எங்கள் தெரு புளியமரம்!

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

சபீர்



நான் பிறந்து வளர்ந்த கடற்கரை கிராமத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன் சொத்தென நிழல் பரப்பி நிற்கும்.

படிப்பு நாடி இடமும், பிழைப்பு தேடி புலமும் பெயர்ந்தாலும் எத்தனை மன அழுத்தத்திலும் அந்த புளிய மரம் சார்ந்த நினைவுகள் நெஞ்சில் பசுமையாக இன்றும் இருக்கிறது!

சிறு பிராயத்து நினைவுகள் சுகமானவை. ‘அது ஒரு காலம்’ என்று பெருமூச்சு விடுகயில் மனசு லேசாகும்.

காலம் றெக்கை கட்டி பறக்க நாங்களோ கச்சல் கட்டி பறந்தோம்!
(கச்சல் : கைலியை மடித்துக் கட்டுதல்)

மரத்தடி கட்டெரும்புகளை
பெயர்வைத்துக் கூப்பிடுமளவுக்கு பரிச்சயம் எமக்கு.

மாட்டினி ஷோ “ரிவால்வார் ரீட்டா” படம் பார்க்க காசு தராததால் வீட்டில் கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்து ஒளிய மரமானது இந்த புளிய மரம்.
வேறு எங்கு ஒளிந்தாலும் உம்மா அனுப்பும் வெளிநாட்டு தூதுவர் (பெரும்பாலும் என் நியூ யார்க் மச்சான் ஜலாலாத்தான் இருக்கும்) கன்டு பிடித்துவிடுவார்.

கால ஓட்டத்தில் போதை பார்ட்டிகளின் புனித மரமானது இந்த புளிய மரம்.

இந்த புளிய மரம்…

புகைப்பவர்களின் போதிமரம்!
பொது ஏழைகளின் புகழிடம்!
பிச்சைக்காரர்களின் புக்ககம்!
புது வரவுகளுக்கு நிழலகம்!

இதனடியில் நிற்பதுவும்
இதன் மடியில் நித்திரையும்
வென்றெடுத்த கனவுகளும்
அன்றாட அத்தியாவசம்!

இந்த புளியமர மேடையில் உட்கார்ந்து, கணேஷ் பீடியை இழுத்துக்கொண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சிலேடை பேச்சுக்களில் சளைத்தவரல்லர் என்பதை காட்டும் பெரிசுகளை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

மருதானி வைத்து பொன்னிறமாயிருக்கும் தலைமுடி பார்த்து இவர்,

“என்ன மாப்ளே, தலை நெருப்பெரிஞ்ச வீடு மாதிரி இருக்கு”

என்று ஆரம்பிக்க அவர், முன்னவரின் உச்சந்த்லையையும் அதைச்சுற்றி சிதறியது போன்ற முடிக்கு

“அங்கே மட்டும் என்ன வாழுதாம். மண்டை வெடிவிட்ட இடம் மாதிரில்ல இருக்கு” என்பார்.

அப்பதான் வந்து அரட்டையில் சேர்ந்தவருக்க் முடி வெள்ளையும் கருப்பும் கலந்திருக்கக் கண்டு,

“என்ன மச்சான் தலை சாம்பலில் விழுந்த இடியாப்பம் மாதிரி இருக்கு”
என துவங்க ஆட்டம் கலைகட்டும்.

மரக் கிளைகளில்
தொட்டு விளயாடியதும்
மர இலைகளுக்குள்
கண்டு விளையாடியதும்!

சென்ற சில வருடங்களுக்கு முன்பு இந்த மேடை தகர்க்கப் பட்டு, மரம் வெட்டப்பட்டுவிட்டது.

தாவியக் கிளைகளெல்லாம்
தேய்ந்து தேய்ந்து
வழுக்குப் பாறையென
வழவழத்து வழுக்க
விட்டுவந்த ரேகையெல்லாம்
வெட்டிப்போட்ட தென்ன நியாயம்?

புளியங்கொழுந்துண்டு
புடுங்கிக்கிட்டு தவித்ததுவும்
பளியாத்தோப்பெல்லாம்
பிச்சிக்கிட்டு போனதுவும்!

புளியம் பிஞ்சு பறித்து எக்கலில் செறுகி, பெருசுகள் பிடிக்கவர சிட்டென பறந்ததுவும…
(எக்கல்: கைலியின் இடுப்பு மடிப்பு)

வெட்டிவிட்டால்…
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?

-Sabeer
Sabeer.abushahruk@gmail.com

Series Navigation

சபீர்

சபீர்