பொன்னி வளவன்
பொழுது விடிவதற்க்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை யார் வீட்டிலிருந்தோ கூவிய சேவலொன்று வெட்டிக்காடு கிராமத்திற்கு தெரியப்படுத்தியது.
சேவலின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டார் மாணிக்கம். ‘இதோ அணைந்து விடப்போகின்றேன் ‘ என்று பயமுறுத்திக்கொண்டு சின்னதாக எரிந்து கொண்டிருந்த அரிக்கேண் விளக்கின் திரியை சற்று தூண்டி விட்டு அதற்க்கு சுதந்திரம் கொடுத்தார். அரிக்கேண் விளக்கின் வெளிச்சத்தில் அவருடைய பொண்டாட்டியும், மகளும்
வீட்டின் மறு பக்கத்தில் படுத்திருப்பது தெரிந்தது.
உடம்பை வில்போல வளைத்து வைத்துக்கொண்டு தனது பக்கத்தில் படுத்திருந்த மகனைப்பார்த்து ‘ஏலே.. தம்பி, பொழுது விடியப்போகுதுடா… எந்திரிடா ‘ என்று அதட்டி எழுப்பினார்.
மாணிக்கத்தின் சிறிது நேர முயற்ச்சிக்குப்பின் ‘என்னப்பா… ‘ என்று சிணுங்கிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான் சண்முகம்.
‘ஏலே.. தம்பி, இப்ப போணாத்தான் வய வேலைக்கு போறதுக்குல்ல தண்ணீ எரைக்க முடியும்.. நீ போயி மூஞ்சிய கழுவிட்டு.. மாட்ட ஒட்டிகிட்டு வாடா.. நான் கொல்லைக்கு போறேன். ‘ என்று சண்முகத்திடம் கூறிவிட்டு முகத்தை கழுவிட்டு மண்வெட்டி, மோத்தடி, சாளு எல்லாம் தூக்கிகிட்டு கொல்லயை நோக்கி நடந்தார்
மாணிக்கம்.
சண்முகம் எழுந்து முகத்தை கழுவிட்டு மாட்டுக்கொட்டகைக்குப்போய் காளை மாடுகளை அவிழ்த்து ‘ஏய்.. ஏய் ‘ என்று அதட்டி ஓட்டிக்கிட்டு கொல்லயை நோக்கி நடந்தான்.
சண்முகம் வெட்டிக்காட்டிலிருந்து மூனு கல் தொலைவில் உள்ள மூவாநல்லூர் கிராமத்திருக்கும் கவர்மெண்டு பள்ளிக்கூடத்தில் எட்டாவது படித்து வருகின்றான். படிப்பில் மிகவும் கெட்டிகாரன். ஒன்னாவதிலிருந்து இன்றுவரை சண்முகம்தான் முதல் மார்க் வாங்கி வருகின்றான்.
அதிகாலைப்பொழுதில் காகங்கள் எல்லாம் ‘கா..கா ‘ என்று கரைந்துகொண்டு இரை தேடப்
புறப்பட்டுக்கொண்டிருந்தன். எவனோ வைத்த குயில் தட்டியில் இருந்த கோவைப்ப்ழத்திற்கு ஆசைப்பட்டு
மாட்டிக்கொண்ட குயிலொன்று மரணக்குரெலெடுத்து அலறியது. மற்ற பறவைகள் எல்லாம் தங்களுடைய மென்மையான குரல்களால் ஓர் மெல்லிசை கச்சேரியை நடத்திக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம்
பார்த்துக்கொண்டே மாடுகளை ஓட்டிக்கொண்டு கொல்லையை வந்தடைந்தான் சண்முகம்.
‘ஏலே.. தம்பி, கவளையெல்லாம் கட்டிடேண். நீ போயி மாட்ட மோத்தடியில பூட்டி ஒட்டுடா ‘ என்று சண்முகத்தை பார்த்து கூறிவிட்ட்டு மண்வெட்டியையும், தண்ணீர் பனுக்கும் தட்டையும் எடுத்துகிட்டு கடலை கொல்லையின் மறு பக்கத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம்.
சண்முகம் மாடுகளை பூட்டி தண்ணீர் இறைக்க ஆரம்பிக்கவும் பக்கத்து டவுன் மன்னார்குடியிலிருந்து ஊதிய ஐந்து மணி சங்கு ஒலிக்கவும் சரியாக இருந்தது.
மாடுகளை முன்னுக்கும் பின்னுக்கும் ஓட்டி தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த சண்முகத்திற்கு நேற்று வகுப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் சொன்ன ‘பசங்களா உங்களுடைய கால் பரீட்சை பேப்பர் எல்லாம் திருத்தியாச்சு.
நாளக்கி பிராக்கிரஸ் ரிப்போர்ட் தரப்போறேன் ‘ என்ற வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.
‘முருகா! இந்த பரீட்சையிலும் நாந்தான் முதல் மார்க் வாங்கணும் ‘ என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டான். சண்முகம் இந்த பரீட்சைக்கு ரொம்ப முக்கியம் கொடுத்து படிச்சான். அதுக்கு காரணம் இந்த வருடம் புதுசா பள்ளியில் சேர்ந்த செல்வம்தான். செல்வமும் நன்றாக படிக்கக்கூடிய மாணவன் அதனால்தான்!
