேர்கிறது. கேதாரிக்கு இதைப்பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்றும் திரும்பி ஊருக்கு வந்தபிறகு தெரிவித்தால் போதுமென்றும் சொல்லிவிடுகிறாள் பாகீரதி அம்மாள்.

காலம் நகர்கிறது. எதிர்பார்த்ததைப்போல மிகச் சிறப்பான தகுதியுடன் ஐ.ஸி.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெறுகிறான் கோதரி. நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பியதும் தன் தாயாரைப் பார்ப்பதற்கு விரைகிறான். தாழ்வாரத்திலேயே உட்கார்ந்திருக்கும் அவள்மீது அவன் பார்வை விழவே இல்லை. வேகவேகமாக அம்மா அம்மாவென்று அழைத்தபடி வீட்டுக்குள் நுழைகிறான். நண்பன் அவனை அழைத்து பாகீரதி அம்மாள் இருக்குமிடத்தைக் காட்டுகிறான். கேதாரி திரும்பி வருகிறான். வெள்ளைப்புடவை அணிந்து, மொட்டைத்தலையை முக்காட்டால் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிற பாகீரதி அம்மாளைப் பார்த்ததும் ஐயோ அம்மா என்று பயங்கரமாக கூச்சலிட்டபடி தொப்பென்று கீழே உட்கார்கிறான். அதே விசனத்தில் அவன் படுத்த படுக்கையாகிறான். கடுமையான காய்ச்சலால் அவதிப்படுகிறான். அக்காய்ச்சலுக்கிடையேயும் அம்மாவின் கோலத்தை எண்ணி அவன் மனம் குமைகிறது. இத்தகு பழக்கவழக்கங்களை நிர்ப்பந்திக்கிற சாஸ்திரங்களைக் கொளுத்தவேண்டும் என்று மனம்குமைகிறான். வைதிகத்தில் நம்பிக்கை மிகுந்த குடும்பத்தில் தனக்குப் பெண்ணெடுத்திருப்பதால்தான் ஊர்வாய்க்கு அஞ்சி இந்த முடிவுக்குத் தன் அம்மா வந்திருக்கலாம் என்று புலம்புகிறான். உடல்நலம் தேறி எழுந்ததும் முதல்வேலையாக இத்தகு மூடப்பழக்கங்களை ஒழிக்கப் பெரும் கிளர்ச்சியைச் செய்யப்போவதாகச் சொல்கிறான். ஆனால் உடல் குணமடையாமலேயே வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருபத்தோராம் நாள் அவன் இறந்துவிடுகிறான். அவன் மரணத்தால் நண்பன் பெரிதும் பாதிக்கப்படுகிறான்.

ஒருநாள் நரசிம்மையர் இறந்துபோன மாப்பிள்ளை கேதாரியின் படமொன்றைக் கொண்டுவந்து தரும்படி கேட்கிறார். சங்கரிடம் கேதாரியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு படம் இருக்கிறது. அதிலிருந்து அவனுடைய படத்தை மட்டும் தனியாக எடுத்துப் பெரிதாக்கி சட்டம் போட்டு எடுத்துக்கொண்டு செல்கிறான். தற்செயலாக கேதாரியின் மனைவியைக் காண நேர்கிறது. சாதிக்குரிய பழக்கவழக்கப்படி அவள் தலை மொட்டையடிக்கப்பட்டு வெள்ளையுடுத்தி முக்காடும் போட்டிருக்கிறாள்.

