உரை வெண்பா – வீதி

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

மத்தளராயன்


காலையில் பால்கனியில் நின்றால் எதிரே பழைய சுவரொட்டி உரித்துப் புதிய சுவரொட்டி அணிந்த நகரச் சுவர்கள் வைதீஸ்வரன் கவிதையை மனதில் மேய வைக்கின்றன.

எல்லா வண்ணங்களிலும் அண்ணன் அழைக்கிறார். தலைவர் அழைக்கிறார். ‘நள தமயந்தி ‘ மாதவன் மேல் ஈஷிக் கொண்டு மலையாளக் ‘கல்யாணராமன் ‘ படத்துச் சுந்தரிப் பெண்குட்டி. அவள் தலைப் பக்கம் வினாயகர் கோவில் பூஜை. இடையோடு ஒட்டி நூறு விழுக்காடு தேர்வு பெற வைக்கும் தோற்றோரியல் கல்லூரி. சுவிசேஷச் செய்தி. ‘இவ்விடம் விளம்பரம் செய்யக் கூடாது ‘.

சுவருக்குப் பக்கம் ஒரு பெட்டிக்கடை. எத்தனை முறை மாநகராட்சி லாரி வந்து எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போனாலும், ஒரு வெறித்த பார்வையோடு நிற்கும் கடைக்காரரை எனக்கு ஐந்து வருடமாகப் பழக்கம்.

இரண்டு நாள் கழித்து அங்கே திரும்ப வந்து விடுவார். கேட்டால், ‘இதெல்லாம் சகஜம் ‘ என்பது போல் சிரிப்பார். மழைக்குக் கூடக் கேரளத்துப் பக்கம் ஒதுங்காத மலையாளி.

இரண்டு வாரமாகப் பார்க்கிறேன். கடைக்குப் பக்கத்திலேயே ஒரு பழைய ரெஃப்ரிஜிரேட்டரை நடைபாதையில் நிறுத்தி வைத்திருக்கிறார். பக்கத்துப் பள்ளியில் காவலாளி – அவர் இவருக்குச் சகலபாடியாம் – குடியிருப்பில் இருந்து மின்சார இணைப்பை சுவருக்கு மேலாக எடுத்து இணைத்து.

பத்திரிகை வாங்கியபடி ‘இதுலே என்ன இருக்கு ‘ என்று குளிர்பதனப் பெட்டியைக் காட்டிக் கேட்டேன்.

‘விக்கறதுக்குப் ப்ரூட்டு மிக்சர். நானே போடறேன். மத்தபடி சம்பாரம். சகலபாடி வீட்டு ஜாமான். அனுசரிச்சுப் போகணுமே எல்லாரையும். என்ன நான் சொல்றது ‘

திறந்து காட்டினார்.

முந்தாநாள் வாழை முதிர்ந்திட்ட மாம்பழத்தில்
சிந்திய சர்பத் சிலதுளி – குந்தித்
தனித்தமோர் பாத்திரத்தில் பானகமும் கொண்டு
பனிப்பெட்டி வீதியிலே பார்.

மத்தளராயன்

***
eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்