உருத்தலில் உருவாகி

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

சுந்தரா


மனசுமுதிராத முன்னிருபதுகளில்
மாலையோடு வந்த
ஒரு
மாபெரும் உறுத்தலுக்கு,
மனசுக்குப் பிடிக்காமல்
வாழ்க்கைப்பட்டவள் அவள்…

காலைகளில் கட்டிய
கனவுக்கோட்டை யெல்லாம்
மாலையில் சிதையவைக்கும்
மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு,
ஆலையில் அகப்பட்ட
கரும்பாகக் கசங்கியவள்…

நின்றால் ஒருகுற்றம்
நிலைமாற முன்னேறி
நடந்தாலும் குற்றமென்று,
கண்ணால் சுட்டெரித்த
கனலுக்குக் கட்டுப்பட்டுப்
பெண்ணாக மண்டியிட்ட
பேதைப் பிறவியவள்…

எண்ணிக்கைக் கடங்காத
இருட்டுக் கதைகளைச்
எண்ணியெண்ணி அழுதிருந்தால்
இருண்டிடும் வாழ்க்கையென்று,
எல்லாவற்றையும்,
மண்ணாகிப்போன தன்
மனசுக்குள் புதைத்தவள்…

இன்று,
எண்ணைந்து வயசுகளின்
இறுதிப் பிராயத்தில்,
பெண்ணென்றால் இவளென்று
அவள்
பொறுமையைச் சிரசிலேற்றித்
தன்னோடு சேர்த்துக்கொள்ளத்
தவித்திடும் உறவுகள்…

உறுத்தி உறுத்தியே
ஓய்ந்துபோன உறவுக்கும்,
மருத்துவம் சொல்லி
மனதை மாற்றுமளவுக்குப்
பக்குவப்பட்டுப் போனது
அவளது
அப்பழுக்கில்லாத மனசு…

எப்படிப் பார்த்தாலும்
இவளுடைய பெருமைக்கு
மொத்தக் காரணம்
எப்பவும் நான்தானென்று
கண்ணீரைமீறி உண்மை கரைபுரள,
அங்கே,
புடமிட்ட பொன்னில்கோர்த்த
வடமாகச் ஜொலித்தது முத்து!

Series Navigation

சுந்தரா

சுந்தரா