பாகீரதியின் மனநுட் பம் இக்கதையில் கவனித்தக்க விதத்தில் பதிவாகியிருக்கிறது. அவள் பழமையின் பிரதிநிதியா அல்லது புதுமையின் பிரதிநிதயா என்று மதிப்பிட இந்தக் கவனிப்பு அவசியமாகும். பாகீரதி தன் நான்காண்டுத் திருமண வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றறிந்தவளாக இருக்கிறாள். முதலாவதாகத் தன் கணவனுக்குத் தன்மீது எந்தவிதமான ஈடுபாடுமில்லை என்பதையும் அவனை ஈர்க்கிற அளவுக்குத் தான் அழகியாக இல்லை என்பதயும் தன்னை அவன் மணந்துகொண்டதே ஏதோ வலுக்கட்டாயத்துக்காகத்தான் என்பதையும் சந்தேகமில்லாமல் புரிந்துகொள்கிறாள். அதனால்தான் அவளைவிட்டு ஒரு நாடகக்காரியோடு அவன் நீங்கியபோது எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஏதோ எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் நடந்தேறியதைப்போல ஏற்றுக்கொள்கிறாள். இந்தப் புரிதல்தான் எதிர்காலத்தில் மகனுக்குப் பெண்பார்க்கும் சூழல் உருவாகும்போது அவன் சென்று பார்த்து அவனுடைய மனத்துக்குப் பிடித்திருந்தால் மட்டுமே திருமணத்தைப்பற்றிப் பேசமுடியும் என்றும் வாதிக்கும் அளவுக்கு அவளை முற்போக்கானவளாக மாற்றுகிறது. அச்சமூகத்தில் அக்காலத்தில் பெரும்பாலான அளவில் இல்லாத பழக்கத்தை அவள் உருவாக்குகிறாள். கிட்டத்தட்ட புதுமையின் பக்கம் அவள் நெருங்கிவரும் இடம் இது. அவளிடம் காணப்படும் மிக முக்கியமான மனஎழுச்சி என்றும் சொல்லலாம். தனக்கு நேர்ந்த நிலை மற்றொரு பெண்ணுக்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதிலும் அத்தகு நிலைக்குத் தன் மகன் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் காட்டும் பிடிவாதம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அத்தகையவள் மொட்டைத்தலையும் வெள்ளைப்புடவையுமாத் தான் நின்ற கோலத்தால் தன் மகன் கொண்ட அதிர்ச்சியைக் கண்ணால் பார்த்தபிறகும் அத்தகு சமூகக் கொடுமையின் கோலமே அவன் உயிரைப் பலிவாங்கியது என்று தெரிந்திருந்தும் அவனது இறப்பைத் தொடர்ந்து அவன் இளம்மனைவிக்கு நடந்த சடங்குகளைத் தடுப்பதில் எந்தவிதமான மனஎழுச்சியையும் காட்டாதது ஏனென்று தெரியவில்லை. இந்த இடத்தில் அவள் சரேலென பழமையின் பக்கம் சரிந்துவிடுகிறாள். அவளது முற்போக்குக் குணம் தன் மரபுக்குள் பேணப்படுகிற பழக்கவழக்கங்களின் பாதிப்புகள் அனைத்தையும் உதறத் துாண்டவில்லை. மாறாக. மரபின் ஒருவரி கூட மாற்றிவிடாமல் பழக்கவழக்கங்களின் முறைகளை மட்டும் சற்றே மாற்றிவைக்க மட்டுமே துாண்டுகிறது. பழமையின் பிரதிநிதயாக அவள் நின்றுவிடுவதற்குக் காரணம் இந்த எல்லைப்புள்ளிதான்.

*

தமிழறிந்த வாசகர்கள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகிற கதையாசிரியர்களுள் ஒருவர் கல்கி. புதுமைப்பித்தனுடைய காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலைஓசை ஆகியவை இவருடைய முக்கியமான படைப்புகள். 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய ‘கணையாழியின் கனவு ‘ என்னும் தொகுப்பில் இச்சிறுகதை இடம்பெற்றுள்ளது. இதே தொகுப்பை சென்னையைச் சேர்ந்த ஜயம் கம்பனியார் 1971 ஆம் ஆண்டில் மறுபடியும் வெளியிட்டனர்.

——————————————–

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்