இதைப்பற்றி நினைத்துக்கொண்டே தண்ணீர் இரைத்துக்கொண்டிருந்த சண்முகம் ரெண்டாவது டிரிப் டவுன் பஸ் மேற்கே போகும் சத்தம் கேட்டு மணி ஏழாகிவிட்டது என்பதை உணர்ந்தான்.
‘யப்பா… ரெண்டாவது டிரிப் டவுன் பஸ் மேற்கே போச்சுப்பா. இப்ப.. போணாத்தான் குளிச்சிட்டு பள்ளிக்கூடம் போக முடியும். மாட்ட அவித்து விடட்டாம்ப்பா… ‘ என்று கடலை செடிகளுக்கு தண்ணீர் பணிக்கிக்கொண்டிருந்த மாணிக்கத்தை நோக்கி கத்தினான்.
‘இவரு பெரிய தொர வீட்டு புள்ள பாரு.. படிச்சு பெரிய கலெக்டராக போராறு. அதுக்குள்ள பள்ளிக்கூடம்
போவனுமாக்கும்… ஏதோ கவர்மெண்டு பள்ளிக்கூடத்தில சும்மா பாடம் சொல்லி கொடுக்கிறாங்களேன்னு
பள்ளிக்கூடம் போடான்னா.. படுவா பய தண்ணீ எறெக்காம போறேங்கிறாய்யா.. இன்னும் மூனு பாத்தி கிடக்குது… மாட்ட அதட்டி ஓட்டுடா ‘ என்று பதிலுக்கு கத்தினார் மாணிக்கம்.
‘போதும்டா.. நிறுத்து ‘ என்று மாணிக்கம் கூறியவுடன் மாடுகளை அவிழ்த்து வேப்ப மரத்தில் கட்டிவிட்டு ‘நான் குளிக்க போறேம்ப்பா ‘ என்று சொல்லிக்கொண்டே ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து பல்லில் வைத்துக்கொண்டு அய்யனார் குளத்தை நோக்கி நடந்தான்.
காலைக்கடன்களை முடித்துவிட்டு அய்யனார் குளத்தில் குளித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டில் அவன் அம்மா இல்லாததால் பழைய சாதத்தை தானேபோட்டு சாப்பிட்டான். அலுமினிய டப்பாவில் தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய் வைத்து எடுத்துக்கொண்டு, புத்தகப்பயை எடுத்துக்கொண்டு வீட்டை
விட்டு வெளியே வந்தான்.
தூரத்தில் அவன் நண்பன் முரளி வந்துகொண்டிருந்தான். முரளி சண்முகத்தை பார்த்து ‘போலாம்மாடா..
சம்முவம் ‘ என்று கேட்டுக்கொண்டே வந்தான் முரளி.
‘நேரமாயிடுச்சு.. சீக்கிரம் போவனும்டா ‘ என்று கூறிக்கொண்டு அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான் சண்முகம். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே மூனு கிலோமீட்டர் தூரத்தை நடந்து பள்ளியை
வந்தடைந்தார்கள்.
‘வணக்கம் சார் ‘ என்ற மாணவ மாணவியரின் சேர்ந்த குரலை புன்முருவலுடன் கேட்டுக்கொண்டே வகுப்பில் நுழைந்தார் முத்துகிருஷ்ணன் வாத்தியார். முதலில் நிதானமாக அட்டெந்டென்ஸ் எடுத்து முடிதார்.
‘பசங்களா… நான் நேத்து சொன்னதுபோல இப்ப உங்களோட பிராக்கிரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்போறேன் ‘ என்று கூறி வகுப்பை ஓர் பார்வை பார்த்தார். பிறகு ‘இந்த கால் பரீட்சையில 500க்கு 455 மதிப்பெண்கள் பெற்று சண்முகம் முதல் மாணவணாக தேர்ச்சி பெற்றுள்ளான் ‘ என்று கூறினார்.
சண்முகத்தின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. மாணவ, மாணவியர் எல்லாம் கை தட்டி அவனுக்கு வாழ்த்து
தெரிவித்தார்கள்.
‘சண்முகம்… இதைப்போல இன்னும் நீ நல்லா படிச்சி, ஒரு கலெக்டராகவோ, டாக்டராகவோ அல்லது எஞ்சீனியராகவோ வரவேண்டும் ‘ என்று சொல்லி அவன் முதுகில் தட்டிக்கொடுத்து பிராக்கிரஸ் ரிப்போர்ட்டை அவனிடம் கொடுத்தார்.
அடுத்து இரண்டாவதாக வந்த செல்வத்திற்கும், மூன்றாவதாக வந்த புனிதாவிற்கும் மற்ற மாணவர்களுக்கும் பிராக்கிரஸ் ரிப்போர்ட் கொடுத்தார். பெயில் மார்க் வாங்கியவர்களின் கைகளை நீட்ட சொல்லி மூங்கில் கம்பால் அடி பிண்ணி எடுத்தார்.
மாலையில் பள்ளி விட்டவுடன் வழக்கம்போல் சண்முகமும், முரளியும் வீட்டை நோக்கி நடந்து வந்து
கொண்டிருந்தார்கள்.
காலையில் சண்முகத்திடம் காணப்பட்ட மகிழ்ச்சியில் ஓரளவுகூட இப்போ அவன் முகத்தில் இல்லை. தான் முதல் ரேங்க் வாங்கியுள்ளேன் என்று ராத்திரி பிராக்கிரஸ் ரிப்போர்ட்டை அவன் மாணிக்கத்திடம் காட்டப்போகின்றான்.
‘நீ முத மார்க் வாங்கினா.. என்ன ? வாங்காட்டி.. என்ன ? உன்ன இந்த பள்ளிக்கூடத்துல பத்தாவதுவரைக்குந்தான் படிக்க வைக்க போறேன்.. அதுக்குமேல உன்ன பட்டணத்துக்கு அனுப்பி படிக்க வைக்க எங்கிட்ட என்னடா இருக்கு ? நீயும் என்னோட வய வேலைக்கு வர வேண்டியதுதான் ‘ என்று வழக்கம்போல சொல்றதத்தான் இப்பவும் சொல்ல போறார்.
இப்படி அவன் நினைத்துக்கொந்தவுடன் அவனுக்கு மாணிக்கத்தின்மேல் கோவம்.. கோவமா வந்தது. பாவம் அவரும்தான் என்ன பண்ணுவார் ? ஏதோ இருக்கிற கொஞ்ச நெலத்துலேருந்து வர்ற வருமானமோ அவங்களோட சாப்பாட்டுக்கே இழுபறியாக இருக்குது. இதுல அவன எப்படி டவுனில் படிக்க வைப்பார் ? பணத்துக்கு அவர்
எங்கே போவார் ?
மாணிக்கத்தின் நிலையை நினைத்து பார்த்தவுடன் அவர் மேல் சற்றுமுன் ஏற்ப்பட்ட கோபம் எங்கோ மறைந்து போயிற்று.
‘சண்முகம்… இதைப்போல இன்னும் நீ நல்லா படிச்சி, ஒரு கலெக்டராகவோ, டாக்டராகவோ அல்லது
எஞ்சீனியராகவோ வரவேண்டும் ‘ என்று காலையில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் அவன்
காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
சண்முகதிதிற்கு நிறைய படித்து முத்துகிருஷ்ணன் வாத்தியார் சொன்னதுபோல் ஒரு கலெக்டராகவோ,
டாக்டராகவோ அல்லது எஞ்சீனியராகவோ வரவேண்டும் என்று எல்லையில்லா ஆசைதான். ஆனால் அவனது குடும்பதின் ஏழ்மை நிலை ?
அவனையுமறியாமல் தன் கண்களில் அரும்பிய கண்ணீரை முரளிக்கு தெரியாமல் துடைத்துவிட்டுக்கொண்டு
நண்பனுடன் சேர்ந்து வீட்டை நோக்கி நடக்கலானான்.
###
பதினைந்து வருடங்களுக்குப்பிறகு ஏப்ரல் மாதத்தில் ஓர் நாள்…
மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவுக்காக விழாக்கோலம் பூண்டிருந்தது. தலைமையாசிரியர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர்கள், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஆண்டு விழாவின் தலைமை
விருந்தினரை வரவேற்க்க பள்ளி வாசலில் காத்திருந்தனர்.
சிவப்பு சக்கரம் சுழல வந்த அரசாங்க காரிலிரிருந்து இறங்கிய தனது மாணவன் கலெக்டர் சண்முகம் I.A.S க்கு மாலை அணிவித்து வரவேற்றார் தலைமையாசிரியர் முத்துகிருஷ்ணன்.
(நிறைவு)
– பொன்னி வளவன்
Ravichandran_Somu@yahoo.com
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- அழுக்கு
- நெஞ்சுக்குத் தெரியும்
- அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)
- காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]
- சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.
- கலைச்சொற்களைப்பற்றி
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
- சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)
- கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு
- பசிக்கட்டும்
- தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்
- உயிர்மை பதிப்பகம்
- காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- சிற்பிகளின் கற்பனைக்கு!
- மான மிருந்தால், மங்கையரே!
- பாதியில் ஒரு கவிதை
- மகுடம் சரிந்தது
- பணமில்லா அழகு பாழ்
- உரையாடும் கலை
- ஃபீனிக்ஸ்
- விடியும்! நாவல் – (8)
- ஆண் விபசாரிகள்
- அம்மா இங்கே வா வா…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு
- நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்
- பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)
- கடிதங்கள்
- உன்னால் முடியும் தம்பி
- வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)
- வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2
- கோவாவில் பொது சிவில் சட்டம்
- பசு
- சுதந்திர தினம்.
- ஊக்கமருந்து
- புதிய பரிணாமம்
- கடவுளே காதலா…
- கூந்தலை முன்புறம் போடாதே!..